ஞாநி இணையதளம்

தமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே !’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது.

ஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான். அவர் தவறாகச் சொல்கிறார் என்று தோன்றுவதில்லை. மாறா¡க எளிமைப்படுத்திவிடுகிறார் என்று தோன்றும். சமூக இயக்கம் என்பது எப்போதுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத முரணியக்கத்தின் விளைவு. வன்முறை இல்லாமல் அம்முரணியக்கம் நிகழ்மென்றால் அது வளர்ச்சிப்போக்காகவே இருக்கும் என்பது நான் கொண்டுள்ள இலட்சியவாத நம்பிக்கை. ஞாநி அந்த முரணியக்கத்தை காண்பதில்லை. கறுப்பு வெள்ளைகளில் நிற்கும் தீவிர நோக்கு அவருடையது. அந்த எளிமைநோக்குதான் அவரை ஈவேராவை நோக்கி இழுத்திருக்கிறது.

ஆனால் தன்னளவில்  நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன். தன் கருத்துக்களுக்காக போராடக்கூடியவர். அதன் பொருட்டு எதையும் இழக்க தயாராக இருப்பவர். சலியாத சமூகக் கோபம் கொண்டவர். தமிழில் இன்றைய தலைமுறையில் அப்படி சிலரை மட்டுமே நம்மால் சுட்டிக் காட்ட முடிகிறது. ஞாநி நான் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை எதிர்ப்பார். ஆனால் அவர் தமிழில் ஒரு தார்மீக சக்தி என்றே நான் எப்போதும் எண்ணி ,சொல்லி வருகிறேன்.

தமிழில் அவ்வாறு சமூகக் கோபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் தனிநபர்க் காழ்ப்பும் உள்ளடங்கிய சாதிக்காழ்ப்பும் மட்டுமே கொண்டவர்கள் என்பதை நான் பொதுத்தளத்தில் செயல்பட ஆரம்பித்த இந்த முப்பது ஆண்டுகளில் கண்டு சலிபப்டைந்திருக்கிறேன். ஞானி தனிப்பட்ட காழ்ப்புகள் அற்றவர். தனிப்பட்ட கோபங்களுக்கு தாவிச்சென்றாலும் உடனே குளிர்ந்துவிடுபவர்

எனக்கும் ஞாநிக்கும் சில பொது அம்சங்கள் கூட இருக்கின்றன. அவரைப்போலவே நானும் அசோகமித்திரனின் எழுத்துக்களின் தீவிர வாசகன். அவரை போலவே எனக்கும் பழைய போஸ்ட் கார்டு போல உடம்பெல்லாம் முத்திரைகள். ஞாநியை பார்ப்பனர் என்றும் [ இந்துத்துவர் என்றும் கூட !] பிற்போக்குவாதி என்றும் முத்திரை குத்தும் எழுத்துக்களை நான் சென்ற எத்தனையோ வருடங்களாக கண்டுவருகிறேன்.  அதை முன்வைப்பவர்கள் எவருமே எளிய அடிப்படை நேர்மை கூட இல்லாத அரசியல் ஆத்மாக்கள்

பெரும்பாலான சமயங்களில் ஞாநி முத்திரைகளுக்கு எதிராக அதீதமாக உணர்ச்சிவசப்படுவார். நேரடியாக அவர் எகிறுவதைக்கூட கண்டிருக்கிறேன். என்ன செய்வது, தமிழில் எழுதினால் இது நிகழாமலிருக்காது. நான் சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர் இன்னும் கொஞ்சம் புன்னகையாவது செய்யலாம்.

ஞானி ஒர் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் அரசியல் சமூகவியல்  விவாதங்களுக்காக அதை சிபாரிசு செய்கிறேன்.
www.gnani.net

முந்தைய கட்டுரைஇந்துத்துவம், மோதி:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅத்வைதம் ஒரு விவாதம்