இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா

கயாவில் இருந்து செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குக் கிளம்பினோம்.·பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. மழைநீர் பெருகி சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் வழிந்த ·பால்குனா வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. நல்ல வளமான பூமி. எங்கும் நெல்வயல்கள். தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் கலந்த இதமான குளிர்காற்று. மகாபோதியின் நினைவு எஞ்சிய மனம். அந்தப்பயணம்  ஆனந்தமானதாக இருந்தது.

·பால்குனா நதியின் பாலம் மீது சென்றுகொண்டிருந்தபோது வசந்த குமார் ஒரு ஷாட்டுக்கு வண்டியை நிறுத்தும்படிச் சொன்னார். நிறுத்திவிட்டு நீர் வழிந்த நதிபடுகையை கண்டு நின்றிருந்தோம். ஒருவர் பைக்கில் வந்து எங்களை சந்தித்தார். காரைக்குடிக்காரரான ராம்குமார்.  அவரது முன்னோர்கள் முந்நூறு வருடம் முன்பு அங்கே குடியேறிவிட்டிருந்தார்கள். பால்குனா நதி முன்னோர்களுக்கான நீர்க்கடன்கள் செய்வதற்கு மிகவும் முக்கியமானதாம். ராம்குமார் தென்னாட்டினருக்கு சடங்குகள் செய்துவைக்கும் புரோகிதர் குடும்பத்தைச் சேர்ந்தவர். படித்துக் கொண்டிருக்கிறார். சிவப்பாக வட இந்தியக் களையுட்ன் இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. ஆனால் வீட்டில் தமிழ்தான் பேசுகிறார். வினோதமான தமிழ் உச்சரிப்பு. தமிழ்நாட்டு பதிவெண் உள்ள வண்டியைக் கண்டதனால் வந்து பேசினார். அவரது மனதில் தமிழ்நாடு ஒரு கனவு பூமியாகவே இருக்கிறது.

பிகாரின் கிராமங்களை கண்டபடி சென்றோம். ஒரு இடத்தில் சாலை முறிந்தது. பாலம் ஒன்று இடிந்து விழுந்துவிட்டதாகச் சொன்னார்கள். வழி கேட்டபோது ஒருவர் ஒரு கிராமச் சாலையைக் காட்டி அவ்வழியாகச் செல்லலாம் என்றார். வண்டியை திருப்பி சிறிய செம்மண் சாலை வழியாக பிகாரிக் கிராமங்களைக் கடந்து சென்றோம். எருமைகள் நிறைய கண்ணில்பட்டன. மாடுகளும் மனிதர்களும் சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதுபோன்ற கட்டிடங்கள். ஓடுவேய்ந்த தாழ்வான கூரைகளுக்கு கீழே  ஆண்கள் கயிற்றுக் கட்டில்களில் ஹ¤க்கா குடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். மந்தமான கிராமிய வாழ்க்கை. ஊரெங்கும் எங்கெல்லாம் மண் அல்லது கல் சுவர்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வரட்டி தட்டி வைத்திருந்தார்கள். சப்பாத்தி சுடுவதற்கு வரட்டி மிகமிக முக்கியமானதாகும்.

இங்கே பெண்கள் மலிவான பாலியெஸ்டர் சேலையை முக்காடு போட்டு அணிகிறார்கள். தண்ணீருக்கு எங்கும் பஞ்சமிருப்பதாக தெரியவில்லை. விளைநிலங்கள் அதிகம் இருப்பதனால் மாடுகளை மேய விட முடியவில்லை. ஆகவே புல்லறுத்துக் கொண்டுவந்து போடுவது வழக்கம். புல் அறுக்கும் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். மூக்குத்தி போட்ட ஒடுங்கிய முகமுள்ள செம்மண் நிறமான பெண்கள். புழுதி படிந்த குழந்தைகள் காருக்கு பின்னால் ஓடிவந்தார்கள். அந்தச்சாலையில் கார் அபூர்வம் என்று பட்டது.

ஒரு சிற்றூரின் ஜங்க்ஷனில் வண்டியை நிறுத்தினோம். அங்கே ஒரு ஸ்வீட் கடை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. உத்தர பிரதேசம் பிகார் பகுதிகளில் மக்களுக்கு அவசியத்தேவையாக இருப்பவை இரண்டு, இனிப்பு மற்றும் மாவா என்னும் புகையிலைபாக்குக் கலவை. அவைதான் அதிகம் விற்கப்படுகின்றன. அந்தக் கிராமத்து கடைத்தெருவில் எல்லா கடைகளுமே நாட்டு ஓடு வேய்ந்த குடிசைகள்தான். சில கடைகள் மிகமிகச் சிறிய குச்சுகள். ஒரு கடையில் அவசியமான பிளாஸ்டிக் சாமான்கள். ஒரு கடையில் மலிவான துணிகள். தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள கடைகளில் காணப்படும் நுகர் பொருட்கள் எவையுமே அங்கே காணப்படவில்லை. வாசனை சோப்புகள், பற்பசைகள், சவரப்பொருட்கள், பேட்டரிசெல்கள், நைலான் கயிறுகள், பிளாஸ்டிக் குடங்கள் பக்கெட்டுகள் போன்றவை தமிழ்நாட்டின் எந்த கிராமத்துக் கடைவீதியிலும் இருக்கும். அவை இங்கே தேவையாகவே இல்லை போலும்.

பூந்தி போட்டு லட்டு பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் இனிப்பு வாங்கி சாப்பிட்டு டீ குடித்தபின்னர் கிளம்பினோம். சாலையின் பக்கவாட்டில் சுண்ணாம்புக்கல்லால் ஆன மலை ஒன்று செங்குத்தாக ஓங்கி நின்றது. அதன்மீது ஆடுகளும் ஆடு மேய்ப்பவர்களும் ஏறி உலவிக் கொண்டிருந்தார்கள். இங்கே வெயில் நன்றாக உறைக்க ஆரம்பித்தது. வெகுதூரம் சுற்றிவிட்டோம் என்று தெரிந்தது. நாளந்தா என்று விசாரித்து சென்று கொண்டே இருந்தோம்.

திடீரென்று சுண்ணாம்புக்கல் மலையின் மீது ஒரு உத்தரீயப்பட்டை தொங்குவதுபோல பெரிய மதில் ஒன்று என் கண்ணுக்குப் பட்டது. அந்த மலையில் இருந்தே கற்களை எடுத்து கட்டப்பட்ட பெரிய சுவர். அந்த உயரத்தில் அது அவ்வளவு பெரியதாக தெரியவேண்டுமென்றால் அது மிக அகலமான கோட்டையாகவே இருக்க வேண்டும் என்று தெரிந்தது. கிருஷ்ணன் அது மலைச்சரிவை தடுப்பதற்காக கற்களை அடுக்கியிருப்பதுதான் என்றார். ஆனால் அங்கெல்லாம் அப்படி வேலைகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. அந்தச் சுவரின் நடுவே வட்டமான மேடைகளும் தெரிய ஆரம்பித்தன. அது ஒரு பிரம்மாண்டமான கோட்டை மதிலேதான்.
 
வரைபடத்தை பார்த்தபோது அது ராஜகிருஹம் என்று தெரியவந்தது. இப்போது ராஜ்கர் என்று அழைக்கப்படுகிறது. குட்டை மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறது ராஜகிருகம். இப்போது அது ஊரே அல்ல. தொல்லெச்சங்கள் பரவிய குறுங்காடு மட்டுமே. ராஜகிருஹத்தில் உள்ள ஜப்பானிய விஹாரம் ஏராளமான பௌத்த பயணிகள் வந்துசெல்லுமிடமாக உள்ளது. சாலையில் செல்லும்போது அந்த 160 அடி உயரமான ஸ்தூபத்தின் பொன்னிற முகடு தகதகவென தெரிந்து கொண்டே இருந்தது. இப்பகுதியில் பல பௌத்த விஹாரங்கள் உள்ளன. மலைமேல் புராதனமான காளி கோயில் உள்ளது. புத்தர் அவரது முதுமைக்காலத்தில் தங்கியிருந்த பிபாலி குகைகள் இங்கே மலைமீது உள்ளன

நாளந்தா புத்தரின் கால்பட்ட இடம். ராஜகிருஹம் புத்தரின் செயல்பாடுகளுக்கு மையமாக இருந்திருக்கிறது. மகதமன்னர் அஜாதசத்ரு அவரது சீடர். புத்தருக்கு ஜீவகன் என்ற செட்டியார்[ செத்தி என்று பாலி மொழி] ஒரு மாந்தோப்பை  அன்பளிப்பாக அளித்தார். ராஜகிருஹத்தில் அந்த மாந்தோப்பில் தங்கி புத்தர் தன் தர்மத்தை உபதேசம் செய்தார். ராஜகிருஹத்தில் இருந்து எங்கும் நில்லாமல் புத்தர் நாளந்தாவுக்கு வந்தார் என்று கதைகள் சொல்கின்றன

இயற்கையான அரணாக சுற்றிலும் மலைகள் இருக்க நடுவே இருந்த நகரம் இது. புராதன மகதப்பேரரசின் தலைநகரம். கிமு நான்காம் நூற்றாண்டு முதல் இந்நகரமே தலைநகராக இருந்திருக்கிறது. அஜாதசத்ரு பாடலிபுத்திரத்தை [பாட்னா] கட்டி தலைநகரை அங்கே மாற்றிக் கொண்டார். சூழ உள்ள மலைமீது கோட்டை கட்டி நகரை மேலும் வலுவாக பாதுகாத்திருக்கிறார்கள்.

ராஜகிருஹத்தில் அஜாதசத்ரு தன் தந்தை பிம்பிசாரனை சிறையிட்டிருந்த இடம் என்று தொல்லியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட கோட்டையின் அடித்தளத்தை இறங்கிச் சென்று நோக்கினோம். பத்தடி அகலமுள்ள கல்லால் ஆன அடித்தளம் கொண்ட கோட்டை அது. கருங்கல்லுக்கு பதில் அப்பகுதியில் உள்ள செந்நிறமான கற்களால் சுதைகலந்து கட்டப்பட்டது. நான்கு மூலைகளிலும் காவல் கோபுரங்களின் வட்டமான அடித்தளங்கள். அப்பகுதி எனக்கு ஒரு மன எழுச்சியை அளித்தது. அஜாசத்ருவின் கதை என்னை மிகவும்

 கவர்ந்தது. பிம்பிசாரனை சிறையிலிட்டு அதிகாரத்தைக் கைப்பறிய அஜாதசத்ரு ஆழமான குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்பட்டு பின் புத்தரின் பாதங்களைச் சரண் அடைந்து மீட்சி பெற்றான். அதை நான் ‘பாடலிபுத்ரம்’ என்ற சிறுகதையாக எழுதியிருக்கிறேன்

ராஜகிருஹத்துக்கு தினமும் பயணிகள் வந்தபடித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்காக இங்கே அகலமான குதிரை வண்டிகள் உள்ளன. குதிரை வண்டிகளில் ஏறி காட்டுக்குள் சென்று கோயில்களில் வழிபடுகிறார்கள். மலைமீதுள்ள விஹாரங்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக இங்கே டோலிகளும் உள்ளன. எங்கள் பயணத்தில் ராஜகிருத்தை விரிவாக பார்க்கும் திட்டம் இல்லை. ஆகவே சாலைவழியாக இருமருங்கிலும் தெரிந்த கோட்டை இடிபாடுகளைக் கண்டு சென்றோம். அப்பகுதி முழுக்கவே தொல்லியலாய்வுகள் விரிவாக நிகழ்ந்து வருகின்றன.

எங்கள் இந்தியப்பயணத்தின் திட்டமே விரிவான சுற்றுப்பயணம் அல்ல.  நாங்கள் செல்லும் இப்பதையை ஒருவர் சாதாரணமாகச் சென்று பார்த்துவர மிகக்குறைந்தது 3 மாதம் தேவை. பல ஊர்களை விட்டுவிட்டுதான் சென்றோம். பல ஊர்களை தொட்டுத்தொட்டுச் சென்றோம். ஆனால் இத்தகைய பயணத்துக்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒரே மூச்சில் 15 நாட்களுக்குள் நாம் இந்தியாவின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்த்துவிடுவதனால் நம் மனதில் ஓர் இந்தியசித்திரம் வலுவாக உருவாகிறது. நூற்றுக்கணக்கான சிறிய மாற்றங்கள் மாறாது எஞ்சும் சில அடிபப்டைகள் இரண்டுமே மனதில் பதிகின்றன. விரிவான பயணங்களில் இது சாத்தியமல்ல

ஆனாலும் எப்போதும் ஓர் இடத்தை விட்டுவந்ததுமே அந்த இடத்தின் அருகே உள்ள இன்னொரு இடத்தை நாம் விட்டுவிட்டதை அறிந்து மனம் சோர்வுகொள்ளும். இந்தியச் சுற்றுப்பயணத்தில் இதை தவிர்க்கவும் முடியாது. ஏனென்றால் இந்த நாடு அந்த அளவுக்கு பிரம்மாண்டமானது. இதெல்லாம் தெரிந்திருந்த போதும் கூட ராஜகிருஹத்தை சரியாகப் பார்க்காமல் வந்துவிட்டதை எண்ணி மனம் ஏங்குகிறது.

நாலந்தாவை நல்ல வெயிலில் சென்றடைந்தோம்.  நளந்தா படா கோவான் என்ற சிற்றூருக்குள் உளது. புத்தருக்கு முன்னரே கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் வானியல் சோதிடம் மருத்துவம் இலக்கணம் முதலியவை கற்பிக்கப்பட்ட பெரும் பல்கலைகழகமாக செழித்திருந்த நாளந்தாவே உலகின் முதல் உறைவிடப்பல்கலைகழகம். 10000 மாணவர்களும் 2000 ஆசிரியர்களும் இங்கே தங்கி கல்வியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். கிபி 12 ஆம் நூற்றாண்டு வரை 1700 வருடம் தொடர்ந்து செயல்பட்டு வந்த இந்த பல்கலைக் கழகத்துக்கு இணையாக உலகில் எதையுமே சொல்ல முடியாது.

மூன்று காலகட்டங்கள்  இந்த பல்கலை கழகத்துக்கு உண்டு. புத்தருக்கு முன் ஒரு காலகட்டம். பௌத்த காலகட்டம். கன்னோஜி மன்னர் ஹர்ஷவர்தனரால் பேணப்பட்ட பிற்கால கட்டம். நாளந்தா என்ற சொல்லுக்கு தாமரையின் உறைவிடம் என்று பெயர். ஞானம் ஒரு தாமரையாகவே இந்திய மரபில் எப்போதும் உருவகிக்கப்பட்டிருக்கிறது.

ஆஜீவக முனிவரான மகலி கோசாலரும் சமண தீர்த்தங்காரரான வர்தமான மகாவீரரும் நாலந்தாவுக்கு வந்திருக்கிறார்கள். வர்த்தமானர் 14 மழைக்காலங்களை இங்கே கழித்தார் என்று சமண நூல்கள் சொல்கின்றன். நாளந்தாவுடன் தொடர்புள்ள பௌத்த ஞானிகளின் பட்டியல் மிகமிகப் பெரிது. இலக்கண அறிஞரான பாணினியும் வானியலாளர் ஆரியபட்டரும் மருத்துவரான வராஹமிஹிரரும் முக்கியமான பெயர்கள்.
 
நாளந்தா இன்று சுட்டசெங்கற்களால் ஆன அடித்தளங்கள் மட்டும் பரவிக்கிடக்கும் ஒரு தொல்லியல்களம் மட்டுமே. சுதையுடன் சேர்த்துக் கட்டப்பட்ட  செங்கல் அடித்தளங்கள் மீது மரத்தாலான பல அடுக்கு கட்டிடங்கள் இருந்திருக்க வேண்டும். செங்கற்கள் இப்போதும் மிக உறுதியானவையாகவே உள்ளன. விஹாரங்களின் அடித்தளங்களுக்கு அடியில் ரகசிய நிலவறைகள் இருந்திருக்கின்றன. அவை இப்போது திறந்து கிடக்கின்றன. நாளந்தாவில் இருந்த புராதனமான ஸ்தூபியின் செங்கல் எச்சம்  எண்பதடி உயரத்தில் எழுந்து நிற்கிறது. இது சாரிபுத்தரின் ஸ்தூபி என்று ஆவணங்கள் சொல்கின்றன. அருகே இடிந்துபோன கோயிலின் கூரையற்ற அறையில் தியான புத்தரின் கற்சிலை கண்மூடி தன் ஆழத்தை நோக்கி மென் புன்னகை புரிந்து அமர்ந்திருக்கிறது.

நாளந்தா 12 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை செயலூக்கத்துடன் இருந்திருக்கிறது. பாலா வம்சத்து மன்னர்கள் அதற்கு நிதியுதவிசெய்திருக்கிறார்கள். டெல்லி சுல்தான் பக்தியார் கில்ஜி 1203ல் பிகார் மீது படையெடுத்து வந்தபோது பிகாரின் பெருமைக்குரிய பௌத்த மையங்களான நாளந்தா மற்றும் விக்ரமசிலா பல்கலைகளை எரித்தும் இடித்தும் அழித்தார். 10000 பிட்சுக்களை அவரது படைகள் கொன்றார்கள் . நாளந்தாவின் பிரம்மாண்டமான சுவடிநூலகம் முழுமையாகவே அழிக்கபப்ட்டது. அந்நூலகத்தில் இருந்து திபேத்துக்குக் கொண்டுசென்று மொழியாக்கம்செய்யபப்ட்ட நூல்களே இன்று எஞ்சுகின்றன என்று பௌத்த வரலாற்றாசிரியரான தாராநாதர் சொல்கிறார்.

ஆனால் அந்த இடிபாடுகளிலும் நாளந்தா பல்கலைகழகம் பின்னும் நடந்தது. திபெத்திய பயணியான சாங் லொட்ஸாவா 1235ல் நாளந்தாவுக்கு வந்த போது எரித்து சூறையாடபப்ட்ட நாளந்தாவில் 90 வயதான ஆசிரியர் ராகுல ஸ்ரீபத்ரா 70 மாணவர்களுக்கு பாடம்நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டதைப் பதிவுசெய்திருக்கிறார். உள்ளூர் பிராமனர் ஒருவர் அவருக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறார். ஆனால் பக்தியாரின் படையெடுப்புடன் பிகாரில் பௌத்தம் முழுமையாகவே அழிந்தது என்பது வரலாற்று உண்மை. நாளந்தாவிலிருந்து பாட்னாசெல்வதற்கான முக்கியமான சந்திப்புநகரம் பக்தியார்பூர் என்று அழைக்கப்படுகிறது.
 
இடிந்த நாளந்தாவில் சுற்றிவந்துகொண்டிருக்கும்போதே மழை கறுத்து குளிர் காற்று அடிக்க ஆரம்பித்து விட்டது. ஓடிப்போய் ஒதுங்கினோம். பலமான சாரலுடன் மழை நின்றது. செங்கல் அடித்தளங்கள் ஆழ்ந்தசெந்நிறம் பெற்றன. இலைகள் மௌனமாகச் சொட்டின. எதிர்புறம் நாளந்தாவின் அருங்காட்சியகம் இருந்தது. நாளந்தாவில் கிடைத்த புத்தர் சிலைகள் அங்கே பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. தனிப்பட்ட பூஜையில் இருந்த சின்னஞ்சிறு புத்தர் சிலைகள், உடைக்கப்பட்ட் புத்தர் சிலைகளின் தலைகள், பல்வேறு இரும்புக்கருவிகள், தூபக்குற்றிகள். நாளந்தாவுக்கு நிதியளித்தவர்களின் பெயர்களைச் சொல்லும் கல்வெட்டுகள் பல இருந்தன. பக்தியார் கில்ஜி நாளந்தாவை  எரித்து அழித்தபோது நிலவறையில் எரிந்து கருகி எஞ்சிய அரிசி ஒரு தட்டில் காட்சிக்கு வைக்கபப்ட்டிருந்தது.

நாளந்தா அருங்காட்சியகத்தில் உள்ள போதிசத்வ அவலோகிதேஸ்வரர் சிலை உலகப்புகழ்பெற்ற ஒன்று. தழல்கிரீடமும் கைகளில் மலரும் மாலையுமாக நின்ற கோலத்தில் உள்ள  கருங்கல் சிலை இது. பார்க்கும்தோறும் பிரமிப்பையும் பரவசத்தையும் உருவாக்கக் கூடியது . அமர்ந்த கோலத்தில் உள்ள போதிசத்வ பத்மபாணி [தாமரை ஏந்தியவர்] சிலையும் மிக அழகானது. இந்த இருசிலைகளைப் பற்றியும் இந்திய கலைவரலாற்றாசிரியர்கள் புளகாங்கிதம் கொண்டு எழுதித்தள்ளியிருக்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் நாகாஜுனரின்  அமர்ந்த கோலத்தில் உள்ள சிலை உள்ளது. ஒருகையில்நூலும் இன்னொரு கையில் அபயக்கரமுமாக முதுமைத்தோற்றத்தில் இருக்கிறார் சூனியவாதத்தின் தந்தை. நெடுங்காலம் உயிர் வாழ்ந்தவராதலால் அவரை முதியவராக செதுக்கினார்கள் போலும்.

மதியம் நாளந்தாவின் உணவகத்தில் சாப்பிடச்சென்றோம். காண்டீன் உரிமையாளரிடம் உணவின் விலையை விசாரித்தார் சிவா. ப·பே முறை உணவு ஒன்றுக்கு நூற்றி ஐம்பது ரூபாய். கட்டாது என்று சிவா திரும்பி வந்தபோது உரிமையாளர் பின்னால் வந்து என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டார். ரொட்டி,தால்,சப்ஜி போதும் தலைக்கு முப்பது ரூபாய் என்றார் சிவா. நாற்பது ரூபாய்க்கு பேரம் படிந்து உணவுண்ண அமர்ந்தோம். ஒரு பெரும் சிங்களக்குழு பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ”ஜெயன் இவங்கள்லாம் அந்த ஊர் பெரும் பணக்காரங்காளா இருக்கணும்…இல்லேன்னா இவ்ளவு தூரம் வரவே முடியாது”என்றார் வசந்தகுமார்.

உணவுண்டுவிட்டு வண்டியில் ஒரிஸா நொக்கி கிளம்பினோம். வரைபடத்தை எடுத்த வசந்தகுமார் ஜார்கண்ட் வழியாக கீழே இறங்கும் பாதை ஒன்றை முடிவுசெய்தார்.

நாளந்தா இடிபாடுகள்

நிலவறைகள்

இடிந்த கோயில்

போதிசத்வர் கோயில்முன் நான் சிவா– பத்துநாள்தாடி களைப்பு

மதம்,யந்திரங்கள், பிச்சை–மூன்று உலகங்கள்

பிகார் ஒரு நோக்கில்

பிகாரின் ஒரு ஓட்டுவீடு

ராஜகிருகத்தின் கோட்டைச்சுவர், மலைமீது

ராஜகிருகத்தில் குதிரைவண்டிகளே வாகனங்கள்

பிம்பிசாரர் சிறையிருந்த கோட்டை

நாளந்ந்தா ஓர் அறை

முந்தைய கட்டுரைபயணம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபயணம்,திராவிட இயக்கம்: கடிதங்கள்