மதம் கடவுள்:கடிதங்கள்

அன்பு ஜெ

மதம் பண்பாடு பற்றிய உங்கள் கருத்துக்களை [ கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா ] நண்பர்களிடம் விரிவாகவே விவாதித்தேன். நம் சமூகத்தில் எதை நம் குழந்தைகளுக்குக் கொடுபப்து என்பதே கேள்வி. நம்முடைய நம்பிக்கைகளைக் கொடுப்பதா அல்லது நம்முடைய நம்பிக்கையின்மையை கொடுப்பதா? நம்முடைய தேடலை கொடுக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லத்தக்க பதில்தான் அது. பண்பாடு என்பது எப்படியோ நம் மதத்துக்குள் தான் உள்ளது. நான் மதநம்பிக்கை இல்லாதவன்.ஆனால் சிறுவயதில் நான் கற்ற திருவாசகம்தான் என்னை தமிழார்வலனாக ஆக்கியது. நான் என் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் அலைந்து திரிந்து பணம் சேர்த்தும் பணம் இழந்தும் வாழ்க்கையை தேடிக்கொண்டிருந்த நாட்களில் என்னை மீட்டது நான் கற்ற தமிழே. அதற்காக நான் என்னை நீறு பூசி திருவாசகம் ஓதவைத்த தாத்தாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்

சிவசுப்ரமணியம்
சென்னை

***

அன்பு ஜெயமோகன். மதத்தை மறுப்பவர்கள் வாழ்வு சற்று வறண்டதே என்பது சரியே. மதக்கட்டுப்பாடின் காரணமாய் நெற்றியில் பொட்டு, கண்ணில் மை, கை கழுத்தில் (மெல்லியதாகவேனும்) வளையல், செயின் இல்லாத இளம்பெண்களைப்பார்க்கும்போது ஒரு வறட்சி தோன்றும். அழகியலில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். அலங்காரம் இல்லாத பெண்களை, குழந்தைகளை, கடவுளரை ரசிக்க முடியுமா?. மதங்களின் தேவை பற்றி உங்கள் கருத்து அருமை. மதம் வேன்டாம் என்று ஓஷோ சொன்னாரா என்ன? இருக்கும் மதங்களே போதாது என்றார். எத்தனை மனிதர்களோ அத்தனை மதம் இருந்தாலும் தவறில்லை என்றார். நாரத முனியின் பக்தி சூத்திரம் பற்றிய ஓஷோவின் புத்தகம் (தமிழில் படித்தேன்) பக்திக்கு புதிய வழி காட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு, ஜக்கி சொல்வார் “இருக்கிறார் என்று நம்புவதாலோ, இல்லை என்று வாதிப்பதாலோ உங்கள் வாழ்வில் என்ன மாற்றம் வந்து விடும்? ‘தெரியாது’ என்று உண்மையை ஒத்துக்கொண்டு தேடலை ஆரம்பித்தீர்களனால்தானே எதாவது தெரிய வர வாய்ப்பு வரும்?” இது என்னைக்கவர்ந்த கருத்து. வாழ்த்துக்கள்.

ரகுநாதன்

***

சந்தோஷ் கடிதம்

கடிதங்கள்

 

அன்புள்ள சந்தோஷ்

உங்கள் கடிதம்.

உண்மை. பெற்றோர் வன்முறை இல்லாமல் நம் சமூகத்தில் குழந்தைகள் வளர்வதில்லை. பெற்றோர் என்பது அவர்களின் பெற்றோர் அவர்களின் பெற்றோர் என்று போகும் ஒரு பெரிய மரபின் பிரதிநிதிகள். பிராமண சமூகத்தில் நம்பிக்கைகள் ஆசாரங்கள் ஆகியவற்றால் குழந்தைகளை அழுத்துகிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும் உடல்சார்ந்த நேரடியான வன்முறை என்பது இளமைபப்ருவத்தில் மிகமிகக் கொடுமையானது. அத்துடன் பெற்றோருடன் நேரடியாக எதையுமே பேசமுடியாது என்றும் ஆகும்போது உருவாகும் வன்முறை பலமடங்கு தீவிரமாக ஆகிவிடுகிறது. பிராமணர்குடும்பங்களில் பெரும்பாலும் இவை குறைவு என்பதையே நான் சொன்னேன். பிற சமூகங்கள் ஒன்று வேளாண்மைச் சமூகங்கள் அல்லது போர்ச்சமூகங்கள். அங்கே ஆண்மை என்ற விழுமியம் மூர்க்கம் என்ற தளத்துக்கு உச்சபப்டுத்தப்பட்டிருக்கிறது. தந்தையர் அதை நம்பி தங்கள் ஆளுமையாக வளர்த்து வைத்திருக்கிறார்கள். அது அவர்களை இரும்பாலானவர்களாக அணுகமுடியாதவர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது. என் அப்பா அண்ணா எல்லாருமே அபப்டித்தான். நான் குறிப்பிட்டிருபது அதைத்தான்
ஜெ

*******

பொ.கருணாகரமூர்த்தி கடிதம் see கடிதங்கள் அன்புள்ள கருணாகரமூர்த்தி அவர்களுக்கு

நலம்தானே?

பயணத்தில் இருக்கின்றமையால் எழுத பிந்திவிட்டது.

உங்கள் கடிதத்தில் சொன்ன முதல்விஷயம், பூசைகளிலும் ஆசாரங்களிலும் செலவிடப்படும் செல்வ விரயம் உழைப்பு விரயம் குறித்தது. அதை நாம் இன்னும் விரிவான பொருளிலேயே காணவேண்டும். மனிதகுலத்தில் மிகப்பெரிய உழைப்பும் செலவும் குறியீடுகளை உருவாக்கவும் பேணவும் தான் செலவிடப்படுகிறது. குறியீடுகளுக்கு அதைச்சார்ந்தவர்களுடைய தளத்தில் பயன் இருக்குமென்றால் அவை தவிர்க்கமுடியாதவையே. வெளியே நிற்பவர்களுக்கு அதன் பொருளும் பயனும் புரிவதில்லை. ஜனநாயகத்தில் உள்ள பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சிலைகள் போன்றவற்றையும் நாம் இப்படியே காண வேண்டும்.

மதம் என்பது குறியீடுகளின் பெரும்தொகுப்பு. தேங்காய் பழம் பூ கரும்பு பொங்கல் பட்டு மாலைகள் தேர் நாதஸ்வரம் என அது விரிந்துகொண்டே செல்கிறது. ஆசார அனுஷ்டானங்களும் குறியீடுகளே. மதம் தேவையென்றால் குறியீடுகளும் தேவையே. குறியீடுகளை தவிர்த்தால் மதத்தில் எஞ்சுவது அருவமான தத்துவமே. அதை ஒரு சமூக ஆழ்மனம் உள்வாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே என் நோக்கில் ஒரு ·பிரான்ஸ் கோயிலில் கரும்பு கொண்டுவரப்படுவது எனக்கு தவறானதாக, மூடநம்பிக்கையாக , தோன்றவில்லை. புத்தர் கோயிலுக்கு வெண்ணிறப்பூக்கள் கொண்டு செல்வதும் அதைப்போலத்தான்.

எண்ணிப்பார்ப்போம். ஒரு சமூகத்து மக்களுக்கு தங்கள் பண்பாட்டை அன்னிய மண்ணில் பேணிக்கொள்ளவேண்டுமென்றால் இவ்வாறு குறியீடுகளை பேணித்தானே ஆகவேண்டும். அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டால் பேணுவதற்கு பண்பாட்டில் எஞ்சுவது என்ன? எளிமையாகவே யோசிக்கலாம். நம் சிற்பங்கள், ஆசாரங்கள், வழிபாடுகள் அவைசார்ந்த பொருட்கள் ஆகியவை குறித்த எந்த ஞானமும் இல்லாத ஒரு சமூகத்துக்கு தமிழ் இசை புரியுமா? தமிழ் இலக்கியம் புரியுமா? ஒரு கட்டத்தில் தமிழே புரியுமா? அதன்பின் அவன் தமிழன் என்பதற்கு அவனில் என்ன எஞ்சும்? பெயர் என்ற ஒலியடையாளம் மட்டுமா? உண்மையிலேயே யோசிக்கவேண்டிய கேள்வி இது.

ஆனால் நீங்கள் சொல்வதில் உள்ள சாரம் எனக்குப்புரிகிறது. ஒருபண்பாட்டின் சிந்தனைகள் கலைகள் ஆகியவற்றைபற்றிய ஞானம் இல்லாமல் சடங்குகளை மட்டுமே பேணுவதில் உள்ள வரட்டுத்தனம் பற்றிச் சொல்கிறீர்கள். அது உண்மை. அத்தகைய சடங்குகள் நாளடைவில் ஒருவகையான அபத்தச் செயல்பாடுகளாக ஆகிவிடும். அவை பண்பாட்டுச் செயல்பாடுகள் என்ற பிரக்ஞையுடன் அவற்றின்பின் உள்ள மரபைபப்ற்றிய மனவிழிப்புடன் அவை செய்யப்படுமென்றால் அவற்றுக்கு பல்லாயிரமாண்டுக்கால பெரும் பண்பாடு ஒன்றின் அடையாளங்களாக நிற்கும் வல்லமை உண்டு.

நான் பக்தன் அல்ல. ஆனால் கன்யாகுமரி அம்மன் சன்னிதியில் விஷ¤ [சித்திரை ஒன்று] அன்று காலையில் முதற்கதிர் எழும்ப்போது முன்பு கொன்றைமலர்களும், நெற்கதிகர்களும், பொன்னும் பட்டும் பரப்பி ‘கணி’ [மங்கலக்காட்சி] நிறைத்து குத்து விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் காட்சி எனக்கு அற்புதமான மன எழுச்சி ஒன்றை உருவாக்குகிறது. அந்த காட்சியின் அறுபாடாத பல்லாயிரம் ஆண்டுக்காலத் தொன்மை, அதில் உறையும் என் முன்னோர்களின் வளம்குறித்த கற்பனை என்னை மனம் விரியச்செய்கிறது. கொன்றை குறித்த பலநூறு சங்கப்பாடல்கள் என் பிரக்ஞையில் கொந்தளிக்கின்றன. ஒரு மாபெரும் மரபின் தொடர்ச்சியாக என்னை உணரும் தருணம் அது.

இந்த உணர்வை இழந்த ஒரு சமூகத்துக்கு கவிதையின் ஆழம் புரியாது. நுண்கலைகள் அதை தொடாது.அது வணிக வெற்றிகளை அடையலாம். அடிப்படையாக உள்ள பலவற்றை இழந்துவிடும். ஆகவே சம்பலும் , கருவாடும் மட்டுமல்ல கரும்பும் வரட்டும். பரவாயில்லை.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைகிறித்தவர்கள்மீதான தாக்குதல்கள்