மலை ஆசியா – 2

காரில் கொலாலம்பூர் நோக்கி அதிகாலையில் சென்றுகொண்டிருந்தோம். கொலாலம்பூரின் கணக்கில் அப்போது ஏழுமணி. ஆனால் ஐந்துமணிமாதிரி இருந்தது வெளிச்சம். விமானப்பயணம் முடிந்து மண்ணில் இருக்கையில், தூக்கக் கலக்கமும் சேர்ந்துகொள்கையில் ஒரு வகையான போதைநிலை இருக்கும். சோர்வா மயக்கமா என்றறியாத நிலை. வெளியே விரைந்து ஓடிக்கொண்டிருந்த சாலையோரங்களை பார்த்துக்கோண்டிருந்தேன்.

 ”சுத்தமான கேரளம் போலிருக்கு” என்றார் நாஞ்சில். அந்த கனகச்சிதமான சொல்லாட்சி வியப்பை உருவாக்கியது. நாஞ்சில் பெரும்பாலும் ஒரு லௌகீகமான பயணி மாதிரித்தான் இருப்பார். சட்டென்று ஒருகணத்தில் படைப்பாளியாகிவிடுகிறார். உண்மை தான். இருபக்கமும் பசுமையான அடர்ந்த குறுங்காடுகள், தென்னைமரக்கூட்டங்கள். ஆனால் குப்பையே இல்லாமல் அப்போது கூட்டி பெருக்கி வைத்ததுபோல இருந்தது. 

”தென்னைமரங்கள் இல்லை, எண்ணைப்பனை” என்றார் த.ராமலிங்கம். ஆச்சரியத்துடன் கூர்ந்து கவனித்தேன். இளவியிலில் மின்னும் பசுமையுடன் நின்ற மரங்கள் தென்னைக்கும் பனைக்கும் பிறந்தவைபோலிருந்தன. பனைக்குரிய தடி தென்னைக்குரிய இலை. இல்லை ஈச்சை மரத்துக்குரியவையா? ”இதிலே எப்டி எண்ணை எடுப்பாங்க?” என்றார் நாஞ்சில். ”கொத்துக் கொத்தா காய்க்கும் சார்…உலரவைச்சு ஆட்டி எண்ணையாக்கிடுவாங்க” என்று மனோ பதில்சொன்னார். பாமாயில் என்றாலே ரேஷன்கடை நினைவை தவிர்க்க முடிவதில்லை. மலிவானது என்பதனாலேயே சத்தற்றது, சுவை குறைவானது என்ற மனப்பிம்பம். கும்பமுனி பாமாயில் பற்றி ஏதாவது விசித்திரமான கருத்து சொல்லக்கூடும் என்று தோன்றியது. ஆனால் அறிவியலின்படி அதிகமான சூடு தாங்கும் திறன் கொண்ட, செரிமானத்திற்குரிய கொழுப்பு கொண்ட பாமாயில் பிற சமையல் எண்ணைகளைவிட உயர்வானது.

மலேசியாவின் முக்கியமான விளைபொருட்களில் ஒன்று பனையெண்ணை. இன்னொன்று ரப்பர். இப்போது இயற்கை எரிபொருள்த் தேவைக்கும் உயர் உற்பத்தித்திறன் கொண்ட பனையெண்ணையை பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். எண்ணைப்பனையில் கள் இறக்கமுடியுமா என்று கேட்டேன், முடியும் ஆனால் செய்வதில்லை என்றார்கள். வட இந்தியாவில் ஈச்சம்பனையில் இருந்துதான் கள் எடுக்கிறார்கள். வேறுவழியில்லையென்றால் வெல்லமும் எடுப்பதுண்டு. நாஞ்சில் ”அதுக்கு ஒரு சீசன் இருக்கு…ஈச்சங்கள் நல்ல வீரியமா இருக்கும்… குடிச்சா என்னான்னு கேக்கும்” என்றார். ஏதோ ஒருபடத்தில்  அமிதாப் பச்சன் ஈச்சைமரத்தில் கள்ளெடுக்கும் ஈச்சையேறியாக நடிப்பார். இருந்தும் அவருக்கு இரு அழகிகள் மனைவிகளாக வாய்ப்பார்கள், ஷபனா ஆச்மியும் ஸ்மிதா பட்டீலும். என்ன படம் என்று நினவுக்கு வரவில்லை. பனையில் ஏறும் பனையேறி அதை ஆரத்தழுவி ஏறுவதாக தோன்றும். முள்நிறைந்த ஈச்சையில் ஏணிபோல வெட்டிவைத்த தடம்வழியாக பற்றற்று ஏறுவார்கள்.

கொலாலம்பூர் விமானநிலையம் கொலாலம்பூர்ரில் இருந்து கிட்டத்தட்ட 50 கிமி தூரத்தில் செபாங் மாவட்டத்தில்  கிளாங் சமவெளியில் இருக்கிறது. கிழக்காசியாவின் மாபெரும் விமானநிலையங்களில் ஒன்று. பல்வேறு ஊர்களுக்கு விமானங்கள் பிரிந்து செல்லும் சந்திப்பு. வருடத்துக்கு மூன்றரைக்கோடி பேர் ஏறியிறங்கும் வசதிகொண்டது என்று இணையதளத்தில் சொல்லியிருந்தார்கள். முன்னாள் மலேசியப்பிரதமர் மகாதிர் மொகம்மதுவின் கனவுத்திட்டம். பின்லாடனின் குடும்பத்தாரால் இதன் கட்டுமானம் செய்யப்பட்டது என்றொரு செய்தி. பிரம்மாண்டமான மூடியவெளி அது. உள்ளே கடைகள் நகரும் பாதைகள் படிக்கட்டுகள் ஓயாத மக்கள் கூட்டம். இரவுபகலற்ற வாழ்க்கை.

காலையொளியில் கொலாலம்பூர் தெரிய ஆரம்பித்தது. கட்டிடங்களின் பக்கவாட்டுச்சுவர்களில் மஞ்சள் பெய்திறங்கியது.  சட்டென்று கல்யான சீர்வரிசைகளை பரப்பி வைத்திருப்பது போல தோன்றியது. ·பிரிட்ஜ், டிவி, பாத்திரங்கள்… வெள்ளியாலான  கலைப்பொருட்க¨ளைப்போல கொலாலம்பூரின் இரட்டைக்கோபுரங்களும் அதற்கு அப்பால் செய்திகோபுரமும் தெரிந்தன. விரிந்த ஒரு காட்சி ஒருவகையான நிதானத்தை மனதில் உருவாக்குகிறது. கனவுத்தன்மை என்று சொல்லலாம். தனிமையுணர்ச்சி என்று சொல்லலாம். நான் நினைப்பதுண்டு, மனித உடலின் இருப்பை அது மிகவும் சிறிதாக்கிக் காட்டுகிறது என்பதே காரணம் என. உடலின் எல்லைகள் தெரிய ஆரம்பிக்கின்றன. எத்தனை சிறிய இடத்தில் நாம் இருக்க முடிகிறது என்ற  உணர்ச்சி. அது ஒருவகை அந்தரங்கமான பிரமையாகவும் இருக்கலாம்.

கொலாலம்பூர் நெருங்கி வந்தது. கட்டிடங்கள் வானிலிருந்து தலைமீது பொழிவதுபோல ஒரு பிரமை எனக்கு எழுந்தது. காரின் இருக்கையில் தலையை நன்றாகச் சாய்த்து மல்லாந்திருந்தமையால்கூட இருக்கலாம். சாலைகளில் போக்குவரத்து ஆரம்பித்துவிட்டது. பொதுவாக இந்த நவீன நகரங்களின் அடையாளமே விராங் விராங் என விரையும் கார்கள்தான். இந்நகரத்தின் சாலைகளை ரத்தக்குழாய்கள் என்றால் இவை அவற்றில் ஓடும் ரத்தம் போல. கொதிக்கும் கொப்பளிக்கும் சுழிக்கும் ரத்தம். அமைதியென்பதே இல்லாத பதற்றம். சிலசமயம் கணிப்பொறியில் மின்னி மறையும் எழுத்துக்களுக்கும் இந்தக்கார்களின் விரைவுக்கும் இடையே ஓர் உறவுண்டு என்று படுகிறது. நவீன யுகத்தின் வேகத்தை இவை காட்டுகின்றன. நிற்க நேரமில்லை நிற்க நேரமில்லை  என்று ஒவ்வொரு காரும் சொல்லிச் செல்வதுபோலிருக்கிறது.

எங்களூர் சின்னப்பன் வைத்தியர் திருவனந்தபுரம் சாலையில் கார்கள் செல்வதை பார்த்து ‘எல்லா பெயக்களும் என்னண்ணு போறானுவ!’ என்று வியந்தபின் ‘நல்ல காலம், நமக்கு இம்மாதிரி போற சோலிகள் ஒண்ணுமில்ல’ என்று மகிழ்ந்ததாகவும் பாட்டாவின் வாழ்க்கை மேலும் ஒருவருடம் நீண்டமைக்கு அதுவே காரணம் என்றும் சொல்வார்கள். நாகர்கோயில் பாட்டா மாதிரித்தான், அவசரமாகச் போய் செய்வதற்கு ஒன்றும் இல்லை. 

போனதுமே கவிழ்ந்துவிடவேண்டும் என்ற உத்தேசத்தில் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு சென்றோம். கிராண்ட் சீசன்ஸ் என்ற ஓட்டலில் அறை. கொலாலம்பூரின் உயரமான ஓட்டல் இதுதான் என்றார்கள். நகரத்தின் மையத்தில் இருக்கிறது இது. மிகப்பெரிய வரவேற்பறையில் உயரமான சதுரத்தூண்களுக்கு பித்தளைக் கவசமிட்டிருந்தார்கள். சுழன்றுமேலே செல்லும் மாடிபப்டிக் கைப்பிடிகளில் சரிகைபோட்ட திரை சுற்றப்பட்டிருந்தது. ரத்தச்சிவப்பான பதாகைகள் ஆடின. ரத்தச்சிவப்பு செயற்கை மலர்கொத்துடன் மூன்றாள் உயரமான இரு பூச்சாடிகள். சீனக்கண்களுக்கு பிடிக்கும்படியான அலங்காரம் என்று  நினைத்துக்கொண்டேன்.

விரைவு மின்தூக்கிகளில் ஏறி எங்கள் அறைக்குச் சென்றோம். 1616 எண் அறை பதினாறாம் மாடியில். நட்சத்திர விடுதிகளுக்கே உரிய விசாலமான, மிச்ச இடத்தை என்ன செய்வதென குழப்பம்  அளிக்கிற, அறை. மெத்தை. சோபாக்கள். ஏராளமான இழுப்பறைகள் வைப்பறைகள். குளியலறையில் ஏராலமான டவல்கள். சோப்பு ஷாம்பு வகையறாக்கள். நான் இந்தமாதிரி அறைகளில் கெட்டில் இருக்கிறா என்றுதான் பார்ப்பேன், இருந்தது.

எனக்கும் நாஞ்சில்நாடனுக்கும் ஒரே அறை. கடந்த பதினைந்தாண்டுகளாக என்னை தாங்கிக்கொள்வதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் நாஞ்சில்நாடனும் வசந்தகுமாரும். ஆகவே நான் இஷ்டப்படி இருக்க முடியும். சூட்கேஸை அப்படியே கடாசி ஓர் உதைவிட்டு அகலத்திறந்து இரணியனின் குடலை நரசிம்மர் உருவியது போல லுங்கியை இழுத்து எடுத்து கட்டிக்கொண்டு கட்டிலில் குப்புறப்படுத்தேன். நாஞ்சில்நாடன் பெட்டியை கீழே வைத்து வித்வான்கள் வாத்தியப்பெட்டியை திறக்கும் பரிபக்குவத்துடன் அதைத் திறந்தார். உள்ளிருந்து எல்லா பொருட்களையும் சீராக வெளியே எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

”என்ன செய்றீங்க?” என்றேன். ”ஜட்டி வேட்டி எல்லாம் எடுக்கணும். குளிக்கணும்லா?” ”தூங்கலியா?” ”பல்லுதேச்சு குளிச்சுட்டு தூங்கினா எதமா இருக்குமே” பத்துநாட்களுக்குரிய சாக்ஸ்கள் சீராக அடுக்கப்பட்டு ரப்பர் பாண்ட் போடப்பட்டிருந்தன. பத்து ஜட்டிகள். தூய வேட்டிகள். பத்து சலவை பனியன்கள். பவுடர், டியோடரண்ட் ஸ்ப்ரே, [பீய்ச்சி என்று தமிழாக்கம் செய்யலாம், கௌரவமாக இருக்காது] சட்டைக்கு செண்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் [சலவைக்கூழ்?] ஆப்டர் ஷேவ் [ பின்சவரம் என்று நாகார்ச்சுனன் செய்த மொழியாக்கம் இருப்பதாகச் சொல்கிறார்களே உண்மையா?] எல்லாவற்றையும் எடுத்து சீராக அடுக்கினார். அறை நாஞ்சில்நாடனுக்குரியதாகவும் நான் அங்கே விருந்துக்கு வந்ததாகவும் மாறியது.

நான் தூங்கிவிட்டேன். கண்விழித்தபோது நாஞ்சில்நாடன் குளித்து முடித்து வேட்டி பனியனுடன் எல்லா பொருட்களையும் சீராக திருப்பி பெட்டிக்குள் வைக்க ஆரம்பித்திருந்தார். ”தூங்கலியா?” என்றேன். ”தூங்கணும்” என்றார்.  ”பாஸ்போர்ட் எல்லாத்தையும் பெட்டியிலேயே வைச்சுக்கிடலாமா?” என்றார். தூங்கும்போதா என்று சந்தேகமாக இருந்தது. ”வெளியே போறப்ப பையிலே வைச்சுக்கலாம்” என்று சொன்னேன். ”எல்லா கார்டையும் கொண்டு வந்திட்டேன். விஸா மாஸ்டர்கார்டு எல்லாமே இருக்கு…ஒரு ஆபத்துன்னா தேவைப்படுமில்லா” நான் நிம்மதி அடைந்தேன். எனக்கு வரும் ஆபத்துக்களுக்கும் சேர்த்தே நாஞ்சில்நாடன் கொண்டு வந்திருக்கிறார். சொல்லப்போனால் நான் ஊருக்குப்போனபிறகும்கூட ஆபத்தைப்பற்றி அஞ்சவேண்டியதில்லை.

”ஒரு செல்போன் சிம்கார்டு வாங்கணும்…மனோ கீழே போனா வாங்கிக்குடுக்கிறதா சொல்லியிருக்கார். நான் போயி வாங்கிட்டு வந்திருதேன்” நான் அடுத்த விழிப்பில் நாஞ்சில்நாடன் ”ஆமா..வந்தாச்சு..இப்ப கொலாலம்பூரிலே இருக்கேன்…ஆமா” என்று பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். எனக்குசேர்த்துத்தான் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பதனால் நான் அவரது செல்போனை வாங்கி அருண்மொழியை கூப்பிட்டேன். அஜிதன் எடுத்து அம்மா தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னான். ‘படிக்கிறியா” என்றேன். ‘நீ போன வேலையை கவனி’ என்று சொல்லிவிட்டான்.

மரபின்மைந்தன் முத்தையா கீழே அவர் அறையில் இருந்து கூப்பிட்டு ”மூணுமணிக்கு மினிஸ்டரோட சந்திப்பு…போகலாம்.ரெடியா இருங்க” என்றார். அறையில் இருந்த கெட்டிலில் நான் பாலில்லா டீ போட்டேன். கண்ணாடிச்சன்னலின் திரையை விலக்கினேன். ஒளியைக்குறைக்கும் கண்ணாடி வழியாக வெளியே நகரம் தெரிந்தது. கீழே பாதாளத்தில் கார்களினாலான ஜெபமாலை நகரும் சாலை. டிராம் ஒன்று மரநாய் கிளையில் தொற்றிச் செல்வதுபோல அந்தரத்தில் இருந்த கான்கிரீட் சட்டத்தில் சென்றது.

நாஞ்சில்நாடன் இரட்டைகோபுரத்தைப் பார்த்தபின் ”சோளக்கொண்டை மாதிரி இருக்கு” என்றார். எனக்கு அதற்குப் பின்னால் இருந்த கொலாலம்பூர் கோபுரம் அல்லது மினரா கொலாலம்பூர் வில்லுப்பாட்டில் வில்லை அடிக்கும் கோல் போல தோன்றியது. ஒரு அறுபதுவயதுக்காரருடன் ஒரு நாற்பத்தெட்டுவயதுக்காரர் சேர்ந்து அறையில் தங்கி வேடிக்கை பார்த்தால் இந்த அளவுக்குமேல் ‘ரொமாண்டிக்’ ஆவது கஷ்டம்.

எல்லாரும் தயாரான பின்னர் கீழே சென்றோம். வரவேற்பறையில் சந்திரமௌலி சிரித்துக்கொண்டிருந்தார். பொதுவாக எல்லாவற்றையும் சிரிப்போடு சொல்வது அவரது பாணி. இருபத்துநாலுமணிநேர இதழாளர் அவர். எக்கணமும் எவரையும் பேட்டியெடுக்கத்தயாராக இருந்துகொண்டிருந்தார். காரில் டத்தோ சரவணன் அவர்களைப் பார்க்கச் சென்றோம். இந்த டத்தோ என்ற வார்த்தையை நான் தினத்தந்தியில் நிறையதடவை பார்த்திருகிறேன். டத்தோ சாமிவேலு திருச்செந்தூருக்கு சாமிகும்பிட வரும்போது செய்திபோட்டுவிடுவார்கள். டத்தோ அவரது பெயரோ ஊரோ குடும்பமோ என்று நினைத்திருந்தேன். ”டத்தோ சாமிவேலுவோட பையன் இவருன்னு நினைச்சேன்” என்றார் நாஞ்சில்நாடன்.

மனோ டத்தோ என்றால் என்ன என்று விளக்கினார். நம் ஊர் ‘பத்ம’விருதுகளைப்போன்றது அது. பொதுப்பணியில் சேவைபுரிந்தவர்கள், கலையிலக்கிய சாதனையாளர்கள் ஆகியோருக்கு மலேசிய மாமன்னர் வழங்கும் கௌரவப்பட்டம் அது. சமீபத்தில் ஷாருக் கானுக்குக் கூட கொடுத்திருக்கிறார்கள் – மலேசியாவை சினிமாவில் காட்டி சுற்றுலாச்சேவையை வளர்த்ததுக்காக. டத்தோவுக்கு மேலே உள்ள விருது டத்தோசிரி [ஸ்ரீதான். அங்கே அப்படி சொல்கிறார்கள்] சாமிவேலு அவர்களுக்கு இப்போது டத்தோஸ்ரீ பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே உள்ள பட்டம், நம் நாட்டின் பாரத ரத்னா மாதிரி, துன். மகாதிர் மொகம்மதுவுக்கு துன் பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது.

டத்தோ சரவணன் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர். மலேசிய நகரிய விரிவாக்க துறை துணை அமைச்சர். தமிழிந் மரபிலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். கண்ணதாசன் மன்றம், கம்பன் கழகம் முதலியவற்றில் இருந்த ஆர்வம் காரணமாக மரபின் மைந்தன் முத்தையாவுக்கு அறிமுகமானவர். எங்களை கைகுலுக்கி வரவேற்றார். மீசையில்லாத வசீகரமான தமிழ் முகம். நல்ல முன்வழுக்கை. சூட் அணிந்து ஒரு பன்னாட்டு நிறுவன மேலாளர் போலிருந்தார். நட்புடன் வரவேற்று அமரச்செய்து அறிமுகங்கள் செய்துகொண்டார். அன்று விடுமுறை நாள். ஆனால் விடுமுறை பொதுவாக அமைச்சர்களுக்கு கிடையாது. அன்றுதான் அரசுமுறையாக அல்லாமல் அவரைச் சந்திப்பவர்கள் சந்திக்க முடியும். நாங்கள் உள்ளே செல்லும்போதே வெளியே பலர் காத்திருந்தார்கள்.

எங்களைக் காக்கவைத்துவிட்டு ஒவ்வொருவராக வரச்சொல்லி பேசி அனுப்பிக்கொண்டிருந்தார். என்ன செய்கிறார் என்பதை மொழி புரியா நிலையிலும் கவனித்தேன். முதலில் அவர்களை அடையாளம் கண்டு சில தனிபப்ட்ட சொற்கள். பின்பு அவர்களின் கோரிக்கைகளை முறையீடுகளைக் கேட்கிறார். உடனே அதற்கான தகவல்களை தன் உதவியாளர் சூரியாவிடம் கேட்கிறார். சூரியா ஏற்கனவே அந்த கோப்புகளுடன் நிற்பதனால் பார்த்துச் சொல்கிறார். உடனே முடியும் முடியாது என்று கறாராகச் சொல்லிவிடுகிறார். சிலசமயம் முடியாது என அவர் சொல்லும்போது வந்தவர்கள் தயங்குகிறார்கள், ஆனால் அவர் சொல்வதென்ன என்றும் புரிந்துகொள்கிறார்கள் என்று பட்டது.

ஒருபெரிய டீ மேஜைக்கு முன் சென்று அமர்ந்தோம். அது முழுக்க பல்வேறு தின்பண்டங்கள்.  மலேசியாவுக்கே உரிய அரிசிக்கேக்  வகைகள் இருந்தன. பிடிக்காவிட்டால் களிபோலவும் பிடித்தால் கேக்போலவும் இருக்கும் இனிப்புகள். மோதகம் போன்று கருநிறத்தில் ஓர் இனிப்பு. அதில் ஒரு கருவாட்டுமணம் இருந்ததோ என்று எனக்கு சந்தேகம். சுத்த சைவரான சந்திரமௌலி விரும்பிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நாஞ்சிலிடம் அதிலே கருவாடு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு [இங்கே ஒரு தகவல், உணவை சோதிப்பது சாப்பிடுவதன் மூலமே என்பது நாஞ்சில் முறை. நெல்லை பேருந்துநிலையத்தில் திடீரென ஒரு சாந்தி அல்வா கடை. அது டூப்ளிகேட் என்று நாஞ்சிலுக்கு சந்தேகம். அப்படி விடக்கூடாதே, நெருங்கி ‘போடு ஒரு நூறு’ என்றார்] ‘இல்லை, சைவம்தான். வாசனைக்கு என்னமோ போட்டிருக்கான்’ என்றார்.

பக்கத்தில் ஓரு கூடத்தில் ஒரு கூட்டம் தமிழர்கள் காத்திருந்தார்கள். நகர்நடுவே சில பகுதிகளில் சட்டபூர்வமல்லாமல் குடியேறி நெடுங்காலமாக வாழக்கூடியவர்கள். அவர்களின் இடத்தை வாங்கிய தனியார் நிறுவனங்கள் அங்கே கட்டிடம் கட்டப்போகிறார்கள்.  ஏற்கனவே அவர்களுக்கு கட்டிடக்காரர்கள் அளிப்பதாகச் சொன்ன பணத்தைவிட மும்மடங்கு இப்போது பேச்சுவார்த்தை மூலம் பெற்றுத்தந்திருப்பதாக சரவணன் அறிவித்தார்.

அதை ஏற்கனவே அந்த மக்கள் அறிந்திருப்பதாகவும் அதில் அவர்களுக்கு திருப்திதான் என்றும் தெரிந்தது. ஆனால் மேற்கொண்டு அரசின் வீட்டுவசதித்துறை மூலம் வீடுகள் பெறுவதிலேயே குறியாக இருந்தார்கள். நகருக்கு வெளியே வீடுகள் காலியிருப்பதாகவும் அவற்றை உடனேயே அளிக்கமுடியும் என்றும் நகருக்குள் வேண்டுமென்றால் காத்திருக்க வேண்டும் என்றும் டத்தோ சொன்னார். நகருக்குள் வீடு பெறுவதிலேயே ஆர்வம் காணப்பட்டது. பிந்தினாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும்.

ஒவ்வொருவராக எழுந்து கேள்விகள் கேட்டார்கள். விளக்கம் பெற்றுக்கொண்டார்கள். அவர் எழுந்து வந்தபோது சூழ்ந்துகொண்டு நச்சரித்தார்கள். அவர் கிண்டலாகவும் பிரியமாகவும் பதில் சொன்னார். ஓரு பேரிளம்பெண் ‘நாங்கள் பிள்ளைக்குட்டிகளுடன் எங்கே போவது?’ என்றார்கள். ‘உங்களுக்கு வேறு வீடு இருப்பது தெரியும்…நானே அங்கே வந்திருக்கிறேன்’ என்று டத்தோ சிரித்தபோது அந்த அம்மையார் வெட்கத்துடன் சிரித்தார்.

டத்தோ சரவணன் கிளம்பும்போது நாங்களும் கிளம்பினோம். நான் சந்திரமௌலி கேட்க நாஞ்சில்நாடனிடம் ”அந்த ஸ்வீட்டிலே கருவாடு போட்டிருந்தாலும் நல்ல டேஸ்டாத்தான் இருந்தது. வித்தியாசமா இல்லை பாத்தீங்களா?” என்றேன். நாஞ்சில் அவருக்கே உரித்தான ‘குசும்பான ஜெண்டில்மேன்’ புன்னகையை உதிர்த்தார். சந்திரமௌலி முகம் வெளிறி வேறுபக்கம் பார்த்தார். அவருக்கு கேட்டிருக்குமா என்று சந்தேகப்பட்டு ”கருவாட்டிலே ஸ்வீட் செய்றதை இப்பதான் கேள்விப்படறேன்” என்றேன். சந்திரமௌலி இறுக்கத்தில் அரை இஞ்ச் உயரம் அதிகமானது போல இருந்தார்.

அறைக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்தபின் நகரத்தைச் சுற்றிவரலாம் என்றார் முத்தையா

[மேலும்]

டத்தோ சரவணன் இணையதளம்

http://msaravanan68.blogspot.com

முந்தைய கட்டுரைஅஞ்சலி, ஜெயந்தன்
அடுத்த கட்டுரைஇளையராஜா,ஷாஜி…கடிதங்கள்