பிரயாகை ஒரு கடிதம்

18-Days-by-Nisachar-21

அன்புள்ள ஜெ,

பிரயாகை தகவல்களின் பிரவாகமாக பொங்கி பெருகிக்கொண்டிருக்கிறது. சொற்கனலின் அத்தியாயங்களில் போர் என்பது களிப்பூட்டும் ஒன்றாகவும், சலிப்பூட்டும் ஒன்றாகவும், அச்சமூட்டும் ஒன்றாகவும் மாறி மாறி வருகிறது.

பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப் பட்ட வியூகங்களின் பெயர் மட்டுமே எனக்குத் தெரியும். அர்த்த சந்திர வியூகம் மட்டுமே அவற்றில் எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது. ஆனால் இதில் வரும் கடக வியூகமாகட்டும், கஜ ராஜ வியூகமாகட்டும், கழுகு மற்றும் ராஜாளி வியூகங்களாகட்டும் விவரணைகளால் துல்லியமாக கண் முன் காண முடிந்தன.

தங்களின் பூவிடைப்படுதல் உரை நினைவுக்கு வந்தது. குறுந்தொகையில் வரும் பூக்களின் தன்மைகள் எப்படி தலைவியின் அகத்துக்கு உதாரணமாகிறது என்பதைச் சொல்லும் போது பூக்கள், மரங்கள், மிருகங்கள் அனைத்தோடும் நம் முன்னோர்களுக்கு இருந்த புரிதலை, தொடர்பை விளக்கியிருப்பீர்கள். எவ்வளவு தூரம் இயற்கையோடு இயைந்த ஓர் வாழ்வு வாழ்ந்திருந்தால் போருக்கான வியூகங்களைக் கூட அவற்றிலிருந்து பெற்றிருக்க முடியும்? கழுகு வியூகத்தில் துருபதன் வரும் போது தருமன் சொல்கிறான், ‘சத்தமில்லாமல் வந்திருக்கிறான்’ . அதற்கு அர்ஜுனனின் பதில், ‘கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்’. மீண்டும் மீண்டும் அவர்களின் நுண்ணுர்வினைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

தருமனின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு தெளிவாகி வருகிறது. சொல்லப்போனால் இன்றைய நடுத்தர வர்க்க மனநிலை என்பதை தருமனிடம் தான் பார்க்க முடிகிறது. தான் அறம் என்று நினைக்கும் ஒன்று மீறப் படும் போது கண்ணீர் விடுகிறான். ஆனால் தன்னவர்கள் என்று வரும் போது அதை மீறவும் சித்தமாக இருக்கிறான். வெகு சீக்கிரம் பதற்றம் கொள்கிறான். அவசரம் கொள்கிறான். ‘ஐயோ, அவர்கள் கிளம்பி விட்டார்களே, நாம் இன்னும் கிளம்பவில்லையே’, என அங்கலாய்க்கிறான். கௌரவர்களின் போரின் போது பல முறை நாம் செல்ல வேண்டும், அவர்களைக் காக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறான். பிறரைத் துன்புறுத்தாத அதிகாரத்திற்கு ஆசைப் படுகிறான். அவ்வகையில் என் மனதுக்கு நெருக்கமானவனாகத் தருமனைப் பார்க்கிறேன்.

ஆனால் இவற்றுக்கும் அப்பால் தருமன் தன் தந்தையைப் பற்றி சொல்லும் இடங்களில் மனம் நெகிழ்ந்தது. மழைப் பாடலில் பாண்டுவின் மரணத்துக்குப் பிறகு அவனைப் பற்றி ஒவ்வொருவரும் நினைப்பதை ஜெ எழுதி இருந்தார். ஆனால் தருமனின் எண்ணங்கள் வரவே இல்லை. ஒரே ஒரு வரி, அதுவும் குந்தியின் கூற்று. அவன் சிதைக்கு தீயிடும் போது அவன் கண்ணில் தெரியும் தனிமை. இங்கே தருமன் தான் ஒவ்வொரு கணமும் பாண்டுவோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் போது வாழ்வாங்கு வாழ்வதன் அர்த்தம் புரிகிறது. பாண்டு தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்டான்.

மீண்டும் குஹ்ய மானசம் பற்றி வருகிறது. அதில் விசித்திர வீரியன் தன்னைப் பார்த்த போது அவனுக்குத் தெரிவது சித்திராங்கதன். உண்மையில் அது நாம் யாராக நம்மை நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் ஓர் ஆடி. நம் மனதின் அடியாழத்தை நமக்கே காட்டுவது. நிச்சயமாக அது நமக்கு உவப்பானதாக இருக்காது. சிலரால் அந்த பிம்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத போது மரணம் தான் நிகழும். அது தான் சித்திராங்கதனுக்கு நிகழ்ந்தது. முதற்கனலில் சித்திராங்கதன் தன் ஆடிப் பிம்பத்தோடு போரிடுவதாக வருவதன் அர்த்தம் இன்று தான் புரிந்தது. அதில் தன்னைப் பார்த்தும் மகிழ்வோடு இருந்தவன் விசித்திர வீரியன் மட்டும் தான். அந்த சுனையின் இட அமைவுக்கு தருமன் தரும் விளக்கம், ‘இங்கு நாம் மாபெரும் மாயையால் கட்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உறவாக, உணர்ச்சிகளாக நம்மைச் சூழ்ந்திருப்பது மாயையின் அலைகளே. நம் தெய்வங்களும் மாயையின் தோற்றங்களே. மாயை இல்லையேல் நாம் வெட்டவெளியில் நிற்கவேண்டியிருக்கும். தெய்வங்களின் துணைகூட இல்லாமல் தனித்து நிற்கவேண்டியிருக்கும்.’ ஆம் அந்த சுனை யாருமற்ற ஓர் வெட்ட வெளியில் தான் இருக்கிறது. காற்று கூட வராத ஓர் இடம். மாயை விலகிய ஓர் இடம். அதனால் தான் உண்மையான நம்மை அது காட்டுகிறது. ஒருவேளை அதில் தருமன் பார்த்திருந்தால் அதில் கர்ணன் தெரிந்திருப்பானோ?

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

 

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைஆகவே கொலைபுரிக!- கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்