தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று…

நெடுநாட்கள் என் அம்மாவின் சேமிப்பில் இரு மலையாள நூல்கள் இருந்தன. ‘அமிர்தபுளினம்’, ‘லண்டன் கொட்டாரத்திலே ரகஸியங்ஙள்’.மிகச்சிறு வயதிலேயே இரண்டையும் நான் ஆர்வத்துடன் வாசித்தேன். ஆசிரியர்பெயர்கள் இப்போதும் நினைவில்லை. இரண்டுமே அரசகுடியில் நிகழும் சதிகள், கொலைகள், தீரச்செயல்கள், காதல்கள் பற்றியவை. ‘லண்டன் அரண்மனை ரகசியங்கள்’ அன்றைய புகழ்பெற்ற ஆங்கில மர்ம நாவலாசிரியரான ரெய்னால்ட்ஸ் எழுதிய நாவலின் தழுவல். [ THE MYSTERIES OF LONDON. by G.W.M.Reynolds.] என் குடும்பத்தில் நிகழ்ந்த துயரங்களில் நான் ஊர்விட்டு அலைந்த வருடங்களில் அந்த நூல்கள் அனைத்தும் கைமாறிச் சென்றுவிட்டன. என் அண்ணா அவற்றை தனித்தனியாக விற்று அவரது அப்போதைய மன அழுத்தத்தைத் தீர்த்துக் கொண்டார்.

பலவருடங்கள் கழித்து அந்நூல்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன், அவையே மலையாளத்தில் அச்சேறிய ஆரம்பநூல்கள். அந்த முக்கியத்துவத்தை அறிந்தே அம்மா அவற்றை பாதுகாத்துவைத்திருந்திருக்கிறார். அவை இரண்டுக்கும் இடையே உள்ள பொதுக்கூறுகளை மனதுக்குள் தொகுத்துக் கொண்டேன். அவை இரண்டுமே தழுவல்கள். கிட்டத்தட்ட மொழிபெயர்ப்புகள் என்றும் சொல்லலாம். மலையாள உரைநடை மெல்ல உருவாகி வரும் காலம் என்பதனால் விசித்திரமான சொல்லாட்சிகளின் கலவையால் ஆன நடை கொண்டவை. ‘அமிருதபுளினம்’ ராஜபுதனத்து அரண்மனைச்சதிகளைப்பற்றியது என்றால் பின்னது லண்டன் அரண்மனைச் சதிகளைப் பற்றியது.அன்று எனக்கு ஏற்பட்ட மனப்பதிவுகள் சில ஆரம்பகால தமிழ்நாவல்முயற்சிகளை வாசித்தபின் வலுப்பட்டு இப்போதும் தொடர்கின்றன. அவற்றை தொகுத்துக் கொள்கிறேன்

இப்புனைகதைகள் வெளிவந்தகாலம் ஜனநாயகம் உருவாகிவந்த காலம். புனைகதைகளை வாசிப்பவர்கள் அதிகமும் அப்போது உருவாகிவந்த நடுத்தரவற்கத்தைச் சேர்ந்த கல்விகற்ற இளையதலைமுறையினர். அன்று இந்தியாவிலும் உலகமெங்கும் மன்னராட்சியும், பிரபுக்கள் ஆட்சியும் நிலவியது. இன்னும்சொல்லப்போனால் அவர்களே பொதுவாழ்க்கையை தீர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் மேல் விமரிசன நோக்கும் உருவாகி விட்டிருந்தது. இக்காரணங்களால் அரண்மனை வாழ்க்கையையும் பிரபுகுல வாழ்க்கையையும் சற்றே ‘தோலுரித்து’ காட்டும் படைப்புகள் வாசகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஊட்டின. அத்தகைய நூல்களை வாசகர் விரும்பிப்படித்தமையால் அவையே அதிகமும் எழுதப்பட்டன. இந்திய மொழிகளில் ஆரம்பகால புனைகதைகளில் இந்த அம்சத்தை காணலாம்.

இந்த புனைகதைகளுக்கு முன்னால் மன்னர்குலத்து நாயகர்களின் வீர சாகசங்களையும் காதலையும் விவரிக்கும் கற்பனாவாதக்கதைகள் ஏராளமாக இருந்தன. மேலைநாட்டில் அவை சாகசக்கதைகள் என்ற வடிவில் பரவலாக எழுதப்பட்டு வாசிக்கப்பட்டன. நம் நாட்டில் புராணங்களுக்கு நெருக்கமான ஒரு வடிவில் அக்கதைகள் இருந்தன. மிகச்சிறந்த உதாரணமாக சொல்லவேண்டியவை ‘மதனகாமராஜன் கதைகள்’, ‘பட்டி விக்ரமாதித்யன் கதைகள்’. அவையே நம் உரைநடை இலக்கியத்தின் தொடக்கப்புள்ளிகள். அவை இரு முன்னோடி மரபுகளைக் கொண்டவை. ஒன்று நமது புராண மரபு. இன்னொன்று நமது நாட்டார்- வாய்மொழிக்-கதைமரபு. அவற்றில் உயர்குடிப்பிறந்த வீரனின் சாகசங்களும் பெண்ணுறவுகளும் புகழப்பட்டன.

இக்காலகட்டத்தில்தான் கொஞ்சம் ஜனநாயகநோக்கு கலந்து மன்னர்களையும் பிரபுக்களையும் விமரிசனத்துடன் நோக்கும் புனைகதைகள் வெளியாயின. இவையெல்லாமே மேலைநாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவையே. இவற்றில் பழைய சாகசக்கதைகளின் மனநிலை மைய ஓட்டமாக வைக்கப்பட்டது. அதாவது மன்னர்குலத்தில் உதித்த சாகசவீரனின் வீரமும் காதலுமே மையக்கதையாக இருக்கும்.கூடவே அரண்மனைச்சதிகளின் குரூரமும் அறமின்மையும் விரித்துரைக்கப்படும். நான் மேலே சொன்ன இரு மலையாள நாவல்களும் அத்தகையவை.

அதாவது இவை சற்றே வளர்ச்சியடைந்த புராணங்கள் அல்லது நாட்டார்கதைகள். ஆகவே யதார்த்தம் என்ற கூறு இவற்றில் குறைவே. பரபரப்பான நிகழ்ச்சிகள், மர்மங்கள், உணர்ச்சிகரமான உரையாடல்கள் ஆகியவற்றால் ஆனவையாக இந்தப் புனைகதைகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. கதைமாந்தர்கள் புராணமரபுக்கும் மேலைநாட்டு சாகசமரபுக்கும் நடுவே இருப்பவர்களாக தோன்றுகிறார்கள். இக்காலப் புனைகதைகளில் மர்மம் என்பது மிக முக்கியமான அம்சமாக இருப்பதைக் காணலாம்.

பட்டிவிக்ரமாதித்யன் கதைகளில் இருந்து இவை வேறுபடும் இடம் எது என்றால் கதையை ஆசிரியர் ‘சொல்லும்’ முயற்சியானது கதையைச் ‘சித்தரித்துக் காட்டும்’ முயற்சியாக பரிணாமம் பெற்றிருப்பதையே சொல்லவேண்டும். கதைச்சூழல், கதைமாந்தரின் உரையாடல், கதைமாந்தரின் மனநிலை ஆகியவை ஆசிரியரால் நுட்பமான தகவல்களுடன் விரிவாகவே முன்வைக்கப்படுகின்றன. இந்த அம்சத்தை மேலைநாட்டு எழுத்துக்களில் இருந்து அப்படியே கற்று பெயர்த்தெடுத்துக் கொண்டன நம் முன்னோடி முயற்சிகள்.

அன்றைய வாசகர்களுக்காக இவ்வாறு இந்தியமொழிகளில் மேலைநாவல்கள் எழுதப்பட்டபோது அவை ஏன் மொழியாக்கம் செய்யப்படவில்லை? ஒன்று, அன்று ஆங்கிலத்தை மொழியாக்கம் செய்யுமளவுக்கு தமிழ் உரைநடை வளரவில்லை. இரண்டு புனைகதைவாசிப்பு அனேகமாக இல்லாமல் இருந்த சூழலில் மூலநூல்கள் காட்டும் வாழ்க்கையை புரிந்துகொள்ள தமிழ்வாசகர்களால் முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு தெரிந்த நிலச்சூழலில் தெரிந்த முகங்கள் மூலம் கதையை வாசிக்க விரும்பினார்கள். ஆகவே தழுவல்கள் வெளியாயின.

இந்த தொடக்ககால தழுவல் புனைகதைகளை நாம் புனைகதைவடிவம் மற்றும் மொழிக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் என்றே எண்ணவேண்டும். பலவகையான போராட்டங்கள் தத்தளிப்புகள் மற்றும் தேடல்கள் வழியாக இந்த முயற்சி மெல்லமெல்ல இந்தியமொழிகளில் தனித்தன்மை கொண்ட இலக்கிய ஆக்கங்கள் உருவாக வழிவகுத்தது. தழுவல்கள் வந்த காலத்திலேயே சமானமாக தமிழில் முன்னோடி புனைகதை முயற்சிகளும் நிகழ்ந்தன. அவை இணைந்து ஒரு வாசிப்புச் சூழலை உருவாக்கின. அச்சூழலின் வளர்ச்சியே இன்றைய நமது அறிவுச்சூழல். அந்தக் கோணத்தில் பார்த்தால் ஆரம்பகாலத்து அனைத்து எழுத்து முயற்சிகளும் நம் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவை என்று தெரியவரும்

[ 2 ]

1876 லிலேயே தமிழில் முதல்நாவலான பிராதபமுதலியார் சரித்திரம் வெளிவந்துவிட்டது. முன்னோடி நாவல்கள் என்று சொல்லப்படும்  பி.ஆர்.ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம்[1896] , அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் [1898] ஆகியவையும் வெளிவந்துவிட்டன. ஆனால் இந்நாவல்களுக்கு அடுத்த காலகட்டத்தை பொதுவாக இலக்கியத்தின் இருண்ட காலகட்டம் என்று சொல்வது விமரிசன மரபு. அதன் பின் 1940களில் மணிக்கொடி இதழை மையமாகக் கொண்ட ஒரு இலக்கிய இயக்கம் வழியாகவே தமிழில் நவீன இலக்கியம் உருவானது என்பார்கள். ந.சிதம்பர சுப்ரமணியம், க.நா.சுப்ரமணியம் போன்றவர்களின் நாவல்களை முன்னோடி நாவல்களுக்கு அடுத்தபடியாகக் கண்டு ஏறத்தாழ நாற்பது வருடங்களை தாவிவந்துவிடுவார்கள்

இலக்கிய வரலாற்றாசிரியரான ஆ.இரா.வேங்கடாசலபதி [நாவலும் வாசிப்பும்.காலச்சுவடு பதிப்பகம்] இக்காலகட்டம் என்பது மிகத்தீவிரமான இலக்கியச்செயல்பாடுகள் நடந்துகொண்டிருந்த ஒரு மாறுதல்பருவம் என்று வகுக்கிறார். அதாவது இக்காலகட்டத்தில்தான் தமிழில் வாசிப்பு என்பது ஒரு சமூகச் செயல்பாடாக ஆகியது.  ஆரம்பகட்டத்தில் எழுத்து கல்விகற்ற மிகச்சிறிய ஒரு குழுவினர் நடுவே மட்டும் புழங்கிய நிலை மாறி சமூகத்தின் பல்வேறு படிநிலைகளைச் சார்ந்த மக்கள் வாசிப்புக்கு வந்து சேர்ந்தார்கள். விளைவாக எழுத்து ஒரு தொழிலாகவும் புத்தகப்பிரசுரம் ஒரு வணிகமாகவும் வேரூன்றியது. இதன் விளைவாகவே தமிழில் நவீன இலக்கியம் உருவாக முடிந்தது. ஆகவே இக்காலகட்டம் நவீன இலக்கியத்தின் கருக்காலம் என்று சொல்லலாம் என்பது ஆ.இரா.வேங்கடாச்சலபதியின் எண்ணம்.

என் நோக்கிலும் அது சரி என்றே படுகிறது. இலக்கிய அழகியல் அளவுகோல்களின்படிப் பார்த்தால் மாதவையாவில் இருந்து ஒரே தாவாக புதுமைப்பித்தனுக்குத்தான் நானும் வருவேன். ஆனால் இலக்கியப் பரிணாமத்தின் கோணத்தில் இடைக்காலகட்டத்தை பெரிதும் கணக்கில் கொள்வேன். இந்திய மரபில் எப்போதுமே இலக்கியம் நேரடியாக வெகுஜன இயக்கமாக இருந்ததில்லை. நூல்கல்வி என்பது சான்றோரின் செயல்பாடாகவே இருந்தது. இலக்கியமும் அவ்வாறே. சான்றோருக்கான அந்த இலக்கிய மரபு மேலைநாட்டு உரைநடை இலக்கியத்தை அடையாளம் கண்டுகொண்டு அதன் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதன் விளைவே ஆரம்பகால நாவல்கள். ஆரம்பகால இதழ்கள் கூட இத்தகையவையே.

பொதுமைப்படுத்தப்பட்ட கல்வியை ஆங்கில அரசு இந்தியாவில் உருவாக்கியது. அதாவது பள்ளி என்ற அமைப்பை. ஆங்கில ஆட்சி இந்தியாவுக்களித்த மாபெரும் கொடை இதுவே. அதன் விளைவாக கல்விகற்ற ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகி வந்தது. அவர்களுக்கு தரமான கேளிக்கைகள் தேவைப்பட்டன. அவ்வாறாக வாசிப்பு என்பது ஞானத்தேடலுக்கும் செய்தி தொடர்புக்கும் மட்டுமான ஒன்று என்ற நிலை மாறி அது கேளிக்கைக்கும் உரியதாக ஆகியது. இந்த மாற்றத்தை நிகழ்த்தியவை 1900 முதல் தமிழில் வெளிவந்த ஏராளமான நாவல்களே. வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,  ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்கள் அதில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள்.

இவர்களின் ஆக்கங்கள் பெரும்பாலும் நாவல்களே. அதிலும் பெரிய நாவல்கள். அனேகமாக இவையெல்லாமே தழுவல்கள். துப்பறிதல், மர்மம் ஆகிய பண்புகளை கருவாகக் கொண்டவை.  அவை வெளிவந்தபோதே சுடச்சுட விற்று தீர்ந்தன. நாகர்கோயில்போன்ற நகரங்களிலேயே வடுவூரார் நாவல்கள் பலநூறு பிரதிகள் விற்றன என்றும் வேப்பமூடு முனையில் உள்ள ஒரு கடையில் சொல்லிவைத்து காத்து நின்று வாங்கவேண்டும் என்றும் சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். அய்யங்கார் நாவலெழுதி ஈட்டிய பணத்திலேயே ஒரு பிரபுவைப்போல சென்னையில் வாழ்ந்தார் என்று க.நா.சு.எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் தமிழில் எழுதியவர்களிலேயே அதிகமாக பணம் ஈட்டியவர் வடுவூரார்தான்.

இந்நாவல்களின் மொழிப்பங்களிப்பு என்ன? வாசிப்புக்கு பெருவாரியான மக்களைக் கொண்டுவந்தன இவை. அது ஒருமுக்கியமான சமூகச் செயல்பாடாகும். விளைவாக பதிப்பகங்கள் புத்தக வியாபாரிகள் போன்ற ஒரு கட்டுமானம் உருவாகி அது அடுத்தகட்டத்தில் பெரிய இதழ்கள் உருவாக வழியமைத்தது. பெரிதும் செய்யுள் சார்ந்தே இயங்கிய நம் மொழியில் உரைநடை உருவாகி வலுப்பெற இந்நாவல்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரிது. பண்டித நடை இந்நாவல்களுக்கு ஒத்துவராது, வெகுஜன வாசிப்புக்குரியவை இவை. சித்தரிப்பு , உரையாடல், விவாதம் அனைத்துக்கும்  உரைநடையை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இவை அந்தச்சவாலை எதிர்கொண்டன. ஆங்கிலத்தை சார்ந்து தங்கள் மொழியை உருவாக்கிக் கொண்ட போதிலும்கூட அவை புழங்குமொழியை நம்பியே இயங்கியாகவேண்டியிருந்தது. இது தமிழ் உரைநடையை மாற்றியமைத்தது.

ஜெ.ஆர்.ரங்கராஜுவின் சந்திரகாந்தா நாவல் இப்படி ஆரம்பிக்கிறது .”அப்பா எனக்கு ஹார்மோனியம் ·பிடில் முதலியவை கற்றுக்கொடுப்பதாகச் சொல்லிவிட்டு இதுவரையில் தாங்கள் ஏமாற்றிக்கொண்டே வருகிறீர்கள். என் தாயார் இதுவரை ஜீவித்திருந்தால் இதுபோல என்னை கவனியாதிருப்பார்களா? பக்கத்துவீட்டு காமு, லக்ஷ்மி முதலியவர்களெல்லாம் எப்படி பாடுகிறார்கள் பார்த்தீர்களா?…” அந்த உரையாடல்பகுதியில் பேச்சுவழக்கின் சரளம் கைவந்திருப்பதைக் காணலாம். தமிழ் உரைநடையில் இது ஒரு பாய்ச்சலே. அக்கால வாசகர்கள் கதைகளை சுருக்கிச் சொல்ல வாசித்துப் பழகியவர்கள். முதல்வரியிலேயே கதை நேரடியாக சித்தரிக்கப்படுவதன் புதுமை அவர்களை வெகுவாக கவர்ந்திருக்கும்

இக்காலகட்டத்தில் ஏராளமான நாவல்கள் வந்திருக்கின்றன. கணிசமானவை காலத்தில் மூழ்கி மறைந்து விட்டன. இக்காலகட்டத்து ஆய்வேடொன்று  ஏறத்தழ ஐநூறு நாவல்களின் பெயர்களை பட்டியலிடுகிறது.[வி.சீதாலட்சுமி, தமிழ்நாவல்கள் அகரவரிசை. International Inst. of Tamil Studies, 1985 ]டி.பி.அட்சர முதலியார் , அந்தோணிச்சாமி, எஸ்.எஸ்.அருணகிரிநாதன், ஆனந்த மனோகரன், சி.அருணாசல அய்யர் என்று நீளும் பட்டியலில் பெரும்பாலான பெயர்கள் ஆய்வாளர்களால் கூட நினைவுகூரப்படாதவை. வரலாற்றில் தங்கள் பங்கை ஆற்றிவிட்டு அவை மறைந்தன. ஆனால் மொழி எதையுமே முற்றாக அழிய விடுவதில்லை. பல ஆண்டுகளாகக் கிடைக்காதிருந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்கள் இப்போது அல்லையன்ஸ் பதிப்பக வெளியிட்டாக வந்தது மட்டுமல்ல அவை வாசகர்களையும் பெற்றன என்று பார்க்கும்போது அடுத்த சில வருடங்களில் இவை கிடைக்கக் கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. குறைந்தது இவற்றை ஆய்வாளர் வசதிக்காக மின்பிரதியாகவேனும் இணையதளங்களில் சேமித்து வைக்கலாம்

[ 3 ]

டி.எஸ்.துரைசாமி எழுதிய ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்ற நாவல் 1926ல் வெளியானது. அதன்பின் மறுபதிப்புகள் கண்டதா என்று தெரியவில்லை. தமிழின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றான இதை தமிழில் வணிக இலக்கியத்தை உருவாக்கிய முன்னோடிநூல்களில் ஒன்றாகச் சொல்லலாம். இம்முன்னுரைக்காக நாவலை நான் படித்தபோது சிலபக்கங்களுக்குள் இதை நான் ஏற்கனவே படித்திருப்பதை  உணர்ந்துகொண்டேன். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் இதன் பிரதி இருந்தது. அதை எட்டாம் வகுப்பு படிக்கும்போது நான் வாசித்திருக்கிறேன். ஒரேமூச்சில். நெடுங்காலம் சந்திக்காத ஒருவரை எதிர்பாராது கண்ட மகிழ்ச்சியை அடைந்தேன்.

1869 ல் கும்பகோணத்தில் பிறந்த டி.எஸ்.துரைசாமி அவர்கள் சிறிதுகாலம் ஆங்கில அரசின்கீழ் வேலைபார்த்துவிட்டு அதை உதறிவிட்டார். ஆங்கிலக் கல்விபெற்றவரானதனால் ஆங்கில புனைகதைகளை ஒட்டி தமிழில் புனைகதைகள் எழுதும் ஆர்வம் கொண்டார். சர் வால்டர் ஸ்காட் எழுதிய நாவல் ஒன்றை தழுவி இந்த ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்ற நாவலை எழுதி பாண்டிச்சேரி மறைமாவட்டத்திலிருந்து வெளிவந்த ‘சர்வவியாபி’ என்ற இதழில் வெளியிட்டார். 1926ல் இந்நாவல் நூலாக வெளிவந்தது. அக்காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு நாவலாக இது இருந்திருக்கிறது.

ஆரம்பகால வணிக நாவல்கள் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கின்றன. ஜே.ஆர் ரங்கராஜூ வடுவூரார் நாவல்களைப்போலவே
இந்நாவலும் பின்னர் ‘மரகதம் அல்லது ‘கருங்குயில் குன்றத்துக்கொலை” என்ற திரைப்படமாக வெளிவந்தது. சிவாஜிகணேசன், பத்மினி, வீணைபாலசந்தர் ஆகியோர் நடித்திருந்தார்கள். இன்றும் இப்படம் சிலரால் நினைவுகூரப்படுகிறது என்பதை இணையத்தில் படித்தேன். ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ என்ற இப்படத்துப்பாடல் அடிக்கடி தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறது.

ஸ்காட்லாந்துச் சிற்றரசர்களின் அதிகாரப்பூசல்களையே ஸ்காட் அதிகமும் நாவலாக எழுதினார். இந்நாவலும் அத்தகைய ஒரு சிற்றரசனின் கதையே. டி.எஸ்.துரைசாமி அவர்கள் கதையை தமிழகச் சூழலுக்குக் கொண்டுவரும்போது பொதுவான ஒரு பெயரை கற்பனைசெய்கிறார், கருங்குயில் குன்றம். அந்த நாட்டின் மன்னனாக இருந்த அனந்தரன்  என்ற மாரமார்த்தாண்டபிரபு தன் தமையனைக் கொன்ற கொலைப்பழிக்கு ஆளாகிறான். சந்தர்ப்ப சாட்சியங்கள் அவனுக்கு எதிராக இருக்கின்றன. சிறைப்பட்ட அவன் அங்கிருந்து தப்பி ஆப்ரிக்கா செல்கிறான். பின்னர் திரும்பி வரும்போது தன் மனைவி இன்னொருவனை மணக்கப்போவதாகச் செய்தி கிடைக்கிறது. ஆகவே அவன் தன் மகளை தன்னுடன் எடுத்துக்கொண்டு இலங்கைக்குத் தப்பி ஓடி அங்கே  ரகசிய வாழ்க்கை வாழ்கிறான். அவனது மகள் அலமு.

இலங்கைக்கு வரும் ராஜகிரி ஜமீந்தார் விக்கிரமசிங்கன் என்ற கொள்ளைக்காரனால் பிணைக்கைதியாக பிடிக்கப்படுகிறார். அவரை மீட்க ஏற்கனவே விக்ரமசிங்கனை ஆபத்திலிருந்து காப்பாற்றிய அலமு உதவுகிறாள். அவன் உடல்நலத்தை தேற்றி திருப்பி அனுப்புகிறாள். அவன் அவள்மேல் மையல் கொள்கிறான். அவளும் அவனை விரும்புகிறாள். ஆனால் அதை அனந்தரன் கடுமையாக விலக்குகிறான். காரணம் தேடும்போது அவன் தன் பழையகதையைச் சொல்கிறான். அந்நேரம் அலமுவை மணக்க விரும்பும் விக்ரமசிங்கன் அவர்களை தாக்கவே அவர்கள் கொழும்புவுக்கு வந்துசேர்கிறார்கள். தந்தையின் பழியை நீக்க சபதம் எடுத்து மகள் இந்தியாவந்து தன் தாயின் ஊரான அருங்கிளிபுரத்துக்கும் பின் கருங்குயில்குன்றதுக்கும் வருகிறாள். அங்கே தன் தாயிடமே பணிப்பெண்ணாகச் சேர்ந்து மெல்லமெல்ல துப்பறிந்து குற்றவாளிகளைப் பிடிக்கிறாள். காதலனையும் மணக்கிறாள். இதுவே இந்நாவலின் கதை. [முடிவைச் சொல்வது துப்பறியும் கதையைச் கொல்வது போல]

நான் இப்போது கவனித்த அம்சம் இன்றைய வாசிப்பிலும் பெரிய அளவுக்கு பழைமை தட்டாமல் இருக்கிறது இந்நாவலின் நடை என்பதே. அதாவது வடுவூரார், ஜெ.ஆர்.ரங்கராஜு நாவல்களை விட மேலாகவும், வை.மு.கோதைநாயகி அம்மாளின் நடையை விட பற்பல மடங்கு நவீனமாகவும் உள்ளது இதன் மொழிநடை. இந்நாவல் இன்றைய வாசகர்களுக்கும் வாசிப்பின்பத்திற்காக சிபாரிசு செய்யத்தக்கதே. பண்டைய நடை நீளமான சொற்றொடர்களால் ஆனதாக இருக்கும். அது நம் தொன்மையான உரைநடையிலிருந்து வந்த வழக்கம். இது நேர்மாறாக சிறிய வேகமான சொற்றொடர்களால் ஆனதாக இருக்கிறது. இதுவே இந்நடையை நவீனமாக ஆக்குகிறது.

”அக்குழந்தை  அவள் தகப்பனை தன்னை திருடிய நிமிட முதல்நேசித்தாள். அவனை தனக்கோர் தெய்வம் போல எண்ணி வந்தாள். அவன் துன்பத்துக்கு ஆறுதலாக இருந்தாள். அவளை அவன் அவள் தாயிடமிருந்து திருடி தன் மகள் இறந்தாள் என்று விசனப்படும்படி விட்டுவிட்டது ஒருக்கால் தப்பிதமாக இருக்கலாம். ஆனால் அலமு, நீயே யோசித்துப்பார்…” என்பதே இந்நடைக்கு உதாரணம். இந்த நடை இந்நாவலுக்கு ஆசிரியர் டி.எஸ்.துரைசாமி ஆங்கில நாவல்நடைகளில் ஆழ்ந்த பழக்கம் கொண்டவராக இருந்தமையால் வந்தது. ஆங்கிலத்தின் புனைகதை மொழியை பெரும்பாலும் நெருக்கமாக பின் தொடர்ந்திருக்கிறார்.  அவர் முன்மாதிரியாகக் கொண்ட ஆங்கிலநடை நவீனமானது. அக்கால தமிழ் நடையுடன் ஒப்பிட்டால் மிக மிகச் செறிவானது.  அந்த நவீனத்தன்மை இந்நடையிலும் பிரதிபலிக்கிறது.

இங்கே டி.எஸ்.துரைசாமி அவர்களின் பங்களிப்பு , அவர் முன்னுதாரணமாகக் கொண்ட ஆங்கிலநவீன நடையை இணையாகச் சென்று தொடும்படி அன்றைய தமிழை கொண்டுசெல்ல அவர் எடுத்த தொடர்ந்த முயற்சியே. இந்நாவலின் முதன்மையான பண்பாட்டுப்பங்களிப்பு என்று இந்த அம்சத்தையே சுட்டிக்காட்டவேண்டியிருக்கும்.  சாதாரணமான சொற்றொடர்களின் எடுப்பு முடிப்பு தொடுப்பு போன்றவற்றில் ஒருவகையான கச்சிதத்தை எட்ட டி.எஸ்.துரைசாமி முயன்றுகொண்டே இருக்கிறார். இந்நாவலை படிக்கும்போது இன்றுநாம் இதை உணர முடியாது, ஏனென்றால் இந்நாவலுக்குப் பின் தமிழின் திறன் வாய்ந்த உரைநடையாளர்கள் இந்த நாவல் முயன்ற இடங்களுக்கும் மேலாக மொழியைக் கொண்டு சென்றுவிட்டார்கள். ஆனால் சமகால பிற நாவல்களின் நடையுடன் ஒப்பிட்டால் அந்த சாதனை புரியும்

மேலும் தொடர்ச்சியாக அகத்தூண்டல் அளிக்கும் பல வரிகளை நாம் நாவலெங்கும் கண்டுகொண்டே செல்கிறோம். ”தன்னுடைய சகோதரனின் ரத்தம் பழிவாங்க ஓலமிடுகிறது என அவன் அறிவான்…” என்ற வரி ஆங்கிலம் தமிழில் உருவாக்கும் நல்விளைவுகளுக்கு உதாரணமாக அமையக்கூடியது. ”வசப்படுத்தும் அரசன் குரல் அலமுவின் காதில் தெளிவாகவே விழ வெகு சஞ்சலத்துக்குள்ளானாள்” அப்படியே ஆங்கிலச் சொற்றொடரின் நுண்ணிய உணர்த்துதிறன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இந்நாவலில் கவனிக்க முடிகிறது. ஆரம்பகால தமிழ் உரைநடையானது நம் வாய்மொழி மரபில் இருந்து வந்தது. ஆகவே சுருக்கிச் சொல்லும் ஒரு போக்கு அதில் இருக்கும். வினோத ரசமஞ்சரி அல்லது பட்டி விக்ரமார்க்கன் கதை போன்றவை கதைசொல்லியின் குரலை பதிவுசெய்தது போலவே இருக்கின்றன. அவை சித்தரிப்பதேயில்லை. பாரதியின் கதைகளில் கூட கணிசமானவை சொல்லப்பட்டவையே ஒழிய சித்தரிக்கப்பட்டவை அல்ல. பின்னர் சித்தரிப்பு முறை வந்தது. ஜெ.ஆர்.ரங்கராஜு விரிவான தகவல்களை அளித்து கதையை சித்தரிக்க முயல்கிறார். வடுவூராரின் கதைமாந்தர்கள் வளவளவென பேசுபவர்கள். பேச்சு வழியாகவே அவர் சித்தரிப்பை நிகழ்த்துகிறார்.

ஆனால் அப்போதுகூட இக்கால நாவல்களில் கதாபாத்திரங்களின் மனதைச் சித்தரிக்கும் முயற்சி அனேகமாக நிகழவேயில்லை. அச்சம், ஊகம் போன்ற சாதாரணமான எண்ணங்களே  அகச்சித்தரிப்பாக முன்வைக்கப்பட்டன. ஆனால் ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ நாவலின் முக்கியமான வலிமைகளில் ஒன்று அது தொடர்ச்சியாக மன ஓட்டங்களுக்குள் சென்றபடியே இருக்கிறது என்பது. குறிப்பாக அலமுவின் மன ஓட்டங்கள், சஞ்சலங்கள் மிக நுண்மையாகவே சொல்லப்படுகின்றன. ஒரு துப்பறியும் நாவல் என்ற தளத்தில் இருந்து இந்நாவலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வது இந்த அம்சமே. இவ்வகையில் இது தமிழில் ஒரு முக்கியமான முன்னோடி முயற்சியோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.

‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ நாவலின் அகச்சித்தரிப்பு பெரும்பாலும் அலமுவின் மனத்தை ஒட்டியதாகவே இருக்கிறது. அகச்சித்தரிப்பை நிகழ்த்துவதற்குரிய மொழிநடையும் சொல்லாட்சிகளும் அப்போது உருவாகிவரவில்லை. நனவோடை முறை வந்தபின்னரே மனித கத்தில் சொல்லோட்டத்தை அப்படியே சொல்லலாமென்ற எண்ணம் இலக்கியத்தில் உருவாகியது. ·ப்ராய்டிய உளவியல் அறிமுகமான பின்னரே ஆழ்மனம் போன்ற சொல்லாட்சிகள் இலக்கியத்திற்குள் வந்தன. அக்காலத்துச் சாத்தியங்களுக்குள் நின்றனபடி ஆசிரியர் மூலநூலின் அகச்சித்தரிப்பை தன் மொழியால் தொட எம்புகிறார்.அதுவே இந்நாவலின் முக்கியத்துவம்.

[ 4 ]

டி.எஸ்.துரைசாமி ஆங்கில இலக்கியபடைப்பொன்றை தமிழில் தரமுயன்றதன் சாதக அம்சங்கள் இவை. எதிர்மறையாகப்பார்த்தால் இந்நாவலை அவரால் இந்திய, தமிழகச் சூழலில் பொருத்திக் காட்டவே முடியவில்லை என்பதையே முதலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அக்கால ஜமீந்தார் முறை, அதன் நிர்வாக அமைப்பு, அதன் ஆட்சிச் சிக்கல்கள் எதுவுமே இந்நாவலில் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆங்கில டியூக்குகளின் அதே அரசாட்சிமுறையையே இங்கும் கொண்டுவந்திருக்கிறார். முதலில் கருங்யில் குன்றம், அருங்கிளி புரம் போன்ற பெயர்கள் நம்முடைய ஜமீந்தாரி குறுநாடுகளுக்குப் பொருத்தமானவை அல்ல. அவை கற்பனையால் போடப்பட்டவை. அக்காலத்து தமிழக ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்கள், மீதிப்பேர் தேவர் சாதியினர். அவர்களின் அமைச்சர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் அல்லது வேளாளர்கள். இந்நாவலில் ஆச்சரியமாக சாதி பற்றிய குறிப்பே இல்லை. சாதி பற்றிய குறிப்பு இருந்திருந்தால் ஏராளமான பண்பாட்டுத்தகவல்கள் நாவலுக்கு தேவைப்பட்டிருக்கும்.

இவ்வாறு அடிப்படையையே கற்பனையாக வைத்துக் கொண்டபின்னர் பெயர்கள் உட்பட எதிலுமே ஆசிரியர் இந்தியத்தன்மைக்காக முயலவில்லை. மாரமார்த்தாண்ட பூபதி , அலமு, கற்பகவல்லி என்ற பெயர்களெல்லாம் பொதுவானவையாகவே இருக்கின்றன. கருங்குயில் குன்றத்தின் அரண்மனை பற்றிய வர்ணனைகூட இந்திய அரண்மனைகளைப்போல இல்லை. அதைவிட கதைமாந்தரின் குணச்சித்திரத்தின் இயல்புகள் அன்றைய சமூகச்சூழலுக்கு இயைந்ததாக இல்லை. அலமு ஒரு ஆங்கில இளவரசி போலவே வளர்கிறாள். இசை கற்றுக் கொள்கிறாள். சுதந்திரமாக எங்கும் உலவுகிறாள். காட்டுக்குக் கூட செல்கிறாள். அதைவிட அன்னிய ஆடவர்களை தன் அறைக்குக் கொண்டுவந்து சிகிழ்ச்சை செய்கிறாள். தன் தகப்பனின் மீது விழுந்த பழியை உணர்ந்ததும் தன்னந்தனியாக இந்தியா வருகிறாள்.

அலமு இந்தியாவந்து விடுதியில் தங்கி வேலை தேடுகிறாள். சம்பளம் கொடுத்து சேடியை அமர்த்திக் கொள்கிறாள். தன் தாய்க்கே தோழியாக சென்று அமர்கிறாள். இப்படி சேடிகளை அமர்த்திக்கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இருந்ததில்லை. இங்கே தாசி என்பது ஒரு சாதி. சேடி என்பதும் சாதியே. மேலைநாட்டில் பிரபுகுலப்பிறப்புக்கும் சாமானியப்பிறப்புக்கும் இடையே மிகமிகப்பெரிய வேறுபாடு உண்டு. இந்திய சாதியமைப்பை விடபெரிய அகழி அது. ஒரு பிரபுகுலப்பெண் தோற்றத்திலேயே அதை வெளிக்காட்டுபவளாக இருப்பாள். ஆகவே அவளால் இன்னொரு மன்னர் அல்லது பிரபுக் குடும்பத்திற்குள் எளிதாக நுழைந்துவிட முடியும். மூலக்கதையில் இந்நிகழ்வு இதனால் நியாயப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்திய, தமிழ்ச் சூழலில் அது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை.

இக்கதை ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் பட்சிராஜா நிறுவனத்தால் படமாக்கப்பட்டபோது இந்த இடம் திரைக்கதையாசிரியராகிய வீணை எஸ்.பாலசந்தருக்கே உறுத்தியிருக்கிறது. கதாநாயகி கப்பலில் தன் தந்தையுடன் வரும்போது கப்பல் கவிழ்ந்து கடலில் விழுந்து தாயிடம் வந்துசேர்வதாக அதை மாற்றியிருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த திரைக்கதைகளில் ஒன்று இது என நினைக்கிறேன். ஒரு மேதையின் கைபட்ட திரைக்கதை என்றுகூட சொல்லிவிடலாம். அந்தப்படம் முழுக்க இந்த வகையான நுட்பமான மாறுதல்கள் பலவற்றைக் காணலாம். பல வகையான கிளைக்கதைகளும் விரிவுகளும் கொண்ட ஒரு பெரிய நாவலை விறுவிறுப்பான திரைக்கதையாக ஆக்கும் கலையில் முழுவெற்றிபெற்றிருக்கிறார் எஸ்.பாலசந்தர்.

‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ இந்திய வாசகனுக்கு ஆங்கில நாவலை வாசிக்கும் அனுபவத்தை அளித்தபடியே இருக்கிறது. அரண்மனை விருந்துக்கு எழுத்து வடிவில் அழைப்பு வருகிறது. விருந்தில் ஆண்களும் பெண்களும் சரிசமானமாகக் கலந்துகொள்கிறார்கள். விருந்துக்குப் பின் கதாநாயகியும் அவள் காதலனும் அரண்மனை தோட்டத்தில் இரவில் சாதாரணமாக உலாச்சென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். கருங்குயில்குன்றத்தின் அரசன் கற்பகவல்லியின் ‘கைகளை முத்தமிட்டு’ காதல் பேசுகிறான் ”கற்பகவல்லி இதுதான் என் பெயரில் கிருபை கூர்ந்து நீ காட்டிய முதல் அபிமானம். அனேக வருடங்களாக நான் உன்னை ஒரு தெய்வமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தேன்…” பெண்ணிடம் ஆண் இவ்வகை உபச்சாரப்பேச்சுகளை இங்கே பேசுவதேயில்லை என்பதை நாம் அறிவோம்.

கற்பகவல்லி கொலைக்குற்றத்தில் சிக்கிய கனவனை விவாகரத்து செய்து கொள்வதும், அவன் இறந்தான் என்று அறிந்தபின்னும் சுமங்கலி போலவே இருப்பதும்,  கருங்குயில்குன்றத்து அரசன் அவளை மணம் முடிப்பதற்காக ஏங்கிக் காத்திருப்பதும் எல்லாமே மேலைநாட்டு பண்பாட்டுச் சூழலையே காட்டுகின்றன. தமிழ்நாட்டு ஆளும் சாதிகளில் தேவர்களில் மட்டுமே விதவை மறுமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவர்களில் உள்ள பெருந்தாலி கிளையே  அதிகமும் ஜமீன்பொறுப்புகளில் இருந்தார்கள், அவர்களுக்கு விதவை மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. அதாவது தமிழ்நாட்டு அரசர்குலம் எதிலுமே மறுமண வழக்கம் இல்லை.

அலமு அறை எடுத்து தனியாக தங்கும் விடுதி எப்படி இருக்கிறது? ”அலமுவும் அவள் தோழியும் உள்ளே சென்றார்கள். சத்திரக்காரன் இவர்களை உள்ளே கூட்டிச்சென்று நன்றாக கூட்டி சுத்தம்செய்யப்பட்ட ஓர் அறையைக் காட்டினான். அவ்வறைக்கு இருபக்கமும் சன்னல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்றின் வழியாக ஊர் ராஜபாட்டையையும் இன்னொன்றின் வழியாக கடற்கரையையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவ்வறை அலமுவுக்கு திருப்திகரமாக இருந்தபடியால் தன் பெட்டிகளை அங்கே கொண்டுவரும்படி உத்தரவிட்டாள்…” சென்ற நூற்றாண்டில் நம் சம்ஸ்தானங்கள் எங்கும் இத்தகைய விடுதிகள் – இந்தியர்கள் தங்கும்படியாக – இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

நாவல்கலையின் தொடக்கத்தில் உருவான பல தத்தளிப்புகளை இந்நாவலில் நாம் காண்கிறோம். நாவல் கலைக்கு ஒரு முன்னுதாரணம் மேற்கே கிடைத்தது. ஆனால் அதை இங்கே நடுவதற்கான முன்னுதாரணங்கள் இங்கே இல்லை. இங்குள்ள முன்னுதாரணங்கள் நாட்டுப்புறக்கதைகள் மற்றும் புராணங்கள். அவ்விரு மரபுகளிலும் சிக்கி தடுமாறும் ஆசிரியரை நாம் ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ நாவலிலும் காணலாம். உதாரணமாக பெயர்கள். பிரதான எதிர்நாயகனின் பெயர் பிஞ்ஞகன். இப்படிப்பட்ட பெயருள்ள எந்த மனிதரும் நம் வரலாற்றில் இல்லை. இது சம்ஸ்கிருத நாடக இயக்கத்தில் இருந்து பெற்றுக் கொண்ட பெயர். அஞ்சனாதேவி, விலோசனை போன்ற பெயர்களையும் அவ்வாறே சொல்லலாம். அக்கால ஆக்கங்கள் பலதிலும் இப்படி பெயர்களை சம்ஸ்கிருதத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. சிறந்த உதாரணம் பெ.சுந்தரம் பிள்ளையின் ‘மனோன்மணீயம்’.

நம் புராண மரபில் கெட்ட கதாபாத்திரங்களுக்கு கெட்ட பெயர் போடும் வழக்கம் உண்டு. துர்க்குணன் என்றே வில்லனுக்கு பெயரிட்டுவிடுவார்கள். எந்த அன்னையும் தன் மகனுக்கு அப்படி ஒரு பெயரைப் போடமாட்டாள் என்ற யதார்த்தம் அங்கே செல்லுபடியாகாது. இகலன், காரமுகன், குண்டோதரன் போன்று  எதிர்க்கதாபாத்திரங்களுக்குப் பெயரிட்டிருக்கிறார் டி.எஸ்.துரைசாமி. அன்றைய யதார்த்தப்படி பெயரிட்டிருந்தால் சாதி துலங்கும் பெயர்களே போடப்பட்டிருக்கும்.

இன்னொன்றும் தோன்றுகிறது, இக்கதைகள் யதார்த்தத்துக்கு வரப்பிந்தி நின்றனவா அல்லது வரத்தயங்கி நின்றனவா? அன்று இந்திய ஆட்சி ஜமீந்தார்களினால் ஆனதாக இருந்தபோது உண்மையான மனிதர்களைப்போல கதாபாத்திரங்களைப் படைக்க எழுத்தாளர்கள் தயங்கினார்களா? அன்று புனைகதை என்ற தனிவடிவம் பிரித்தறியப்படவில்லை. வரலாறு, ஐதீகம், புராணம், நாவல் எல்லாமே ஒன்றாகக் கருதப்பட்ட காலம். சரியான சமூகப்புலத்துடன் இந்நாவல் எழுதப்பட்டிருந்தால் இதன் மேல் பல உண்மைக்கதைகள் சுமத்தப்பட்டிருக்கும் புனைவை வாசிக்கும் இன்பத்துக்குப் பதில் வம்புகளை வாசிக்கும் பரபரப்பே விஞ்சி நின்றிருக்கும். ஆகவே திட்டமிட்டே இந்த அன்னியத்தன்மை நாவலுக்கு அளிக்கப்பட்டதா? அப்படியும் இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. நம் மொழியில் புனைகதை வடிவம் வந்துசேர்ந்த ஆரம்ப நாட்களில் எழுந்த முக்கியமான சிக்கலை இவ்வாறு எழுத்தாளர்கள் எதிர்கொண்டிருக்கலாம்.

அன்றைய வாசகர்களுக்கு இவ்வாறாக ஒரு வசதியான வாழ்க்கைப்புலம் ஒன்று உருவாக்கி அளிக்கப்பட்டது. நேரடியாக தமிழக வரலாற்றில் எதையும் சுட்டாமல் ‘வெறும் கதையாக’ மட்டுமே நின்றிருக்கும் ஒரு புனைகதை. அதே சமயம் சமகால அரசியல் சிக்கல்களை அரண்மனை உள்குத்துகளை வாசித்தெடுக்கச் சாத்தியமான ஒரு சொல்வெளி. வாசிப்பின்பத்தையே இந்நாவல் முதன்மைப்படுத்துகிறது. ஆனால் எல்லாவகையான எழுத்தும் கருத்தியல்செயல்பாடே என்று நோக்கும்போது  அக்காலத்தில் உருவாகி வந்த சுதந்திர ஜனநாயக விழுமியங்களை உள்ளோட்டமாக இந்நாவல் முன்வைக்கிறது.

அந்த விழுமியங்களை அது ஐரோப்பாவிலிருந்து கொண்டுவந்துசேர்க்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவாக உருவான அடிப்படை விழுமியங்களை ஆங்கில இலக்கியங்களே இங்கு கொண்டுவந்துசேர்த்தன. அதன் மூலம் இந்திய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தன. ஆங்கில ஆதிக்கத்தை அகற்றின. [ஆங்கில நீதியமைப்புமுறை இந்தியாவில் ஆங்கில ஆட்சி வேரூன்ற வழிவகுத்தது. ஆங்கிலக் கல்வி இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டியது என்று சொல்லலாம்] இந்நாவல் முன்வைப்பதும் அத்தகைய விழுமியங்களையே.

முக்கியமானது பெண் விடுதலைதான். அன்றைய இந்தியச்சூழலில் , அன்று இளவரசிகள் வாழ்ந்த விதத்தை வைத்துப்பார்க்கும்போது, அலமு ஒரு புரட்சிபபெண்ணாக இருக்கிறாள். ‘ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரியம் அர்ஹதி ‘ [ பெண்ணுக்கு சுதந்திரத்துக்கான தகுதி இல்லை ] என்ற மனுமுறைக்கு நேர் மாறாக அவள் தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தானே முடிவுசெய்கிறாள். அவற்றை தன் மதிவன்மையால் வெல்கிறாள். உண்மையில் அக்காலத்தில் ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ பெற்ற பெருவெற்றிக்கு அதன் மையக்கதாபாத்திரம் பெண்ணாக இருந்ததுதான் முக்கியக் காரணம் என்று படுகிறது. பின்னர் திரைப்படமாக வந்தபோது அந்த பெண்கதாபாத்திரம் சற்றே குறைக்கபப்ட்டு அதேயளவுக்கு முக்கியத்துவம் ராஜகிரி இளவரசனுக்கும் அளிக்கப்பட்டது. இருந்தாலும் பத்மினி நடித்த பெண்கதாநாயகியின் செயல்கள் திரைரசிகர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கின்றன.

இக்காலகட்டத்து நாவல்களில் வரும் ஒரு முக்கியமான அம்சம் மென்மையான ஒரு ஜனநாயக ஊடாட்டம்தான். ஒரு கொடுங்கோல் ஆட்சியை சாமானியன் வீழ்த்துவான், அந்த சாமான்யன் அரசகுலத்தின் முறையான வாரிசாகவும் இருப்பான். அந்நாவல்களை ஒட்டி வந்த ஆரம்பகால சினிமாக்களிலும் இந்த அம்சத்தைக் காணலாம். இதில் என்ன கவனிக்க வேண்டிய அம்சம் என்றால் சாமானியனால் அரச அதிகாரத்தின் தீங்குகளை எதிர்த்து மதிவன்மையால் வெல்ல முடியும் என்ற எண்ணம்தான். இதுவே அக்காலத்தைய ஜனநாயக விழைவின் குரலாகும். அதே சமயம்  மணிமுடி ஒருவகை சொத்துரிமை என்ற எண்ணம் அக்காலத்தில் வலுவாகவே இருந்தது. ஆகவே பிறிதொருவருக்குச் சொந்தமானதை பறித்துக் கொள்பவனாக கதாநாயகன் இருக்கக் கூடாது என்ற ஒழுக்க மதிப்பீடு குறுக்கே வந்தது. இதை சமாளிக்க அந்த சாமானியன் ஏதோ காரணத்தால் வெளியேற்றப்பட்ட அல்லது கைவிடபப்ட்ட அரசகுல வாரிசுதான் என்று காட்டப்பட்டது. இந்த அம்சம் இந்நாவலிலும் உள்ளது


[ 5 ]

டி.எஸ்.துரைசாமி அவர்களின் இந்நாவல் இருவகையில் முக்கியமானது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஒன்று இன்றைய வாசகனுக்கும் குன்றாத வாசிப்பின்பம் அளிக்கும் ஒரு மர்மநாவல் இது. இதன் சரளமான நடையும் நுண்ணிய விவரணைகளும் சலிப்பில்லாமல் வாசிக்கச் செய்கின்றன. இலக்கிய மாணவனுக்கு நம் புனைகதை  ஏறி வந்த படிகளைக் காட்டும் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆவணம்.

[இந்நாவலின் வெளிவரவிருக்கும் புதியபதிப்புக்கு எழுதிய முன்னுரை]

அந்த கதாநாயகி

முந்தைய கட்டுரைகுறள்;இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைகருங்குயில் குன்றம், குறள்:கடிதங்கள்