ஆர்.எஸ்.எஸ்

அன்புள்ளெ ஜெ.மோ,

உங்கள் இணையதளத்தை RSS feed என்ற சேவை மூலம் தான் பல நாட்களாக கூகிள் ரீடரில் படித்து வருகிறேன்.  (இதில் ஒரு தளத்தின் feedஐ ஒருமுறை subscribe செய்து விட்டால் போதும் –  ஒவ்வொருமுறை அந்தத் தளத்தில் புதிய விஷயம் வரும்போதும்  அந்த விவரம் தானாகவே subscribe செய்தவரின்  கூகிள் ரீடரில் வந்து உட்கார்ந்து விடும். போய்ப் படிக்க வசதியாக இருக்கும், எதையும் மிஸ் செய்ய வேண்டாம்)

ஒரு விஷயத்தை இப்போது தான் கவனிக்கிறேன்.  உங்கள் இணையதளத்தில் இது எப்படி அமைக்கப் பட்டுள்ளது என்றால்,   ஒவ்வொரு புதிய பதிவின் போதும் அந்த முழுப் பதிவுமே கூகிள் ரீடரில் வந்து விடுகிறது! அதனால் இணையதளத்திற்கு வருகை தராமலே அனைத்துப் பதிவுகளையும் படித்து விடலாம்..  இப்படி நிறையப் பேர் படித்தால்,  அது தளத்திற்கு வருகை புரிபவர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும்.  கணிசமான பேர்  உங்கள் தளத்தை இப்படிப் படிக்கும் சாத்தியம் இருக்கிறது – அவர்கள் வருகை கணக்கில் வராமலே போகும்.

இதைத் தவிர்க்க, RSS feedல் புதிய  பதிவைப்  பற்றிய சிறு விவரம் மட்டும் (அல்லது  முதல் பத்தி மட்டும்)  வருமாறு செய்ய வேண்டும்.  அதில் க்ளிக் செய்தால், தளத்தில் அந்தப் பதிவுக்கு அது தானாகவே இட்டுச் செல்லும். 

RSS feedல் இதைச் செய்வது மிக எளிது.   இது தொழில்நுட்ப சமாசாரம் என்பதால் சிறில் அலெக்ஸுக்கும் இந்த மடலை CC செய்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு


My blog:  http://jataayu.blogspot.com/

அன்புள்ள ஜடாயு

முதலில் நீங்கள் சொல்வதுபோல மின்னஞ்சலில் ஒரு பத்தி மட்டுமே அனுப்புவதாகவே இருந்தது. கட்டுரையை பிறருக்கு அனுப்பினாலும் இணைப்பு மட்டுமே செல்லும். ஆனால் தொடர்ச்சியாக பல வாசகர்கள் முழுக்கட்டுரையையும் பெறவும், அனுப்பிவைக்கவும் வசதி தேவை என்று கேட்டார்கள். அதை நானும் சிறிலும் யோசித்தோம்.

சிறில் இரு தரப்பையும் சொன்னார். முழுக்கட்டுரை¨யையும் அனுப்புவதுவழியாக இணைய வருகை குறைகிறது. ஆகவே அலெக்ஸா ரேட்டிங் முதலியவற்றில் இடம் கீழே வருகிறது. இப்போது கிட்டத்தட்ட 150  பேர் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்கள் தினமும் சிலமுறை இதற்குள் வரநேர்ந்தால் இப்போது இரண்டாமிடத்தில் இருக்கும் இந்த தளமே தமிழில் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய இதழ்களின் இணையதளங்களில் முதலிடத்தில் இருக்கும்  என்றார்.

ஆனால் வாசகர்களில் கணிசமானவர்கள் அலுவலகங்களில் வாசிக்கிறார்கள். பல அலுவலகங்களில் இணையதளங்களை பார்ப்பதற்கு தடை உள்ளது. மின்னஞ்சல் உதவியானது என்றார்கள். மேலும் இக்கட்டுரைகள் நீளமானவை ஆதனால் மின்னஞ்சலில் வைத்து அல்லது பிற வடிவுக்கு மாற்றி சாவகாசமாக படிக்கவும் முடியும்.

யோசித்தபின் முழுக்கட்டுரையையும் அனுப்பலாமென முடிவுசெய்தேன். எனக்கு இக்கட்டுரைகள் சென்றுசேரவேண்டுமென்றே ஆசை. இணையதளத்திற்கு வரும் வாசகர் மூலம் விளம்பர வருமானம், அல்லது வருகைக் கட்டணம் ஏதுமில்லை. ஆகவே இப்படியே இருக்கட்டும் என்று முடிவுசெய்தேன்.

நடுவே பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாகஆயிரத்து இருநூறைத் தாண்டியமையால் இணையதளம் சுமையேறி அனுப்புவதை சிலநாள் நிறுத்திவிட்டது. மீண்டும் விரிவாக்கியிருக்கிறோம். எங்கள் கணக்கில் அந்த வாசகர்களையும் சேர்த்தே வாசகர்களைக் கணிக்கிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைசென்னை, மூன்று சந்திப்புகள்
அடுத்த கட்டுரைகோட்ஸே