போரிலிருந்து மிஞ்சுதல்

வனம்புகுதல்  கடிதத்தை எழுதிய நண்பரின் மறுகடிதம்:

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,

நன்றி வணக்கம்.ஒரு சிலருக்கு எழுதியிருந்தும் உங்களிடம் இருந்தே பதில் வந்தது.அதுவும் இப்படியொரு சிறந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.இது உங்கள்

சிறந்தஅறிவுத்திறனையும்,உதவ வேண்டும்   என்ற மனப்பான்மையயும் காட்டுகிறது.வேறு எவரும் பதில் எழுதாததற்கு காரணம்    இந்தக் கடிதத்தை படித்த பின் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

நான் தமிழ் மீதும் சைவ கலாச்சாரத்தின் மீதும் காதல் கொண்டவன்.இறை நம்பிக்கையும், மக்கள் தொண்டில் ஆர்வமும், எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாது சைவ உணவையே ஏற்று,மேல்நாட்டு நாகரீகங்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளாது வாழ்பவன்.

இலங்கையைச் சேர்ந்த நான் போரினால் வெளிநாட்டுக்கு வந்த பின் அனைத்து   உறவுகளையும் இழந்து தற்போது யாருமற்றவனாக வாழ்வதால் ஆன்மீகமும்,தனிமையும் தேவைப்படுகிறது.நீங்கள் கூறியது போல் கிராமப் புற சூழல் எனது அமைதிக்கு சிறந்த மருந்தாகும்.

நான் சமூக சேவையில்      ஆர்வமுற்று இருந்தும்,போரிலோ அன்றி வேறு அரசியலிலோ,இயக்கங்களிலோ ஈடுபடாது இருந்தும் கூட போர்      என்னை மிகவும் பாதித்து விட்டது. தற்போதய   மிக மோசமான இலங்கைச் சூழல் என்னை தற்கொலை முயற்சிக்கே கொண்டு சென்று விடலாம்  என்ற

நிலையிலேயே அமைதியை வேண்டி, நீங்கள் கூறியது போல் தமிழக கிராமத்திலோ அன்றி ஏதாவது கோவில் தொண்டு செய்வது, இறையருள் தரும்  இடங்களில் வாழ்வது,தமிழ்நாட்டில் உள்ள தலங்களை தரிசிப்பது என முடிவு செய்தேன்.இதனால் இழந்த உடன்பிறப்புக்களை  திரும்பப் பெற முடியாவிடினும், மனத்தை திசை திருப்புவதுடன்,என்னால் முடிந்த  தொண்டையும் செய்ய முடியும்.அறுபத்தைந்து வருட வாழ்விற்கு பிராயச்சித்தமாகவும் இருக்க முடியும்.

உங்கள் மனதில்   ஏற்படும் கேழ்வி எனக்கு புரிகிறது.ஏன்   இலங்கைக்கு போக முடியாதா என்பது தானே.என் மன நிலையில் மட்டுமல்ல,வெளியே போர் முடிந்த மாயைத் தோற்றம்.உள்ளே இருப்பது விபரிக்க முடியாத வலி.அதுவும்  வெளி நாடொன்றில்   இருந்து போனாலோ சொல்லி  விபரிக்க முடியாது.

உங்களால் முடிந்தால்   ஏதாவது  வழி காட்டலாம்.எனது செலவிலேயே வாழப் போவதால் யாருக்கும் என்னால் சிரமம்   இருக்காது.உதவி கேட்பதன் காரணம் இலங்கையர்களுக்கு உதவி,தங்க  இடம் கிடைப்பதோ சிரமம்.இது தவிர தமிழ் நாட்டிற்கு என்றும் வந்ததில்லை.சிலர் தப்பான கண்ணோட்டத்துடனேயே இலங்கைத் தமிழர்களை  பார்க்கிறார்கள்.இது இயற்கை,உங்களுடையதோ அன்றி என்னுடையதோ தவறு அல்ல.

அத்துடன்   எழுத்துலக  அனுபவமுடைய   உங்களுக்கு தெரியும்,அபிவிருத்தி   அடைந்து வரும் நாடுகளில்   வெளி  வேசத்தையே நம்புகிறர்கள்.

உங்களை சிரமப் படுத்த விரும்பவில்லை. என்   கடிதத்திற்கு பதில் தந்ததே சிறந்த   உயர்ந்த உங்கள்    உள்ளத்தை காட்டுகிறது.

தயவு செய்து சிரமம் ஏற்படும் பட்சத்தில்    இக்கடிதத்தை மறந்து விடவும்.

அன்புடனும்,நன்றியுடனும்

M

 அன்புள்ள M அவர்களுக்கு,

உங்கள் கடிதம் மிகுந்த மனப்பாரத்தை அளித்தது. போர் என்பதை வெறுமே உயிர், பொருள் இழப்பின் கணக்குகளில் பேசிக்கொண்டிருக்கிறோம். அதைவிடப்பெரிய இழப்பு நம்பிக்கையின் சரிவு. அதை பல தருணங்களில் உணர்ந்துகொண்டிருக்கிறேன். இலடியங்கள் கோஷங்கள் ஆகியவற்றின் பெயரால் வன்முறையை நியாயப்படுத்துபவர்களிடம் நான் சொல்வதற்கிருப்பதே இதுதான். மனித வாழ்க்கை மிகமெல்லிய ஒரு தொடர்நிகழ்வு. அது சீராகச் சென்றுகொண்டிருக்கும்போது எல்லாம் சரியாக இருந்துகொண்டே இருக்கும் என்று தோன்றும். சட்டென்று முறியும்போது இவ்வளவுதானா என்ற பிரமிப்பு ஏற்படும். கண்ணெதிரே கலைந்து போய்விடும்.

ஓரளவு உங்கள் தனிமையையும், வலியையும் என்னால் உணர முடிகிறது. ஏனென்றால் இதெ நிலைமையை ஒரு காலத்தில் நான் அறிந்தவன். இங்கே, வெறும் 18 கிமீ தூரத்தில்தான் நான் பிறந்த ஊர். நான் அங்கே சென்று 23 வருடங்கள் ஆகின்றன. அந்த மண்ணில் நான் வாழ்ந்த வாழ்க்கை பொய்யாய் பழங்கதையாய் மாறிவிட்டது

நீங்கள் இலங்கை செல்லமுடியாதென்றே நானும் எண்ணுகிறேன். நீங்கள் அறிந்த இலங்கை அங்கே இருக்காது. கசப்பான நினைவுகள் மட்டுமே இருக்கும். இங்கேயே நீங்கள் உங்கள் இடத்தைக் கண்டடையலாம்.

நான் விரைவில் உங்களிடம் தெரிவிக்கிறேன்

அன்புடன்

ஜெ

வனம்புகுதல்

முந்தைய கட்டுரைகோட்ஸே
அடுத்த கட்டுரைகோவை சந்திப்பு