கலாய்ப்புகள்

ஜெ

முன்பு ஒருமுறை நீங்கள் தமிழர்களின் நகைச்சுவை பற்றி சொல்லியிருந்தீர்கள். நான் கடந்த நாலைந்து நாட்களாக அதை ‘அனுபவித்து’ தமிழே வேண்டாம்டா சாமி என்கிற நிலைமையிலே இருக்கிறேன். ‘ஜாமீன் கடல்லயே இல்லியாம்’ என்று ஒரு வடிவேலு டயலாக். அதுவே ஒரு மொக்கை காமெடி. அதையே போட்டு போட்டு பின்னிப்பின்னி எழுதி எழுதி சிரித்து பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேரிலும் ஒரே நாளில் ஆபீஸில் வீட்டில் தெருவில் எல்லாம் இதே வரியை ஐம்பது முறை கேட்டாகிவிட்டது. ஒருத்தர் சொன்னதுமே கெக்கேபிக்கே என்று சிரிக்கிறார்கள்.

உண்மையிலேயெ நம்மாட்கள் இந்த அளவுக்கு மொண்ணைகளா என்று நினைக்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.டேய் இதையே எத்தனை தடவைடா சொல்வீங்க என்று ஒருத்தராவது மண்டையில் அடித்து கத்துவார்களா என்று பார்க்கிறேன். இவர்களெல்லாம் என்ன வாசித்து என்ன சிந்தித்து. ஆனால் இந்த மொக்கையாண்டிகளுக்கு இருக்கிற தன்னம்பிக்கை இருக்கிறதே. சினிமாவிலே இருக்கிற மிக மொக்கையான இடத்தை ரசித்து அதையே சொல்லிச்சொல்லிச் சிரித்து அதேசயயம் சினிமா அரசியல் எல்லாவற்றையும் கூறுபோட்டு கலாய்க்கும் பெரிய அறிவாளிகளாக பாவனைசெய்து அதை வேறு நாலு மொண்ணையாண்டிகள் பார்த்து பரவசம் அடைந்து.அடச்சீ என்பதுதான் சொல்லத்தோன்றியது

ராஜ்

அன்புள்ள ராஜ்,

அசலாக ஒரு நகைச்சுவையைச் சொல்ல இரண்டு அடிப்படைகள் வேண்டும். ஒன்று நகைச்சுவை உணர்ச்சி. அது புத்திசாலித்தனத்தின் ஒரு பகுதி. இன்னொன்று வெளியே இருந்து உள்வாங்கிக்கொண்டிருக்கும் தகவல்கள். அந்தத் தகவல்களைத் திரிப்பது, வளைப்பது வழியாகத்தான் நகைச்சுவையை உருவாக்கமுடியும்

அதேபோல நகைச்சுவை உணர்ச்சி இருப்பதோடு அந்த தகவல்கள் ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்தால் மட்டும்தான் சிரிக்கவும் முடியும். நம்மூர் இளைஞர்கள் சினிமா தவிர எதற்குமே சிரிக்கமாட்டார்கள். அதிலே என்ன நகைச்சுவை இருக்கிறது என்பார்கள். அந்த நகைச்சுவைக்கு மூலம் எனன், என்ன மாறுதல்செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால்தானே.

இயல்பாகவே நம்மவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி மிகமிக கம்மி. அதைவிட சினிமா தவிர வேறு ஒன்றுமே தெரியாது. தொடர்ந்து ஒரு பக்கம் அளவுக்கு எதையாவது வாசிக்கும் வழக்கம் இல்லை. எதையுமே கூர்ந்து கவனிக்கமுடியாது. பிழைப்புக்காக ஒரு தொழில். அதற்காக ஒரு படிப்பு. குடி, சினிமா அவ்வளவுதான். எதைவைத்து நகைச்சுவை செய்வார்கள்?

இங்கே ஹேஷ்டேக் கிண்டல்கள் ஓகோ என்று ஓடுவதற்குக் காரணம் இதுதான். ஒரு டெம்ப்ளேட் உருவாகி வந்தபின் அதேமாதிரி செய்வது எளிது. சினிமாவிலிருந்து வழக்கமான பஞ்ச் டயலாக்குகளை உருவி போடவேண்டியது. பெரிய சாதனை மாதிரி தானே மகிழ்ந்து சிரிக்க வேண்டியது. நாலுபேருக்கு பகிர வேண்டியது. பரிதாப ஜீவன்கள். படங்களில் முகங்களைப் பார்க்கையில் அனுதாபம்தான் வருகிறது.

நேற்று தமிழ் இந்துவில் சினிமா சம்பந்தமான ஒரு ஹேஷ்டேக் கிண்டலை வாசித்தபின் அதை ஓர் இணையதளம் கொடுத்திருப்பதை போய் பார்த்தேன். கிண்டல்செய்ததில் கொஞ்சம் கூட மாற்றுக்கருத்து இல்லை. நல்ல விஷயம். ஆனால் ஒருத்தராவது, ஒரே ஒருத்தராவது, அவருக்கு மூளை இருப்பதற்கான ஏதாவது ஒரு சின்ன தடையத்தையாவது வெளிப்படுத்தியிருக்கலாம். அதே ’கடல்லயே இல்லியாம்’ தான்.

நேற்று எஸ்.ரா எழுதிய சிந்தனைச்சிதறலை வாசித்து கொஞ்சம் சிந்தனை சிதறி லேசாக ‘கலாய்த்து’ ஒரு பதிவு போட்டேன். படுசீரியஸாக எடுத்துக்கொண்டு கடிதங்கள்.உடனடியாக நகைச்சுவையைப் புரிந்துகொண்ட கெவின்கேர் பாலா, சிவராமன்,சுரேஷ் கடிதங்களைப்போட்டு ‘சரி செய்ய’ வேண்டியதாகிவிட்டது. நகைச்சுவை என்று ஹேஷ்டேக் போடாமல் நகைச்சுவைகள் புரிந்துகொள்ளப்படும் காலமே தமிழகத்தின் பொற்காலம்.

ஜெ

முந்தைய கட்டுரைநீலம் மலர்ந்த நாட்கள் -1
அடுத்த கட்டுரைநீலம் மலர்ந்த நாட்கள் 2