அன்னை

 நகைச்சுவை

”ஏம்பா பாட்டிய கூட்டிட்டுவந்தாச்சா?” என்றார் இயக்குநர். ஏழெட்டு உதவி இயக்குநர்கள் ஒரே சமயம் அப்போது அவர்களுக்கு தோன்றிய திசைகளில் பாய்ந்தார்கள். ஒருவர் மட்டும் ”வந்தாச்சு சார்…டிபன் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்றார்.

ஒருவர் பணிவுடன் ”சார், பாட்டிக்கு என்ன காஸ்டியூம்?”என்றார்.

”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அவங்களே எல்லாம் போட்டுட்டுதான் வருவாங்க… ”

குறு ஏப்பம் விட்டபடி ஓங்குதாங்கான பாட்டி கரைவைத்த கண்டாங்கியை பின்கொசுவமாகக் கட்டி, இரட்டைவடச்சங்கிலி தோடு இரட்டைமூக்குத்தி அணிந்து கால்களை திடமாக ஊன்றி வைத்து வந்தாள்.

”என்னலே மக்கா…இங்கிணதானே சிலுமா பிடிக்கே?”

”ஆமா பாட்டி…இங்கதான்…வாங்க…உக்காருங்க. ஒண்ணுமே இல்ல…நீங்க பயப்படக்கூடாது…”

”ஏலே நான் என்னத்துக்குலே பயருதேன்? எம்பத்தெட்டுலே நம்ம வீட்டுல திருடன் ஏறிப்போட்டான் பாத்துக்க. அருவாள தூக்கி பொறந்திருப்பி ஒத்த அடியுல்லா போட்டேன் மண்டையில…பயந்துகிட்டிருந்தாக்க பொளைப்பு ஓடுமாக்கும்…உனக்கு பயமிருந்தாக்க சொல்லு…”

”அப்ப சரி…உக்காருங்க பாட்டி…இந்தா இங்க உக்காருங்க…சும்மா வழக்கமா நீங்க எப்டி உக்காருவீங்களோ அப்டி உக்காருங்க…”

”ய்யய்யா கைய இப்டி வைக்யலாமாய்யா?”

”வச்சுக்கோ பாட்டி…உங்களுக்கு எப்டி தோணுதோ அப்டி வச்சுக்கங்க… ”

”ஏல, இம்பிடு பேரு கூடி நிக்காக? இவுக சிலுமாபுடிக்கப்பட்டதை பாக்கவா வந்திருக்காவ?”

”அவங்க நின்னுட்டு போறாங்க பாட்டி…நீங்க அவங்கள்லாம் இல்லைண்ணே நெனைச்சுக்கிடுங்க….வெக்கப்படப்பிடாது”

”ஏலே, என்ன பேச்சு பேசுதே? நான் எங்கலே வெக்கப்பட்டேன்? கெட்டிகிட்டு வந்தப்ப அவுகளை பாத்தே நான் வெக்கப்படல்ல? வெக்கப்படுகதுக்கு இங்க துணியில்லாமலா நிக்கோம்?”

”அப்ப சரி…ஒண்ணுமே இல்ல…நீங்க இங்க இருக்கீங்க…”

”ஆமா இருக்கேனே..”

”அந்தா அங்க உங்க வீட்டு வேலைக்காரன் மாட்டைபுடிச்சுகிட்டு வாறான்…”

”ஆரு பலவேசமா? கண்ணுக்கே காங்கலியே? வரவர கண்ணே மங்கலாப்போச்சு போ”

”இல்ல பாட்டி…வேலைக்காரன் வரல்லை…”

”இப்ப வாறாண்ணு சொன்னே?”

”வாறாண்ணு நெனைச்சுக்கிடுங்க… அவ்ளவுதான்….அவனைப்பாத்து  நீங்க ஏலே, செவத்த காளைய மேய்ச்சலுக்கு விட்டுட்டு எருமைக்கு தண்ணியகாட்டுலேன்னு ஒரு சத்தம் போடுறீங்க, அவ்ளவுதான்…”

”யய்யா மக்கா… ஆருக்க எருமைக்கி?”

”உங்க எருமைக்கு…”

”அதை வித்தாச்சே…இனிமே நாம சொன்னா நல்லாருக்குமா?”

”இல்ல பாட்டி எருமை ஆளு ஒண்ணும் கெடையாது.சும்மா அப்டி கற்பனை செஞ்சுட்டு சொல்லுங்க…”

”சும்மா சொல்லுவாளாக்கும்  கோட்டிக்காரி மாதிரி…எங்க மாமியா இப்டித்தான் வயசான காலத்தில இல்லாத மாட்டை மேய்ச்சுட்டு கெடந்தா…”

”இது நடிப்புதானே பாட்டி…”

”அதைச் சொல்லு…”

”எங்கபார்த்து சொல்லணும் தெரியும்ல? இந்தா நிக்காரே இவரைப்பார்த்து சொல்லணும்…”

”இவனையா? மாடுமேய்க்கப்பட்டவன் மாதிரி இல்லியே இவனப்பாத்தா? தொப்பி வச்சுக்கிட்டு கோட்டிக்காரன் கணக்காட்டுல்லா இருக்கான்? அவனாரு கறுத்தபய, ஒளிச்சு நிக்கான்?”

”அவரு காமிராமேன்…”

”என்னது?”

”போட்டோ பிடிக்கிறவரு…”

”இங்கவந்து நிண்ணு போட்டோ எடுத்தா என்னவாம்? இப்பிடி வெக்கப்படுதான்?”

”பாட்டி, நீங்க இந்தா இவரை மட்டும் பாத்தா போரும்… வேற ஒண்ணையுமே பாக்கப்பிடாது… நான் இப்ப சொன்னதை சொல்லுறீங்க…அவ்ளவுதான்…”

”இம்பிடுதானா சிலுமா பிடிக்கபப்ட்டது? செரி சொல்லிப்போடுதேன்…நீ அங்கிண போயி நில்லு… இப்பமே இதிலே சிலுமாவை போட்டு காட்டுவியா?”

”இல்ல பாட்டி இது சும்மா வெள்ளைத்துணிதான்…வெளிச்சத்துக்கு வச்சிருக்கு… நீங்க அங்க பாருங்க ”

”இவன் என்னத்துக்கு இந்த வெள்ளிக்காயிதத்த கீளே பிடிக்கான் எச்சி துப்புகதுக்கா ?”

”வெளிச்சத்துக்கு பாட்டி…”

”ஏலே, மொட்ட வெயிலுக்கே வெளக்கு போடுதியளாக்கும்? நல்ல கூத்துதான்…செரி..எடு”

”நீங்க என்ன சொல்லணும்…”

”பலவேசம்பயகிட்ட காளையையும் எருமையயும் கொண்டாந்து கட்டிப்போட்டு தவிடு புண்ணாக்கு வச்சிட்டு ஆடுகள மேச்சலுக்கு பத்திட்டு போலே சவத்து மூதிண்ணு சொல்லிட்டு சாமிக்கண்ணுகிட்டே…

”இல்ல பாட்டி பலவேசம்கிட்ட மட்டும் சொன்னாபோரும்…”

”…அம்பிடுதானா?”

”இல்லபாட்டி…அப்ப அவன் வரலேல்ல… உடனே நீங்க என்ன சொல்றீங்கன்னா…ஏலே வெறுவாக்கலப்பட்ட மூதி, கழிச்சலிலே போறவனே, எங்கலே ஒழிஞ்சேண்ணு… ஏதாவது உங்க வாயில வாறதச் சொல்லுங்க..”’

”ஏல, என்னலே வெளையாடுதியா? நெறைஞ்ச சுமங்கலி வாயாலே ஒருத்தனை கழிச்சலிலே போகச்சொல்லுறதா? நாம நாக்கெடுத்து சொல்லி ஒருத்தன் கஷ்டப்படுயதுக்கா? இண்ணைத்தேதிவரை ஒருத்தனையும் அப்ப்டி சொன்னதில்லை பாத்துக்கோ”

”செரி பாட்டி , அப்டி வேண்டாம்…லே மண்ணாப்போறவனே…எங்கலே போனேன்னு–”

”ஏலே ஒனக்கு கோட்டி பிடிச்சிருக்காலே? சொல்லிகிட்டே இருக்கேன்…மண்ணாப்போறதுண்ணா என்னலே? நாம நாக்கெடுத்து ஒருத்தனை சபிக்கலாமாலே? அப்பனாத்தா சொல்லித்தரல்லியா?”

”இல்ல பாட்டி…நீங்க யாரையும் திட்டல்ல…முன்னாடி யாரும் இல்லியே”

”நெனைச்சுத்திட்டினா போராதோ….பலவேசம் புள்ளக் குட்டிக்காரன்லா?”

”நீங்க அவரை திட்டல்லியே..சும்மால்ல திட்டுறீங்க?”

”அப்டியெல்லாம் சொல்லப்புடாது பாத்துக்கோ…சும்மா சொல்லச்சிலே நம்ம மனசில ஒரு வெறுப்புவந்து ஒருத்தன் மொகம் நாபகம் வந்துட்டாக்கா பாவம்லா?”

”சுபிச்சம்!”என்று பின்பக்கம் உதவி இயக்குநர் குரல் கேட்டது.

பெரும்பாலும் நடிகர்கள் அல்லாதவர்களையே நடிக்கவைத்துப் பழகிய இயக்குநர் பொறுமையை அணிகலனாக மட்டுமல்லாமல் ஆடையாகவும் கொண்டவர் ”அது சரி பாட்டி…சும்மா திட்டுங்க…உங்க வாயில என்ன வருதோ அதைச் சொல்லுங்க…நீங்க திட்டுவீங்கதானே?”

”ஆமா பின்ன? சொல்லுபேச்சு கேக்கல்லண்ணா திட்டமாட்டாங்களா?”

”என்ன சொல்லுவீங்க?”

”ஏலே எங்கலே போன மூதி? புடுக்க அறுத்து ஊறுகா போட்டிருவேம்லேன்னு சொல்லுவேன்”

”செரி அப்ப அதைச்சொல்லுங்க…”

”ஏ மக்கா…இங்க அன்னிய ஆளுங்க நிக்காகள்லா? அவுக முன்னாடி எப்டி சொல்லுகது, பலவேசமானாக்க நான் வளத்த பய…”

இயக்குநர்  ”டே தண்ணி கொண்டாடா”என்றார் க்ளைத்து.

”எனக்கும் தண்ணிகுடுலே…லே மக்கா. நீ சிலுமா எடுத்துட்டு நம்ம வீட்டுபக்கமாட்டு வா என்னலே? கோளியடிச்சு கொளம்புவைச்சுதாறேன்…”

இயக்குநர் ஆசுவாசப்படுத்திவிட்டு ”பாட்டி இப்ப நீங்க பலவேசத்த திட்டுறீங்க…உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் சொல்லி திட்டுங்க…என்ன?”

”ஆரை?”

”பலவேசத்தை”

”அவன் இப்ப எங்க?”

”அவன் இங்க நிக்கிறான்னு நெனைச்சுகிட்டு திட்டுங்க”

”நல்ல பயலாக்கும் பாத்துக்கோ …நண்ணியுள்ளவன்”

”சரி…சும்மா திட்டுங்க…சினிமா எடுக்கணும்ல?”

”செரி…நீ போட்டோ பிடி.. நான் சொல்லிப்போடுதேன்… அந்த கறுத்தபய என்னத்துக்கு சிரிக்கான்?”

”சிரிக்கல்ல பாட்டி அவர் மொகமே அப்பிடித்தான்… நீங்க சொல்லுங்க”

”நீ என்னத்துக்குலே அதுக்கு அளுவுதெ? நான் சொல்லிடுதேன்…”

”செரி…டேக்”

”செரிலே மக்கா…”

”சவுன்ட்!”

”ரோலிங்”

”அங்க ஒருத்தன் காதுல போனுவச்சு பாட்டு கேக்கானே அவன் ஆரு?”

”அது சவுன்டு எஞ்சீனியர்.. பாட்டி நீங்க திட்டுங்க…வேற எங்கயும் பாக்கவேண்டாம்”

”கேமரா”

”ரோலிங்”

”ஆக்ஷன்…பாட்டி சொல்லுங்க..”

”லே பலவேசம் மயிராண்டி….எங்கல போனே லே…”

நாலாவது டேக்கில் இயக்குநர் ”கட், ஓகே” என்றார். ”டே தண்ணி குடுரா”

”நல்லாருக்காலே மக்கா?”

”சூப்பர் பாட்டி…” என்றார் இயக்குநர்

”பாட்டி நடிகையர் திலகம்ல…டேய் பாட்டியை கூட்டிட்டுபோயி எளநீர் குடுரா” என்றபடி ஒளிப்பதிவாளர் வந்தார்.

”வாறேன்ல மக்கா..வெயிலிலே நிக்காத பாத்துக்கோ”

பாட்டி போவதைப் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் சொன்னார் ”டிரில்லு வாங்கிட்டுது…இப்டி புதுஆளைப் போட்டு டேக் வாங்குற செலவுல பாதியிருந்தா மெட்ராஸிலேருந்து நடிக்கறதுக்கு ஆளைகூட்டிட்டு வந்திடலாம்…”

இயக்குநர் புன்னகையுடன் ”கூட்டிட்டு வந்துடலாம்…” என்று இழுத்தார். ”ஆனா சும்மா ஒருபேச்சுக்குக்கூட ஒலகத்துல யாரையும் சபிக்க மாட்டேன்னு சொல்லுற தாயோட மொகம் கெடைக்கணுமே”

[மறு பிரசுரம்/ முதற்பிரசுரம் ஆகஸ்ட் 2008]

முந்தைய கட்டுரைபுறப்பாடு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி