தாமஸ் சில வம்புக்கேள்விகள்

மின்னஞ்சல்களில் வந்த சில தனிப்பட்ட கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்கள் இவை.

1. நீங்கள் உங்கள் ஆசிரியராகக் குறிப்பிடும் கோவை ஞானி உள்பட உள்ள தமிழறிஞர்கள் கிறித்தவ அமைப்புகளுக்கு விலைபோவார்கள் என்ற தொனியில் எழுதியிருக்கிறீர்கள். இது அவதூறு அல்லவா? [13-8-08]

என்னுடைய மதிப்பீடு அது. அதற்கு அவர்களின் சென்றகாலச் செயல்பாடுகளே ஆதாரமாக உள்ளன. இந்து ஞானமரபு, இந்திய ஒருமைப்பாடு சார்ந்த அனைத்தையும் திரிக்கவும் இழிவுபடுத்தவும் இவர்கள் எப்போதுமே தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதை மதமாற்ற நோக்கத்துடன் பயன்படுத்திக் கொள்ளும் எல்லா கிறிஸ்தவ அமைப்புகளுடனும் வெளிப்படையாகவே கூடிச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மதமாற்ற செயல்பாடுகளை எப்போதுமே ஆதரித்தே எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக அ.மார்க்ஸ் இவாஞ்சலிசேஷன் என்ற சொல்லை நற்செய்தியளித்தல் என்றே மொழியாக்கம் செய்வார். ஆனால் பிற மதச்சொற்களை அப்படிச் சொல்வதில்லை.

தமிழர்களின் அனைத்துச் சிந்தனைகளும், மதங்களும் தாமஸ் என்ற கிறித்தவரால் மட்டுமே கொண்டுவந்து தரப்பட்டவை என்ற அளவில் நடக்கும் இந்த உச்சகட்டப் பிரச்சாரத்தை இவர்கள் யாராவது வெளிப்படையாக எதிர்த்து  ஏதாவது எழுதட்டுமே. என்னுடைய குறிப்பை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளட்டுமே. மாட்டார்கள். அவர்களால் முடியாது.

‘விலை’ என்பது பணம் மட்டுமல்ல. பலவகையான கருத்தியல் ஆசைகாட்டலும்கூடத்தான். நீ சொல்லிவரும் ஒன்றை நான் ஏற்றுக் கொள்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு ஆதரவு அளி என்பதும் ஒரு வகை விலைப்பேரமே. தமிழ்தான் இந்திய ஞானத்தின் அடிப்படை என்று சொன்னால் இவர்களுக்கு அது ஏற்புடையதாகும். அந்த தமிழ்ஞானம் தாமஸால் வடிவமைக்கப்பட்டது என்று சொன்னால் சம்மதம் அளிப்பார்கள்.

இதை ஒரு வெறும் ஊகமாகச் சொல்லவில்லை. இந்த தாமஸ்கோட்பாட்டாளர்களின் முக்கியமான ‘ஆய்வாளரான’ சாத்தூர் சேகரன் என்பவரின் ‘சமசுகிருதம் ஒரு மொழியே அல்ல’ என்ற நூலை கோவை ஞானி அவரது தமிழ்நேயம் வெளியீடாக கொண்டுவந்திருக்கிறார். சென்ற 14-8-08 அன்று நடந்த சென்னை ‘தோமா சமய’ கருத்தரங்கில் ஆயர் சின்னப்பா அவர்கள் அந்நூலை தோமாமதப் பிரச்சாரத்தின் முக்கியநூல்களில் ஒன்றாக முன்வைத்திருக்கிறார். அக்கருத்தரங்கில் ஞானி சிறப்பு அழைப்பாளர். உடல்நிலைகுறைவினால்தான் கலந்துகொள்ளவில்லை.

******

2. வாங்கிக்கட்டிக்கொண்டு போகத்தான் நினைக்கிறீர்களா? என்ன எதிர்வினைகளை எதிர்பார்க்கிறீர்கள் ? [13-8-08]

ஏதுமில்லை. இத்தகைய அழுத்தமான ஆதாரங்கள் முன்வைக்கப்படும்போது நம் சூழலில் முழுமையான அமைதி உருவாவதையே நான் கண்டிருக்கிறேன். காரணம் நம் சூழலில் பொதுவாக முற்போக்கு பேசும் பலர் ஒருவகை மிகையான தார்மீக ஆவேசத்தை வெளிப்படுத்துவார்கள். ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், எளியவர்களுக்காக உரத்த குரல்கொடுக்கும் பாவனையிலேயே தங்கள் எதிரிகளை வசைபாடுவார்கள். ஆகவே வெளிப்படையாக இம்மாதிரி மதத்திரிபுவேலைகளை ஆதரித்துப் பேசுவது அவர்கள் பாவனைசெய்யும் தார்மீக தளத்தை இல்லாமல் செய்து அவர்களை வெளிப்படுத்திவிடும். ஆகவே அவர்களால் இப்போது எதுவும் சொல்ல முடியாது.

மதவெறிசார்ந்த உள்த்திட்டம் கொண்டவர்கள் என்னை மதவெறியன் என்றும் என்னுடைய தரப்பு ஒரு மதநோக்கு மட்டுமே என்றும் முத்திரைகுத்தி நான் சொல்லும் வாதங்களை திசைதிருப்ப முயல்வார்கள். இதை வெளிப்படையாக எழுதாமல் ஒரு ரகசிய செய்திபரப்பல் மூலம்செய்வார்கள்.

இதை இப்படியே விட்டுவிட்டு ஒருசில மாதங்கள் கழித்து வேறு எந்த கட்டுரையில் இருந்தாவது என் சொற்கள் சிலவற்றைப் பொறுக்கி திரித்து அதைவைத்து என்னை கடுமையாக எதிர்ப்பார்கள். மதவாதி ,சாதியவாதி, மனிதவிரோதி என்றெல்லாம் முத்திரை குத்தி கூச்சலிடுவார்கள். இந்தக்கட்டுரையை மழுங்கடிப்பதே நோக்கம் என்றாலும் அந்த கூச்சல்கள் உச்சகட்ட ‘தார்மீக’  வேகத்துடன் செய்யப்படும்.

ஆனால் இந்த எல்லா முத்திரைகளும் நான் எழுதவந்த முதல் வருடத்திலேயே என் மீது போடப்பட்டுவிட்டன. என் வாசகர்கள் அதை மீறி என்னை வந்து சேர்ந்தவர்களே. இவர்களை நான் இம்மிகூட பொருட்படுத்தப்போவதில்லை. இத்தனை வருடங்களில் இவர்களை ஒருதரப்பாக எடுத்துக்கொள்ளவோ இவர்களை எண்ணி என் குரலில் சமரசம் செய்துகொண்டதோ இல்லை.

*****

3. இதேபோல முஸ்லீம்களைப் பற்றி எழுதுவீர்களா? [17-8-08]

மாட்டேன். செவியில்லாதபோது பேசுவது முட்டாள்தனம். மதப்போர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் கட்டுரை கிறித்தவர்களை நோக்கி எழுதப்பட்டது. காரணம் எனக்கு கிறித்தவர்களின் அடிப்படையான தார்மீகத்தில் இப்போதும் அழுத்தமான நம்பிக்கை உள்ளது.

முந்தைய கட்டுரைதாமஸ்:ஓர் இணையதளம்
அடுத்த கட்டுரைவிசிஷ்டாத்வைதம்:கடிதங்கள்