«

»

Print this Post

பின் நவீனத்துவம்


அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

நான் தங்களுடைய இணையதளத்தை கடந்த மூன்று மாதங்களாக வாசித்து வருகிறேன்.

என்னால் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்று சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் நான் வாசிக்க ஆரம்பித்ததே மிகச்சமீபத்தில் தான்.

பின் நவீனத்துவம் என்றால் என்ன?

நவீனத்துவதிற்கும் பின் நவீனத்துவதிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

தங்களுக்கு நேரம் இருந்தால் இதை கொஞ்சம் விரிவாக விளக்கவும்.

மிக்க நன்றி,

அன்புடன்,

சையது.

பலமுறை நான் இவற்றை எழுதியிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும். எவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முடியும் என்று பார்ப்பதற்காகவும்.

நவீனத்துவம் என்றால் புதுமை உருவாவது அல்ல. அதை நவீனத்தன்மை என்றுதான் சொல்கிறார்கள். அது எப்போதுமே நடப்பது. நவீனத்துவம் என்றால் கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு பொதுப் போக்கு. அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப் படுத்துகிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சி அடைந்தது. எல்லாவற்றையும் தர்க்கம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியல் உருவாக்கிய தொழிற் புரட்சி மூலம் உலகம் முழுக்க போகவும் தொடர்பு கொள்ளவும் வசதி ஏற்பட்டது. ஆகவே எல்லா சிந்தனைகளையும்  உலகப் பொதுவாக உருவாக்கும் போக்கு உருவாகியது. இந்த இரு விஷயங்களும்தான் நவீனத்துவத்தின் அடிப்படை. அதாவது 1.அறிவியலை மையமாக்கிய நோக்கு. 2 உலகளாவிய நோக்கு

நவீனத்துவம் உருவாக்கிய அமைப்புகள் 1. தொழிற்சாலை 2 பள்ளி 3 பொதுப்போக்குவரத்து 4 பொதுச் செய்தித் தொடர்பு 5 பொது ஊடகம். இவை மூலம் நவீனத்துவம் சமூகத்தை உறுதியான மையம் கொண்ட அமைப்பாக ஆக்குகிறது. இவ்வாறு மையம் கொண்ட அமைப்பு உருவாகும்போது அதற்கு எதிரான, தேவையில்லாத அமைப்புகள் ஒடுக்கப்  படுகின்றன, நிராகரிக்கப் படுகின்றன.

இதன் விளைவாக சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏராளமான போக்குகள் உலகமெங்கும் உருவாகி வந்தன. அவற்றை பொதுவாக நவீனத்துவப் போக்கு என்பது வழக்கம்.

இந்த நவீனத்துவம் மீது ஆழமான அவநம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி வந்தது. நவீனத்துவத்தின் குறைபாடுகளும், போதாமைகளும் கண்டடையப் பட்டன. உறுதியான அமைப்புகள் மீது சந்தேகம் உருவாகியது. திட்டவட்டமான மையம் கொண்ட அமைப்புகள் நிராகரிக்கப் பட்டன. விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவை மீது கவனம் விழுந்தது. அவையனைத்துக்கும் இடமுள்ள ஒரு சமூகக் கட்டுமானம், ஒரு சிந்தனைமுறை தேவை என்ற எண்ணம் எழுந்தது.

இவ்வாறு நவீனத்துவம் பின்னுக்குத் தள்ளப் பட்டது. அதன் பின் வந்த எல்லா சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக பின் நவீனத்துவம் என்கிறார்கள். பின் நவீனத்துவத்திற்குள் பலவகையான போக்குகள் உள்ளன. ஆனால் மையங்களையும், ஒட்டு மொத்த பெரும் அமைப்புகளையும் நிராகரிக்கும் போக்கு மட்டும் பொதுவாக இருக்கும்.

பின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுப் போக்கு. இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூகத்தில் ஆண்மை மைய விழுமியமாக போற்றப் பட்டது என்றால் அங்கே திரு நங்கைகள் ஒடுக்கப் படுவார்கள் இல்லையா? பின்நவீனத்துவ சமூகம் அப்படி மைய விழுமியங்களை ரொம்பவும் சார்ந்திருக்காது. இருபாலினத்தவருக்கும் அதே இடத்தை அளிக்கும். தமிழ்ச் சமூகம் கூட இன்று இந்த இடம் நோக்கி வந்து விட்டிருக்கிறது அல்லவா?

அதாவது மிகச் சிறந்தது, சரியானது என ஒன்றை கண்டு பிடித்து அதை நிரூபித்து அதை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை நிராகரிக்கும் போக்குதான் நவீனத்துவம். அப்படிச் செய்தால் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப் படுவார்கள் என உணர்வதே பின்நவீனத்துவம். இது ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்மையை முன்வைக்கிறது. எல்லாவற்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கப்பட வேண்டும் என்கிறது. அப்படி மையப் படுத்தும் சிந்தனைகளை பிரித்து ஆராய்ச்சி செய்கிறது. ஒருமை கொண்ட வடிவங்களை பிரித்துப் பரப்பிப் பார்க்கிறது.

ஜெ

பின்நவினத்துவம் ஒரு கடிதம்

பின்நவீனத்துவம்- இன்னொருகடிதம்

தொடர்புடைய பதிவுகள்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=6089

12 comments

Skip to comment form

  1. syed

    தங்களுடைய விளக்கம் அருமை! இப்போது என்னால் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளமுடிகிறது. மிக்க நன்றி தங்களுடைய விரைவான பதிலுக்கு.

  2. perumal

    அப்படி என்றால் இந்து மதம் பின் நவீனத்துவ மதம் தானா?

    (நீங்கள் நாவல் வேலைகளில் இருப்பதனால் உங்களை தொந்தரவு செய்யகூடாது என்று நினைத்தேன் இருந்தாலும் கேட்டுவிட்டேன் மன்னிக்கவும்)

    பணிவன்புடன்
    பெருமாள்
    கரூர்

  3. ஜெயமோகன்

    உறுதியான மையம் கொண்ட ‘நவீனத்துவ’ மதங்கள் என்றால் மார்க்ஸியம் மற்றும் ஆபிரகாமிய மதங்கள் மட்டுமே. அவை கட்டமைப்பு கொண்டவை. மீறல்கலையும் உள்விவாதங்களையும் எதிர்ப்பவை. ஆனால் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கிறித்தவம் தன்னை அடுத்த காலகட்டத்துக்காக ஜனநாயகப்பண்பு கொண்டதாக மாற்றிக்கொண்டுவிட்டிருக்கிறது. இந்துமதம் என்பது ஒரு கட்டமைப்பு அற்றது. அதற்கி இணைப்புக்கண்ணிகள் மட்டுமே உண்டு. ஒரு இடத்தில் புறக்கணிக்கபடும் ஒன்று இன்னொரு இடத்தில் மைய முக்கியத்துவம் கொண்டிருக்கும். என் நோக்கில் அதிகமான பின்நவீனத்துவப் பண்புகள் கொண்ட மதம் இந்துமதமே

  4. perumal

    எனக்காக நேரம் ஒதுக்கி பதில் எழுதியதற்கு மிக்க நன்றி சார்

    பணிவன்புடன்
    பெருமாள்
    கரூர்

  5. va.mu.murali

    திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

    பின் நவீனத்துவம் பற்றிய தங்கள் சுருக்கமான விளக்கம், எனது நீண்ட நாளைய சந்தேகத்தைப் போக்கியது. இது தான் பின் நவீனத்துவம் எனத் தெரியாமலே, உங்கள் ‘பின் தொடரும் நிழலின் குரல்’, ஏழாவது உலகம்’ நாவல்களைப் படித்திருக்கிறேன். உங்கள் விளக்கத்துக்குப் பின், நாவலை நினைத்துப் பார்த்தால் தெளிவாகிறது.

    நன்றி. தங்களை கோவையில் சந்திக்க காத்திருக்கிறேன்.

    -வ.மு.முரளி.

  6. shenkovi

    நல்ல விளக்கம் ஐயா. சன்,ஜெயா என 24 மணி நேர செய்திதொலைக்காட்சிகள் வருவது நவீனத்துவம். ஆனால், நடுநிலை செய்திகளுக்கு தூர்தர்சனை விட்டால் நாதியில்லை என உணர்வது பின்நவீனத்துவம்.- அன்புடன்,
    செங்கோவி

  7. kuppan_yahoo

    You mean discrimination, rankings, ratings are Naveenatthuvam (capitalism based).

    Where as Pin Naveenathuvam stands for to treat all humans equally .

    Nice explanation, Thanks Mr.Jemo.

  8. ஜெயமோகன்

    அன்புள்ள குப்பன்,

    நீங்கள் தவறாகப்புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நம்முடைய மனத்தில் சிந்தனை என்பதே மானுட விடுதலைக்கானது என்ற மரபான கருத்து ஆழப்பதிந்திருப்பதனால் இந்த முடிவுகளுக்கு சட்டென்று வந்துவிடுகிறோம். அந்த முன்முடிவுகள் இல்லாமல் தான் இந்த விஷயத்தை அணுக வேண்டும். சிந்தனை என்பது எப்போதும் அபப்டி இருபப்தில்லை. அது ஒரு தேடலாகவும் எதிர்வினையாகவுமே முன்னகர்கிறது. ஆகவே இம்மாதிரி விஷயங்களை ஒருபோதும் ஒற்றைவரியாக குறுக்கிக் கொள்ளலாகாது.

    1. நவீனத்துவம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான ஒரு மாபெரும் மானுடவிடுதலைப்போக்கு. ‘மானுடம்’ என்ற கருதுகோளை உலகளாவிய தளத்தில் பரப்பியது அது. அதேபோல தனிமனித உரிமை, ஜனநாயகம், பகுத்தறிவு போன்ற கருத்துக்களை மனிதகுலத்துக்கு எடுத்துச் சென்றதும் நவீனத்துவமே. அதன் விளைவாகவே இன்று நாம் காணும் உலகளாவிய மானுட மேம்பாடு சாத்தியமானது அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் போக்குவரது உரிமை அடிப்படை மானுட உரிமைகள் போன்ற இன்று சாத்தியமாகியிருக்கும் எல்லா விஷயங்களும் நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்டவையே. நவீனத்துவமா பின் நவீனத்துவமா எது மானுட இனத்துக்கு அதிக பங்களிப்பை ஆற்றியது என்று கேட்டால் வரலாற்று நோக்குள்ளவர்கள் நவீனத்துவத்தையே சுட்டிக்காட்டுவார்கள்

    2 நவீனத்துவம் என்றால் முதலாளியம் மட்டுமல்ல பொதுவுடைமையும்கூடத்தான். மையப்படுத்தல், உலகளாவப்பொதுமைப்படுத்தல் , புறவய அறிவியல் நோக்கை முன்னிலைப்படுத்தல் ஆகிய அம்சங்கள் மேலோங்கி இருந்தால் அது நவீனத்துவப் பண்புக்கூறு கொண்டது. ஆகவே பின்நவீனத்துவம் மார்க்ஸியத்தையும் பெருமொழிபாக பார்த்து கட்டவிழ்க்கவே முயல்கிறது.

    3 பின் நவீனத்துவம் என்பது நவீனத்துவத்தின் மேற்கண்ட மூன்று இயல்புகளால் விடுபடும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டும் ஒரு போக்கு மட்டுமே. நவீனத்துவம் ஒரு செயல் அறிக்கை என்றால் பின்நவீனத்துவம் ஓர் அடிக்குறிப்பு. அல்லது திருத்தல்குறிப்பு மட்டுமே.

    4 ஆகவே பின் நவீனத்துவத்திற்கு ‘சுயமான கருத்துக்கள்’ என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். நவீனத்துவம் உருவாக்கியதை அது அவிழ்த்துப்பார்க்கும், அவ்வளவுதான். மையமழிக்கும்,பிராந்தியப்படுத்தும்,அதர்க்கமாக்கி பார்க்கும்.

    5. பின்நவீனத்துவம் எப்போதும் முற்போக்கானதாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை. பலசமயம் உயர்ந்த விழுமிய மையங்களை கவிழ்த்துவிடுகிறது. ஆபத்தான பிராந்திய வாதங்களை முன்வைத்துவிடுகிறது. எளிமையான பொதுப்புத்திக்கு எதிராகவும் திரும்பி விடுகிறது. மேல்நாட்டு பின்நவீனத்துவம் கட்டற்றது, படைப்பூக்கம் கொண்டது. அதேசமயம் ஆபத்தானதும் கூட. அதை மிகக் கவனமாகவே அணுக வேண்டும். அது எந்த விஷயத்தை கவனப்படுத்துகிறது, அதன் விளைவுகள் என்ன என்ற கவனத்துடன் மட்டுமே அணுகப்படவேண்டியது அது. பின்நவீனத்துவம் ஒற்றைப்பெரும்போக்கு அல்ல என்று அதனாலேயே சொன்னேன். அதற்குள் பல வழிகள் உள்ளன.

    6 நவீனத்துவம் உயரிய கருத்தாக்கங்களையும் இலட்சியங்களையும் மானுடகுலத்துக்கு முன்வைக்கிறது. ஆனால் அவற்றை பெரும் அமைப்புகளாக ஆக்கிவிடுகிறது. அந்த அமைப்புகள் அழிவுத்தன்மை கொண்டவை என்று வரலாறு காட்டுகிறது. ஆகவே அமைப்புகளை கட்டவிழ்த்துப்பார்க்க பின்நவீனத்துவம் முயல்கிறது அமைப்புகளால் வெளியே நிறுத்தப்படும் விஷயங்களை கவனப்படுத்துகிறது. பெரிய விஷயங்களுக்குப் பதில் சின்னவிஷயங்களை முன்னிறுத்துகிறது.

    சரியான உதாரணம் வேண்டும் என்றால் நாம் நம் பள்ளியையே எடுத்துக்கொள்வோம். பள்ளி என்பது எவ்வளவு முற்போக்கான அமைப்பு . சென்றகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்கு கல்வியை அளித்தது பள்ளி அல்லவா? அவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பை உரிமைக்கான வாய்ப்பை அளித்தது பள்ளிதானே. அதன் பங்களிப்பை எவராவது மறுக்க முடியுமா என்ன? பள்ளி நவீனத்துவத்தின் ஒரு முகம் என்று உருவகிக்கலாம்.

    ஆனால் அத்தனை மாணவர்களையும் அது சமமாக நடத்துகிறது. அனைவருக்கும் ஒரே கல்வியை அளிக்கிறது. அதனுடன் உடன்படாதவர்களை தண்டிக்கிறது. அதில் நல்ல திறமை காட்டும் மாணவர்களுக்கு அது முன்னுரிமை கொடுக்கிறது. அவர்களின் அதிகாரத்தை உருவாக்குகிறது. அந்த முறையுடன் ஒத்துப்போகாதவர்களை அது வெளியே தள்ளுகிறது. அவர்களை அன்னியர்களாக ஆக்கி கீழே நிறுத்துகிறது. அவர்களை ஒடுக்குகிறது. [நானும் அப்படி ஒடுக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்ட மாணவன்]

    இவ்வாறு வெளியே தள்ளப்படுபவர்களை கூர்ந்து கவனித்து பள்ளி என்ற அமைப்பின் சிக்கல் என்ன, அதில் உள்ள அதிகாரமும் வன்முறையும் என்ன என்று ஆராய்வது பின்நவீனத்துவ நோக்கு. பள்ளியால் வெளியே தள்ளப்படுபவர்களில் மேதைகளும் உண்டு, முட்டாள்களும் உண்டு. அவர்களை வெளியேதள்ளாமல் பள்ளி செயல்பட முடியாது. அவர்களுக்கும் இடமுள்ள ஒரு கல்வியமைப்பை கற்பனைசெய்வதே சரியான பின்நவீனத்துவம். மையமான கல்விக்கொள்கை, அனைவருக்கும் உரிய பாடத்திட்டம் எதுவும் இல்லாத கல்வியமைப்பு ஒன்றை அது உருவாக்க முனைகிறது.

    அதேசமயம் பள்ளியே தேவையில்லை என்பதும் பின்நவீனத்துவமே. பள்ளியின் ஒழுங்கை ஒரு அராஜமாக ஆக்கவேண்டும் என்று சொல்வதும் பின்நவீனத்துவம். பள்ளிக்குப் பதிலாக தந்தை மகனுக்குக் கற்றுக்கொடுத்தால்போதும் குலக்கல்வியே போதும் என்றோ என்றோ பிள்ளைகளை அவர்களாக வளரவிடலாம் என்றோ சொல்லும் பின்நவீனத்துவப் போக்குகளும் இருக்கலாம். எது உபயோகமானது என்பதே அளவுகோல்

    7 ஆகவே அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு அந்த கருத்துநிலைகளும் இலட்சியங்களும் இயங்க முடியுமா என்று பார்ப்பதே தேவை. பின்நவீனத்துவத்தில் உள்ள அந்தப்போக்கே எனக்கு உவப்பானது. ஆகவே அது கெட்டது இது நல்லது என்று எளிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

    ஜெ

  9. kuppan_yahoo

    அன்பு ஜே மோ

    உங்களின் விளக்கமானா பயனுள்ள பதிலுக்கு மிகுந்த நன்றிகள்.

    நீங்கள் சொல்வது போல நவீனத்துவம் பெரிதா, சிறந்ததா அல்லது பின் நவீனத்துவம் சிறந்ததா என்று ஒப்பீடு செய்து நம் நேரத்தை வீ ணாக்காமல் இரண்டிலும் உள்ள நல்ல இயல்புகளை, அனுபவங்களை எடுத்துக் கொள்வோம்,

    உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இரண்டிலும் உள்ள நல்ல இயல்புகள் குறித்தும் பதிவிட வேண்டுகிறேன்.

    மானிடத்தை போற்றுவோம்.

    நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்

    குப்பன்_யாஹூ

  10. ramalingamn

    நம் ஓட்டுப் போடும் முறையையே எடுத்துக் கொள்வோம். மெஜாரிட்டி என்ற பெயரில் நடக்கும் அராஜகம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒரு ஓட்டில் தோற்றாலே ஒருவர் தோல்வி அடைந்தவர் என்பது எவ்வளவு கொடுமை.

  11. ஜெயமோகன்

    ஜே,

    இப்போதும் ஒரு சிக்கல்.

    //நவீனத்துவம் என்றால் புதுமை உருவாவது அல்ல. அதை நவீனத்தன்மை என்றுதான் சொல்கிறார்கள். அது எப்போதுமே நடப்பது. நவீனத்துவம் என்றால் கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு பொதுப்போக்கு//

    என்ற வரியை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை . என்ன அர்த்தம் அதற்கு?

    ராம் மோகன்

    அன்புள்ள ராம்,

    அந்தக்குளறுபடியை இவ்விஷயத்தைப் பேசும் பலர் செய்வதனால்தான் அங்கே ஆரம்பித்தேன்

    அதாவது modernization என்பது எப்போதுமே நடந்து கொண்டிருப்பது. சங்க இலக்கியத்துக்கு சிலப்பதிகாரம் புதுமையானது, நவீனமானது. அந்த இயல்பை modernity என்கிறோம். இதை நவீனமயமாதல் என்றுதான் சொல்லவேண்டும்.

    ஆனால் modernism என்பது அது அல்ல. அது ஒரு தனி இயக்கம். அது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒன்று. அதையே நவீனத்துவம் என்று சொல்கிறோம். இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது

    ஜெ

  12. ponsiva

    நல்லது சார்……..ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது சார் நன்றி

Comments have been disabled.