விவேக் ஷன்பேக் சிறுகதை – 2

அடுத்தவர் குடும்பம்

பம்புகள் விற்று அலையும் எனது விற்பனைப்பிரதிநிதி வாழ்க்கையில் பல பயணங்களில் பிகெ என்ற பிரமோத் குமார்  என்னுடன் சேர்ந்துகொள்வதுண்டு. எங்கள் கம்பெனியின் வட்டார கண்காணிப்பாளர் என்ற முறையில் என்னுடன் அவன் சுற்றிவருவான். என்னுடைய மாதாந்திர முன்னேற்றத்தை அவன்தான் கண்காணித்து மதிப்பிடவேண்டும். நாள் முழுக்க கஞ்சத்தனமான முகவர்களிடம் மோட்டார்கள் வால்வுகள் குதிரைச்சக்தி என்று பேசிப்பேசி சாயங்காலத்திற்குள் ஒருமாதிரி சலித்து அலுத்துப் போய்விடுவோம். பிகே இருந்தானென்றால் நாங்கள் சேர்ந்து சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரே வயதுதான் எங்களுக்கு. பலவருடங்களாக சேர்ந்துவேறு வேலைசெய்கிறோம். அதனால் எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகியிருந்தது. நான் வருடம் தோறும் விற்பனையைக் கூட்டிவந்ததனால் பிகே என்னைப்பற்றி கொஞ்சம் பெருமிதமும் கொண்டிருந்தான்.

 

எனக்கு பிகேயின் சின்னவயது அனுபவங்களைக் கேட்கப்பிடிக்கும். அவன் ரயில்நிலையத்தை ஒட்டியிருந்த ஊழியர்குடியிருப்பில் பிறந்து வளர்ந்தவன்.  ரயில்வே சிக்னல்களைப்பற்றியும் நீராவி யந்திரங்களைப்பற்றியும் அவனுக்கு இருந்த அபாரமான ஞானம் எனக்கு பிரமிப்பூட்டும். எங்களுக்குள் பேசுவதற்கு நிறைய விஷயமிருந்தது

”நீ பேசாமல் ரயில்களைப்பற்றி ஒரு நாவல் எழுதேன் பிகே” என்று நான் ஒருமுறை அவனிடம் சொன்னேன். ”நீ ரொம்ப அபூர்வமான கதைசொல்லி. எத்தனை நுட்பமான தகவல்களுடன் ரயில்களைப்பற்றிச் சொல்கிறாய்!”

 

”விடுடா…கதைக்கு தகவல்கள் மட்டும் இருந்தா போதுமா? தனிப்பட்ட விஷயங்களை உலகம் முழுதுக்கும் பொதுவானதாக ஆக்கும் அந்த கலைத்திறமைதானே முக்கியமான விஷயம்?” என்று அவன் சொல்வான்.

 

பிகெ தன் இளமைப்பருவத்துக்குள் மூழ்கி ரயில்பாதையருகே உள்ள தன்னுடைய வீட்டை விவரிக்கும்போது எனக்கு கஸினி எழுதிய ‘அனாதை’ என்ற கதைதான் ஞாபகத்துக்கு வரும். அந்த வீட்டில் தினமும் வீட்டில் உள்ள எல்லா பொருட்களிலும் மென்மையான கரித்தூள்படலம் வந்து மூடும்.  உயரமான ஓட்டுக்கூரையில் இருந்து தொங்கும் ஒயரின் நுனியில் ஒரு சிறிய முட்டை பல்பில் இருந்து மங்கலான மஞ்சல் வெளிச்சம் வீட்டுக்குள் பரவும். இரைந்துகொண்டு போகும் எக்ஸ்பிரஸ் ரயிலின் துளைக்கும் விசில் ஒலி நாளில் பலமுறை கேட்கும். இரவின் இருட்டில் வேறு ஏதோ உலகிலிருந்து வருவதுபோல ரயில்களின் முகப்புவிளக்கு வெளிச்சம் வீட்டுமீது பொழிந்து விலகிச்செல்லும். ரயில் வருவதற்கு ரொம்பநேரத்திற்கு முன்னரே நம்முடைய இருப்பு அந்த அதிர்வை உள்வாங்கிக்கொண்டிருக்கும்.

 

கஸினியின் கதையில் இந்தமாதிரி வீடுகளில் ஒன்றில் சாதாரணமாக வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த மருமகள் சட்டென்று யாரும் எதிர்பாராத தருணத்தில் நெருங்கிவரும் ரயிலை நோக்கி பாய்ந்து ஓடி குறுக்கே விழுவாள். அந்தக்கதையில் விடுபட்ட தகவல்களை பிகெயின் சித்தரிப்பில் கண்டுபிடிக்க முடியுமா என்று நான் தேடிக்கொண்டிருப்பேன்.

 

ஒருநாள் மாலை நான் பிகேவுக்கு கஸினியின் கதையின் விரிவான தகவல்களைச் சொன்னேன். என் மனதில் மறையாமலிருந்த அந்த மருமகளின் குணச்சித்திரத்தை விளக்கினேன். அவன் ” அவள் ஒரு வார்த்தைகூட பேசாமல் தன்நுடைய செயல்மூலமே பேச்சின் வலிமை என்ன என்று காட்டிவிட்டாள் பார்த்தாயா? அவளுடைய நக்கலான சொற்களின் வலிமை என்ன என்று அவளுடைய மாமியாருக்குக் கூட தெரியவில்லை. இது உடைந்து துண்டுகளாக ஆவதைப்பற்றிய கதை. எல்லாமே உடைந்து பிரிந்துகொண்டிருக்கின்றன. குடும்பம் தனிமனிதர்கள் சமூகம் எல்லாமே… ஒரே வீட்டில் வசிப்பவர்கள் தங்களை அறியாமலேயே ஒருவருக்கொருவர் அன்னியர்களாக ஆகிவிடுகிறார்கள்…” என்றான்

 

”இதன் பெயர்தான் காலம் கனிவது என்பது” என்றான் பிகெ ”பல விஷயங்களின் விளைவுகள் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. பல இடங்களில் பல வருடங்களாக நடந்து வந்த பல விஷயங்கள் முதிர்ந்து வந்து ஒன்றாகின்றன. அவ்வாறுதான் ஒருசில அடையாளங்களாக இருப்பவை ஒன்றாகச்சேர்ந்து ஒரு நிகழ்ச்சியாக ஆகிவிடுகின்றன…” பிகே ரொம்ப சீரியஸாக இருந்தான். பேச்சை விட அமைதிக்கு உள்ள வலிமையைபற்றியும் எல்லாமே உடைந்து பிரிதலைப்பற்றியும் திரும்பத்திரும்பச் சொன்னவன் கான்பூரில் அவனுடைய அண்டைவீட்டானாக இருந்த ஜானகிராம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

 

பிகேயின் அப்பா பிள்ளைகளின் படிப்பை உத்தேசித்து கான்பூர் ரயில்வே அலுவலகத்திற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போனார். அவர் நீண்டநாள் சின்னச் சின்ன ஊர்களில் ஏராளமான வருடங்கள் வேலை பார்த்தவர். ஏகப்பட்டபேரின் கையையும் காலையும் பிடித்து ஒருவழியாக இடமாற்றல் பெற்றார். ஜானகிராம் ஸ்ரீவஸ்தவாவின் வீடு பிகெயின் வீட்டுக்கு அடுத்ததாக இருந்தது. கான்பூரின் புறநகர்ப்பகுதியில் வீடுகளெல்லாம் நெருக்கமாக இடுங்கலான தெருவில் குவிந்துகிடக்கும். ஸ்ரீவஸ்தவாக்களில் ஜானகிராம் என்பது அபூர்வமான பெயர். ஜானகிராமின் அப்பா சென்னையில் வேலைபார்த்த நாட்களில் அந்தப்பெயரை முடிவுசெய்திருந்தார்.

 

இருவீடுகளுக்கும் நடுவே மெல்லிய சுவர்தான். அந்தப்பக்கம் முணுமுணுத்தால் இங்கே கேட்கும். ஜானகிராம் ஒரு விற்பனையாளனாகையால் அடிக்கடி பயணம் போய்விடுவார். ஜானகிராமின் வேலை பிகேவுக்கு மர்மமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருந்தது. ஒரு கறுப்புநிறமான பையில் தன் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு புதன்கிழமைகளில் கிளம்பிச்சென்றால் சனிக்கிழமைதான் திரும்பிவருவார். மாதத்தில் நான்கு வாரங்களிலும் அவர் நான்கு திசைகள் நோக்கிச் செல்வார் என்று சொன்னார்கள்

 

கடும் மழையோ மூடுபனியோ எதுவும் ஜானகிராம் இடதுகையில் கறுப்புப்பையுடன் காலையில் கிளம்புவதை தடுக்க முடியாது. அன்று அதிகாலையிலேயே அவரது வீட்டில் இருந்து சத்தங்கள் எழ ஆரம்பிக்கும். வழக்கமாக மற்ற நாட்களில் ஜானகிராம் சொல்லும் பூஜைமந்திரங்கள் சமையற்கட்டின் சத்தங்களில் மூழ்கி மூழ்கி போகும். ஆனால் புதன்கிழமைகளில் மட்டும் அதிகாலையின் அமைதியில் அவை தெளிவாகவே கேட்கும். கடவுளிடம் அவர் தன்னுடைய முறையீடுகளைச் சொல்வது போல முணுமுணுவென்று அவை ஒலிக்கும். பின்னணியில் பாத்திரங்களின் தாளம்.

 

ஜானகிராம் சரியாக ஏழுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார். பையின் கனத்தால் இடது தோள் சரிந்திருக்கும். கறுப்பு கால்சட்டையும், வெள்ளை சட்டையும், கரிய ஷ¥க்களும் அணிந்து பனிக்காலமென்றால் மேலே ஒரு கோட்டும் போட்டிருப்பார். நடுவகிடு எடுத்த எண்ணைப்பசையான முடி. காலைப்பனியில் ஜானகிராம் மறைந்துபோவது ஒரு சோகப்படத்தில் தியாகியான கதாநாயகன் வசனம் முடிந்தபின்னர் கடைசியில் திரையில் இருந்து மறைவது போல் இருக்கும்.

 

சனிக்கிழமை ஜானகிராம் திரும்பிவருவார். தெருவில் எவரிடமும் ஒரு சொல்கூட பேசாமல் ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் வீட்டுக்குள்ளேயே இருந்து ஒருவாரச் செய்தித்தாளையும் ஒன்றன்பின் ஒன்றாக முழுமையாக வாசிப்பார். வாரத்தில் முதல் இரண்டுநாள் அவருக்கு கான்பூர் நகருக்குள்தான் வேலை. பயணம் ஆரம்பிப்பது புதன்கிழமை. பிகேயின் அப்பா அடிகக்டி இந்த ஊமைச்சாமியார் எப்படி விற்பனைப்பிரதிநிதியாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுவார்

 

 

ஜானகிராமின் மனைவிக்கு எந்நேரமும் வீட்டுவேலைதான். அவள் வேறு எதிலிருந்தோ தப்பத்தான் அப்படி இரவுபகலாக வேலைசெய்கிறாள் என்று தோன்றும். அவளை வேலைசெய்யாமல் யாருமே பார்த்ததில்லை. எங்கே வேலைகள் முடிந்துவிடுமோ என்று பயப்படுபவள் போலிருக்கும் அவள் முகம். தெருவில் உள்ள எந்தக்குடும்பத்திற்கு எந்த உதவி என்றாலும் அவள் வந்து நின்று செய்துகொடுப்பாள்

 

ஜானகிராமுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் அசோக் எட்டு வயதுதான். தங்கை  இரண்டுவயது இளையவள். ஜானகிராம் வீட்டில் இருக்கும்போது அசோக் வாலைச்சுருட்டி வைத்துக்கொண்டிருப்பான். அவரது முதுகு தென்பட்டதுமே ஆட்டம்போட ஆரம்பித்துவிடுவான். அம்மாவையும் தங்கையும் அடக்கி ஆண்டு கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சத்தம் போடுவான், கத்துவான், ஆர்ப்பாட்டம்செய்வான்.

 

 

அப்பா இல்லாத நாட்களில் அசோக்கின் ஆணைகள் கட்டிலில் இருந்தே ஆரம்பிக்கும். மற்ற நாட்களில் அவன் காலையில் எழுந்து சமர்த்தாக அமர்ந்து பாடங்களைப் படித்துவிட்டு அமைதியாகக் குளித்து, தயாராகி ,அமைதியாகவே பள்ளிக்கு கிளம்பிவிடுவான். அப்பா இருக்கும்போது அவன் மிகவும் ஒழுங்கான பையன், ஆனால் அவரில்லையென்றால் எல்லாருடைய பொறுமையையும் சோதிப்பான். அவன் பிகேவுக்கு கொடுத்த தொந்தரவுகள் கொஞ்சமில்லை. அசோக் அவனே ஒரு காதல்கடிதத்தை வேறு ஒரு பெண் பெயரில் எழுதி பிகேயின் புத்தகத்தில் வைத்தபின்னர் அதைச்சொல்லி பிகேயை மிரட்டினான். பேனாக்களை திருடுவது பின்னாலிருந்து சட்டையில் மை தெளிப்பது பெண்களின் முன்னால் வைத்து பிகெயின் பெயரைச்சொல்லி கெட்டவார்த்தைகள் சொல்வது என்று ஏகப்பட்ட வன்முறைகள்.

 

அவற்றை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது. இரவுபகலாக பல நகரங்களில் விற்பனைக்காக அலைந்து திரியும் ஜானகிராமிடம் மகனைப்பற்றிய இத்தகைய சில்லறை புகார்களைக் கொண்டுசெல்வது என்பது தவறு. பெரும்பாலான சமயங்களில் சனிக்கிழமை வரை காத்திருக்கும்போதே கோபம் தணிந்துவிடும். ஜானகிராமிடம் சில தருணங்களில் பையனைப்பற்றி புகார் சொன்னவர்கள் கூட அவரது தாங்கமுடியாத அமைதியைக் கண்டு சலித்து மேற்கொண்டு சொல்லவேண்டியதில்லை என்ற முடிவுக்கே வந்தார்கள்.

 

அசோக்கின் தங்கை நவநீதா தலைமயிரை சீவிக்கொண்டோ நகங்களுக்கு சாயம்போட்டுக்கொண்டோ பெரும்பாலான நேரத்தைக் கழித்தாள். அப்பா ஊரில் இருக்கும்போது மட்டும் அவள் அம்மாவின் வேலைகளில் உதவச்செலவாள். அவள் அதையெல்லாம் அண்ணாவிடமிருந்து நன்றாகவே கற்றிருந்தாள். அந்நாட்களில் ஒரு உந்து உந்தினால் மண்ணிலிருந்து விண்ணுக்கு மிதந்து சென்றுவிட வாய்ப்புள்ள ஒரு தேவதை போலிருப்பாள். அசோக் அவளை கட்டுப்படுத்த அடிக்கடி முயல்வான்.  அவளுடைய தோழிகளையும் அடிக்கடி அவர்கள் எங்காவது சென்றுவிடுவதையும் கண்டு சந்தேகத்தால் கொதிப்பான். ஆனால் அவள் அவனை ஒருபொருட்டாகவே நினைக்கமாட்டாள். தான் வேறு ஏதோ ஒரு இடத்துச் சொந்தமானவள் என்ற பாவனை அவளிடம் எப்போதும் இருக்கும்

 

அசோக் கல்லூரியில்சேரவேண்டிய நாள் வந்தது. பத்தாம் வகுப்பில் அவனுடைய மதிப்பெண்களைப் பார்த்த ஜானகிராம் அவன் ஒருவழியாக பி.ஏ வரை சமாளிக்கத்தான் அந்த மதிப்பெண் உதவும் என்று சொன்னார். சுதந்திரத்தைப்பற்றிய அசோக்கின் எண்ணம் தலைகீழாக ஆகியது. அவன் இனிமேல் எப்போதும் பேராசிரியர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒருவாரத்தில் அவன் கல்லூரி வாழ்க்கையின் களியாட்டங்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் இந்தியை பாடமாக எடுத்துக்கொண்டான். அதுதான் குறைவாக படிக்க வேண்டிய துறை என்பதனால்.

 

அசோக் ஆரம்பத்தில் கொஞ்சநாள் ஒரு இந்தி வகுப்புக்குக் கூட போய் உட்கார்ந்ததில்லை. கல்லூரிக்குப்போன பத்து நாட்களிலேயே அவனுக்கு வகுப்புகளுக்குப் போகாமலிருப்பதுதான் வீரம்  என்று தோன்றிவிட்டது. ஆனால் அறிவியல் வகுப்புப் பெண்களுக்கும் இந்தி பொதுவானது என்பதனால் அந்தப்பெண்களுக்காக வகுப்புகளுக்கு போக முடிவுசெய்தான்.

 

அவன் வகுப்புக்குப்போன முதல் நாள் பேராசிரியர் வருகைப்பதிவு எடுத்தபோது அவன் பெயருக்கு இரு குரல்கள் ”எஸ் சார்” என்று சொல்லின. ஒன்றுதான் அவனுடையது. வழக்கமாக போலி ஆஜர் கொடுக்கும்போதுதான் இபப்டி பலகுரல் ஒலிக்கும் என்பதனால் பேராசிரியர் தலைதூக்கி ”அசோக் ஸ்ரீவஸ்தவா” என்று இன்னொருமுறை கூப்பிட்டு மாணவர்களை கவனித்தார்.

 

வகுப்பின் இருபக்கங்களிலும் இரண்டு பையன்கள் ”எஸ் சார்’ ‘என்று சொன்னபடி எழுந்து நின்றார்கள். அசோக் ஆச்சரியத்துடன் தன் பெயர் கொண்ட மற்ற பையனைக் கூர்ந்து பார்த்தான்.  அந்தப்பையன் இவனை திகைப்புடன் பார்த்தான்

 

பேராசிரியர் ”உன் முதலெழுத்து என்ன?” என்றார்

 

”ஜே சார்”

 

மற்றவனிடம் ”உன்னுடையது?” என்றார்

 

அவன் ”ஜேதான் சார்” என்றான்

 

பேராசிரியருக்கு அபாயம் மணக்க ஆரம்பித்தது. ”ஜே என்றால்?” என்றார்

 

”ஜானகிராம் சார்”

 

”சரி உனக்கு”

 

”சார் எனக்கும் ஜானகிராம்தான்”

 

இப்போது மொத்த வகுப்பே அதிர்ந்து குரலெழுப்பியது. பேராசிரியருக்கு பையன்கள் சேர்ந்து பேசிவைத்து கலாட்டாசெய்கிறார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பதிவேட்டை கூர்ந்து பார்த்தார், இரண்டு அசோக் ஸ்ரீவஸ்தவாக்கள் அதில் இருந்தார்கள்.

 

தயக்கத்துடன் அவர் கேட்டார் ”எந்த பிரிவு?”

 

மற்றவன் ”அறிவியல் சார்” என்றான்

 

”நீ?”

 

”கலை”

 

பேராசிரியருக்கு பெருமூச்சும் புன்னகையும் வந்தது. சரி கடைசியில் இந்தமட்டும் ஒரு வேறுபாடு இருக்கிறதே. அவர் இந்த சிக்கலில் இருந்து கழன்றுகொள்ள விரும்பினார். ”சரி இனிமேல் நீ சயன்ஸ் அசோக். நீ  ஆர்ட்ஸ் அசோக். …தெரிகிறதா?” பேனாவால் இரு பெயர்களிலும் சிறிய அடையாளங்களை வைத்தார்.

 

மற்றவனை கேண்டீனில் மத்தியான்னம் பார்த்தபோது அசோக்கின் நண்பர்கள் கிண்டல்செய்தார்கள் ”டேய் பாருடா, உன் டூப் வருகிறான்”  அந்தப்பையன் தனியாக அமர்ந்து பூரி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். காலைச் சமபவம் அசோக்குக்கு கடுப்பேற்றியிருந்தது. அத்துடன் அவன் நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் காட்டிக்கொள்ளவும் விரும்பினான். நேராக அந்தப்பையனிடம் போய் அவனை வம்புக்கிழுத்தான் ”டேய் டபுள் ரோல், என்னடா முறைக்கிறாய்?”

 

அந்தப்பையன் நிதானமாக இவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு நட்புடன் தலையை அ¨சைத்து இன்னொரு துண்டு பூரியைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்தான். எப்படி மேலே சண்டையைக் கொண்டு போவதென்று தெரியாமல் குழம்பிய அசோக் ”உன் அப்பாவின் பெயரென்னடா?” என்றான். பையன் கொஞம் பயந்தது போல தோன்றியது. ”ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா” என்றான் கம்மலான குரலில்

 

அசோக்குக்கு குரலே எழவில்லை. கஷ்டப்பட்டு ”அவர் என்ன செய்கிறார்?” என்றான்

 

பையன் சொன்ன பதில்கேட்டு அசோக்குக்கு வாய் உலர்ந்துவிட்டது ”சேல்ஸ்மேனாக இருக்கிறார்”

 

மேலே கேட்பதற்கு அசோக்குக்கு தைரியம் வரவில்லை. பையன் தன்னை கிண்டல்செய்கிறானோ என்றும் தோன்றாமலில்லை. ஆனால் அவனைப்பார்த்தால் கௌரவமான நல்ல பையனாகத் தோன்றினான். பயத்துடன் இன்னொரு பூரியை பிய்த்து வாயில்போட்டு கொண்டு அவனை ஏறிட்டுப்பார்த்தான்.

 

*

 

திரும்பி வீட்டுக்கு வரும் வந்ததுமே அசோக் அவனுடைய அம்மாமீது காரணமில்லாமல் எரிந்து விழுந்தான். அது புதன் கிழமை. ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா அவரது வழக்கமான விற்பனைப்பயணத்தில் இருந்தார். அவர் சனிக்கிழமை மாலைதான் திரும்பிவருவார்.

 

அவனுக்கு அம்மாவிடம் நடந்தவற்றைச் சொல்லலாமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால் எப்படிச் சொல்வதென தெரியவில்லை. அவன் தன் தங்கையை திட்டினான். மாலை வெளியே சென்று நள்ளிரவுவரை சுற்றிவிட்டு திரும்பி வந்தான்.  ஆனால் மறுநாளே செய்து சுழன்றடித்து அவன் வீடுவரை வந்துசேர்ந்துவிட்டது. அதாவது ஜானகிராம் ஸ்ரீவஸ்தவாவுக்கு இரு குடும்பங்கள். இது கடந்த இருபதாண்டுக்கால ரகசியம். அதே கான்பூர் நகரத்தின் மறு எல்லையில் அந்தக்குடும்பம் இருந்தது. இரு குடும்பங்களிலும் உள்ள குழந்தைகளின் வயதும் பெயரும் எல்லாமே ஒன்றுதான்.

 

எட்டாவது அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இதுதான் ஜானகிராம் வாராவாரம் மூன்றுநாள் வீட்டில் இல்லாமலிருப்பதன் ரகசியமா? எப்படி இனிமே கான்பூரில் அவரது மனைவியும் குழந்தைகளும் தலைதூக்கி நடமாட முடியும்?

 

முதலில் செய்தியைக் கேட்டபோது யாருமே நம்பவில்லை. சொந்தமனைவியிடம் அதிர்ந்து ஒரு சொல்பேசாமல் சாதுவாக இருக்கும் மனிதருக்கு இன்னொரு மனைவி. அதுவும் இருபதாண்டுக்காலமாக இருபக்கமும் தெரியாமல் அதை பாதுகாத்து வைத்திருக்கிறார்! ஆனால் அந்த மாதிரி ஒரு ரகசியத்தை பாதுகாக்கத்தெரிந்த ஆசாமி ஏன் இரு பையன்களையும் ஒரே கல்லூரியில் சாதாரணமாக கொண்டுவந்து சேர்த்துவிட்டார்? ரகசியம் பத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் ஒரு பையனை இன்னொரு கல்லூரியில் சேர்த்திருக்கலாமே. யார் இந்த ரகசியத்தை துப்பறிந்தது அதை கல்லூரியில் முதலில் சொன்னது யார் அதை ஜானகிராமின் மனைவியிடம் முதலில் போட்டுக்கொடுத்தது யார் எல்லாமே மர்மமாக இருந்தது. ஆனால் எங்கும் ஒரே பேச்சாகக் கிடந்தது.

 

ஜானகிராம் சனிக்கிழமை மாலை திரும்பிவந்தபோது அவரது மொத்தக்குடும்பமே எரிமலையாக புகைவிட்டுக்கொண்டிருந்தது. அவர் தன் உடைகளை களைந்துவிட்டு கைகால் முகம் கழுவ கொல்லைப்பக்கம் சென்றார். கணவனைக் காண்பது வரை அவர் மனைவி சேகரித்து காய்ச்சி உருக்கி வைத்திருந்த எல்லா சொற்களும் சட்டென்று அவள் தொண்டையிலேயே உலர்ந்து போயின. அவள் இரண்டுமுறை சொல்ல முயன்றாள். காபிக்குச் சீனி போடும்போது அந்த கேள்வி வாயில் தங்கி கைநடுங்கி சீனி கொட்டியது. கால் தடுக்கியது. மேலே சொல் எழாமல் அவள் நேராக பூஜையறைக்குச் சென்று கடவுள் படங்களுக்கு முன்னால் விழுந்து குமுறி அழ ஆரம்பித்தாள்

 

ஜானகிராம் உள்ளே சென்று என்ன விஷயம் என்று விசாரித்தார். அவள் அழுகையில் உடைந்து சிதறிய சொற்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னதை திரட்டி எடுத்து புரிந்துகொள்ள அவருக்கு ரொம்ப நேரமாயிற்று. புரிந்ததும் அவருக்கு கோபம் தலைக்கேறியது ”உனக்கு என்ன பைத்தியமா?” என்று கூவி அவளை அடிக்கப்போனார். அந்தமாதிரி அவர் நடந்துகொள்வது அதுதான் முதல்தடவை.

 

அவரது மனைவி பித்துப்பிடித்தவள் போல இருந்தாள். பக்கத்து அறையில் இருந்து ஒட்டுகேட்ட அவள் பிள்ளைகளுக்கு அவள் என்ன சொன்னதனால் அவர் அப்படி கத்தினாரென்று புரிந்துகொள்ள முடியவில்லை.  மேற்கொண்டு  ஒரு சொல்கூட பேசாமல்  ஜானகிராம் வெளியே சென்று செய்தித்தாளை எடுத்து பிரித்து அதில் ஆழ்ந்தார். அவர் அக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டாரா மறுத்தாரா என்பது தெளிவாகவில்லை

 

 

தெருவெங்கும் அதுதான் பரபரப்பான பேச்சாக இருந்தது. அந்த மற்ற குடும்பத்தின் நுணுக்கமான தகவல்கள் எல்லாம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பல விஷயங்கள் நம்பவே முடியாதபடி இருந்தன — வேறு யாரைப்பற்றியோ பேசிக்கேட்பது போல. அந்த மற்ற குடும்பத்து மனைவியுடன் ஜானகிராம் கொண்டிருக்கும் நெருக்கம், அவளுடன் மொட்டைமாடியில் அமர்ந்து மெல்ல டீயை உறிஞ்சிக்குடித்தபடி உல்லாசமாகப் பேசிக்கொண்டிருப்பது , அந்தப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது,  போன்ற பல சித்திரங்கள். அந்தக்குடும்பத்து பையனும் பெண்ணும் ரொம்ப நல்ல குழந்தைகள் என்றும் சொல்லப்பட்டது.

 

 

எப்போதுமே முகச்சுளிப்புடன் அமைதியாகவே இருக்கும் ஜானகிராம் மொட்டைமாடியில் குடும்பத்தினருட்ன் சிரித்துப்பேசி சந்தோஷமாக இருக்கும் சித்திரம் அப்படியொன்றும் கற்பனைக்கெட்டாததாக இல்லை. அவர் தானே சென்று வீட்டுச்சன்னல்களுக்கு உயர்தரமான திரைச்சீலைகளை வாங்கிவந்தார் என்றும் ஒரு மொட்டைமாடி பூந்தோட்டத்தை அவரே பராமரித்து வருவதாகவும் தெரியவந்தது. ஜானகிராம் எப்படி அங்கே சென்று மறு அவதாரம் எடுக்கிறார் என்பதைப்பற்றிய சொற்சித்திரங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. அவர் எப்படியெல்லாம் அங்கே உருமாறுவார் என்று விதவிதமாகச் சொன்னார்கள்

 

 

இரண்டுநாள் கழித்து ஜானகிராமின் மனைவி தன் துக்கத்தை பிகேயின் அம்மாவிடம் பகிர்ந்துகொண்டாள் ”பார்த்தீர்களா அக்கா, இந்த பாவி என்ன செய்திருக்கிறார் என்று. ஆளாளுக்குபேசுவதைக் கேட்டால் உண்மை ஏது பொய் ஏது என்று என்னால் பிரித்துப்பார்க்கவே முடியவில்லை. சங்கதி கேள்விப்பட்டு நேற்று என் அண்ணா வந்திருந்தார் . அவன் என்னிடம் போலீசிலே புகார் கொடுக்கும்படிச் சொல்கிறார். இரண்டாம் திருமணம் நடந்தது உண்மை என்றால் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் ஜெயிலிலே போடுவார்களாம். இந்த மனிதர் எங்களிடமிருந்து எதையுமே ஒளித்து வைக்கமாட்டார் என்றுதான் நான் நம்பிக்கொண்டிருந்தேன். இப்போது வெளியே எங்களைப்பற்றிப் பேசுவதைக் கேட்டால் தலையை தூக்க முடியவில்லை. பாருங்கள், மற்ற பிள்ளைகளெல்லாம் எப்படி நன்றாக படித்து உருப்படுகிறார்கள். என் பையன் கவனிப்பாரில்லாமல் இப்படி உதவாக்கரையாகப் போய்விட்டான். இங்கே வீட்டிலே என்ன இருக்கிறது என்ன இல்லை என்றுகூட கண்டுகொள்ளாத மனிதர் இப்போது அந்தச்சிறுக்கிக்குப் பின்னால் காய்கறி வாங்குவதற்கு ஒயர்கூடையுடன் போகிறாராம் அக்கா…”

 

பியின் அம்மா அவளுக்கு ஆறுதல் சொன்னாள் ”அவசரப்பட்டு போலீஸ் அது இது என்று போய்விடாதே. சில சமயம் நீயே சிக்கலில் மாட்டிக்கொள்வாய். உன்னைத்தான் அவர் இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார் என்று வை, என்ன செய்வாய்? உன்னை விட்டுவிட்டு அந்த மனிதர் பேசாமல் போய்விடுவார், அவ்வளவுதான்” இதைக்கேட்டதும் மொத்த சந்தர்ப்பமே தலைகீழாக மாறிவிட்டது போல் இருந்தது. நியாயத்தைச் சொல்லி சண்டைபோடுவது என்பதே அபத்தமானதாக ஆகிவிடக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. அசோக்கின் அம்மாதான் முதல் மனைவி என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி அவர் சொன்னதோ அப்படித் தோன்றும்படி நடந்துகொண்டதோ கிடையாது. அதற்கான ஆதாரமாக தோன்றக்கூடிய எந்த விஷயமும் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் தரப்பாகத் தெரியக்கூடிய ஒன்றுதான் என்று தோற்றமளித்தது.

 

இதெல்லாம் வெட்டவெளிச்சமாகிக்கொண்டிருக்கையில் ஜானகிராம் என்ன சொல்கிறார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. காலேஜில் இந்தப்பேச்சு வந்தபோது சிலர் ஜானகிராம் ”அதெல்லாம் வேறு ஆளின் பிள்ளைகள்…எனக்குச் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டதாக நேரில் கண்டது போலவே சொன்னார்கள். ஆனால் யாருக்குமே ஜானகிராமிடம் போய் கேட்பதற்கான துணிவில்லை

 

புதன்கிழமை விடிந்தது. வழக்கம்போல ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா வீட்டில் அதிகாலையிலேயே சந்தடிகள் ஆரம்பமாகிவிட்டன. வெளியே கடுமையான மூடுபனி. ஏழுமணிக்கு ஜானகிராம் தன்னுடைய கருப்பு பையுடன் கிளம்பி பனியில் கரைந்து கரைந்து மறைவதை அவருக்குப்பின்னால் தங்கள் வீட்டுச்ஜன்னல்கள் வழியாக தெருவே பார்த்துக்கொண்டிருந்தது

ஆங்கில மொழியாக்கம் மனு சக்ரவர்த்தி. தமிழாக்கம் ஜெயமோகன்

கன்னட சிறுகதையாசிரியரும் நாடக ஆசிரியருமான விவேக் ஷன்பேக் இப்போது மிகவும் கவனிக்கப்படுபவர். கதா விருது, சம்ஸ்கிருதி சம்மான் விருதுகள் பெற்றவர். தேஷ்காலா என்ற சிற்றிதழை நடத்திவருகிறார்.

 

 

சிறுகதை, விவேக் ஷன்பேக் வேங்கைச்சவாரி

முந்தைய கட்டுரைபுத்தக வெளியீடு,கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுத்தக விழா