சிறுகதை, விவேக் ஷன்பேக்

வேங்கைச்சவாரி

உச்சே ஒரு சின்ன ஆப்ரிக்க தேசத்துக் குடிமகன். கொஞ்சநாளைக்கு அவன் என் சகா.  மும்பையில் ஒரு பத்துநாள் பயிற்சிமுகாமுக்காக எட்டு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பிரதிநிதிகளில் நாங்களும் உண்டு. அந்த முகாமுக்குத் தேர்வுசெய்யப்படுவதென்பது மிகப்பெரிய விஷயம். பெரிய பொறுப்புகளுக்கும் முக்கியமான புதிய பதவிகளுக்கும் போவதற்கான வழிகளில் ஒன்று அது. அந்த பயிற்சிமூலம் வேறு நாடுகளின் பண்பாடுகளையும் வியாபாரமுறைகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்புகிடைக்கிறது என்றார்கள்

 

எங்கள் நிறுவனத்தின் கடலைநோக்கி இருந்த பெரிய பயிற்சிமையக் கட்டிடத்தில்தான் முகாம். நாங்கள் ஏற்கனவே அங்கே ஏழுநாட்களைச் செலவழித்து விட்டிருந்தோம். வெளியே ததும்பிக்கொண்டிருந்த கடலையும், எரிக்கும் வெயிலையும், அதில் காய்ந்த சுற்றுலாப்பயணிகளையும் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் உள்ளேயே இருந்தோம். கனத்த பெரிய கண்ணாடிச்சன்னல் வெளியே இருந்து எந்த ஒலியையும் உள்ளே விடவில்லை. வெளிக்காட்சிகள் எல்லாம் ஒருபெரிய மௌனப்படம்போல அதில் ஓடிக்கொண்டிருந்தன. நுரை சிதற எழுந்து வந்த ஒளிமிக்க கடலலைகள் மணற்கரையை மாறி மாறிக் கழுவிக்கொண்டிருக்க சுழன்றடித்தகாற்றில் உடைகள் கொடிகள் போல எழுந்து படபடத்தன. கார்களின் வரிசைகள் கடலோரச்சாலையில் நெருக்கி ஊர்ந்தன. உந்துவண்டிகளில் பொருட்களை குவித்துக்கொண்ட நூற்றுக்கணக்கான சிறிய கடைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. கடல்மணலில் ஓடுவதற்கும் நடப்பதற்கும் சும்மா பார்ப்பதற்கும் வாங்குவதற்கும் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ஓசையில்லாமல் நிகழ்ந்துகொண்டிருந்தது புறவுலகம்

 

உச்சேயின் அறை என்னுடைய அறைக்குப் பக்கத்தில்தான். அவன் என்னை நெருங்குவதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. களைப்படைய வைத்த பகல்கள். தினம் எட்டுமணிநேரம் நாங்கள் எந்த கம்பெனி  எப்படி கொள்கைகளை வகுத்துகொண்டது, எப்படிச் செயல்பட்டது என்றெல்லாம் பேசப்பட்டதை உட்கார்ந்து கவனித்தோம். அதன் பின்னர் கட்டாயமாக கூட்டு விவாதம் உண்டு. மதிய உணவு முடிந்ததும் நாங்கள் கூடி அமர்ந்து அரட்டையடிப்போம்.

 

சிலசமயம் கடலோரமாக நடை போவோம். உச்சே எங்களுடைய உல்லாசங்களுக்கு மையமாக இருந்தான். அவன் மிகச்சிறப்பாகப் பாடுவான். தனது ஒலிக்கருவியில் இசையைப் போட்டுவிட்டு அதற்கேற்ப நடனமாடுவான்.  இசையையும் நடனத்தையும் அவன் பிறவியிலேயே பெற்றிருப்பதுபோல தோன்றியது. அவனது கருமையான உறுதியான உடம்பு நல்ல ஆரோக்கியத்தால் ஒளிவிட்டது. இசை காதில் விழுந்தால் உடனே அது முன்னும்பின்னும் மெல்ல அசைந்தாட ஆரம்பித்துவிடும்.  அவன் தன் சுருண்ட முடியை இழுத்து நீட்டி அது எத்தனை நீளம் என்று எனக்குக் காட்டினான். அவனுக்கு சூனியமும் தெரியும். கூரிய கத்தியை தன் உள்ளங்கையில் குத்தி மறுபக்கம் வழியாக இழுத்து எடுத்துக்காட்டினான்.

 

எட்டாம் நாள் மதியச்சாப்பாட்டுக்கும்பின்னர் கடைசி மூன்றுநாள் என்ன திட்டம் என்று எங்களுக்குச் சொன்னார்கள். அதுவரை நாங்கள் எவ்வளவு கற்றிருக்கிறோம் அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துகிறோம் என்று அறிவதற்காக ஒரு விளையாட்டு உருவாக்கப்பட்டிருந்தது

 

அது ஒரு நிர்வாகவியல் விளையாட்டு. எங்கள் திறமைகளை பரிசோதிப்பதற்காக ஒரு செயற்கையான வியாபாரச் சந்தர்ப்பத்தை உருவாக்கியிருந்தார்கள். மூன்றுபேர் அடங்கிய நான்கு குழுக்களாக நாங்கள் பிரிக்கப்பட்டோம். ஒரு குழு ஒரு கம்பெனி என்று கற்பனைசெய்யப்பட்டது. நான்கு கம்பெனிகளுக்கும் ஒரே அளவிலான தொழிற்சாலைகளும் ஊழியர்களும் வைப்புநிதியும் கடன்களும் உண்டு. இந்த கம்பெனிகளை நாங்கள் மூன்று வருடம் நடத்தவேண்டும்

 

விளையாட்டு காலை எட்டுமணிக்கு ஆரம்பமாகியது. ஒரு மணிநேரம் ஒரு மாதத்துக்கு சமம். உற்பத்திக் கணக்கெடுப்பு  விற்பனை கடன்களை அடைப்பது எல்லாமே ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை செய்யப்படவேண்டும். இந்த கம்பெனிகள் தங்கள் வருமானம், செலவு, லாபம், நஷ்டம் எல்லாவற்றையும் ஒவ்வொரு வருட முடிவிலும் அறிக்கையிடவேண்டும். மூன்றாம் வருட முடிவில் கம்பெனிகள் தங்கள் வணிக முறைகள் அடைந்த சிக்கல்கள், கண்டுபிடித்த உத்திகள், என்னென்ன லாபங்கள் வந்தன, என்னென்ன நஷ்டங்கள் நிகழ்ந்தன எல்லாவற்றையும் பொதுவாக முன்வைக்கவேண்டும்

 

ஓர் அறுபது பக்கம் கொண்ட நூலில் விளையாட்டின் விதிகள் எங்களுக்கு வாசிப்பதற்காக அளிக்கப்பட்டன. நாங்கள் என்ன உற்பத்தி செய்யவேண்டும், புதிய தொழிற்சாலைகளை  உருவாக்குவதற்கான விதிகளும் நடைமுறைகளும் என்ன,  என்னென்ன பொருட்களை என்னென்ன நாடுகளுக்கு நாங்கள் விற்கலாம், எந்த தொழில்நுட்பம் கைவசம் இருக்கிறது, அந்தத் தொழில்நுட்பத்தை வளார்த்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர எத்தனை கால அவகாசம் இருக்கிறது, அதற்கு எத்தனை ஊழியர்கள் தேவை, அவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கவேண்டும் எல்லா தகவல்களும் அதில் உண்டு. நாங்கள் இந்த வணிகத்தைச் செய்யும் நாடுகளில் எவையெல்லாம் ஜனநாயகநாடுகள், எவையெல்லாம் ராணுவ ஆட்சிகொண்ட நாடுகள், அங்கேயுள்ளவர்களின் மதம் என்ன, அங்குள்ள தொழிற்சங்கச் சூழல் என்ன எல்லாமே விரிவாக கொடுக்கப்பட்டிருந்தது.

 

கீழ்நாட்டு நிர்வாகிகளுக்கு உலகளாவிய தளத்தில் வணிகம் செய்ய இந்தப் பயிற்சியும் விளையாட்டும் மிகவும் உதவிகரமானவை என்று கருதப்பட்டது. முந்தையநாள்தான் அதை வடிவமைத்த பீட்டர் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தார். அவரது இந்த ஆட்டம் ஆடப்படும்போதெல்லாம் அவருக்குக் கொடுக்கப்படும் காப்புரிமை மற்றும் ஊதியத்தை நினைத்து நாங்கள் காதில் புகைவிட்டோம். பீட்டர் இந்த ஆட்டத்தில் எல்லா வேடங்களும் முறையாக போடப்படுகின்றனவா, வங்கிகளும் அரசுகளும் உத்தேசித்தது போலச் செயல்படுகின்றனவா என்றெல்லாம் நுட்பமாகக் கண்காணித்தார். இந்த ஆட்டம் எப்படி எங்கள் ஆற்றல்களை நாங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தவும் குறைபாடுகளைச் சரிசெய்துகொள்ளவும் உதவும் என்று அவர் பெருமிதத்துடன் விவரித்தார். உண்மையான சந்தர்ப்பங்களில் நாங்கள் செயல்பட்டு எங்கள் திறமைகளை சோதித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்குகிறது என்றார். எல்லா தகவல்களும் ஏராளமான இடங்களில் இருந்து பலமுறை சரிபார்க்கப்பட்டு நுட்பமாக சேகரிக்கப்பட்டவை என்றார். ஒவ்வொரு ‘மாத’ இறுதியிலும் அவரே எங்கள்செயல்பாடுகளை மதிப்பிடுவாராம். நாங்கள் ‘உண்மைவெளியில்’ எங்கள் வணிகத்திறனை மதிப்பிட்டுக்கொள்வதற்குத் தயாரானோம்.

அந்த விளையாட்டு எங்கள் மூளையை நிறைத்துத் தளும்பியது. அறுபதுபக்க நூலை ஆயுதமாக எடுத்துக்கொண்டு அறைகளுக்குத் திரும்பினோம். உச்சே, ஜெ·ப், நான் மூவரும் ஒரே அணி. டச்சு வம்சத்தவனாகிய ஜெ·ப் இங்கிலாந்தில் பிறந்தவன். கணக்கெழுத்தாளனாக ஆரம்பித்து சிறுவயதிலேயே சரசரவென மேலே வந்தவன். உச்சே எங்கள் கூட இருந்தது சந்தோஷமாக இருந்தது. வழக்கமான சிரிப்புக்கும் ஆட்டத்துக்கும் ஒன்றும் நேரமில்லை. பரபரப்பாக எங்கள் போட்டிக்கு தயாரெடுப்பதற்காக வாசிக்க ஆரம்பித்தோம். தனித்தனியாக வாசித்தபின் கூடி அமர்ந்து எங்கள் கம்பெனியின் நிலைமையைப்பற்றி துல்லியமாக விவாதித்துக்கொண்டோம். விதிகளைப்பற்றி சர்ச்சை செய்தோம். ஆட்டம் ஆரம்பித்தாகிவிட்டது, நாங்கள் அதில் மூழ்கிவிட்டோம். தூங்கப்போவதற்கு இரவு ஒருமணிதாண்டிவிட்டது

 

காலையில் நாங்கள் ஏதோ பரீட்சை எழுதப்போவதுபோல நூற்றுக்கணக்கான தகவல்களை எங்கள் மூளைக்குள் குவித்துக்கொள்ள ஆரம்பித்தோம். ஆட்டத்தை ஒரு பெரிய கூடத்தில் ஏற்பாடுசெய்திருந்தார்கள். நான்குமூலைகளிலும் நான்கு மேஜைகள். அவற்றில் பெரிய உலகவரைபடங்கள் விரிந்து கிடந்தன. அவற்றில் நாடுகளின் பெயர்கள். ஆங்காங்கே நாங்கள் வணிகம் செய்யப்போகும் நாடுகளைக் குறிக்கும் அடையாளங்கள் நின்றன. உச்சே அவனது நாட்டை அதில் பார்த்ததும் பரவசமானான். அதை எங்களுக்கு சிரித்துக்கொண்டே சுட்டிக்காட்டினான். தகவல்களை கிரகித்துக்கொண்டு சந்தேகங்களைக் கேட்டுக்கொள்ள அரைமணிநேரம் கொடுத்தார்கள்.

 

நாங்கள் உற்பத்திச்செலவு, விற்பனை மற்றும் போக்குவரத்துச்செலவு ஆகியவற்றை கணித்து விற்பனைவிலையைக் கணக்கிட்டோம்.  அக்கவுண்டன்டாக இருந்த ஜெ·ப் அதிவேகத்தில் எண்களை கூட்டி கழித்து என்ன விலை வைத்தால் என்ன லாபம் இறுதியில் நிற்கும் என்று சொன்னான். அந்த லாபத்தை எங்கே முதலீடுசெய்வது என்று விவாதித்தோம். சொந்த முதலீட்டைப்போடுவதா இல்லை வங்கிக்கடன்களை வாங்குவதா எது நல்லது, என்ன சிக்கல்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டோம். எல்லாமே எளிமையாக இருந்தன. நாங்கள் கொழுத்த லாபத்தை எதிர்பார்த்தோம்.

 

ஆட்டம் ஆரம்பித்தது. நாங்கள் எங்கள் உற்பத்திப்பொருட்களை மாத இறுதியில் விற்க வேண்டும். எங்களுக்கு எந்தப்பொருள் எங்கே தேவையில் இருக்கிறது என்ற பட்டியல் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் வைத்திருக்கும் விலையைக் குறிப்பிட்டு விற்கவேண்டிய பொருட்களின் விபரங்களை அளிக்கவேண்டும். பீட்டருக்குத்தான் மற்ற கம்பெனிகள் வைத்திருக்கும் விலை தெரியும். குறைவான விலை சொன்னவர்களுக்கு வாங்கும் உத்தரவு சென்றுசேரும். அவர்கள் நிராகரித்தால்தான் அடுத்த குறைவான விலை சொன்ன கம்பெனிக்கு வாய்ப்பு. பீட்டர் டெண்டர் சீட்டுகளை பரிசீலித்து உற்பத்திப்பொருட்களையும் சந்தையையும் கணித்து யாருடைய டெண்டர் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிப்பார்.

 

எங்கள் விலைகள் மிக அதிகமாக இருந்தமையால் ஆரம்ப மாதத்தில் ஒரு டெண்டர் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. இரண்டாவது மாதத்தில் விலையை கடுமையாகக் குறைத்தபோது எங்கள் பொருட்களில் நாலில் ஒருபங்கு மட்டும்தான் விற்றது. இந்த மாதிரியே போனால் கூலிக்கும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கும் எங்களிடம் மூலதனம் மிச்சமிருககது என்று ஜெ·ப் எச்சரித்தான்.  எதுவுமே நாங்கள் திட்டமிட்டபடி நகரவில்லை. எல்லா கணிப்புகளும் தவறாக ஆயின. ஆரம்பத்தில் மிக எளிமையாக இருந்த விஷயங்கள் இப்போது ஆயிரம் சிக்கலான முடிச்சுகளுடன் தெரிந்தன.

 

ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உத்தி இருந்தது. டெண்டர் அறிவித்ததும் வெல்லும் அணி ஆரவாரம்செய்து கொண்டாடியது. கடுமையான ஒரு போட்டி உருவாகி வந்துகொண்டிருந்ததைக் கண்டோம். இரண்டாம்மாத முடிவில் எங்கள் நிலைமையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. மேலும் விலையைக் குறைக்கவும் எங்கள் கணக்குகளை மறு அமைப்புசெய்து கொஞ்சம் லாபம் ஈட்டவும் முயன்றோம்.

 

எங்கள் தொழிற்சாலைகளைப் பற்றிய எல்லா தகவல்களும் விரல்நுனிக்கு எட்டும்படி இருந்தன. எல்லாமே வரைபட அடையாளங்கள்தான். ஊழியர்களின் எண்ணிக்கை, கூலிக்கணக்குகள், உற்பத்தித்திறன், உண்மையான உற்பத்தி எல்லாமே…ஆனால் நாங்கள் இக்கட்டில் இருந்தோம். புதிய ஏதேனும் ஒரு வணிக உத்தியை அறிமுகம்செய்தாகவேண்டும். அல்லது முற்றிலும் புதிய ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தாகவேண்டும். ஆரம்பகட்ட முதலீட்டை பொருட்படுத்தாமல் எப்படியாவது உற்பத்திச் செலவை குறைத்தாகவேண்டும் என்று முடிவுகட்டினோம். பொதுவாக எங்கள் ஆலைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப உற்பத்தி செய்யவில்லை. இரு தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்திசெய்ய வாய்ப்பிருந்தது. நாங்கள் விதிகளைப் புரட்டிப்பார்த்து அதை என்ன செய்ய முடியும் என்று பார்த்தோம்.

 

அங்கே உள்ள தொழிலாளர்பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ந்தோம். நாங்கள் இரு கோரிக்கைகளை பரிச்சீலித்து ஆதரித்தால் உற்பத்தி பத்து சதவீதம் மேலே செல்ல வாய்ப்பிருந்தது. ஒரு இயந்திரம் மிகவும் பழுதாகிவிட்டிருந்தது. வருடத்தில் நாலைந்து தொழிலாளர்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். முதல் கோரிக்கை அந்த இயந்திரத்தை மாற்றவேண்டும் என்பது. இதற்கு ஒருலட்சம் டாலர் செலவு ஆகக்கூடும். இன்னொன்று பத்து சதவீதம் ஊதியத்தைக் கூட்டவேண்டும்

 

ஜெ·ப்  மீண்டும் கூட்டி கழித்து வகுத்து பார்த்தான். அதன் பின்னர் அந்த திட்டத்தை நிராகரித்தான், அது லாபமாக அமையாது. அவ்வாறு பணத்தைச் செலவுசெய்து உற்பத்திதிறனை அதிகரித்தால்கூட லாபம் தெரிய நான்குவருடங்களாகும்.  நாங்கள் இந்த ஆட்டத்தை ஆடுவதே மூன்று வருடங்களுக்குத்தான். ஆகவே அது தேவையில்லாத செலவு என்றான் அவன். அதற்குப் பதிலாக புதிய தொழிற்சாலைகளை புதிய தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கலாம் என்றான் ஜெ·ப்.

 

உச்சேயும் நானும் வேறுமாதிரி நினைப்பதாகச் சொன்னோம். நல்ல நிர்வாகம் மூலம் தொழிற்சாலையின் சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்றோம். ஜெ·ப் அவனாது கணக்குகளை மீண்டும் விரிவாக போட்டு எங்களுக்கு விளக்கி எங்கள் தீர்மானம் தவறு என்று காட்டினான். ”சரி  அதை விடு” என்றான் உச்சே

 

புதிய தொழிற்சாலைக்கு போதுமான பணம் இல்லை. வங்கிக்கடன் எடுக்கலாம் என்றான் ஜெ·ப். ஆனால் ஒரு ஆலையை மூடுவதாக இருந்தால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு குறிப்பிட்ட உபகாரத்தொகை அளிப்பதாக ஒப்பந்தமிருந்தது விதிகளில். ஆனால் நாங்கள் ஆலை இருந்த நிலத்தை விற்க முடியும். எல்லாவற்றையும் பார்த்தபின்னர் ஒரு ஆலையை மூடிவிடுவதே நல்லது என்று முடிவுக்கு வந்தோம். ”அவசரம் வேண்டாம், யோசிப்போம்’; என்றேன். நாங்கள் என்ன சொன்னாலும் ஜெ·பின் கூர்மையான கச்சிதமான ரூபாய் பைசா கணக்குகள் முன் நிற்கவில்லை. அவனுடைய கணக்குபுத்தியின் கத்தி எல்லாவற்றையும் இரக்கமில்லாமல் வெட்டித்தள்ளியது. எங்களுடைய எந்த ஒரு ஆலோசனைக்கும் அவனிடம் முற்றிலும் எண்களாலும் தகவல்களாலும் துணைசேர்க்கப்பட்ட ஒரு பதில் இருந்தது. சோம்பல் முறித்தபடி ஜெ·ப் ஒரு வாய் டீ சாப்பிட எழுந்தபோது உச்சே சொன்னான் ”பயங்கரமான ஆள். பாத்துக்கோண்டே இரு, ஒருநாள் அவன் ஒரு கம்பெனிக்கே தலைவனாக வந்துவிடுவான்”

 

அந்த தருணத்தில் பீட்டர் சந்தை நிலவரம் தயாராக இருப்பதாக அறிவித்தார், அதன் மதிப்பு 5000 ரூபாய். பத்துபக்கமுள்ள அதில் எல்லா சந்தைகளின் தகவல்களும் அவற்றின் அன்றாட எழுச்சி வீழ்ச்சிகளும் , எந்தப்பொருளுக்கான தேவை எந்தெந்த நாடுகளில் இருக்கிறது என்ற தகவல்களும், அவற்றை விற்க என்னென்ன விதிகள் உள்ளன என்பதும் சொல்லப்பட்டிருந்தது. நாங்களும் ஒன்று வாங்கினோம். ஜெ·ப் வந்து அமர்ந்து அதை முழுமையாக வாசித்தான். கணக்குபோடுவதில் மூழ்கினான். எதையோ புதிதாகக் கண்டுபிடித்தவன்போல உற்சாகத்துடன் ”நாம் ஆப்ரிக்காவில் நம் வியாபாரத்தை பரப்பினால் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று  அறிவித்தான். ”ஆனால் உடனே அல்ல. ஒரு இரண்டுமாதம் காத்திருக்க வேண்டும்”

 

ஆறுமாதம் வியாபாரத்தை முடித்துவிட்டு மதிய உணவுக்காக எழுந்தபோது அந்த சூழலே முற்றிலும் வேறுபட்ட மனநிலையை பெற்றிருந்ததை கவனித்தேன். நட்புணர்ச்சியே இல்லை. அடுத்த அணி எப்படி அத்தனை டெண்டர்களை வென்றார்கள் என்று பொறாமைப்பட்டபடி, அவர்களின் உத்திகள் என்னவாக இருக்க முடியும் என்று சிந்தித்தபடி, தாக்குதல்களை திட்டமிட்டபடி, எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொண்டு செயற்கையான புன்னகைகளை ஒருவரோடொருவர் காட்டியபடி , கள்ளக்குரல்களில் பேசிக்கொண்டபடி, ரகசியங்களை கண்களுக்குள் தேக்கியபடி, லாபநஷ்டக்கணக்குகளையே எண்ணிக்கொண்டபடி சென்றோம். ஒரு போர்க்கள மனநிலை அது. மதிய உணவில் எவரும் உற்சாகமாக சிரிக்கவில்லை, ஒருவரோடொருவர் விளையாட்டாக பேசிக்கொள்ளவில்லை. குழுக்கள் தங்களுக்குள்ளேயே தான் பேசிக்கொண்டன

 

உச்சே மனசஞ்சலம் கொண்டவனாக கண்ணாடிச்சன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன்.  ”என்ன உச்சே, லாபத்தைக் கூட்டுவது பற்றிய யோசனையா?” என்றேன்

 

”நாம் ஆப்ரிக்காவில் ஆலைகளை திறக்கக்கூடாது…நாம் ஆப்ரிக்கச் சந்தைக்குப் போகவே வேண்டாம்…” என்றான் உச்சே

 

”ஏன்?” என்றேன். ஜெ·பின் திட்டத்தில் ஏதோ பிழை கண்டுபிடித்துவிட்டான் என்றுதான் முதலில் எனக்குப் பட்டது.

 

”அது அங்குள்ள மக்களை அழித்துவிடும்” என்றான் உச்சே

 

நான் அதிர்ந்துவிட்டேன். அவனது நாட்டை வரைபடத்தில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுவிட்டான் என்று நான் அவனை சமாதானப்படுத்தினேன்.

 

”நீ எப்படி அதைச் சொல்கிறாய்? ஜெ·பை விட நீ எங்களை இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டாமா? உங்கள் நாட்டில் உள்ள சாதிகள் மதங்கள் கடவுள்கள் எல்லாம் எங்களிடமிருந்து அதிக வேறுபட்டவை அல்ல. நம்முடைய ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு வாழ்க்கையை வாழ்கிறது”

 

நான் அவன் என்ன சொல்லவருகிறான் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. நாங்கள் சேர்ந்து சாப்பிட அமர்ந்தபோது நான் சொன்னேன் ”நீஎன்ன வாதிடுகிறாய் என்றே எனக்குப் புரியவில்லை”

 

”நான் வாதிடவில்லை. தகவல்களைச் சொல்கிறேன்”என்றான் உச்சே. கொஞ்சநேரம் ஆழமான அமைதிக்குச் சென்றான். பின்பு பெருமூச்சுடன் அவனுடைய நாட்டைப்பற்றியும் அவனைப்பற்றியும் சொன்னான்

”நாங்களெல்லாம் இப்போதும் அடிமைகள்தான். எங்களுக்கு முன்பு ஜனநாயகம் இருந்தது. என்னுடைய தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர்தான் அதிபராக இருந்தார். இப்போதைய ஆட்சியாளர் அவரைக் கொன்றுவிட்டு ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்துவிட்டார். போலித் தேர்தல்களை நடத்தி உலகை ஏமாற்றி பதினைந்துவருடங்களாக அதிகாரத்தில் இருக்கிறார். அதிபர் என்ற சொல்லை அவரைப்பறிச் சொல்வதற்குத்தவிர வேறு எதற்கும் நாங்கள் பயன்படுத்தக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிரது. எங்கள் நாட்டில் எங்கள் நிறுவனத்திற்கு தலைவர்தான் உண்டு உன்னுடைய கம்பெனிக்கு இருப்பது போல அதிபர் கிடையாது…”

 

உச்சே தொடர்ந்தான் ”ஒருகாலத்தில் எங்கள் நாடு ஏராளமான கொக்கோவை உற்பத்திசெய்தது. முந்தைய அரசு அவற்றை பாதுகாத்து ஏற்றுமதிசெய்ய பெரிய பண்டகசாலைகளைக் கட்டியது. மக்கள் அந்த பண்டகசாலைகளை முந்தைய ஆட்சியின் சாதனைகளாக பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும்  இன்றைய ஆட்சியாளர் அவற்றை தரைமட்டமாக்கிவிட்டார். நாங்கள் அரசை எதிர்க்கக்கூடாது என்று  அவர் எங்கள் மக்களை வறுமைக்குத் தள்ளிவிட்டிருக்கிறார். எங்கள் மக்களை கட்டுப்பாடில்லாமல் வாங்கிக் குவிக்கும்படி அவர் பழக்குகிறார். சில பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தச் சதியில் பங்கிருக்கிறது. எங்கள்நாட்டில் எதுவுமே உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்கிறார் அதிபர். நான் இதோ போட்டிருக்கும் சட்டைகூட வேறு யாரோ எனக்குத் தந்ததுதான்.”

 

”எங்கள் நாட்டில் பல்லாயிரம் வருடங்களாக இருந்துவரும்  எல்லா உள்ளூர் தொழில்களும் வளரும் தொழில்நுட்பம் இலலமல் அரசு ஆதர்வு இலலமல் அழிந்துகொண்டிருக்கின்றன” என்றான் உச்சே ”எங்கள் மண்ணில் கொஞ்சம் பெட்ரோலியமும் இயற்கை எரிவாயுவும் கிடைப்பதனால்தான் நாங்கள் இன்னமும் செத்து அழியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லாமே அங்கே அரசின் கைகளில்தான். உணவு வினியோகம் கூட அரசுக்குத்தான் சொந்தம். பெரிய நிறுவனங்களின் பொருட்களைத்தான் மக்களுக்குக் கொடுப்பார்கள். படிப்படியாக எங்கள் ருசிகள் மணங்கள் ரசனைகள் எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. உள்ளூரில் உற்பத்தியாகும் எதுவுமே எங்கள் புதியதலைமுறைக்குப் பிடிக்காமலாகிறது…”

 

உச்சே சொன்னான் ”நாங்கள் வீடுகளில் சாப்பிடுவது எங்குமே ஒரே உணவுதான். யாருக்குமே வேறு ருசிகள் தேவையில்லை. ஒட்டுமொத்தமான உற்பத்தியும் ஒரேமாதிரியான வினியோகமும் போதும் என்றே நினைக்கிறார்கள். இனி எங்கள் மக்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப்பட்டால்கூட அவர்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவார்களா என்பது சந்தேகமே. நாங்கள் பெரிய கம்பெனிகளுக்காக வேலைசெய்து அந்தகூலியில் அவர்கள் உற்பத்தி செய்வதை வாங்கிக்கொண்டிருக்கிறோம். எங்கள் நாடே இப்போது வெறும் மலிவான உடலுழைப்பாளார்களாக மாறிவிட்டிருக்கிறோம். என் குடும்பத்தையே எடுத்துக்கொள். இரண்டு மாமாக்கள் வேலையிழந்து சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். ஆலைகளை மூடி கையில் இருபதாயிரம் பணத்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்களில் ஒருவருக்கு கையில் விரல்கள் இயந்திரத்தில் வெட்டுபட்டுவிட்டன. ஒன்றுமே செய்ய முடியாது…”

 

நான் உச்சேயின் பேச்சால் குழம்பிப்போய்விட்டேன். அவன் இந்தக்கோணத்தில் யோசித்துக்கொண்டிருகிறான் என நான் கற்பனையே செய்யவில்லை. என் மனதில் எத்தனையோ சித்திரங்கள் வந்து சென்றன அவர்களுடைய இருண்ட வீடுகள், காலியான உணவுத்தட்டுகள், வேலையிழந்த மாமாகளின் வெற்றுப்பார்வைகள், அவர்கள் பாடும்போது நடுங்கும் குரல்கள், நடுவே இடைவெளிவிட்ட பெரிய பல்வரிசைகளினாலான எளிமையான புன்னகைகள், தூக்கமில்லாத கண்கள், கனவுகள், நம்பிக்கைகள்….. அவர்களின் வாழ்க்கையே மாறிவிட்டிருக்கும். அவர்கள் உரிமையுடன் தங்கள் மனைவியரை தழுவ முடியாது. ஜெ·ப் பார்த்துக்கொண்டிருந்த வெறும் கோடுகளினாலான வரைபடத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக உச்சே அதில் வாழ்க்கையைப் பார்த்தான். நூற்றுக்கணக்கான சரடுகளை அவன் அதிலிருந்து அவன் வெளியே எடுத்துக்கொண்டிருந்தான்

 

நான் உச்சேயின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஜெ·ப் வந்தான் ”வாருங்கள், நேரமாகிவிட்டது” என்றான். நாங்கள் எழுந்து அவன் பின்னால்சென்றோம்.

 

ஆட்டம் மீண்டும் ஆரம்பித்தது. எல்லாரையும்  முள்முனையில் நிறுத்தியது அது. ”உச்சேக்கு மண்டை குழம்பிவிட்டது” என்று ஜெ·ப் என் காதில் முணுமுணுத்தான். உச்சே அவனிடமும் அபப்டியே சொல்லியிருந்தான். நாங்கள் உச்சேயிடம் விவாதிக்கவேண்டாமென்று தீர்மானித்தோம்.. தற்காலிகமாக ஆப்ரிக்காவுக்கு வியாபாரத்தை விரிவாக்கம்செய்யவேண்டாமென முடிவுசெய்தோம். ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஆட்டத்திலேயே மூழ்கியிருந்தார்கள், அவர்களின் மொத்த அறிவே சவாலுக்கழைக்கப்பட்டதுபோல.

 

ஆட்டம் செல்லச்செல்ல எங்களுக்கு ஆட்டவிதிகளெல்லாம் மனப்பாடமாகத் தெரிய ஆரம்பித்தது. அவற்றை எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் தெரிந்துகொண்டிருந்தோம் என்பதுபோல. அந்த ஆட்டவிதிகளே எங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதுபோல.

 

எங்கள் குழுவின் கணிப்புகள் இருமுறை தவறின. எங்கள் நிறுவனத்தின் பங்குகள் தேங்கிக் குவிந்தன.  நாங்கள் எங்கள் வருடாந்தர லாபநஷ்டங்களை  அறிவித்தபோது நாங்கள்தான் கடைசியாக இருந்தோம். ஆனால் நாங்கள் நஷ்டத்திலும் ஓடிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் ஜெ·ப் கவலையுடன் இருந்தான். வெற்றி தவிர எதிலுமே சமரசமாகாத வகையான ஆள்.

 

இரவுணவுக்கு அமர்ந்தபோது ஜெ·ப் சொன்னான் ”நாம் மறுபடி சந்திக்கும்போது தெளிவாக யோசிக்கவேண்டும். இன்று செய்ததுபோல ச்செய்தோமென்றால் இதே கடைசி இடத்தில்தான் எப்போதும் இருக்கவேண்டும்”

 

”சீக்கிரமே படுக்கைக்குப் போய் நன்றாக தூங்குங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றான் ஜெ·ப்

 

ஆனால் உச்சேயும் நானும் அமர்ந்து மேலும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் நாட்டைப்பற்றி நானும் அவன் நாட்டைபப்ற்றி அவனும் எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம்

 

எங்கள் ஊரில் உள்ள சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், திருமணச்சடங்குகள், என்னுடைய நடுத்தரக்குடும்பத்து பெற்றோரின் கனவுகள்,  ஒரு சாதாரண ஊழியரான என் அப்பா நான் இப்போது வகிக்கும் பதவியைக்குறித்து கொண்டிருக்கும் பெருமிதம் எல்லாவற்றையும் நான் சொன்னேன். காந்தியைப் பற்றி சொன்னேன். 1947ல் நாங்கள் பெற்ற சுதந்திரத்தைப் பற்றியும், இன்றைய அரசியல் சூதாட்டங்களைப்பற்றியும், தூங்கப்போகும்போது என்னை படுத்தும் இனம்புரியாத மனச்சஞ்சலங்களைப் பற்றியும் சொன்னேன். என்னுடைய இளமைப்பருவத்தைப்பற்றியும் என் மனைவியைப்பற்றியும் விளக்கினேன். எங்களூரில் சிலருக்கு ஆவிபீடிப்பதைப்பற்றி நாடகத்தனமாக விளக்கினேன். சேப்பிலையில் தேங்காய் சேர்த்த அரிசிமாவை பூசி பொரித்து எடுக்கும் பட்ரோடு அப்பத்தைப்பற்றி நாவூறச் சித்தரித்தேன்.

 

அதிகமாகப்பேசிவிட்டேனா என்ற வெட்கத்துடன் என் அறைக்குச் சென்றேன். ஆனால் காலைவரை சரியாக தூக்கமே வரவில்லை. ஜெ·ப் என் அறைக்கு வந்து அவன் வகுத்திருக்கும் புதிய வணிகதந்திரங்களைப்பற்றிச் சொன்னான். என்னை உச்சேயின் சொற்கள்தான் படுத்திக்கொண்டிருந்தன. அந்த விளையாட்டு ஒரு கெட்ட ஆவி போல மனதை ஆக்ரமித்துவிட்டிருந்தது. நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து ஒரு எண்ணம் என்னை எழுப்பியது. எழுந்தபின்னரும் அந்த எண்ணம் நீடித்தது. நான் கொஞ்சம் தண்ணீர்குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன். அந்த ஆட்டம் எங்களுக்குள் உள்ள ஏதோ ஒரு உள்ளுணர்வை தூண்டி எழுப்பிவிட்டிருந்தது. எங்கள் அனைவருக்குள்ளும் இருந்த ஒரு விசித்திரமான இச்சையை, வெறியை…

 

அதன் பிடியைக் கண்டு என் மனம் சோர்ந்தது. அது எங்களைச் இறுக்கமான சிறிய குழுக்களாக கட்டி பிறரிடமிருந்து பிரித்தது. எதையுமே ரசிக்கமுடியாதபடிச் செய்தது. நான் பாதி வாசித்து விட்டிருந்த நூலை தொடவே என்னால் முடியவில்லை. பாட்டோ நடனமோ அரட்டையோ  ஏதுமில்லை. கடலோர நடைகூட இல்லை. இது மட்டும்தான்

 

அந்த தருணம் வந்தது. காலையுணவுக்குப் பின்னர் ஜெ·ப் ஆப்ரிக்காவுக்குச் செல்வதைப்பற்றிப்பேச ஆரம்பித்தான். அதை ஏற்கவே முடியாது என்று உச்சே சொல்லிவிட்டான். உச்சே ரொம்பதான் மிஞ்சிப்போகிறான் என்று எங்களுக்குத் தோன்றியது. ஆப்ரிக்காவுக்கு வியாபாரத்தை விரிவாக்கம்செய்யாமல் வேறு வழியே இல்லை. இதுவரை எங்கள் ஆட்டத்தில் எந்த அணிக்கும் அந்த எண்ணம் வரவில்லை. நாங்கள் அங்கே முதலில் சென்றால் எங்களுக்கு நல்ல வாய்ப்பிருந்தது, பிந்தும்தோறும் ஆபத்து. நான் எங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையை வைத்து நிலைமையை உச்சேவுக்கு விளக்க முயன்றேன்

 

”அதனால்தான் நான் வேண்டாமென்று சொன்னேன்” என்றான் உச்சே.

 

”’ இதோபார், சும்மா உணர்ச்சிமூடனாக இருக்காதே. உன்னுடைய நாட்டில் என்ன இருக்கிறது அல்லது என்ன இல்லை என்பதைப்பற்றி எதுவுமே நமக்குத்தெரியாது. நமக்குத்தெரிந்ததெல்லாம் இந்த அறுபது பக்கங்களில் இருப்பது மட்டும்தான். இந்த  ஆட்டத்தில் நாம் என்ன செய்தாலும் அது உன் நாட்டை பாதிக்கப்போவதில்லை. உச்சே, இது வெறும் விளையாட்டு” ஜெ·ப் சொன்னான்

 

உச்சே ஒத்துக்கொள்ளவில்லை. ”கண்டிப்பாக இது வெறும் விளையாட்டுதான். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அப்படித்தான். நீங்கள் வரைபடத்தில் இடங்களைப் பார்த்து அடையாளப்படுத்தி சரடுகளை இழுத்து விளையாடுகிறீர்கள். உங்களால் மனிதர்களைக் கொன்று விளையாட முடியுமா? சாவது உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் நீங்கள் இதேபோல சரடுகளை இழுத்து பொம்மைகளை ஆட்டி இத்தனைபேரைக் கொன்றேன் என்று சொல்லி விளையாட முடியுமா?”

 

உச்சேயின் சொற்கள் கொஞ்சம் அதிகமாகவே கூர்மையாக இருந்தன. ஜெ·ப் அவனை அமைதிப்படுத்த முயன்றான்.ஆனால் உச்சே சொன்னான் ”நமக்கு இப்போது எந்த நஷ்டமும் இல்லை. இதற்குமேல் நமக்கு எதற்கு லாபம்? இப்போது இருப்பதிலேயே நாம் ஏன் திருப்தியாக இருக்கக்கூடாது?”

 

”அதாவது, நஷ்டம் இருந்திருந்தால் நீ ஒப்புக்கொண்டிருப்பாய் அல்லவா?”என்று திருப்பிக்கேட்டான் ஜெ·ப். ”பணத்தை வைத்திருப்பதில் சந்தோஷம் இல்லை, பணம்பண்ணுவதில்தான் சந்தோஷமே…” ..

 

உச்சே பிடிவாதமாக வாதிட்டுக்கொண்டே இருந்தான். அவன் ரொம்பவும் மிகையாக நடந்துகொள்வதாகவே எங்களுக்குத் தோன்றியது. ஆனால் அவனுடைய அனுமதி இல்லாமல் நாங்கள் எதுவும் செய்யமுடியாது. விதிகளின்படி நாங்கள் கூட்டு முடிவுதான் எடுக்கவேண்டும். ஒருவரின் ஒப்புதல் இல்லையென்றாலும் பீட்டர் நிர்வகித்த அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளையும் திட்டங்களையும் நிராகரித்துவிடும். வேறு வழியே இல்லை, உச்சேயை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ளச் செய்தாகவேண்டும்.

 

”இங்கேயே இரு”என்று சொன்னபின் ஜெ·ப் உச்சேயை வெளியே கூட்டிக்கொண்டுசென்றான். பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் இருவரும் திரும்பி வந்தார்கள் ”உச்சே ஒத்துக்கொண்டுவிட்டான்”என்றான் ஜெ·ப். அவன் என்ன சொன்னான், மிரட்டினானா கெஞ்சினானா ஒன்றும் தெரியவில்லை. நான் உச்சேயின் முகத்தைப் பார்த்தபோது சங்கடமாக உணர்ந்தேன். ஒருவேளை நான் நேற்று அத்தனை தூரம் அவனிடம் பேசியது நானும் அவனைமாதிரித்தான் என்றும் ,அவனை நான் புரிந்துகொள்கிறேன் என்றும் காட்டிக்கொள்ளத்தானா என்று எண்ணிக்கொண்டேன். எந்த வயதில் நான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அவற்றையெல்லாம் விளையாட்டாக மாற்ற ஆரம்பித்தேன் என்று யோசித்தேன்

 

உச்சேயை எப்படி ஜெ·ப் சம்மதிக்க வைத்தான் என்று எத்தனை யோசித்தும் எனக்குப் புரியவில்லை. என்ன அதிகாரத்தை அவன் பயன்படுத்தினான், எந்த தந்தியில் தொட்டான்?  அதன்பின் உச்சே ஜெ·ப் சொன்ன எல்லாவற்றுக்கும் ஒரேமாதிரியாக உணர்ச்சியில்லாமல்  ”சரி சரி’ ‘ என்றான். மூன்றாம் நாள் இறுதியில் நாங்கள் இரண்டாம் இடத்துக்கு எழுந்து விட்டோம்

 

தமிழாக்கம்: ஆங்கிலம் வழி ஜெயமோகன்

 

மூலம் 1992ல் எழுதபப்ட்டது. ஆங்கில மொழியாக்கம் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணா.

 

விவேக் ஷன்பேக்

விவேக் ஷன்பேக்

கன்னடத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர்,நாடக ஆசிரியர். தேஷ்காலா என்ற சிற்றிதழை நடத்துகிறார். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருதையும்,  1997 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்க்ருதிசம்மான் விருதையும் பெற்றவர். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன்.

முந்தைய கட்டுரைமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்
அடுத்த கட்டுரை‘நலம்’ சிலவிவாதங்கள்