மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

ஒருநாள் பார்வதிபுரத்தில் என் வீட்டில் இளம் மழையில் எழுதிக்கொண்டிருந்தேன். அமைதியும் பிரபஞ்ச ஒத்திசைவும் கூடிய ஒருநாள். எழுத்தின் நடுவே இனிய களைப்பு ஒன்று என் மீது படர்ந்தது. மாலையில் சற்று நடக்கலாமென கடைக்குச் சென்றேன். நெடுஞ்சாலையில் ஏறியதுமே வேறு ஒரு சூழலை எதிர்கொண்டேன். ஜெயலலிதா வந்து சென்றிருந்தார். பெருங்கூட்டம் அப்பி போலீஸ் தடியடி நடத்தியிருந்தது. பதற்றம், கலைந்த அலங்காரங்களில் தார்ச்சாலையில் எஞ்சிய ஒற்றை ஹவாய் செருப்பில் அப்போதும் எஞ்சியிருந்தது. ஆயிரம்அடி தூரத்தில் நான் வேறு ஒரு உலகில் வேறு ஒரு யதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறேன்.

நாம் வாழும் யதார்த்தமே ஒரே யதார்த்தம் என நம்ப நம் மனம் பயிற்சி பெற்றிருக்கிறது. ஆனால் பல பட்டைகள் கொண்ட யதார்த்தத்தின் ஒரு பக்கம் மட்டும்தான் அது. அதைச் சொல்லவே மனிதன் கலைகளை உருவாக்கினான். கதைகளைச் சொல்ல ஆரம்பித்தான். இல்லையேல் ஏன் மிருகங்கள் பேசவேண்டும்? விண்ணில் இருந்து தேவர்கள் இறங்கி வரவேண்டும்? இலக்கியப் படைப்புகள் எல்லாமே நாமறியாத யதார்த்தத்தின் வேறு ஒரு பட்டையை முன்வைத்து நமது கால இட பிரக்ஞையை  அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவை. அதன் மூலம் நம் பிரபஞ்ச தரிசனத்தை அவை புதுக்கி உருவாக்குகின்றன.

 

மனிதர்கள் வாழும் கால இட எல்லைக்கு அப்பாற்பட்ட அதிமானுடர்கள் குறித்த கற்பனை எல்லா சமூகங்களிலும் ஏதோ ஒருவகையில் உள்ளது. கால இட எல்லைக்கு அப்பால் செல்ல என்னும் மனித மனத்தின் கற்பனை என்றும் அதைக் கொள்ளலாம். ஆன்மீகம், மதம் அனைத்திலும் அத்தகைய எல்லை மீறலுக்கான தாகம் உள்ளது. உலகம் முழுக்க உள்ள கதைகளை தொகுத்தால் அவற்றில் பெரும்பகுதி மாயமந்திரக் கதைகளே என்பதைக் காணலாம். பழங்குடிகளிடம் மாயம் இல்லா கதைகளே இல்லை. காணி பழங்குடிகள் கதைக்கு மாயம் என்ற சொல்லையே பயன்படுத்துவதை கேட்டிருக்கிறேன்.

 

மாயக்கதைகளின் வகைமாதிரிகள் பல. பேய்க்கதைகள், தேவதைக்கதைகள், குழந்தைகளுக்கான மந்திரக்கதைகள். உதாரண கதைகள் . நீதிக்கதைகள். கதைகளில் எப்போதும் பூமியின் யதார்த்த எல்லைகள் மீறப்பட்டுக்கொண்டேதான் உள்ளன. பெரும் அறிவியல் புனைகதைகள் இத்தகைய மீறலை அறிவியலின் தர்க்கத்தைப் பயன்படுத்தி முன்வைப்பவை. புராணங்கள் வெறுமே தத்துவார்த்த கற்பனையை நம்பி இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கும் ஒரு தர்க்க முறை உண்டு. உதாரணமாக இந்தியப்புராணங்களில் உள்ள மறுபிறப்பு போன்ற விஷயங்கள் எல்லா புராணங்களுக்கும் பொதுவானவையாக, கிட்டத்தட்ட அறிவியல் கோட்பாடுகளின் திட்டவட்டத்தன்மையுடன் உள்ளன.

 

தமிழில் நமக்கு நவீன இலக்கியம் நவீனத்துவ இலக்கியமாகவே அறிமுகமாகியது. யதார்த்தத்தைச் சொல்லவே நாம் இலக்கியங்களை உருவாக்க ஆரம்பித்தோம். ஆகவே நம்முடைய புராணமரபையும் நாட்டார் மரபையும் முற்றாக உதறிவிட்டு மேலைநாட்டு யதார்த்தச் சித்தரிப்பை நம்முடைய இலக்கிய மொழிபாக நாம் கொண்டோம். இன்றுவரை நம் இலக்கியத்தின் பெரும்பகுதியை யதார்த்த ஆக்கங்களே நிரப்பியுள்ளன.

 

மேலும் நவீனத்துவத்தின் உள்ளடக்கமான நிரூபணவாத அறிவியல் அந்த எல்லைக்குள் வராத எதையுமே பொய் என்றும் பயனற்றது என்றும் நிராகரிக்கும் தன்மை கொண்டது. இந்த அணுகுமுறையானது நம்முடைய மரபான புரானா-நாட்டார் மரபு நமக்களிக்கும் மாற்று யதார்த்தச் சித்தரிப்புகள் மீது ஆழமான ஒரு விலகலை நமக்குள் உருவாக்கியிருக்கிறது

 

ஆனால் நம் மொழியின் நவீன இலக்கியத்தின் முன்னோடிமேதையான புதுமைப்பித்தன் தமிழில் இன்றுவரை உருவாகி வரும் எல்லா வகையான இலக்கிய வடிவங்களுக்கும் எழுத்து முறைகளுக்கும் முதல் முயற்சிகளைச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். நாட்டார்க்கூறுகளை ஒட்டிய மாயக்கதைகளையும் நீதிக்கதை பாணியிலான மாயச்சித்தரிப்பையும் புராண இதிகாச மரபை ஒட்டிய மாய விவரிப்பையும் அவர் எழுதியிருக்கிறார். மீபொருண்மை [மெட·பிசிகல்]  நோக்குள்ள மாயச்சித்தரிப்பையும் அவரே செய்து பார்த்திருக்கிறார்.

 

யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச் சித்தன் சரித்திரத்தை மீபொருண்மை மாய யதார்த்த படைப்பு என வகைப்படுத்தலாம். இந்த வகைக் கதைகளுக்கு தமிழில் அதிக உதாரணங்கள் இல்லை. புதுமைப்பித்தனின் ‘பிரம்ம ராட்சஸ்’  போன்ற கதைகளுக்குப் பின் இவ்வடிவத்தை இதுசார்ந்த பிரக்ஞையுடன் எழுதி நோக்கியவர் பிரமிள். அவரது ‘ஆயி’  இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆக்கம்.

 

யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச் சித்தன் சரித்திரம் நம் வாய்மொழி மரபில் சித்தர்கள் ஞானிகள் கோயில்கள் குறித்து பேசப்படும் மாயக்கதைகளின் பாணியில் அமைந்த இலக்கிய முயற்சி. நாட்டார் கதைகளில் உள்ள அற்புத அம்சம் இந்நாவலின் சித்தரிப்பில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு துணைக்கதைகள் மூலமும் ஒவ்வொரு கதைமாந்தருக்கும் முற்பிறவிகளை அளிப்பதன் மூலமும் நம்முடைய நாட்டார்- புராணாக் கதைமரபு ஒரு  மொழிபை பல்வேறு கதைகள் ஊடுபாவுகளாக ஓடும் ஒரு சிக்கலான கதைவெளியாக ஆக்கிக் காட்டுகிறது.

 

அதேபோல கதைகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்துச் செல்வது,  மைய மொழிபின் பற்பல மடிப்புகளை ஒன்றோடொன்று பின்னி இணைப்பது ஆகிய உத்திகள் மூலம் கால இட யதார்த்தத்தை மீறி வாசகனைக் கொண்டு செல்லமுயலும் நாவல் குள்ளச்சித்தன் சரித்திரம். இந்நாவலின் மாயச்சித்தரிப்புகள் காரணமாக எளிய தமிழ் வாசகர்களில் ஒரு சாரார் இந்நாவலை மூட நம்பிக்கை என்று சொல்லி விடக்கூடும். இதை புறவய யதார்த்தமாக எண்ணுவது அதைவிட பெரிய பாமரத்தனம். இது ஒரு புனைவுப்பரப்புக்குள் நிகழ்த்தப்படும் கூறல் விளையாட்டு மட்டுமே என எடுத்துக் கொள்வதே சிறப்பானதாக்கும்.

 

மிகவும் வாசிப்புத்தன்மை கொண்ட சித்தரிப்புகளும் சகஜமான நடையும் இந்நாவலின் பலம். இத்தகைய ஆர்வமூட்டும் நாவல் தமிழில் வந்து வெகுநாளாகிறது. உத்தி சோதனை என்ற பேரில் வாசகனைப் போட்டு படுத்தும் நாவல்களை வாசித்துச் சலித்த தமிழ் வாசகர்களுக்கு இனி விடுதலையாக அமையும் படைப்பு இது. உதிரிக் கதைகளை பின்னிப் பின்னி மெல்ல ஒரு முழுமையை உருவாக்குவதில் சிரத்தையுடன் செயல்பட்டிருக்கிறார் . நாவலின் ஆரம்பக் கட்டங்களில் தனித்தனிச் சித்தரிப்புக்களாகச் செல்லும் இந்நூலை எப்படித் தொகுத்துக் கொள்வது என்ற சிக்கல் வாசகனுக்கு ஏற்படக்கூடும். மெல்லத்தான் நாவல் குவிமையம் கொள்கிறது..

 

குள்ளச் சித்தன் என்ற அவதூதரின் கதை இது. வெவ்வேறு அனுபவ தளங்களில் வெவ்வேறு வடிவில் அவரைக் காண நேர்ந்த பலரது கதைகள் இந்நாவலில் சொல்லப்படுகின்றன. ஊடாக அவரைப்பற்றிய வாய்மொழிக்கதைகள், அவரைப்பற்றி குறிப்பிடப்பட்ட நூல்கள் பற்றிய செய்திகள். ஒவ்வொரு தனிக்கதையும் வாழ்க்கையின் ஒருதளத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கதைக்கும் வெறு வேறு சாதிப்பின்புலம் வேறுபட்ட மொழி ஆகியவற்றை அபாரமான புனைவுத்திறனுடன் அளித்திருக்கிறார் யுவன்.

 

ராம பழனியப்பனுக்கும் சிகப்பிக்கும்  இருக்கும்  பிள்ளைக் கலிதான் இச்சித்தரிப்புகளிலேயே முதன்மையானதாக உள்ளது. குறிப்பாக சிகப்பியின் கதாபாத்திரம் அதன் தீராத நன்னம்பிக்கையுடனும் கள்ளமின்மையுடனும் அழகாக உள்ளது. அவளுக்கு குழந்தை அவள் வாழ்க்கையின் பொருளாக, அதன் முழுமையாக உள்ளது. நேர் மறுபக்கம் கன்னிமகள் ஒரு கருவுற்றதனால் எரிந்துகொண்டிருக்கும் கிராமத்து ஏழை விதவை. முற்றிலும் வேறுபட்ட இரு இடங்கள்.தைரு சாராருமே ஒரே அவதூதரிடம் மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள். கன்னி குழந்தைபெற்று மீண்டும் கன்னியாகிறாள். அந்தக்குழந்தை சிவப்பியின் வாழ்க்கையின் பொருளாக அவள் கைகளுக்கு வந்துசேர்கிறது. நடுவே ஒரு பெரிய விளையாட்டு இருக்கிறது. எதுவும் செய்யாமல், எதிலும் ஈடுபடாமல் அந்த விளையாட்டை நிகழ்த்தி தனக்குள் ஒடுங்கி இருக்கிறார் குள்ளச்சித்தன்

 

இத்தகைய விளையாட்டுகளின் விரிவான வலைப்பின்னலால் ஆனது இந்நாவல். பலவகையான கதைமாந்தர்கள். காவல்துறை அதிகாரியாக இருந்து சட்டென்று ஒரு ஆன்மீக விழிப்புணர்வுபெற்று உடல்தாள முடியாத பெரும் ரகசியத்துடன் வந்து வீட்டில் அமர்ந்திருக்கும் முத்துசாமி அய்யர் முதல் வாய் நிரம்ப வேதாந்தம் இனிக்கும் பர்மா அய்யர் வரை பலவகையான கதாபாத்திரங்கள் நாவலின் ஒன்றுடன் ஒன்று பிணைந்து தங்கள் வாழ்க்கை என்ற வலையை பூர்த்திசெய்ய நடுவே அமர்ந்திருக்கிறார் குள்ளச்சித்தன். ஒவ்வொருவரின் வாக்கையிலும் அவரது ஊடாட்டம் இருக்கிறது. அதன் வழியாக நாம் வாழக்கூடிய இந்த உலகத்தின் யதார்த்தம் முழுமையானதல்ல என்று நாவல் கூறுகிறது. இதற்கு அடியில், இந்த யதார்த்தத்தின் இடைவெளிகளை நிரப்பியபடி இன்னொரு யதார்த்தம் ஓடிக்கொண்டிருக்கிறது.  அதை மாற்று மெய்மை என்று யுவன் சொல்கிறார். அது நிலத்தடி நீர் போல. குள்ளச்சித்தன்  ஓர் ஆர்ட்டீசியன் ஊற்று போல மேலே எழுந்து வந்த ஒரு நிகழ்வு

 

 

பல நுட்பமான ஊடுவாசல்கள் கொண்டதாக நாவலின் கதைச்சித்தரிப்பு இருப்பது அதன் மொத்தக் கட்டுமானத்தை செறிவூட்டக்கூடியதாகவும் அதே சமயம் மையத்திலிருந்து கிளைத்து விரியும் பலதரப்பட்ட வாசகப் பயணங்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடியதாகவும் உள்ளது. பல்வேறுபட்ட உரையாடல் முறைகள், வட்டார வழக்குகள் ஆகியவற்றை யுவன் சந்திரசேகர் திறம்பட எழுதியுள்ளார். இத்தகைய ஒரு நாவலுக்கு அவசியமான படிம உருவக மொழி பல இடங்களில் துல்லியமாக நிகழ்ந்து சிறந்த வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறது. நாவலின் தொடக்கத்திலேயே மொழியின் அழகு தன்னை நிறுவிக்கொள்கிறது.

 

சமீபத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான புதுவகை ஆக்கங்களின் முக்கியமான பலவீனம் அவற்றின் மையக்கரு மட்டுமே சற்றேனும் படைப்பூக்கத்துடன் கற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதே. படைப்பை உருவாக்கும் சித்தரிப்புகள் மொழி நுட்பங்களோ வாழ்க்கை சார்ந்த அவதானிப்புகளோ இல்லாமல் மிகமிகத் தட்டையானவையாக இருந்தன. அந்தக் குறை இந்நாவலில் இல்லை என்பது மிக மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதாகும். மதுரை வட்டாரபேச்சு வழக்கில் அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றத்தை இந் நாவலின் உரையாடல்கள் மூலம் வாசித்தறிய முடிகிறது. அதேபோல புத்தகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டவையாக அளிக்கபப்ட்ட பகுதிகளில் நூறு வருடத்து இலக்கிய நடையில் ஏற்பட்ட மாறுதலை காணலாம். இதன் மையக்கருவை முற்றாக ஒதுக்கிவிட்டுக்கூட இதை மாறுபட்ட மொழிச் சாத்தியங்களினாலான ஒரு தொகுப்பு என்று வாசிக்கலாம்.

 

இந்நாவலின் முக்கியமான பலவீனம், இது வகுத்துக் கொள்ளும் ஆன்மீகம் என்பது லௌகீக துக்கங்களையும் பிரச்சினைகளையும் அதீத வல்லமைகளால் தீர்த்துவைப்பது மட்டுமே என்பதுதான். ஆன்மீகம் என்பதற்கான மிக எளிய வரையறை இது. அன்றாட வாழ்க்கையின் துன்பங்களை தங்கள் அதீத சக்திகளால் தீர்த்துவைப்பவர்கள் மட்டும்தானா ஞானிகள்? ஞானிகளை நாம் அணுகும் முறையே அது அல்ல. நம் லௌகீக கஷ்டங்களுடன் நாம் ஞானிகளை அணுகினால் ஒருபோது அவர்களை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் அடைந்திருக்கும் ஞானம் என்பது உலகியல் சார்ந்தது அல்ல. ஞானிக்கும் மந்திரவாதிக்கும் இடையேயான வேறுபாடு பாமரர்களுக்கு பிடிபடுவதில்லை. அந்த மயக்கமே இந்நாவலிலும் தெரிகிறது.

 

ஒரு ஞானி எதற்காக கூடுபாய வேண்டும்? ஏன் கால இட எல்லைகளை தாண்டி மனிதர்களுடன் விளையாட வேண்டும்? ஞானிகள் தங்கள் பிரக்ஞையால் காலஇடங்களின் எல்லைகளை மீறுவது என்பது இந்த காலஇடம் அளிக்கும் இக்கட்டுகளை களைவதற்கான ஒரு உபாயமாக அல்ல.  கால இடத்துக்குக் கட்டுப்பட்ட நமது பிரக்ஞையை அவ்வெல்லையை மீறிச்சென்று அறிந்து அதன் வழியாக பிரபஞ்ச முடிவின்மையை உணரக்கூடிய முழுமையனுபவத்தைப் பெறுவதற்காகவேயாகும்.

 

அத்தகைய முழுமையனுபவம் ஞானிகளில் இருவகையில் வெளிப்படுகிறது. , ஒன்று, உச்சக்கட்ட கவித்துவ மொழியாக அல்லது மென்மையான அங்கதமாக. மாயங்களின் மூலமல்ல, மாறாக அவர்கள் அளிக்கும் அற்புதமான முழுமைகூடிய விடுதலையுணர்வினாலேயே ஞானிகள் மக்கள் மனங்களில் ஆழப்பதிகிறார்கள். அந்த முதல்தர கவித்துவமோ உக்கிரமான அங்கதமோ இந்த நாவலில் வரவில்லை. எளிய வாசகன்கூட ‘அப்படியானால் கூடுவிட்டு கூடுபாய்வதும் கர்ப்பத்தை மறைப்பதும்தான் அவதூதரின் வேலையா?’ என்று தனக்குள் எண்ணிக் கொள்வான். அவதூதர்கள் மக்களே போன்றவர்கள். ஞானத்துக்காக திறந்த மனங்களால் மட்டுமே அறியப்பட முடிபவர்கள். குள்ளச்சித்தன் ஒரு ஞானியாக, அவதூதராக நம் முன் வரவில்லை. மாறாக ஒரு விசித்திரமான தொன்மமாகவே நம் முன் நிற்கிறார்.

 

கிட்டத்தட்ட இதே வகையான சித்தரிப்பை நாம் அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ என்ற நாவலில் காணலாம். அதில் அவரும் புகையிலைச்சித்தரும் இதேபோல கூடுவிட்டு கூடுபாய்பவராக அல்லது கால இடங்களின் எல்லைகளைக் கடந்தவராகவே சித்தரிக்கபப்டுகிறார். குள்ளச்சித்தனுக்கும் அவருக்குமான ஒற்றுமைகள் கவனத்திற்குரியவை. இருநாவல்களிலும் ஆன்மீகம் என்பது மாயமந்திரமாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அந்த மாயமந்திரம் உருவாக்கும் விசித்திரத்துக்கு அப்பால் அவை வாழ்க்கையின் சாரம் நோக்கிய எந்த தரிசனத்திறப்பையும் நிகழ்த்தவுமில்லை.

 

இத்தகைய நாவல் சென்று உரச வேண்டிய மானுட உச்சநிலைகளை நோக்கி குள்ளச்சித்தன் சரித்திரம் திரும்பவேயில்லை. இதனாலேயே தன் அத்தனை அழகுகளுடனும் இது ஒரு நடுத்தர ஆக்கமாகச் சுருங்கிவிடுகிறது.

 

[சொல்புதிதில் வெளிவந்தகட்டுரை]

 

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

 

 

கதைநிலம்

கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘

சிறியவிஷயங்களின் கதைசொல்லி

யுவன்

முந்தைய கட்டுரைகண்ணதாசன், இசைப்பாடல்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதை, விவேக் ஷன்பேக்