‘நலம்’ சிலவிவாதங்கள்

உடலை அவதானித்தல்

பல வருடங்களுக்கு எம்.கோவிந்தன்,சுந்தர ராமசாமி வழியாக காந்திமீது ஈடுபாடு வந்த காலகட்டத்தில் ஒருநாள் இரவு காந்தியின் ஒருவரி என்னை அதிரச்செய்தது. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த உடல் மிக மூக்கியமான தடையம் என்கிறார் காந்தி. அதன் வழியாக அவன் தன்னை ஆளும் பிரபஞ்ச விதிகளில் பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

அந்த வரிக்குப்பின்னால் நான் வெகுதூரம் சென்றேன். நான் அந்த நாள் வரை உடலைக் கவனித்ததே இல்லை. என் உடல் என் மனத்தை நான் போட்டு வைத்திருக்கும் ஒரு கூடு என்றே எண்ணியிருந்தேன். உடலை அவதானிக்க ஆரம்பித்த கணம் முதல் அந்த எண்ணம் மாறியது. உடலும் மனமும் ஒன்றின் இரு பக்கங்கள். மனத்தின் பருவடிவே உடல், உடலின் நுண்வடிவே மனம். உடல்மனம் என்றே எந்நிலையிலும் மனிதனைச் சொல்ல முடியும். ஒருவனின் தத்துவசிந்தனைக்கும் அவனுடைய மலக்குடலுக்கும் தொடர்புண்டு என்று ஒருவர் சொன்னால் நான் இன்று அதை நம்பாமலிருக்கமாட்டேன்.

உடலை அவதானிக்க ஆரம்பித்தபின் நான் உணவை அவதானித்தேன். உணவுக்கும் உடலுக்குமான உறவு என்பது எளிமையான ஒன்றல்ல. நமக்கு வெளியே பரவியிருக்கும்  பருப்பிரபஞ்சத்தை நாம் உணவு மூலமே நுட்பமாக தொடர்புகொள்கிறோம். வெளியுலகு நமக்குள் புகுந்து நாமாக ஆகி நம் எண்ணங்களாக, கனவுகளாக, தரிசனங்களாக, மாறுகிறது. எத்தனை மகத்தான விந்தை அது! இப்பிபரபஞ்சத்தில் பருப்பொருளுக்கும் நுண்பொருளுக்கும் இடையேயான உறவை நம் உடலில் மட்டுமே நாமே அந்தரங்கமாக ஆழ்ந்து அவதானிக்க முடிகிறது என்று எண்ணிக்கொள்வேன்.

அந்த நாள்முதல் உடலின் எல்லா நிலைகளையும் கவனித்து வருகிறேன். அதன் வலிகளை அதன் ஏக்கங்களை அதன் சோம்பலை. உடலை அவதானிப்பவன் எப்படியோ மருத்துவம் சார்ந்து பேச ஆரம்பிக்கிறான். மருத்துவம் ஓர் இலட்சிய உடலை உருவகம் செய்து அதை நோக்கி மானுட உடல்களைக் கொண்டு செல்ல முயல்கிறது. மனித அறிவு மனித உடலுடன் கொள்ளும் உரையாடலின் விளைவே மருத்துவம் என்பது.

இந்த நூல் மருத்துவம் சார்ந்தது அல்ல. மருத்துவம் தெளிவாக வகுக்கப்பட்ட ஓர் அறிவுத்துறை. இது ஓரு சிந்திக்கும் மனிதன் தன் உடலை அவதானித்து அடைந்த சில சிந்தனைகளை முன்வைக்கும் நூல் மட்டுமே. ஆர்வமுள்ள சிலருடன் நிகழ்ந்த விவாதத்தின் விளைவு இது. இதில் வரும் மருத்துவக் கருத்துக்கள் சாமானியனின் அவதானிப்புகள் மட்டுமே

மாற்று மருத்துவம் சார்ந்த என் எண்ணங்களுக்கு முதல் வழிகாட்டியாக அமைந்த ஊட்டி நித்யா குருகுல தலைவர் சுவாமி தன்மயா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்

‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

‘புதியகாலம்’ சில சமகால எழுத்தாளர்கள்

முந்தைய கட்டுரைசிறுகதை, விவேக் ஷன்பேக்
அடுத்த கட்டுரைசாரு, இளையராஜா, இசை