முன்னுரை

புதிய எழுத்து

 தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைப்பற்றியும் ஆசிரியர்களைப்பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமரிசனம்செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல்.ளவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமரிசனங்கள் ஆகிவிடும்.

 ஆனாலும் எழுதத்தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கியமான ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் வழியாக தாண்டிச்செல்லப்பட்டன. அவற்றின் மீது விரிவான விமரிசன ஆராய்ச்சி நிகழவேயில்லை. இது பலவகையில் சமகால வாசிப்புச்சூழலை பாதிக்கிறது. சமகாலப்படைப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் நம்மால் இலக்கிய விவாதங்களை நிகழ்த்த முடியாது.

 இந்த விமரிசனங்களில் ஒரு பொது அம்சம் உண்டு. நான் என்னை மிகவும் கவர்ந்த ஆக்கங்களைப்பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன். பிடிக்காத, கவராத ஆக்கங்களைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. அவை காலத்தை வென்று வருமென்றால் பார்க்கலாம். இக்கட்டுரைகளில் இவ்வாக்கங்களின் சில குறைகள் சுட்டப்பட்டிருக்கலாம். அவை குறைகள் என்றல்ல அவ்வாசிரியர்களின் இயல்புகள் என்றே பொருள்படவேண்டும். ஓர் ஆசிரியனில் ஓர் அம்சம் இல்லை அல்லது பலவீனமாக இருக்கிறது என்றால் அது அவனுடைய அகத்துக்குள் செல்வதற்கான ஓர் வழித்திறப்பாகவே அமையவேண்டும்.

 உதாரணமாக தஸ்தயேவ்ஸ்கி ஒருபோதும் புறவயமான யதார்த்தங்களில் தன் புனைவை ஊன்றுவதில்லை. ஏனென்றால் அவர் கதைகளில் ஒவ்வொரு கணமும் மனம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.  அந்த அகத்தின் தன்னிச்சையான நகர்வை காட்டக்கூடிய ஒன்றே அவர் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தை சொல்லும் விதம்.

 இந்த கட்டுரைகளில் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்று சமகாலத்து முக்கியமான இலக்கிய ஆசிரியர்களும் ஒரே நாவல் மூலம் கவனிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரே நூலில் இவர்களின் ஆக்கங்களைப்பற்றிய அவதானிப்புகள் தொகுக்கப்படும்போது வாசகர்களுக்கு தமிழில் என்ன நடக்கிறது என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

 விமரிசனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமரிசனமும் படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே

 இந்நூலை என் மதிப்பிற்குரிய இலக்கிய விமரிசகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

 உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்

 

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

‘முன்சுவடுகள்’ சில வாழ்க்கைவரலாறுகள்

கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)