ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்

திரைப்படம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஜான் ஆபிரஹாம் பற்றிய உங்கள் கட்டுரை [ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்] மிகவும் எதிர்மறையாக , தனிப்பட்டதாக்குதலாக உள்ளது என்று படுகிறதே. அவரது சினிமாக்களை நீங்கள் விமரிசனம்செய்திருக்க வேண்டும் அல்லவா?

சமீர்

*

அன்புள்ள சமீர்

இதேபோல ஏழெட்டு கடிதங்கள் வந்திருக்கின்றன. இதை இப்படி நான் விளக்குகிறேன்

ஒன்று, என் பார்வையில் ஜான் ஆபிரஹாமின் படங்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. அவை ஒரு கூறல்வடிவுக்கு தேவையான அடிப்படை ஒழுங்குகள் கூட இல்லாத குதறல்கள். அந்த ஒருவரியே போதும். அப்படியானால் ஏன் ஜான் ஒரு சிறு தரப்பினரால் விதந்தோதப்படுகிறார்? எளிமையான காரணம் அவரது ஆளுமை பொய்யாக கட்டமைக்கப்பட்டு முன்னிறுத்தப்படுவதுதான். அதாவது அவர் ஒரு கலகக் காரன் என்று. ஆகவே நான் எழுத வேண்டியது அந்த ஆளுமையைப் பற்றி மட்டுமே. அதையே எழுதினேன். அவர் மலையாளத்தில் என்றும் உள்ள ஒரு பொய்மையுலகின் அடையாளமாக மாறிப்போனவர்.

தீவிர இடதுசாரிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்த தரப்பை நான் பலவகையில் நேரடியாக அறிவேன். ஒருகாலத்தில் அவர்களின் இதழ்களில் சில எழுதியுமுள்ளேன். குறிப்பிடும்படி ஒரு சிறு இலக்கிய, கலைப்படைப்பைக்கூட இன்றுவரை உருவாக்காத ஒரு அபத்தமான கூட்டம் இது. இவர்கள் ஜானை பெரும் கலகக்காரனாகவும் கலைஞனாகவும் கட்டமைத்து தங்களை ஒருவகையில் நிறுவிக்கொள்ள முயல்கிறார்கள்.

சில கடிதங்களில் அப்படியானால் சிலர் ஏன் ஜானை பெரும் கலைஞனாகச் சொல்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே பதிலாக இதைத்தான் சொல்வேன், இந்த ஆசாமிகளை விடுங்கள். நீங்களே ஜானின் சில படங்களை பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் சரிதான்.

ஜானை பெரும்கலைஞனாகவும் கலகக்காரனாகவும் சொல்பவர்கள் இருவகை. ஒருதரப்பினர் அவரைப்போன்று குடிகாரர்களாகச் சிதறிப்போனவர்கள். அல்லது தங்களை கலகக்காரர்களாக கற்பிதம் செய்திருக்கும் நடுத்தர வற்கத்து ஆத்மாக்கள். தங்களை  நியாயப்படுத்த அல்லது காட்டிக்கொள்ள ஜானை அவர்கள் விக்ரகமாக ஆக்குகிறார்கள். அந்த மொழியில் உள்ள பொய்நெகிழ்ச்சியும்  உணர்ச்சிப்பரவசமுமே அதை காட்டிக் கொடுத்துவிடும். இன்னொன்று இம்மாதிரி உருவாக்கப்படும் பிம்பங்களை எளிமையாக அப்படியே ஏற்று அதை தன் சுயரசனையால் பரிசீலனை செய்யாத அப்பாவிகளின் தரப்பு. முதல்தரப்பில் தங்கள் வாதத்திறனால் எந்த நாணயத்தையும் செலவாணியாக்கிவிடலாமென்ற அகங்காரம் உள்ளது. ஆனால் ஒருமுறைகூட அது சாத்தியமானதில்லை என்பதையே கலைவரலாறு காட்டுகிறது.

ஊடகம் மூலம் இப்படி ஒரு பிம்பத்தை ஓர் எல்லைவரை கட்டமைத்து விடலாம் என்பது ஒரு நவீனகால அவலம். ஆனால் ஜான் மறைந்து சிலவருடங்களே இந்த நிலை கேரளத்தில் நிலவியது. அவரது மறைவை ஒட்டி வெளியிடப்படும் மிகையான கட்டுரைகள், துணுக்குகள், குட்டிக்கதைகள் எல்லாம் பிரபலமாக இருந்தன. எல்லா கதையும் முல்லா நசிருதீன்கதை ஆவதுபோல. ஆனால் சட்டென்று அந்தச் சித்திரம் கலைந்தது. காரணம் குறுவட்டுப் புரட்சியே. ஜானின் படங்கள் சாதாரணமாக கிடைக்க ஆரம்பித்தன. அதுவே அவரை சாயம் வெளுக்க வைத்தது.

ஜான் பரிதாபத்துக்குரிய ஒரு நோயாளி. குடி என்பது ஒரு நோய். அந்த நோய் காரணமாக அவரது உள்ளார்ந்த திறன்கள் அழிந்தன. அதை ஜானே உணர்ந்திருந்தார் என்று நான் அறிவேன்.தான் போகுமிடங்களிலெல்லாம் மது வாங்கிவைத்துக் காத்திருக்கும் ஒரு கும்பலால்தான் தன் வாழ்க்கை அழிந்தது என்று ஜான் என்னிடம் சொல்லியிருக்கிறார். அவர் குடியை விட்டுவிட பலமுறை முயன்றிருக்கிறார். சுந்தர ராமசாமி வழியாகக் கூட குடியை விடுவதற்கான ஒரு பயிற்சிக்கு போக முயன்றார். ஒரு அப்பாவி குடித்தே அழிய அவரது அழிவை கொண்டாடும் குரூரம் கசப்பூட்டுகிறது . இப்போது அங்கே ஏ.அய்யப்பன் என்ற அப்பிராணி இப்படி கலகத்தீயில் கொளுத்தி போடப்படுகிறார். அவர் செத்ததும் அவருக்கும் அங்கே கதைகள் எழுதப்படும்.

என் குரலில் ஒரு கோபம் இருந்ததற்குக் காரணம் இம்மாதிரி போலித்தனம் அல்லது அசட்டுத்தனம் மூலம் நாம் உண்மையான கலையை அவமதிக்கிறோம் என்பதே. மலையாள சினிமாவில் பெரும் அர்ப்பணிப்புடன் தீவிரமான படங்களை எடுத்தவர்கள் உண்டு. வெகுஜன தளத்தில் தரமான படங்கள் மூலம் ரசனையை மேம்படுத்திய கலைஞர்கள் உண்டு. அவர்களின் உயிரை உருக்கும் தவத்தையும் தீவிரத்தையும் இப்படி போலிப்பிம்பங்களை முன்வைப்பதன்மூலம் நாம் அவமதிக்கிறோம். மலையாள சினிமாவின் முதல்கட்டச் சாதனையாளர் என் நோக்கில் கெ.ஜி.ஜார்ஜ் தான். அவர் ஒரு மேதை. தோற்றுப்போன மேதை. அவரது கலையில் உள்ள பரிசோதனைகள் வீழ்ச்சிகள் நுட்பங்கள் உக்கிரமான கணங்கள் ஆகியவற்றை அறிந்த ஒரு திரைரசிகனால் ஜானை நினைத்து வருத்தப்படவே முடியும்.

மற்றபடி ஜான் ஒரு நல்லமனிதர் என்றே நான் எண்ணுகிறேன். அவர்மீது பிரியமேதும் எனக்கு உருவாகவில்லை என்றாலும் எந்தவகையான கசப்பும் எனக்கு இல்லை. அவரது கலை தனிநபர் சார்ந்த ஒன்றாக இருந்தது என்றால் அவரால் சில சிறு படைப்புகளை உருவாக்கியிருக்க முடியும் என்றும் தோன்றுகிறது.

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஜான்: இன்னொருகடிதம்