சந்தைமொழி:கடிதங்கள்

சந்தை மொழி கட்டுரை அருமை..மிகவும் யதார்த்தமாக சந்தை வாழ்க்கையை எழுதினீர்கள். தோப்பு, திலு போன்ற வார்த்தைகள் பலமுறை கேடிருக்கிரேன், குறிப்பாக தோட்டத்தில் விளைந்த தேங்காய், கிழங்கு வகைகள் வியாபாரிக்கு காட்டும்போது தரகரும், வியாபாரியும் பேசும்போது. வீட்டில் தாத்தாவும் (பப்பா மற்றும் அம்மாவின்) பப்பா -ம்ம் , பக்கத்துக்கு வீடு மாதவன் பிள்ளை அங்கதேயும், கிஷன் அண்ணனும் இந்த மொழி சரளமாக பேசுவார்கள், அவர்கள் வியபரிகளோ சந்தையில் தொழில் செய்பவர்களோ அல்ல..- அது ஒரு அதிசயம். நான் நீங்கள் கொடுத்த அந்த குறிப்பை மனப்பாடம் செய்ய முற்சிக்கிரேன்

 வினோ கிங்ஸ்டன்

 

அன்புள்ள வினோ கிங்ஸ்டன்

 நல்ல விஷயம். ஆனால் அதை வைத்து என்ன செய்வது? ஊருக்கு வந்ததும் சந்தையில் வியாபாரம் செய்யப்போகிறீர்களா? நம் சந்தைகளே மாறிவிட்டன. ஓர் உதாரணம், சமீபத்தில் ஒரு சந்தையில் செல்போன் விற்றுக்கோன்டிருந்தார்கள்.

 அதைவிட வேடிக்கை மார்த்தாண்டம் காளைச்சந்தை வாசலில் பஜாஜ் பைக் விற்கிறார்கள். வண்ணக்குடைக்குக் கீழே நாலைந்து பைக்குகள் கொம்புசரிந்து நிற்பதைக் கண்டேன்

ஜெ

 அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!

நலமா? சந்தை மொழி எனது சிறுவயது நினைவுகளை மீட்டு கொண்டு வந்தது. நானும் எனது தம்பியும் எப்போது புதன் கிழமை வரும் என்று பார்த்திருப்போம், என் அம்மா சந்தையிலிருந்து வாங்கி வரும் பொறி கடலைக்காக. அதுதான் எங்களது தின்பண்டம். வாரா வாரம் அதே பொறி கடலை என்றாலும் எப்போதும் அது சலித்ததில்லை. இனிப்பு வகைகள்  தின்னாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது சிறுவயதுக்குரிய ஒரு எளிய  மன நிலையாகவும் இருக்கலாம்.

 அப்போதெல்லாம் இரவுகளில் பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்கள் சந்தை குறித்து ஆர்வமுடன்  பேசிக்கொண்டிருப்பார்கள். அவை  ஆர்வமூட்டும் பல வகை கதைகளாக இருக்கும். மனதில் ஒரு  எதிர்பார்ப்பு மற்றும் ஒரு கனவு உலகம் விரியும். என் ஊரில் அப்போது நிறைய பேர் பெங்களூர் சென்று கட்டுமான வேலை செய்து விட்டு வருவார்கள். அவர்கள் உண்டாக்கிய மனச்சித்திரம் நான் பின்னாளில் டெல்லியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் பெங்களூரை  தேர்ந்தெடுத்தது  ஒரு காரணமாக இருக்கலாம். கூர்ந்து அவர்களை கவனித்து இருந்திருந்தால் சிறு கதை எழுத பயன்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது எதுவும் நினைவில் இல்லை.

  என் அம்மா காய்கறி வாங்க பயன் படுத்திய நீல வண்ண பிளாஸ்டிக்  கூடை நன்றாக நினைவில் இருக்கிறது. பிறகு நான் தொடக்கப்பள்ளி மஞ்சமேட்டில் முடித்து அரசம்பட்டிக்கு வந்த போது புதன் சந்தையை சுற்றி பார்க்க போவது ஒரு சாகசமாக இருந்தது. மதிய  உணவு இடைவேளைக்குள் பார்த்து முடிக்க வேண்டும். ஏனென்றால் பள்ளி முடிந்து உடனடியாக டியூஷன் செல்ல வேண்டும் அல்லது என் அம்மா அல்லது  உறவினர்கள் சந்தையில் பார்த்து அடி வாங்க நேரிடும்.

 குவியலாக வைத்திருக்கும் காய்கறிகள், தின் பண்டங்கள் பார்ப்பது என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயமாக  இருந்தது. கூட்டம் அதிகமாக இருக்கும் போது கடைக்காரனுக்கு தெரியாமல் நண்பர்கள் கொய்யா பழத்தை எடுத்து  வந்து அனைவரும் ஒரு கடி கடித்தது அப்போது ஒரு மகிழ்ச்சி மன நிலையை உருவாக்கியது. அதை எப்படி எடுத்தான்  என்பது குறித்து பல மாதங்கள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருப்போம்.

 புதன் சந்தை வெள்ளிச்சந்தை ஞாயிறு சந்தை என நினைவுகள் இருக்கிறது. நீங்களும் அவை குறித்து அறிந்து இருப்பீர்கள், தர்மபுரியில் சில காலம் இருந்ததனால். பொங்கலுக்கு ஆடு வாங்க வெள்ளி சந்தை செல்வார்கள். இப்போதும் புதன் சந்தை அதே பரபரப்புடன் இருக்கிறது. உழவர் சந்தையும் அதே மன நிலையை எனக்கு அளிக்கிறது. அதுவும் கோயம்புதுரை  சேர்ந்த விவசாய பெருமக்களின் சொல்லாடல்கள் மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது. வா தங்கம் எடுத்துக்கோ  தங்கம், கண்ணு என்று அழைப்பது நன்றாக இருக்கிறது.

நாஞ்சில் நாடனின் கோவை பாசம் எனக்கும் இருக்கிறது. அவர் கூறுவார், வியாபாரி சொத்தையை கலந்து விற்பான். ஆனால் விவசாயி இன்னும் ஒரு காய் நம் கூடையில் வைப்பான் என்று. அது மிகவும் உண்மை. நான் விவசாயம் படித்து  இருந்தாலும் ஒரு முறை அவருடன் சந்தைக்கு சென்று காய் வாங்குவதை கற்க வேண்டும்.

நன்றிகள்!

தண்டபாணி

Best wishes!
Dhandapani

அன்புள்ள தண்டபாணி,

சந்தைகள் எனக்கும் எப்போதுமே பிடித்தவை. அவற்றில் இரையும் மனித வெள்ளம். முகங்கள், குரல்கள். காய்கறி வாங்கவும் மீன்வாங்கவும் நான் அடிக்கடி சந்தைக்குச் சென்றுகொண்டே இருக்கிறேன். பொதுவாக விளைச்சல்பொருட்களை கூட்டம் கூட்டமாகப் பார்க்கும்போது என்னுடைய விவசாயக்குடும்பத்து ஆழ்மனம் அபாரமான மகிழ்ச்சியை அடையும். வெள்ளரிககய்களையும் கீரைகளையும் பச்சை பசுமையுடன் கையில் எடுப்பது கைக்குழந்தைகளை தூக்கும் பேரின்பத்தை அளிக்கக் கூடியது.

நாஞ்சில்நாடனும் விவசாயக்குடும்பம்தான். ஒருநாள் அவர் சொன்னார், ”நாமெல்லாம்  வாங்குறதுக்கு போற மனநிலையிலே இல்லை. வெளைய வைக்கிறவனின் மனநிலையிலே இருக்கோம்” என்று. உண்மைதான்

ஜெ

 

 சந்தைமொழி

முந்தைய கட்டுரைஇளையராஜா,பழசி ராஜா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியும் காமமும் – 2