வலசைப்பறவை 7: இரு அகழிகள்

இந்தியவரலாற்றை மேலோட்டமாக வாசிப்பவர்கள் கூட ஒரு ஆச்சரியமான விஷயத்தை கண்டுகொள்ள முடியும். இந்தியவரலாற்றாய்வில் மிகப்பெரும்பகுதி ஒரு குறிப்பிட்ட தளத்தில்தான் நடக்கிறது. இன்றுவரை விளக்க முடியாத ஒரு பெரிய இடைவெளியை விளக்குவதற்காக!

அதை இந்தியவ்ரலாற்றின் மிகப்பெரிய அகழி என்று சொல்லலாம். அந்த ஆழமான பள்ளத்தில்தான் பல்லாயிரக்கணக்கான நூல்களும் கொள்கைகளும் கொட்ட்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்தக்கணத்தில்கூட ஆயிரக்கணக்கான அறிஞர்கள் அதைச்சார்ந்து அதிஉக்கிரமான விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை பெரியதாக ஒன்றும் நிகழவில்லை

இந்தியநிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஹரப்பன் நகர நாகரீகங்களுக்கும் அதற்குப்பின்னர் இந்தியாவில் உருவாகி வளர்ந்து வந்து இன்றும் நீடிக்கும் இந்திய வரலாற்றுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் அது.

மொகஞ்சொ தாரோ

நினைக்கவே வியப்பு அளிப்பது இந்த விஷயம். 1922 ல் சிந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ ஹரப்பா நகரங்கள் அகழ்வாய்வுசெய்யப்பட்டபோது அதை சிந்துசமவெளி நாகரீகம் என்று சொன்னார்கள். ஆனால் அடுத்த ஐம்பதாண்டுகளுக்குள் சிந்து சமவெளியில் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் பாலைநிலத்திலும் குஜராத் கட்ச் பகுதியிலும் ஏராளமான ஹரப்பா காலகட்டத்து நாகரீகங்கள் அகழ்வாய்வுசெய்யப்பட்டபடியே உள்ளன. இவற்றை பொதுவாக இன்று ஹரப்பன் நாகரீக நகரங்கள் என்று சொல்கிறார்கள். லோத்தல், டோலாவீரா, காளிஃபங்கன் போன்ற நகரங்கள் பெரியவை. சென்ற சிலமாதங்களுக்கு முன்னர்கூட ராஜஸ்தானில் ஓர் நகரம் அடையாளம் காணப்பட்டுள்ளது

மிகப்பெரிய நாகரீகம் இது. பல நகரங்கள், துறைமுகங்கள், கனிச்சுரங்கங்கள், உள்நாட்டுப்படகுவழிகள், சாலைகள்….ஆனால் பல்லாயிரம் சதுரகிலோமீட்ட பரப்பில் விரிந்து பல ஆயிரம் வருடம் நீடித்த அந்த மாபெரும் நாகரீகம் உருவாக்கிய ஒரு நூல் கூட நம்மிடம் இல்லை. அந்நாகரீகத்தின் மொழி நமக்குத்தெரியவில்லை. நகரங்கள் அகழ்வாய்வுசெய்யப்படும்போது வெறுமே தொல்பொருட்கள் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றைக்கொண்டு நாம் அவர்களைப்பற்றி குத்துமதிப்பான ஊகங்களை மட்டுமே செய்யமுடிகிறது. அவை இரும்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய வெண்கலக்காலத்தைச் சேர்ந்தவை என்பது மட்டுமே உறுதியாகச் சொல்லக்கூடியதாக உள்ளது.

இந்த நகரநாகரீகத்திலிருந்து மாறுபட்ட நாகரீகமே வேதகால நாகரீகம். அது உபநிடதகாலமாக வளர்ந்தது. பதினாறு ஜனபதங்களாக மலர்ந்து ஐம்பத்தாறு மன்னர்களால் ஆளப்பட்ட பாரதவர்ஷமாக ஆகியது. மகதம் உள்ளிட்ட மாபெரும் பேரரசுகளை உருவாக்கியது. இந்தியாவில் இன்றுவரை நீளும் ஒரு வரலாற்றுப்பண்பாட்டு நீட்சி என்று வேதகால நாகரீகத்தைச் சொல்லலாம். ஆனால் வேதகாலத்தைச்சேர்ந்த தொல்பொருட்சான்றுகள் அனேகமாக ஏதும் கிடைக்கவில்லை! வேதசம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் என ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன. தொல்பொருட்சான்றுகள் இல்லாத காரணத்தால் இந்நூல்களைக் குத்துமதிப்பாகவே புரிந்துகொள்ளமுடிகிறது!

லோத்தல்

இந்த விசித்திரமான வரலாற்று இடைவெளியில்தான் ஏராளமான ஊகங்கள் நிகழ்கின்றன. மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகத்தை அகழ்ந்தெடுத்த மார்ட்டிமர் வீலர் காலம் முதல் இன்று ஐராவதம் மகாதேவன் காலம் வரை எவ்வளவோ கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிந்துசமவெளி சித்திர எழுத்துக்கள் இன்னும்கூட வாசிக்கப்படவில்லை. அவற்றுக்கும் வேதகாலத்துமான தொடர்பு உறுதியாக விளக்கப்படவில்லை.

தொன்மையான பலநாகரீகங்களுக்கு இந்த இடற்பாடு இல்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். சுமேரியர்காலத்து களிமண்பலகை எழுத்துக்களும் எகிப்தியப் பாறைவெட்டு எழுத்துக்களும் மாயன்நாகரீகத்தின் எழுத்துருக்களும் எல்லாம் ஆய்வாளர்களால் வாசிக்கப்பட்டுள்ளன. இந்த் நிலை இந்திய வரலாற்றின் நடுவே ஒரு பெரும் புதிரை நிலைநிறுத்துகிறது இதிலிருந்தே இங்குள்ள பெரும்பாலான வரலாற்றுச்சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன. அவை அரசியல்களத்திலும் சிக்கல்களை உருவாக்குகின்றன.

1920 களில் மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகம் கண்டடையப்பட்டது இந்தியா முழுக்க ஒருவகை உற்சாகத்தை அரசியல்களத்தில் உருவாக்கியது. ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு அடுத்த ஒருநூறாண்டுக்காலம் நீடிக்கும் அரசியல் கொள்கைகளை உருவாக்குமென்பது வியப்புக்குரியதுதான். இத்தகைய நிகழ்வுக்கு வேறெங்கும் முன்னுதாரணம் உண்டா என்று தெரியவில்லை. இன்றும் தமிழகத்தில் தீவிரமாகவும் தென்னகம் முழுக்க பரவலாகவும் நீடிக்கும் ஆரிய -திராவிடவாத அரசியலின் அடித்தளம் அப்போது உருவானதே.

மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகம் கண்டடைவதற்கு முன்னரே ஐரோப்பிய அறிஞர்கள் வேதங்களின் தொன்மையை மொழியியல் ஆய்வுகள் மூலம் ஆய்வுலகில் நிறுவிவிட்டிருந்தனர். வேதநாகரீகம் ஆரியர்களுடையது என்ற எண்ணத்தையும் உருவாக்கியிருந்தனர். ஆரிய என்ற சொல்லை ஐரோப்பியர் ஒரு மொழியடையாளமாக அல்லாமல் இன அடையாளமாக விளங்கிக்கொண்டனர். அது அவர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்தது. முக்கியமாக ஜெர்மானிய அறிஞர்களுக்கு.

மத்திய ஆசியாவை மையமாகக் கொண்டு ஒரு விரிவான இனப்பரவல் சித்திரத்தை அந்த ஐரோப்பிய அறிஞர்கள் உருவாக்கிக்கொண்டனர். அந்த இனப்பரவல் கோட்பாடு மூலம் தங்களை தொன்மையான சுமேரிய, இந்தியப் பண்பாடுகள் அனைத்துடனும் தொடர்புபடுத்திக்கொண்டனர். அதை இனமேன்மைவாதமாக மாற்றிக்கொண்டு உலகநாகரீகமே தாங்கள் உருவாக்கியதுதான் என்று சொல்ல முயன்றனர். அது இனவெறுப்பு அரசியலின் அடித்தளமாக ஆகியது.

இதேகாலகட்டத்தில் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டு தனித்தியங்கக்கூடிய தென்னகமொழிக்குடும்பத்தை எல்லிஸ் போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அவற்றை சிற்பநூல்கள்,இசைநூல்கள் போன்றவற்றில் பயின்றுவரும் திராவிடம் என்ற சொல்லைக்கொண்டு அடையாளப்படுத்தினர். அவ்வாறாக இந்தியாவில் திராவிட இனவாதம் பிறந்தது.

திராவிடம் என்னும் சொல் கோதாவரிக்கும் பெண்ணைக்கும் நடுவே உள்ள நிலப்பகுதியைக் குறிப்பதற்காகவே நூல்களில் கையாளப்பட்டது. அதாவது வேசரநாட்டுக்கும் தமிழ்நிலங்களுக்கும் நடுவே உள்ள நிலப்பகுதி அது. திராவிடத்துக்கு அதற்குரிய சிற்பமுறையும் இசைமுறையும் உண்டு. தாந்த்ரீகநூல்கள் அந்நிலத்துக்கான வழிபாட்டுமுறைகளை சுட்டுகின்றன. அது மொழியையோ இனத்தையோ ஒருபோதும் சுட்டவில்லை

கால்டுவெல் என்ற கிறித்தவ மதப்பரப்புநரின் கற்பனைத்திறன் திராவிட என்ற நிலம்சார்ந்த சொல்லை தென்னக மொழிக்குடும்பத்தைச் சுட்ட பயன்படுத்தியது. உடனடியாகவே திராவிடர் தனி இனம் என்றும் அவர்களின் மொழியில் இருந்தே திராவிட மொழிக்குடும்பம் உருவாயிற்று என்றும் கருத்துக்கள் பிறந்தன. இந்தியப்பெருநிலத்தில் பல்லாயிரமாண்டுகளாக நடந்து வரும் ஆரிய இனத்துக்கும் திராவிட இனத்துக்குமான பெரும்போர் முற்றிலும் கற்பனையாகவே உருவாக்கப்பட்டு சிந்தனையில் உறுதியாக நிலைநாட்டப்பட்டது. ஆரியர்கள் வெண்ணிறமானவர்கள் திராவிடர்கள் கறுப்பானவர்கள் என்பதுபோன்ற இன அடையாளங்களும் கற்பிதம்செய்யப்பட்டன.

இந்திய சுதந்திரப்போரின் இரண்டாம் படிநிலையில் வெள்ளைய ஆட்சி மாகாணஅரசுகளை அமைக்க தேர்தல்களை நடத்த ஆரம்பித்தபோது இந்தியாவெங்கும் அதிகார அரசியல் தலைதூக்கியது. தேர்தல்களில் போட்டியிட்டு லாபமடைய செல்வந்தர்கள் முண்டியடித்தனர். ஒவ்வொரு இனக்குழுவும் வட்டாரமும் தன் தனியடையாளத்தை வரையறை செய்து அதைக்கொண்டு அரசியல் குழுக்களை உருவாக்க முயன்றது. இந்தியா முழுக்க மொழிசார்ந்தும் வட்டாரம்சார்ந்தும் சாதிசார்ந்தும் பிரிவினையரசியல் தலைதூக்கியது. அந்த அரசியல் ஆரிய திராவிட இனப்பிரிவினையை ஒரு வலுவான ஆயுதமாகக் கண்டடைந்தது. அவ்வாறுதான் திராவிட அரசியல் பிறந்தது.

தொடர்ந்து அரைகுறை வரலாற்றுத்தகவல்கள் மற்றும் கட்டுக்கடங்காத ஊகங்கள் வழியாக எழுதி எழுதி பரப்பப்பட்டது திராவிட அரசியல். அன்றிருந்த அனைத்து கற்பனைக்கான சாத்தியக்கூறுகளையும் அது பயன்படுத்திக்கொண்டது. அதில் எந்த வரலாற்று அளவுகோல்களையும் அது கணக்கில்கொள்ளவில்லை. கால்டுவெல் முன்வைத்த மொழிவழி திராவிட அடையாளத்தை மிக எளிதாக இனத்தைச் சார்ந்ததாக அது மாற்றிக்கொண்டது. அதேபோலவே எந்த விவாதமும் இல்லாமல் திராவிடர்கள் என்றால் தமிழர்கள் என்று அடுத்தகட்டத்தில் சொல்ல ஆரம்பித்தது


பெரும்பாலும் அரைகுறை வரலாற்றுத்தரவுகளைக்கொண்டு அபத்தமான கற்பனையால் கட்டமைக்கப்பட்ட ஜெர்மானிய ஃபாசிச ஆரியவாதத்தை நேர் எதிர்முனையில் திராவிடவாதமாக திராவிட அரசியல் நகலெடுத்தது. ஒருபக்கம் அது நாத்திகம் பேசியது. ஆனால் கட்டுக்களற்ற மிகைநம்பிக்கையாளர்களான தியாசஃபிகல் சொசைட்டியினரிடமிருந்து அவர்கள் கண்மூடித்தனமான உள்ளுணர்வால் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்ட லெமூரியா கண்டம் போன்ற கருதுகோள்களை கடன் வாங்கி தன் அறிவியல் அடிப்படைகளாக முன்வைத்தது.

இவ்வாறு மெல்லமெல்ல பிரிவினை நோக்கு கொண்ட நூற்றுக்கணக்கான அறிஞர்களால் பேசிப்பேசி உருவாக்கப்பட்ட திராவிட இயக்க அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியபின்னர் தன் பேச்சுகளுக்கு அடிப்படையாக ஓரு பொய்யான கருத்தியல் அடித்தளத்தையும் வரலாற்று அடித்தளத்தையும் கல்விப்புலம் சார்ந்து உருவாக்கிக்கொண்டது. அதை உறுதியாக நம் பொதுச்சிந்தனையில் நிலைநாட்டியது. அதற்கு எந்த வகையான வரலாற்றுப்பின்புலமும் இல்லை என்பதையோ இன்றைய அறிவுத்தளத்தில் முழுமையாகவே ஆதாரமற்றுப்போன ஓர் ஊகம் அது என்பதையோ சொல்வதே தமிழ்த்துரோகம் இனத்துரோகம் என்பதுபோல ஓர் கெடுபிடிநிலையும் கட்டமைக்கப்பட்டுள்ளது

இந்த அரசியலை உருவாக்க உதவியது இங்கே உள்ள இன்னொரு அகழி என்பது வியப்பளிப்பது. உண்மையில் ஒரே புதிரின் இன்னொரு முகம்தான் அது. தமிழ்வரலாற்றில் ராபர்ட் புரூஸ் ஃபூட் கண்டுபிடித்த கற்கருவிகளை கையாண்ட பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பரிணாமம் அடைந்து வந்திருக்கிறார்கள். மறையூரிலும் கொடுமணலிலும் பெருங்கற்களை நாட்டியிருக்கிறார்கள். கருக்கியூரிலும் கீழ்வாலையிலும் குகை ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள்

ஏறத்தாழ மூன்றுலட்சம் வருடங்களுக்கு முன்னாலிருந்து ஆரம்பிக்கும் இந்த வரலாறு அப்படியே கிமு இரண்டாயிரம் முதல் கிமு ஐநூறு வரையிலான காலகட்டத்தைச்சேர்ந்த உலோகக்காலகட்டத்து நகரங்களின் வரலாற்றை வந்தடைகிறது.. அந்த நாகரீகம் அன்று இந்தியப்பெருநிலம் முழுக்க இருந்த நூற்றுக்கணக்கான புராதன நகரநாகரீகங்களுடன் தொடர்புகொண்டு வளர்ந்தது வந்ததாகும்.

ஆதிச்சநல்லூர் , கொடுமணல் போன்ற புராதன நாகரீக எச்சங்கள் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை வெண்கலக்காலத்தில் இருந்து இரும்புக்காலகட்டம் வரை நீடித்தவை. ஏராளமான தொல்பொருட்சான்றுகள் அங்கே நமக்குக் கிடைக்கின்றன. உலோக்ப்பொருட்கள் களிமண்பொருட்கள் கிடைத்துள்ளன. பானைக்கீறல் எழுத்துக்கள் கண்டடையப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் அதற்குப்பின்னர் உருவாகி வந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ்எழுத்துரு ஆகியவற்றுக்கான தெளிவான முதற்கட்ட ஆதாரங்களும் உள்ளன. அவை கிமு ஐநூறுகளைச் சேர்ந்தவை

ஆனால் ஆதிச்சநல்லூர் உட்பட நம்முடைய உலோகக் காலகட்டத்து நகரநாகரீகத்தைச்செர்ந்த எந்த ஒரு எழுத்துவடிவ ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. அவர்களின் பானைகளில் உள்ள கீறலெழுத்துக்களை நாம் முழுமையாக வாசிக்கமுடியவில்லை. நமக்குக்கிடைக்கும் புராதன சங்கநூல்களைக்கூட ஆதிச்சநல்லூரின் நாகரீகத்துடன் தொடர்புபடுத்த முடியவில்லை. அதாவது அவற்றுக்கு இலக்கிய ஆதாரங்களே இல்லை. அந்தக்காலத்தை அறிய அந்த தொல்பொருட்களைக்கொண்டு ஊகங்களை நிகழ்த்துவதன்றி வேறு வழியே இல்லை.

ஆதிச்சநல்லூர்

ஆனால் அதற்கடுத்த காலகட்டத்தைப்பற்றி நமக்கு பெரிய எழுத்துவடிவ ஆதாரங்களின் பெரிய தொகுப்பே கிடைத்துள்ளது. அதைத்தான் நாம் சங்க இலக்கியம் என்கிறோம். ஆனால் சங்க இலக்கியம் காட்டும் வாழ்க்கையைப்பற்றி விரிவாக ஆராய்வதற்குரிய தொல்பொருட்சான்றுகள் கிடைக்கவில்லை. மிகச்சமீப காலம்வரைக்கும்கூட சங்ககாலம் என்பதே ஆறாம்நூற்றாண்டில் பல்லவர்ககளின் காலகட்டத்தில் சில புலவர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்டதுதான் என்று சொல்லும் ஆய்வுத்தரப்புகள் இருந்தன

சென்ற முப்பதாண்டுக்காலகட்டத்தில்தான் சங்ககால மன்னர்களின் சில கல்வெட்டுகளும் ஒருசில உலோகச்சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வரலாற்றுக்காலகட்டம் ஒன்று இருந்தது எனபதற்கான ஆதாரங்களாக உள்ளன. ஆனால் . இன்றும்கூட சங்க இலக்கியம் அளிக்கும் விரிவான சமூகவாழ்க்கையையும் அரசியல்சூழலையும் முழுமையாக விளங்கிக்கொள்ள உதவக்கூடிய அளவில் தொல்லியல்சான்றுகள் கிடைக்கவில்லை. சங்ககாலத்து பெருமன்னர்களைப்பற்றிய தொல்லியல்சான்றுகளே இல்லை. சங்ககால நகரங்களான மதுரை ,பூம்புகார் , கொற்கை, கருவூர்வஞ்சி எவையும் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இபப்டிக்கேட்டுக்கொள்ளலாம். கருக்கியுரின் குகை ஓவியங்களையும் மறையூரின் பெரும் குடைக்கற்களையும் ஆதிச்சநல்லூரின் முதுமக்கள்தாழிகளையும் உருவாக்கிய முன்னோடிகளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் உள்ள உறவு என்ன? இன்றுவரை அதற்கு தெளிவான பதில் கிடையாது.அதாவது தொல்பொருட்களுக்கு இலக்கிய ஆதாரமில்லை. இலக்கியங்களுக்கு தொல்லியல் ஆதாரங்கள் இல்லை. இந்தப்புதிர் தமிழக வரலாற்றில் இன்றும் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. கண்முன் திறந்து கிடக்கும் இந்த அகழியை ஆதாரங்களால் நிரப்ப முடியவில்லை. ஆகவே ஊகங்களாலும் கொள்கைகளாலும் நிரப்ப தொடர்ந்து முயல்கிறார்கள்.

அங்கேதான் அரசியல் நுழைகிறது. சிந்துசமவெளி ஆய்வுகள் அரையும்குறையுமாக வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அன்றைய அரசியலுக்காக உருவாக்கப்பட்ட இனவாதக் கொள்கைகளை கைவிடமுடியாமல் அதில் தொங்கிக்கொண்டு இந்த இடைவெளியையும் அதைக்கொண்டே நிரப்ப முயல்கிறார்கள். பேரறிஞர்கள் என்பவர்கள்கூட எளிமையான அரசியல்சார்ந்த ஒற்றைவரிகளுக்குள் சிக்கிக்கொண்டு உழல்கிறார்கள். ஆதாரங்களை திரித்துச்சொல்லக்கூட துணிகிறார்கள். சமீபத்தில் ஆதிச்சநல்லூர் பானைக்கீறலெழுத்துக்களில் தமிழ் இருந்ததாகச் சொல்லப்பட்டது அப்படிப்பட்ட ஒரு கற்பனைத்தாவல் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இப்போதைக்கு இப்படி வைத்துக்கொள்வோம். ஆதிச்ச்நல்லூர் வரை வந்துசேரும் வரலாறு என்பது ஒரு அத்தியாயம். சங்க காலம் என்பது அடுத்த அத்தியாயம் . இரு அத்தியாயங்கள் நடுவே பெரிய இடைவெளி ஒன்று உள்ளது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு சென்றகால அரசியல் உருவாக்கிய முன்முடிவுகளுக்கு அப்பால்செல்லும் புதிய சிந்தனைகள் கொண்ட ஆய்வறிஞர்கள் வந்தாகவேண்டும். இன்றைய அரசியல் சார்ந்தல்லாமல் புறவயமான ஆதாரங்களைத் தேடி எடுத்து, இன்றைய கோணத்தில் விரிவான வரலாற்றுப் பரிமாணச் சித்திரத்தை உருவாக்கிக்கொண்டு அதை முழுமைசெய்யவேண்டும். நம் முன் உள்ள பெரும் சவால் இது.

இலங்கையில் இருந்து வெளிவரும் சமகாலம் இதழுக்கு எழுதும் தொடர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46
அடுத்த கட்டுரைஉதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு