இலக்கிய இடக்கரடக்கல்கள்

அறிமுக இலக்கிய வாசகர்களுக்காக ஒரு சிறு பட்டியல். கீழ்க்கண்ட சொற்றொடர்களுக்கு அடைப்புக்குள் உள்ள பொருள் இருக்க வாய்ப்புண்டு.

1  தேர்ந்த வாசகர்களுக்காக மட்டும் எழுதும் படைப்பாளி இவர் [அதிகம்பேர் இவரைப் படிப்பதில்லை]

2  இந்த எழுத்தாளர் அனைத்துத் தரப்பினரும் விரும்பி வாசிக்கும்படி எழுதுகிறார் [ எழுதிப் பிழைக்கிறார்]

3  இந்த இளம் படைப்பாளியிடம் மேலும் மேலும் சிறந்த ஆக்கங்களை எதிர்பார்க்கலாம் [இப்போது ஒன்றும் தேறாது]

4  மிகையில்லாத நடையில் சித்தரிப்புகளை அளிப்பவர் இவர் [தாசில்தார் அறிக்கை போல]

5  ஆற்றொழுக்கான நடை கொண்ட எழுத்து இவருடையது [ வழக்கமான  பத்திரிகை நடையில் நீளமாக எழுதுவார்]

6  சமகால சிக்கல்களை இவர் தன் எழுத்தில் எதிர்கொள்கிறார் [எல்லாரும் சொல்வதையே இவரும் சொல்கிறார்]

7  முற்போக்கான அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடு கொண்ட படைப்பாளி [கட்சி ஆள்]

8  விமரிசனங்களைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் படைப்பாளி அவர் [பொருமுவதோடு சரி]

9  ஆரம்பத்தில் கவிதைகளும் எழுதிய பின் உரைநடைக்கு வந்தார் [நல்லவேளை]

10 இவ்விரு படைப்பாளிகளையும் இரட்டையர் என்றே சொல்லலாம் [இருவரும் ஒரே சாதி]

11 நேர்கோடற்ற எழுத்துமுறை இவருடையது [நினைவுக்கு வந்த வரிசையில் எழுதுவார்]

12 இவரது எழுத்துமுறை தானியங்கி எழுத்து வகையிலானது [எழுவாய் பயனிலை இருக்காது]

13 எழுத்தாளர் எம் சிற்றிதழ்களைக் கூர்ந்து படிப்பார் [ தன்னைப்பற்றி என்ன வந்திருக்கிறது என]

14 அவரது எழுத்து எப்போதும் சுயசரிதைத்தன்மை கொண்டது [கற்பனை செய்ய அவரால் முடியாது]

15 அவருடைய எழுத்தில் நகைச்சுவை அதிகம் [வசைபாடும்போது]

16 மேலைச்சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டுவருகிறார் [மேற்கோள் பொறுக்கி]

17 தீவிரமான கோட்பாட்டு நடை கொண்டவர் இவர் [ தானே புரிந்துகொள்ளாமல்  எழுதுகிறார்]

18 இவரைத் தமிழ் சமூகம் பொருட்படுத்தவேயில்லை [ஒரு முழுத்தொகுப்பு கொண்டுவந்தால் ஆள் அவ்வளவுதான்]

19 அழகான கட்டமைப்பு கொண்ட நூல் இது [ அட்டை கண்ணைக் குத்துகிறது]

20 இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்த விமரிசகர் இவர் [ எல்லாரையும் பாராட்டுவார்]

21 கறாரான இலக்கிய நிலைப்பாடுகள் கொண்ட விமரிசகர் இவர் [எல்லாரையும் திட்டுவார்]

22 இலக்கியம் மக்களுக்குப் பயன்படவேண்டும் [கட்சிநிலைப்பாடை ஏற்றுக்கொள்வதன் வழியாக]

23 எதிர்கால வாசகனுக்காகவே எழுதுகிறேன் [ தயவுசெய்து இப்போது யாராவது படியுங்கள்]

24 கவிதைகளைத் தபால்கார்டில் அனுப்பவேண்டாம் [சந்தா பணத்துடன் அனுப்பவும்]

25 தமிழிலக்கியம் சீர்கெட்டுக் கிடக்கிறது [ஆகவே சிற்றிதழைத் தொடங்குகிறோம்]

26 தமிழிலக்கிய உலகம் சீர்குலைந்துவிட்டது [ஆகவே சிற்றிதழை நிறுத்திக் கொள்கிறோம்]

27 ஆதரவளித்த நெஞ்சங்களுக்கு நன்றி [ சந்தாவைத் திருப்பியளிக்க முடியாது]

28 ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மை கொண்ட படைப்பு [ஆழமில்லை. பொழுதுபோகாவிட்டால் படிக்கலாம்]

29 பெண்களின் அகச்சிக்கல்களை எழுதிய பெண்கவிஞர் இவர் [ வழக்கமான புலம்பல்]

30 எழுத்தாளர்கள் சமூக நலனுக்காகப் பாடுபட வேண்டும் [ஊழலை நாங்கள் செய்துகொள்கிறோம்]

31 திராவிட இயக்கத்தில் நல்ல எழுத்தாளர்கள் இல்லை என்று யார் சொன்னது? [அவரை மட்டுமாவது சொல்லிவிடுங்கள்]

32 பலதளங்களைத் தொட்டுச்செல்லும் படைப்பு இது [ எங்கேபோவதென்றே தெரியாமல்]

33 தாவித்தாவிச் சொல்லிச் செல்லும் சிறிய நாவல்  [ குறிப்புகளையே நாவலாக்கிவிட்டிருக்கிறார்]

34 இந்த நாவலசிரியர் கடும் உழைப்பாளி [ நன்றாக முட்டிப்பார்த்திருக்கிறார்]

35 மொழியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் [ஒரேமாதிரித்தான் எழுதுவார்]

36 நுட்பமாக எழுதும் பழக்கம் கொண்டவர் இவர் [ முக்கி முக்கி தினம் கால்பக்கம் எழுதுவார்]

37 மூலநூலின் சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது [ கதைச்சுருக்கம்தான் ]

38 மூலத்துக்கு நேர்மையான மொழிபெயர்ப்பு [படிக்க முடியாத நடை]

39 அவரது கடிதங்களில் அவர் வேறொருவராக வெளிப்படுகிறார் [வெளிப்பட்டுவிடுகிறார்]

40 அறக்கோபம் வெளிப்படும் கவிதைகள் இவை [ கூச்சல்கள்]

41 இவர் வளரும் எழுத்தாளர் [நெடுநாட்களாக எழுதியும் ஒன்றும் பேரவில்லை]

42 இந்த நூலைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [நூலை நான் இன்னும் படிக்கவில்லை]

43 மூத்த எழுத்தாளரின் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன் [அவருக்கு இப்போது ஒரு மதிப்பும் இல்லை]

44 எழுத்தாளர் ‘கெ’ ஒரு சகாப்தம் [ பழைய கட்டை]

45 இவர் எழுத்தில் மண்மணம் வீசுகிறது [கிராமத்திலே கேள்விப்பட்டவற்றை எழுதுகிறார்]

46 இவர் இலக்கிய வம்புகளில் ஈடுபடுவதேயில்லை [ஆர்வமாகப் படித்துப் பேசிக்கொண்டிருந்தாலும் எழுதமாட்டார்]

47 இந்த முழுத்தொகுப்பைக் கொண்டுவருவதில் பெருமை அடைகிறோம் [இனிமேல் புட்டுப்புட்டும் கொண்டுவருவோம்]

48 எங்கள் இதழ் பத்தாயிரம் பிரதி விற்கிறது [அவர்கள் மட்டும் எட்டாயிரம் சொல்கிறார்களே]

49 நல்ல படைப்பு, சற்று சுருக்கியிருக்கலாம் [விட்டுவிட்டுதான் படித்தேன்]

50 இவர் பழகுவதற்கு எளிமையானவர் [ நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொன்னதுமே நம்பிவிடுவார்]

51 சமூகத்துக்கு எதிரான கலகக்காரர் [ தண்ணிகேஸ்]

52 முற்போக்கான புரட்சிகர அரசியல் கொண்டவர் [ இந்திய எதிர்ப்பாளர்]

53 சமூகசேவைகளில் ஈடுபடுகிறார் [ என்.ஜி.ஓ. தொடர்புகள் உண்டு]

54 இளம் எழுத்தாளர்கள் நிறைய படிக்க வேண்டும் [கொஞ்சம் கம்மியாகவே எழுதலாம்]

55 ஊடக ஆய்வு [சினிமா விமரிசனம்]

56 சிறுகதையின் திருமூலர் [வேறுபலரால் உருவாக்கப்பட்டவர்]

57 தமிழியக்கவாதி  [தமிழாசிரியர்]

58 இலக்கணநோக்கு கொண்டவர் [ புரூஃப் பார்ப்பார்]

59 வித்தியாசமான பேராசிரியர் [ குறைந்த வட்டிக்குப் பணம் விடுகிறார்]

60 வித்தியாசமான எழுத்தாளர் [ எல்லா எழுத்தாளர்களையும் போல]

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2011 ஜூலை

மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள்

நீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்.

நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்

புதுக்கவிதை சுருக்கமான வரலாறு

சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

முந்தைய கட்டுரைஅப்துல் கலாமும் முஸ்லீம்களும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70