எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3

வரலாற்றின் விடுபடல்கள் 

 எழுதப்பட்ட வரலாற்றை ஒரு நிழல் போலத்தொடர்ந்து செல்லும் மத்தாயியின் கிசுகிசு வரலாற்றை நம் சமூகம் அறச்சீற்றத்துடன் எதிர்கொண்டது. என்னென்ன வகையான எதிர்வினைகள் அன்று வந்தன என்று தெரியவில்லை, வெளிவந்த காலத்தில் நான் சிறுவன். ஆனால் இப்போது பேசும்போது விதிவிலக்கில்லாமல் அனைவருமே அந்நூலை ஒரு ‘கீழ்த்தரமான’ நூல் என்றே சொன்னார்கள். மத்தாயி நன்றி மறந்தவர் என்றார்கள். எனக்கு அப்படித்தோன்றவில்லை.

 

மத்தாயி எழுதிய நூலை விடவும் கிசுகிசுத்தன்மை மிக்க நூல்கள் பல வந்திருக்கின்றன. வெறும் மனக்கசப்புகளை மட்டுமே வரலாறாகப் பதிவுசெய்த மௌலானா அபுல் கலாம் ஆஸாதின் இந்தியா சுதந்திரம் பெறுகிறது என்றநூல் ஓர் உதாரணம். உண்மையில் மத்தாயியின் கிசுகிசு நூல் அத்தகைய பல மனக்கசப்பு நூல்களுக்கு நம்பகமான பதிலாக அமைகிறது என்றே நான் நினைக்கிறேன்

 

ஓர் உதாரணம், பட்டேல். அக்காலத்தில் காங்கிரஸின் நேரு அணி, பட்டேல் அணி என இரண்டு அணிகள் இருந்தன என்பது ரகசியமல்ல. மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நேருவின் அணியைச் சேர்ந்தவர். நேருவின் அனுதாபம் இருந்த ஒரே காரணத்தாலேயே அரசில் நீடித்தவர். அவரது சுயசரிதை வழியாக நாம் காணும் பட்டேலின் சித்திரம் மிகமிகக் கருமைபூசப்பட்டதாக இருக்கிறது

 

நேரு அணியின் அரண்மனைச்சதிகளின் சூத்திரதாரனே மத்தாயிதான். பட்டேலை உளவறியவும் சமாளிக்கவும் மத்தாயியையே நேரு நம்பியிருந்தார், அவருக்கு சதிகள் தெரியவில்லை. ஆனால் மத்தாயி அளிக்கும்  பட்டேலின் சித்திரம் மிகுந்த சமநிலை கொண்டது. காங்கிரஸை கட்டியமைத்தவர் பட்டேல். ஆகவே அவருக்கே காங்கிரஸின் ஆதரவு இருந்தது. ஆனால் காந்தி நேருவை முன்னிறுத்தினார். அதனால் நேருவை பட்டேல் ஏற்றுக்கொண்டாகவேண்டியிருந்தது என்ற உண்மைநிலையை கறாராகச் சொல்கிறார் மத்தாய்

 

நேரு பிரதமர் ஆவதில் ஆழமான மனக்கசப்பு பட்டேலுக்கு இருந்தது. அதை அவர் காந்தியிடம் சொல்லவும் செய்கிறார். ஆனால் காந்தி நேருவே பிரதமர் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆகவே பட்டேல் துணைப்பிரமதர் ஆனார். இறப்பதற்கு முன்னர் காந்தி பட்டேலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் அனுப்பப்படவில்லை. ஆனால் ராஜகுமாரி அம்ரித்கௌர் வழியாக அதன் உள்ளடக்கம் தனக்குத்தெரியவந்தது என்று சொல்கிறார் மத்தாய். அரசில் இருந்து ராஜினாமா செய்து தன்னுடன் கிராமநிர்ம்மாணப் பணிக்கு வரும்படி பட்டேலுக்கு காந்தி கறாராக ஆணையிட்டிருந்தார்.

 

அந்தக்கடிதம் கிடைத்து, காந்தியும் உயிருடன் இருந்திருந்தால் பட்டேல் கண்டிப்பாக காந்தியுடன் சென்றிருப்பார் என்கிறார் மத்தாய். அதுதான் நேர்மையான மதிப்பீடு என்பது. அரசியல் அணிபேதங்களுக்கு அப்பாற்சென்று அதைப் பதிவுசெய்ய ஒரு சமநிலை தேவை. பட்டேலின் நடவடிக்கைகளில் இருந்த அபாரமான நேர்மையை மீண்டும் மீண்டும் பதிவுசெய்கிறார் மத்தாய். அவருக்கு இஸ்லாமியர் மீது ஐயமிருந்தது, அதற்கான காரணமும் இருந்தது. தேசப்பிரிவினைக்காக ஓட்டளித்த முஸ்லீம்களில் பெரும்பகுதி இந்தியாவிலேயே தங்கிவிட்டிருந்தார்கள். அவர்கள் கூட்டம்கூடி இந்தியாவில் தங்களுக்கு தனியுரிமைகோரி தீர்மானங்களும் நிறைவேற்றினர். ஆனால் தன்னுடைய ஆட்சியின் எல்லைக்குக் கீழே முஸ்லீம்களுக்கு எதிரான எந்த வன்முறையும் நிகழாமல் கறாராக தடுத்து நிறுத்தினார் பட்டேல்.

 

பட்டேலின் சித்திரங்கள் அனைத்துமே ஒளிமிக்கவையாக இருக்கின்றன. உள்துறை அமைச்சராக இருக்கும்போது நேருவின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி கிடைத்து மத்தாயை தனியாக அழைத்து மிகுந்த கவலையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குச் சம்மதிக்கும்படி நேருவை வற்புறுத்துவதற்கு மன்றாடுகிறார் பட்டேல்.

 

பட்டேல் கொஞ்சம்கூட ஏற்காத ஓர் அரசியல் உடன்படிக்கை மேற்குவங்கத்துக்கும் கிழக்கு வங்கத்துக்கும் [பங்களாதேஷ்] இடையேயான சாலை மற்றும் நீர்ப் பங்கீடு குறித்த நேரு-லியாகத் கான் ஒப்பந்தம். அதை பட்டேல் முழுமூச்சாக எதிர்க்கிறார். ஆனால் அந்த முரண்பாட்டை மேடைகளுக்குக் கொண்டுசெல்லவில்லை. நேரு தன் ஆதரவின் பலத்தால் உறுதியாக நின்று ஒப்பந்தத்தை உருவாக்கிய பின்னர் கல்கத்தாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பட்டேல் அந்த ஒப்பந்தத்தை ஆதரித்துப்பேசி தன் மனவருத்தத்தை பின்னுக்கு இழுத்துக்கொண்டார். ஒருபோதும் அரசு பலவீனமானதென தோன்றுவதை அவர் விரும்பவில்லை. ஆழமான மனவருத்தம் அவருக்கு இருந்த போதிலும்கூட.

 

நேருவை கவிழ்க்க பட்டேல் எண்ணினாரா? ஒருபோதும் இல்லை என்று மத்தாய் சொல்கிறார் .’பாப்பு கண்டுபிடித்த மனிதர் நேரு. நான் அதை மறக்கமுடியாது’ என்று சொல்கிறார் பட்டேல். பலமுறை நேருவுக்கு எதிரான கவிழ்ப்புவாதிகள் பட்டேலைச் சென்று பார்க்கிறார்கள். ஒருபோதும் அவர்களை பட்டேல் ஊக்குவித்ததில்லை என்று பதிவுசெய்யும் மத்தாய் தன்னை பட்டேல் இடதுசாரி என எண்ணி உளவுபார்த்தார் என்றும், பலவிதமான கெடுபிடிகளுக்கு ஆளாக்கினார் என்றும் சொல்கிறார்.

 

மத்தாயியின் சித்திரத்தில் வலிமையான ஆளுமையாக வருபவர் அம்பேத்கர். அழுத்தமான ஜனநாயகவாதியாகவும் அகிம்சையில் நம்பிக்கை கொண்டவராகவும் அவரைச் சித்தரிக்கிறார் மத்தாய். அவர் நேருவுடன் சண்டைபோட்டு அரசில் இருந்து விலகியபின் 1952ல் அவரது இல்லத்தில் மத்தாய் அம்பேத்காரைச் சந்திக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அம்பேத்கார் ”இந்த நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் காந்தி அல்ல, விவேகானந்தர்தான்” என்கிறார்.

 

மத்தாய் சிரித்தபடி ”ஆனால் உங்களை மந்திரிசபையில் சேர்த்து அரசியல் சாசனம் எழுத வைத்தவர் காந்திதானே?” என்கிறார்.அந்தத் தகவலே அம்பேத்காருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் ஆச்சரியமடைகிறார். நடந்த விஷயங்களை மத்தாய் சொல்கிறார். மந்திரிசபைப் பட்டியலுடன் நவகாளியில் இருந்த காந்தியை நோக்கி தூதனை அனுப்பினார் நேரு.  அம்பேத்காரை  அழைத்துச் சேர்க்கும்படி குறிப்பு எழுதி அனுப்பினார் காந்தி.

 

மனிதர்களை அவர்களின் பலவீனங்களுடன் சொல்வதில் மத்தாய் தயக்கமே காட்டுவதில்லை.  மத்தாய் காட்டும் மௌலானா ஆஸாதின் சித்திரம் வேடிக்கையானது. அழகான உருது பேசும் ஆற்றல் கொண்டவர் ஆஸாத். இஸ்லாமிய நூல்களில் பெரும் பண்டிதர். இந்திய தேசியம் மீது ஆழமான பற்றும் கொண்டிருந்தார். ஆனால் உயர்தர மதுவகைகளின் அடிமை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மதுப்புட்டிகளுடன் தனியறையில் ஒதுங்கவே எண்ணுகிறார். எந்த ஒரு தலைபோகிற நிகழ்ச்சியானாலும் ஆறுமணிக்குள் கிளம்பிவிடுவார். உடைமாற்றி தனியறைக்குள் கையில் ஸ்காட்சுடன் பாட்டுகேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார்

 

 

வி.கெ.கிருஷ்ணமேனனின் பலவிதமான பலவீனங்களைச் சொல்கிறார். பெண்களுடன் அவருக்கிருந்த தொடர்புகள், உடல்நலச்சிக்கல்கள்,போதைப்பழக்கம். அதேசமயம் அவர் இந்தியா லீகில் சுதந்திரத்துக்காக பட்டினி கிடந்து போராடிய சித்திரமும் இருக்கிறது. இந்திய தூதராக அவர் திறம்படச் செயலாற்றிய சித்திரமும் அமைச்சராகச் சொதப்பிய சித்திரமும் இருக்கிறது.

 

அரசியல்வாதிகள் தங்களை மிகையாகக் கற்பனைசெய்துகொண்டிருப்பதை மத்தாய் சொல்லும்போது அதில் ஆச்சரியமென்ன இருக்கிறது என்றே தோன்றுகிறது. தன்னை நேருவின் வாரிசாகவே கிருஷ்ண மேனன் எண்ணிக்கொண்டிருந்தார். நேரு ஒரு மாநாட்டில் பேசிக்கொண்டிருக்கையில் அருகே இருக்கும் கனடாவின் தூதரின் காதில் விழும்படியாக ”ஜவகருக்கு வயதாகிவிட்டது. இன்னும் எத்தனை நாள்தான் நான் இப்படி பின்னாலிருந்து வண்டி ஓட்டுவது?” என்கிறார். ‘வாயை மூடுங்கள்’ என்று மத்தாய் சீறுகிறார்.

 கிருஷ்ண மேனன்

மொரார்ஜி தேசாயின் பலவகையான அசட்டுப் பிடிவாதங்களை நக்கலாக விவரிக்கும் மத்தாய் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். இந்திரா அமைச்சரவையில் மொரார்ஜி நிதியமைச்சராக இருக்கும்போது மந்திரிசபையில் இருந்த ஒரு கோஷ்டி மொரார்ஜியைச் சந்தித்துப் பேசுகிறது. அப்போது மொரார்ஜிக்கும் இந்திராவுக்கும் கருத்துவேற்றுமை முற்றிப்போய் மொரார்ஜி வெளியேறும் மனநிலையில் இருந்தார். இந்திராவைக் கவிழ்க்க தாங்கள் உதவுவதாகச் சொல்கிறார்கள்.’நான் மிஸிஸ் காந்தியின் அமைச்சரவையில் இருக்கிறேன். அந்தப்பேச்சுக்கே செவிகொடுக்க மாட்டேன். அவரை கவிழ்ப்பதென்றால் வெளியே சென்று பகிரங்கமாகவே செய்வேன்’ என்று அவர்களை துரத்துகிறார் மொரார்ஜி

 

மௌண்ட்பாட்டனைப்பற்றிய மத்தாயியின் சித்திரம் நான் பலநூல்கள் வழியாக உருவாக்கிக்கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. மௌண்ட்பாட்டன் உயர்குடியில் பிறந்த உயர்கல்வி கற்ற உயர்பதவிகளை அடைந்த ஓர் எளிமையான மனிதர். கொஞ்சம் அசட்டுத்தனமானவர். ஆடம்பரங்கள் முகஸ்துதிகளை விரும்புகிறார். தன்னைப்பற்றி மிகவும் அதிகமாக எண்ணிக்கொள்கிறார்.   

 

வயதான காலத்தில் தன்னைப்பற்றி நூல்கள் எழுதசெய்வதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். டொமினிக் லாப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் எழுதிய நள்ளிரவில் சுதந்திரம் என்ற பிரபலநூலில் மௌண்ட்பாட்டன் ஒரு கதாநாயகனாகக் காட்டப்பட்டிருக்கிறார். அவரே இந்தியப்பிறவியின் நாயகன் என்பது போல. அது அவரால் சொல்லிக்கொடுத்து ‘ஊக்குவிக்கப்பட்டு’ உருவாக்கப்பட்டது என்கிறார் மத்தாய்.

 

உதாரணமாக ஒரு நிகழ்ச்சி.  1972ல் மௌண்ட்பாட்டன் பிரபு மத்தாயிக்கு ஒரு கடிதம் கொடுத்து லாரி காலின்ஸையும் டாமினிக் லாப்பியரையும் அனுப்புகிறார். அவர்கள் எழுதும் நூலுக்கு உதவிசெய்யும்படி. அந்த நூலுக்காக அவர்கள் மௌண்ட்பாட்டனை எடுத்த பேட்டி அக்காலத்தில் லிஸனர் இதழில் வெளிவந்தது. அந்தப்பேட்டியின் தகவல்கள் அவ்வளவும் தவறு என்று மத்தாய் சொல்கிறார். ஆனால் அவற்றை அப்படியே நூலில் மேலும் நாடகத்தனமாக எழுதினார்கள்  லாரி காலின்ஸ் டாமினிக் லாப்பியர் இரட்டையர்

 

மௌண்ட்பேட்டன் சொன்னது இதுதான். இந்தியா சுதந்திரம் பெற்று அதிகாரக் கைமாற்றம் நடந்தபின்னர் 1947 செப்டெம்பரில்  மௌண்ட்பாட்டன் மேற்கொண்டு ஒன்றும் செய்வதற்கில்லை என்று சிம்லாவிற்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் இரவு வி.பி.மேனன் ·போனில் அழைக்கிறார். உடனே கிளம்பி டெல்லி வரும்படி பதற்றத்துடன் கெஞ்சுகிறார். ‘இங்கே எல்லாமே தாறுமாறாகக் கிடக்கிறது. கூட்டம் கூட்டமாக ஆட்கள் சாகிறார்கள். நீங்கள் உடனே வந்து ஆட்சியை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மன்றாடுகிறார். ”நீங்கள் லட்சக்கணக்கானவர்களை போர்க்களத்தில் நடத்திச்சென்றவர். உங்களால் மட்டுமே நிலைமையைச் சமாளிக்க முடியும்” என்கிறார்.

 

‘அது மரியாதையாக இருக்காது என்று நான் சொன்னேன்’ என்கிறார் மௌண்ட்பேட்டன் அந்த பேட்டியில் “நான் அவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்த பின்னர் அவர்களிடம் இருந்து பிடுங்குவது போல ஆகிவிடும். அது அவர்களை சோர்வடையச்செய்யும் . நான் ஒருவாரம் கழித்து வருகிறேன்’ என்றேன். ’உடனே கிளம்பி வருவதென்றால் இந்தியா தப்பும். இன்றிரவே தாங்கள் வரவில்லை என்றால் அதன்பின் வரவே வேண்டாம்’ என்றார் மேனன். உடனே நான் ‘வி.பி, கிழட்டுப்பன்றி, நீ என் மனதை மாற்றிவிட்டாய்’ என்றேன்” என்கிறார் மௌண்ட்பேட்டன்

 

இந்நிகழ்ச்சியை மேலும் பெரிதாக்கி நேருவும் பட்டேலும் நாட்டை தங்களால் காப்பாற்ற முடியாது என்று  மௌண்ட்பேட்டனிடமே திருப்பிக்கொடுக்க முடிவெடுத்து  தூதனாக வி.பி.மேனனை அனுப்பினார்கள் என்று டொமினிக் லாப்பியரும் லாரி காலின்ஸ¤ம் எழுதினார்கள். ‘சுதந்திரம் கிடைத்து இருபது நாட்களுக்குள் ஒரு வேடிக்கை நடந்தது. இந்தியாவின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் மீண்டும் மௌண்ட்பாட்டனிடமே ஆட்சியை அளிக்க தயாரானார்கள்!’ என்று தொடங்கி அதை எழுதுகிறார்கள். வெள்ளைக்காரன் எதைச்சொன்னாலும் நம்பும் பலர் மேற்கோள்காட்டிய நிகழ்ச்சி அது

 

உண்மையில் என்ன நடந்தது? அந்த ·போன் அழைப்பு வி.பி.மேனன் அவரே செய்தது.அவர் பதற்றம் கொண்டவர் என்பதுடன் வெள்ளையர் கீழே வேலைபார்த்து பழகிய அவருக்கு நேரு மற்றும் பட்டேலின் நிர்வாகத்திறனில் நம்பிக்கையும் இருக்கவில்லை. ஆனால் மௌண்ட்பாட்டன் கிளம்பி வருகிறார் என்று தெரிந்ததும் மேனன் ஓடிவந்து என்ன நடந்தது என்று மத்தாயிடம் சொல்கிறார். பதமாக நேருவிடம் சொல் என்கிறார். மத்தாய் கடும் கோபம் அடைந்து மேனனை வசை பாடுகிறார். ‘யமுனையில் என்ன ரத்தமா ஓடுகிறது? இந்த தகவல் தெரிந்தால் நேரு உன்னை ஒழித்துக்கட்டிவிடுவார்’ என்கிறார்

 

ஏனென்றால் நேருவும் பட்டேலும் மிகவும் சிரமப்பட்டுத்தான் மௌண்ட்பேட்டனை சிம்லாவுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். காரணம் மௌண்ட்பேட்டன் நிர்வாக அனுபவமே இல்லாதவர். அவர் எங்குமே படைகளை நடத்தியதில்லை. இரண்டாம் உலகப்போரில் தென்கிழக்காசியாவில் மக்ஆர்தரின் தலைமையில் நடந்த போரில் பிரிட்டிஷ் படைகளின் அலங்காரத்தலைவராகவே இருந்தார். மக்ஆர்தர் மௌண்ட்பாட்டனை ஒரு தொல்லையாகவே எண்ணினார். உயர்பதவிகளுக்கு அரசகுலத்தவரை நியமிக்கும் பிரிட்டிஷ் மரபின்படி அந்த இடத்துக்கு வந்தவர் மௌண்ட்பேட்டன்.

 

மௌண்ட்பேட்டன் பிரிட்டிஷ் மன்னர் அளிக்கும் பட்டங்கள் கௌரவங்கள் ஆகியவற்றில் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை மத்தாய் வேடிக்கையாக எழுதுகிறார். கடைசிநாள் வரை பிரிட்டிஷ் பட்டங்களுக்கு தன்னை சிபாரிசு செய்யும்படி நேருவுக்கு எழுதிக்கொண்டிருந்தார் அவர். ஒரு மேடையில் மக் ஆர்தருடன் நிற்கும்போது அவர் போட்டிருக்கும் பதக்கங்களை விட தன் பதக்கங்கள் குறைவானவை என்று கண்டு மௌண்ட்பாட்டன் அடையும் பதற்றத்தை மத்தாய் பதிவுசெய்கிறார்.

 

மேலும் இந்தியாவைப்பற்றி மௌண்ட்பேட்டனுக்கு ஒன்றுமே தெரியாது. பிரிவினையின் பெரும்பாலான குளறுபடிகளுக்கு மௌண்ட்பேட்டனின் விஷயமறியாத அசட்டுத்தன்னம்பிக்கையே காரணம் என்பது நேருவுக்கும் பட்டேலுக்கும் இருந்த எண்ணம். அவசரகதியில் நாட்டைபிரிக்க ஏற்பாடு செய்தது, அந்த திட்டத்தை பகிரங்கப்படுத்தி வகுப்புக்கலவரங்களை ஆரம்பித்தது, இந்திய நிலத்தைப்பற்றியும் மக்கள்பரவல் பற்றியும் எதையுமே தெரிந்திராத சர்.ராட்கிளி·ப் அவர்களிடம்  பிரிவினை எல்லையை வகுக்கச் சொன்னது, சம்ஸ்தான மன்னர்களிடம் அவர்கள் விருப்படி இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் சேரலாம் அல்லது தனியாகச் செயல்படலாம் என்று சொன்னது என எல்லாமே மௌண்ட்பேட்டனின் குளறுபடிகள்.

 

வி.பி.மேனன் மத்தாயிடம் கெஞ்ச ஆரம்பித்தார். மலையாளிக்கு மலையாளி .ஆகவே வேறு வழியில்லாமல் நேருவிடம் விஷயத்தை மத்தாய் சொல்கிறார். நேரு கடும் கோபம் கொண்டு குதிக்கிறார். மேனன் பட்டேலிடம் ஓடிப்போய் சரணடைகிறார். பட்டேல் ஒரு திட்டம் கொண்டுவருகிறார். அதன்படி மௌண்ட்பாட்டனுக்கு எல்லா காகிதத்திலும் ஒரு பிரதியை அனுப்பி வைப்பது. ஆனால் எந்த உத்தரவும் அவர் பிறப்பிக்காமல் இருக்கச்செய்வது. அதுதான் நடந்தது

 

அதை விரிவாக விளக்கியும்கூட டொமினிக் லாப்பியரும் லாரி காலின்ஸ¤ம் மௌண்ட்பேட்டனிடம் நேரு சரண்டைந்ததாக எழுதியமைக்குக் காரணம் மௌண்ட்பேட்டனின் விருப்பம் மட்டுமல்ல, வெள்ளைய மேலாதிக்க நோக்கும் கூடத்தான். அதாவது இந்தியர்களால் ஆளமுடியாது என்ற எண்ணம். ஆனால் 1947 ஆகஸ்ட் முதல் ஒவ்வொரு கணமும் பட்டேலிடம்தான் சுக்கான் இருந்தது. இரண்டே மாதங்களில் மௌண்ட்பேட்டனை லண்டனுக்கு அனுப்விட்டு ராஜாஜியை கவர்னர் ஜெனரலாக ஆக்கி பட்டேல் நிலைமையைக் கட்டுக்குக் கொண்டுவந்தார்.

 

இந்தியா இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் பிரிந்து பெரும் கலவரங்கள் நடந்துகொண்டிருந்தன. இந்திய மாகாண அரசுகள் கலைக்கப்பட்டிருந்தமையால் மாகாண காவல்துறை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் இந்திய ராணுவம் மதவாரியாக கன்னாபின்னாவென்று பிரிக்கப்பட்டிருந்தது. அதை நடத்திய வெள்ளையத் தளபதிகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியமையால் அது  முற்றிலும் கட்டுக்கோப்பில்லாமல் இருந்தது.

 

மேலும் சம்ஸ்தான மன்னர்கள் கையில்  சுதந்திரம் கொடுத்துவிட்டுப்போகும் பிரிட்டிஷாரின் முடிவு காரணமாக நாட்டில் உள்ள பல மன்னர்கள் பிரிந்துபோகும் முடிவில் இருந்தார்கள். கஜானா கிட்டத்தட்ட காலியாக இருந்தது. நிர்வாகத்தில் உதவ  அரசியல் பின்னணி உடைய எவரும் இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக நாடே ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத, மையமில்லாத, துண்டுகளாக சிதறிக்கிடந்தது

 

அந்நிலையில் ஆறு மாதத்தில் அனைத்தையும் கட்டுக்க்குள் கொண்டு வந்து, மாபெரும் மக்கள்தொகையும் ஏராளமான பேதங்களும் கொண்ட இந்த பிரம்மாண்டமான தேசத்தை ஒரு வலுவான அமைப்பாக ஆக்கிய வல்லபாய் பட்டேல் இன்றுவரை உலகம் கண்ட மகத்தான நிர்வாகிகளில் ஒருவர் என்பதை கொஞ்சம் வரலாறு அறிந்த எவரும் உணரமுடியும். மிகமிகக் குறைவான வன்முறையுடன், அனேகமாக மக்கள் மீது சிறிய தாக்குதல்கூட இல்லாமல், அதை நிகழ்த்தினார் பட்டேல். அந்தப்பட்டேல் மௌண்ட்பேட்டன் காலில் போய் விழுந்தார் என்று டொமினிக் லாப்பியர் லாரி காலின்ஸ் போன்றவர்கள் விடும் கதைகளின் உண்மைநிலையை நாம் மத்தாயியின் நூலிலேயே காண்கிறோம்.

 

காமராஜை பற்றி இந்நூலில் உள்ள சித்திரம் சட்டென்று ஒரு எரிச்சலை உருவாக்கும்.எரிச்சலூட்டுவதில் மத்தாய் நிபுணர், புண்பட்ட அகங்காரம் கொண்டவரின் மனநிலை அது. காமராஜின் நிறத்தையும் முகத்தோற்றத்தையும் பற்றி நக்கலாக எழுதுகிறார் — ஆதிமனிதனைப்போல் இருந்தார் என.  ஆனால் அந்த எரிச்சலுடன் வாசித்தால் காமராஜின் ஆளுமையை அவர் மிகவும் உயர்வாகவே சொல்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது

 

காமராஜை அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதியாகவும் மிகுந்த மதிநுட்பம் உள்ளவராகவும் நிர்வாகியாகவும்தான் மத்தாய் சித்தரிக்கிறார். இந்திராகாந்தி நாணய மதிப்பைக் குறைத்தபோது அந்த மாற்றத்தின் விளைவுகளை காமராஜ் தெருவில் விற்கும் கத்தரிக்காயின் விலையில் வந்த உயர்வை வைத்தே புரிந்துகொள்கிறார். இந்திராவை அவர் ஆதரித்தது வட இந்திய தொழில்சதிக்கும்பல் ஒன்று அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடாது என்பதற்காகவே. முழுக்க முழுக்க நாட்டுநலனை நாடியே. ஆனால் இந்திரா இன்னொரு சதிமையமாக ஆனதை அவர் கண்டார். காமராஜ் அவமானப்படுத்தப்பட்டு மனமுடைந்து இறந்தார் என்கிறார் மத்தாய்.

 

மத்தாய் நேருவைப்பற்றி அளிக்கும் சித்திரங்கள் சனாதன நோக்குள்ளவர்களை கசப்படையச்செய்யலாம். நேரு சுருட்டை விரும்பி பிடிக்கிறார். மது அருந்துகிறார். பன்றியிறைச்சியும் மாட்டிறைச்சியும் உண்கிறார். தன்னுடைய உரைகளை முழுக்க நேரு அவரே எழுதிக்கொண்டார் என்று சொல்லும் மத்தாய் இந்திரா வந்தபின்னர்தான் பட்லர்கூட உரை எழுதித்தர ஆரம்பித்தார்கள் என்கிறார்.

 

இந்நூல் நேருவின் காதலிகளைப் பற்றிய சித்திரங்களினால்தான் பரபரப்படைந்தது. நேருவுக்கு இளமையிலேயே பல பெண்களுடன் உறவிருந்தது. நோயாளியான கமலா அவருக்கு இணையான தோழியாக இருக்கவில்லை. மத்தாய் விவரிக்கும் நேருவின் காதலியர் நால்வர். மிருதுலா சாராபாய், பத்மஜா நாயிடு, எட்வினா மௌண்ட்பாட்டன், சிரத்தா மாதா ஆகியோர்.

 

மிருதுலா சாராபாயை கொஞ்சம் கூட பெண்மையே இல்லாத பெண் என்கிறார் மத்தாய். இந்தியப்பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகளை சரிசெய்வதில் ஆத்மார்த்தமான முரட்டுத்தனத்துடன் அவர் உழைத்தார். சிறுவயதில் அவருக்கும் நேருவுக்கும் தொடர்பிருந்தது. அந்த உறவை தன்வரையில் மிருதுலா பேணிவந்தார் என்கிறார் மத்தாய்.

 

பத்மஜா நாயிடு

பத்மஜா நாயிடு சரோஜினி நாயிடுவின் மகள். எப்போதும் அதீத வெட்கத்தை பாவனைசெய்பவர். நேரு 1947ல் பாட்னா சென்றபோது உத்தரபிரதேச கவர்னராக இருந்த சரோஜினிநாயிடு பத்மஜாவை நேரு மணம்புரியும் அறிவிப்பை வெளியிடுவார் என்று எல்லாரிடம் சொன்னாராம். ஆனால் நேரு எட்வினாவுடன் சென்றிறங்கியபோது சரோஜினி வாயடைந்து போனார் என்று மத்தாய் எழுதுகிறார். வருடத்தில் ஒருமுறை நேரு, இந்திரா மற்றும் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நேருவின் இல்லத்திற்கு வந்து ஒரு மாதம் தங்கும் வழக்கம் பத்மஜாவுக்கு இருந்தது.

 

பத்மஜாவை இந்திரா விரும்பவில்லை. நேரு அதிகார பூர்வ பயணம் மேற்கொள்ளும் காரிலேயே பத்மஜாவும் ஏறிக்கொள்வதை தடுக்க மத்தாயியிடம் சொல்கிறார். மத்தாய் வாழ்நாள் முழுக்கச் செய்த வேலைகளே அவை போன்றவைதான். அடுத்த முறை பத்மஜாவை இந்திராவே கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு தன் காரில் ஏற்ற மத்தாய் சொல்கிறார். இரு பேரப்பிள்ளைகளையும் நேருவுடன் அதற்கு முன்னரே ஏற்றிவிட்டுவிடுகிறார்.

 

லேடி மௌண்ட்பாட்டன்

 

லேடி மௌண்ட்பாட்டனின் சருமம் கிழவியைப்போன்றது, ஏன் நேருவுக்கு அவர் மேல் ஈடுபாடு வந்தது என்றே தெரியவில்லை என்று சொல்கிறார் மத்தாய். ஒருமுறை காமன் வெல்த் கூட்டத்தில் அனைவரும் உள்ளே இருக்க வராந்தாவில் நின்று பலமணிநேரம் எட்வினாவிடம் கடலைபோடும் நேருவை பிறர் கவனத்தை கவராமல் இழுத்துக்கொண்டுவர மத்தாயும் கிருஷ்ணமேனனும் படும்பாடு வேடிக்கையானது. நேரு தன் அறையில் எட்வினாவின் படத்தை வைத்திருப்பதைக் கண்ட பத்மஜா தன்னுடைய படத்தையும் அங்கே வைக்க முயல்கிறார். நேரு தூக்கி போட்டுவிடுகிறார்.

 

ஏதோ மதநிறுவனத்துக்காக நிதி கோரித்தான் நேருவைச் சந்திக்க வருகிறார் சிரத்தா மாதா. இந்து துறவி, ஆனால் பேரழகி. நேரு அவரிடம் காதலாகிறார் .பின்னர் ஒரு கிறித்தவ நிறுவனத்தில் இருந்து அங்கே ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெற்று விட்டுச்சென்ற பெண் ஒருத்தி விட்டுச்சென்ற கடிதங்கள் என ஒரு கத்தைக் கடிதங்களை நேருவுக்கு அனுப்புகிறார்கள். அந்தக் கடிதங்களை மத்தாய் பார்க்கிறார். நேருவின் கடிதங்கள். அது ஆண் குழந்தை. அவனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கண்டுபிடித்திருந்தால் நானே வளர்த்திருப்பேன் என்கிறார்.

 

இந்நூல் வெளிவந்ததும் 1978 பிப்ரவரியில் இந்தியா டுடே இதழ் சிரத்தா மாதாவின் பேட்டியை வெளியிட்டது. மத்தாய் சொல்வது ஆதாரமில்லாத பொய் என்று  சிரத்தாமாதா சொன்னார். ஆனால் அது சிரத்தா மாதா அல்ல என்று மத்தாய் சொல்லிவிட்டார். மத்தாயின் நூலில் ஒர் அத்தியாயம் ‘அவள்’ என்றபேரில் உள்ளது.  இந்தியப்பதிப்புகளில் அது சேர்க்கப்படவில்லை. இப்போது இணையத்தில் கிடைக்கிறது. அது மிகவும் அந்தரங்க அத்துமீறலான ஒன்று என்று நினைக்கிறேன்.

 

மத்தாயின் நேரு வரலாறு ஒரு நல்ல வரலாற்றுக்குத் தேவையான வரலாற்று நோக்கு உள்ளது அல்ல. கிசுகிசுத் தொகுப்புதான். ஆனால் இந்திராகாந்தியைப் பற்றிய பகுதிகள் மட்டுமே வன்மத்துடன் எழுதப்பட்டுள்ளன. மற்ற குறிப்புகளில் பெரும்பாலும் தன் அனுபவத்தையும் அபிப்பிராயங்களையும் அப்பட்டமாகச் சொல்ல மத்தாய் முயன்றிருக்கிறார்.

 

சராசரி வாசகன் இதை அந்தரங்க அழிப்பு என எண்ணலாம். ஆனால் வரலாற்றில் அப்படி அந்தரங்கம் பகிரங்கம் என்ற பிரிவினை இல்லை. எல்லாம் இணைந்தே வரலாற்றை உருவாக்குகின்றன. வெளிப்படையாக பேசப்பட்டவை மட்டுமல்ல அந்தரங்கமாக நிகழ்ந்தவையும் சேர்ந்துதான் நம் தலையெழுத்தைத் தீர்மானிக்கின்றன. நம் தலையெழுத்தை அறிய நமக்கு உரிமை உண்டு. ஆகவே தனிநபர்களைப்போல பொதுமனிதர்களுக்கு அந்தரங்கம் இருக்க முடியாது.

 

நேருவின் ஒருபலவீனம் இந்திய வரலாற்றில் ஓர் விளைவை உருவாக்கியதென்றால் அந்தப் பலவீனத்தை அறிய வரலாற்றாசிரியனுக்கு உரிமை உண்டு. அதைத்தான் மத்தாய் அவரது முன்னுரைக்குறிப்பில் சொல்கிறார். இந்நூலின் பல இடங்கள் வரலாற்றில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காட்டுவன என்பதை மறுக்க முடியாது.

மறுபிரசுரம் / முதற்பிரசுரம் ந்அவம்பர் 2009

முந்தைய கட்டுரைவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி
அடுத்த கட்டுரைஎம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2