பதிப்பகங்கள்,நூல்கள்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் இணையதளத்தில் வரும் புத்தக கண்காட்சிக்கு வர இருக்கும் உங்கள் நூல்கள் தொடர்பான வாசகர் கேள்விக்கு உங்கள் பதில் படித்தேன். ஒரு எழுத்தாளரின் நூல்களை வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சூழல் நம் அனைவருக்குமே உற்சாகம் தரக்கூடியது. இதற்காக நீங்கள் மிகுந்த மனச்சோர்வுடன் பதில் அளித்திருந்தீர்கள். பொதுவாக இன்று பணப்பிரச்சினையால் புத்தகங்கள் வெளிவருவது தாமதமாவது என்பதை எல்லா பதிப்பாளருக்கும் பொதுவான ஒரு விதியாக கொள்ளவேண்டியதில்லை. என்னுடைய இந்த ஏழாண்டு பதிப்பனுபவத்தில் இதுவரை காகிதம் தருபவர், அச்சகத்தார், பைண்டர் என யாரும் என்னிடம் பணம்கொடுங்கள் என கேட்டதே இல்லை. நானேதான் அழைத்து அவர்களுக்கான பணத்தை சிலமாதங்களூக்கு பிறகு கொடுத்துள்ளேன். இத்த்னைக்கும் ஒரே சமயத்தில் 50-60புத்தகங்கள். அதன் மதிப்பு பல லட்ச ரூபாய் சம்பந்தபட்டது. ஆயினும் நம்பிக்கையும் நட்புசார்ந்த உத்திரவாதமும் இருக்கும்வரை இந்தத்தொழிலில் பண்ம ஒரு தடையே இல்லை.

புத்த்ககண்காட்சியில் புத்த்கங்கள் தாமதமாவதற்கு சில வினோதமான காரண்ங்கள் உள்ளன. அவற்றை மற்றவர்களால் புரிந்துகொள்வது கடினம். உதாரணமாக புத்தக கண்காட்சியை முன்னிட்டு தமிழின் முன்னணிபதிப்பகங்கள் அனைத்தும் 2-3 அச்சகத்தையே பயன்படுத்துகின்றன. காரணம் அவர்கள்தான் புத்தகவேலையை நேர்த்தியாக செய்யக் கூடியவர்கள். உதாரணமாக புத்த்கக்கண்காட்சியை முன்னிட்டு காலச்சுவடு, கிழக்கு, உயிர்மை முத்லான பதிப்பகங்கள்  ஒரு குறிப்பிட்ட அச்சகத்தில் தலா 25 புத்த்கங்களை அச்சுக்கு கொடுத்தால் அந்த அச்சகத்தார் தலா 15 நூல்களை முதலில் அச்சிட்டு கொடுப்பார். அவ்வளவுதான் அந்த குறுகிய காலகட்டத்தில் சாத்தியம். மீதிப் புத்தகங்கள் அச்சகத்தில் சிக்கிக் கொண்டுவிடும். இது ஒரு விபத்து. இந்த விபத்தில் யார்ச் சிக்குவார்கள் என்பதை அனுமானிக்க முடியாது. இதனாலே கண்காட்சிக்கு முன்பு பல புத்த்க வெளியீட்டு விழாக்களை பெரும் பொருச் செலவில் ஏற்பாடு செய்கிறேன். புத்த்கங்கள் குறிப்பிட்ட காலத்தில் வெளிவருவவதற்காகவே புத்தக வெளியீட்டு விழாக்கள்.என்ன வினோதம் பாருங்கள்.

புத்த்க கண்காட்சி பொங்கல் சமயத்தில் வருவதால் அச்சகம், பைண்டிங் என எல்லா இடத்திலும் நெருக்கடி. இவ்வளவு சவால்களைத் தாண்டி புத்த்க கண்காட்சிக்கு நூல்களை கொண்டுவந்தால் நட்சத்திர எழுத்தாளர்களின் நூல்களது அதிகபட்ச விற்பனை 10 நாட்களில் 150 பிரதிகள். புத்தகங்கள் வெளிவந்தபிறகு மாதாமாதம் மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சிகளுக்கு பதிப்பாளர்கள் புத்தகங்களை சுமந்துகொண்டு போகிறார்கள். எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்குவதற்காக தவமிருக்கும்  வாசகர்கள் அங்கெல்லாம் எவ்வளவு புத்தகங்களை வாங்குகிறார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள். புத்தகங்கள் இப்போது ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. முண்னனி புத்த்ககடைகளில் விற்பனைக்கு இருக்கின்றன. இதற்குமுன் வேறு எந்தக் காலத்திலாவது புத்த்கங்கள் வாங்க இவ்வளவு வசதிகள் வாசகர்களுக்கு இருந்த்கிருகிறதா? ஆனால் புத்த்க விற்பனையில் பெரிய புரட்சிகள் எதுவும் உருவாகிவிடவில்லை. இது ஒரு போலிதோற்றம். ஒரு முக்கியமான எழுத்தாளனின் நூல் ஒரு மாபெரும் புத்த்க கண்காட்சியில் 500 பிரதிகள் விற்கும் சூழலுருவாகும்போது மட்டுமே இதுபோன்ற கவலைகளுக்கு ஒரு நியாயம் இருக்க முடியும்.

தமிழின் முன்னனி பதிப்பகங்கள் எதுவும் எழுத்தாளர்களுக்கு மெய்ப்பு ப்பார்க்கும் பணியை அளிப்பதில்லை. உயிர்மை உள்ளிட்ட பல பதிப்பகங்களில் நியமிக்கபட்ட மெய்ப்பு நோக்குனர்கள் இருக்கிறார்கள். பல சமயம் எழுத்தாளர்கள் பிரதியை செம்மைப்படுத்தவும் நுணுக்கமான மாற்றங்கள் செய்யவும் அவற்றை மீள்பார்வை செய்கிறார்கள். இதையும் செய்யக்கூடிய பதிப்பாசிரியர்கள் இருந்தால் நல்லதுதான். அதற்கான காலம் தமிழில் கூடியசீக்கிரம் வரும்.

பல இலட்சம் ரசிகர்களுக்காக பலகோடி செலவில் தயாரிக்கபட்ட ஒரு படம் பல்வேறு காரணங்களால் வெளிளிவரமுடியாமல் தவிப்பதைப்போல சில ஆயிரம் வாசகர்களுக்காக சில இலட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கபடும் புத்தகங்களும் எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்கின்றன. ஒரு ஆண்டுல் 100 புத்தகங்களை பதிப்பிக்ககூடிய பதிப்பாளர் 10 புத்தகங்களை குறித்த காலத்தில் கொண்டுவரமுடியாமல்போவதற்கு ஏராள்மான காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் எழுத்தாளனுக்கும் பதிப்பளனுக்கும் இடையே அந்தரங்கமானது. பொது வெளியில் விவாதிக்கக்கூடியது அல்ல என்று நினைக்கிறேன்.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்


uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018

email:[email protected]

 

 

அன்புள்ள ஹமீது,

 

பொதுவாக பதிப்பகத் தொழிலின் நிலைமையைக் குறித்தே நான் சொன்னேன். உயிர்மையின் செயல்பாடுகளைக்குறித்து நீங்கள் சொல்லி அறிந்துகொண்டேன். சென்ற நான்குவருடங்களாக நூலகத்துறையில் தமிழக அரசு நூல்களை வாங்கவில்லை. கரும்பலகைத் திட்டம், ராஜாராம் மோகன்ராய் திட்டம் ஆகியவற்றில் இருந்து மத்திய அரசு நிதியில் வாங்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. ஆகவே பொதுவாக பதிப்பகங்கள் நிதிச்சுமையில் உள்ளன என்றுதான் சொன்னார்கள். பதிப்பகங்கள் தொழிலுக்கான வங்கிக்கடனை வாங்கமுடியாதநிலையில் இது இயல்பே என்று எண்ணிக்கொண்டேன்

 

என்னுடைய நூல்களுக்கு நான், அ.கா.பெருமாள்,மா.சுப்ரமணியம்,எம்.எஸ்,எம்.யுவன் போன்றவர்கள்தான் மெய்ப்பு பார்க்க நேர்ந்திருக்கிறது என்ற அடிபப்டையிலேயே என் கருத்து. அவர்களுக்கு நன்றி தெரிவித்த குறிப்புகள் என் நூல்களில் கொடுப்பதல்லாமல் அவர்களுக்கு பிறிதொன்றும் அளித்ததில்லை.

 

பதினொன்றுகோடி இந்தியத்தமிழர்களும் இரண்டுகோடி புறத்தமிழர்களும் வாழும் உலகில் ஒரு புகழ்பெற்ற நூல்கூட வருடத்திற்கு ஐநூறு பிரதிகள் விற்பதே அரிது என்று நானும் அறிவேன். அதை பலமுறை இந்த இணையதளத்தில் எழுதியிருக்கிறேன். பதிப்பகங்கள், நூல்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று மட்டுமே சொல்லவேண்டும். விற்பனையில் தேக்கமே உள்ளது. அது உடைபடுவதற்கு உற்பத்தி- அல்லது வினியொகத்தில் மாற்றம் வந்தால் போதாது. நூல்கள் தேவை என தமிழ்ச்சமூகம் நினைக்கவேண்டும். அதற்கு இங்கே ஒரு ஒட்டுமொத்தப் பண்பாட்டு மாற்றம் வரவேண்டும். அது நிகழ்வதற்கான சூழல் இல்லை.

 

 

முன்பு தமிழ்நாட்டில் நவீன இலக்கியம் பொருட்படுத்தப்படவில்லை என்றாலும் மரபிலக்கியத்துக்கு ஒரு இயக்கம் இருந்தது. இப்போது அதுவும் இல்லாமலாகிவரும் சூழலே தென்படுகிறது. என் சோர்வு அது சார்ந்ததே

 

ஜெ

முந்தைய கட்டுரைஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)
அடுத்த கட்டுரைவாசிப்பு, கடிதங்கள்