தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 க்காக சூழியல் எழுத்தாளரும் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவர்

இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இடம் இருவகையில் முன்னோடித் தகுதி கொண்டது. தமிழ் திரைப்படத்தை வெறுமே அரட்டைத் தகவல்களின் தொகையாக அல்லாமல் சமூகவியல், அரசியல் நோக்குடன் வரலாறாக எழுத ஆரம்பித்தவர் அவர். அதற்காக சினிமாக்கலைச்சொற்களுக்கு தமிழ்ச்சொற்களை உருவாக்கினார். எளிமையும் நேரடித்தன்மையும் கொண்ட மொழியை அமைத்தார். சினிமா என்ற கலைவடிவம் பண்பாட்டாய்வுக்கான பெரும் களம் என்பதை நிறுவினார்

ஆனால் சூழியலாளராகவே அவர் முதன்மைப்படுகிறார். தமிழில் சூழியல் எழுதப்பட ஆரம்பித்த காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதவந்துவிட்டார். சூழியல்எழுத்து என்பது வெறுமே சூழியலழிவுகளைப்பற்றிய அறிவுறுத்தல்களோ பிரச்சாரமோ அல்ல என்பதை நிறுவியவை அவரது எழுத்துக்கள். இயற்கையைப்பற்றிய கவித்துவம் கொண்ட விவரணைகள் வழியாக ஒரு தலைமுறையையே சூழியல் நோக்கி கொண்டுவந்தார் என்றால் அது மிகையல்ல.

சூழியல் தளத்தில் நாம் இன்று கையாளும் பல கலைச்சொற்கள் அவரால் உருவாக்கப்பட்டவை – சூழியல் என்பது உட்பட. பறவைகள் ,மிருகங்கள், இயற்கை நிகழ்வுகளுக்கு அவர்றுக்குரிய கலைச்சொற்களை உருவாக்கியாகவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு சிந்தனை அதற்கான மொழி இல்லையேல் ஒருபோதும் நீடிக்காது என்பதே அவரது தரப்பு.

டால்ஃபின்கள் என்று சொல்லாலம், ஆனால் ஓங்கில்கள் என்ற சொல் மறக்கப்பட்டால் அந்த மீனைப்பற்றிய பாரம்பரிய ஞானம் அழியும். அதைவிட அச்சொல் கலையில் இலக்கியத்தில் இருந்து மறையும்போது அந்த உயிரினம் வெறும் உயிரினமாகும். அது ஒருபோதும் படிமமாக ஆகாது. அதன்வழியாக இயற்கை நம்மிடம் பேசாது என்று வாதிட்டார். மாங்குரோவ் எனலாம் ஆனால் அலையாத்தி என்னும்போது அந்த மரம் இங்கே அலையை ஆற்றும் மரமென அறியப்பட்டிருந்தது என்ற ஞானமும் அதில் உள்ளது

சரியான சூழியல்சொல்லுக்காக தியடோர் பாஸ்கரன் அவர்கள் கொள்ளும் அக்கறைக்கு நான் ஒரு சாட்சி. சென்ற ஆண்டுகளில் அவர் எத்தனையோ முறை என்னை அழைத்து சொற்கள் கேட்டிருக்கிறார். விவாதித்திருக்கிறார். தொடர்ந்த அக்கறையுடன் அர்ப்பணிப்புடன் செய்யும் பணி எதுவானாலும் முதிரும், கனியும் என்பதற்கான வாழும் உதாரணம் அவர்

தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

**

பரிசுக்குழுவின் குறிப்பு

தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுசூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்

1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு பாம்பின் கண் 2012இல் வெளிவந்தது, தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். 2003இல் தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராக பணியாற்றினார் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உண்டு.

இயல் விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

முந்தைய கட்டுரைநல்லுச்சாமிப்பிள்ளை
அடுத்த கட்டுரைவெண்முரசு -கதையின் கோலங்கள்