வேதசகாயகுமார் விழா

இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆயுதபூஜை தினம். ஆகவே வேதசகாயகுமாரின் அறுபது வயது நிறைவுகூட்டத்துக்கு போதிய கூட்டம் வராதுபோகலாமென அ.கா.பெருமாள் அஞ்சினார். ஆனால் இன்றுதான் அரங்கு கிடைத்தது. ஆகவே வேறுவழியில்லை. அரங்கில் மாட்டுவதற்கு ஒரு வினைல் போர்டு எழுத நான் வினைல் அச்சகத்துக்குச் சென்றேன். அங்கே சரஸ்வதிபூஜைக்காரர்களின் பெரும்கூட்டம். முஸ்லீம்கடை, ஆனால் ஆயுதபூஜை வைப்போம் ஆகவே நாளைக்கு கடை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்.

வழக்கம்போல் அரைமணிநேரம் கழித்து விழா ஆரம்பம். நாஞ்சில்நாடன் வரவில்லை. தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவியிருக்கும் வைரஸ்காய்ச்சல். கால்களில் வீக்கமும் இருப்பதாகச் சொன்னார். தேவதேவன் மத்தியான்னம் வந்துசேர்ந்தார். அவருக்கு பயனீர் விடுதியில் அரை போட்டிருந்தேன். அங்கே சென்று கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார்.

ஏ.பி.என் பிளாசாவில் காத்திருந்தேன். ஒருவழியாக சுமாரான கூட்டம் வர ஆரம்பித்தது 40 பேர் வந்தார்கள். அது நாகர்கோயிலில் ஒரு தீவிர இலக்கியக் கூட்டத்துக்கு நல்ல எண்ணிக்கைதான். உற்சாகமாக இருந்தது.  வறீதையா கன்ஸ்தண்டீனும் கெ.பி.வினோதும் முன்னரே வந்து உதவிசெய்தார்கள். வறீதையா நடத்தும் மீனவர்களுக்கான இலக்கியப் பயிற்சிக்குழுவுக்கு வேதசகாயகுமார்தான் ஆலோசகர். 

எழுத்தாளர் பொன்னீலன் வேதசகாயகுமாருக்கு மலர்மாலை அணிவித்தார். வேதசகாயகுமாரின் மனைவிக்கு அருண்மொழிநங்கை மலர்கொத்து வழங்கினார். வறீதையா கன்ஸ்டண்டீனின் நண்பர்குழு சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பலர் பொன்னாடைகள் போர்த்தி கௌரவித்தார்கள்.

அ.கா.பெருமாள் அனைவரையும் வரவேற்று வேதசகாயகுமாருக்கும் அவருக்குமான முப்பதாண்டுக்கால நட்பைப்பற்றி பேசினார்.இருவரும் இந்துக்கலூரியில் படித்தவர்கள். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் இலக்கிய விவாத அரங்கின் மூலம் வளார்ந்தவர்கள். இருதளங்களில் ஆய்வுகள் விரிந்தாலும் கொண்டும் கொடுத்தும் ஆய்வில் முன்னகர்ந்தவர்கள் என்றார்.

வேதசகாயகுமாரின் தமிழ்ச்சிறுகதை வரலாறு அவர் ஆய்வுமாணவராக இருந்த காலத்தில் கிடைக்கும் உதவித்தொகையைச் சேர்த்துவைத்து பி.எஸ்.மணி அவர்களின் அச்சகத்தில் அவரே அச்சிடவைத்து வெளியிட்டது. அன்றெல்லாம் கட்டை அச்சுதான். அச்சகத்தில் அமர்ந்தே மெய்ப்பு பார்க்கவேண்டும். அவர் வாசிக்க நான் மெய்ப்பு பார்ப்பேன். அந்த நாட்களை இப்போது நினைத்துக்கொள்கிறேன் என்றார் அ.கா.பெருமாள்.

எவ்வளவு எழுதமுடியுமோ அந்த அளவுக்கு எழுதியவரல்ல வேதசகாய குமார். தமிழ்ச்சிறுகதை வரலாறை இன்று வரையிலான கதைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதி ஒரு முழுநூலாக இப்போது பிரசுரிக்கலாம். அதை அவர் செய்யவேண்டும் என உங்களைப்போலவே நானும் கேட்டுக்கொள்கிறேன்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பெர்னாட் சந்திரா வேதசகாயகுமாரின் ஆக்கங்களையும் ஆளுமையையும் சுருக்கமாக அறிமுகம் செய்தார். வேதசகாயகுமார் கல்லூரிபேராசிரியராக அந்தப்பதவிக்கு பொருத்தமான முறையில் பெரும் ஆசிரியராக இருந்தவர். பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவர்.

வேதசகாயகுமார் ஒரு இலக்கிய விமரிசகராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுவதைப்போலவே ஒரு மிகச்சிறந்த உரையாடல்காரராகவும் அறியப்படவேண்டும் என்றே சொல்வேன். அவருடனான என்னுடைய  உரையாடல்களில் ஒரு தகவலில் இருந்து இன்னொரு தகவலுக்காக அவர் தாவித்தாவிச் செல்லும் விதம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கும். அரசியல்தகவல்களை வரலாற்றுத்தகவல்களுடன் இணைத்து விரிவாக எடுத்துரைக்கக்கூடியவர் அவர் என்றார் பெர்னாட் சந்திரா.

ஐந்தாயிரம் வருடம் பழைய ஒரு தாமரை விதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆரம்பித்தார் வறீதையா கான்ஸ்தன்டீன். நீரின் முதல் தொடுகையில் அது உயிர்பெற்று முளைத்தது. வரட்சியில் ஆழ்துயில் கொள்ளும் நத்தைகள் நீர் தொட்டதுமே உயிர்பெறுகின்றன. ஸ்பரிசம் உயிர்தருவது. ஆனால் தொட்டால்வாடிச்செடி தொடுகையை அஞ்சுகிறது. கூசிக்கொள்கிறது

ஒரு அறிவியலாளர் அந்த தொட்டால்வாடிச் செடியுடன் பழகினார். மெல்ல அந்தச்செடி அவர் தொட்டால் வாடாமலாகியது. சில தொடுகைகளே அவ்வாறு நம்மை நெருங்கி வருகின்றன. அத்தகைய ஒரு தொடுகை வேதசகாயகுமாருடையது.மீனவர்களின் படைப்பூக்க வளர்ச்சிக்காக அருட்பணி.ஜெயபதி அடிகள் நடத்திய கருத்தரங்குகள் வழியாகவே வேதசகாயகுமாருடன் நெருங்க முடிந்தது. மீனவர்களின் படைப்பூக்கத்திறனை மேம்படுத்துவதற்காக ஒரு மாதாந்திர சந்திப்புக் குழுவை உருவாக்கியபோது ஊக்கமூட்டி கூடவே வந்து அதை தீவிரமாகச் செயல்படச்செய்தார் வேதசகாயகுமார் என்றார்.

வேதசகாயகுமார் காலச்சுவடுக்காக நான் தொகுத்த கடலோர வாழ்க்கை பற்றிய ஒரு நூலை மெய்ப்பு பார்த்தார். என்னை அவர் அறிந்திருக்கவில்லை. அப்போது என்னிடம் ·போனில் பேசும்போது ”·பாதர் கன்ஸ்டண்டீன்?” என்று கூப்பிட்டார். என்னை பலர் சாமியாரா என்று கேட்டிருக்கிறார்கள். பலர் செமினாரியை விட்டு விட்டு அறிவியல் படிக்க போனேனா என்று கேட்பார்கள். என் நூலை மட்டுமே படித்து ஒருவர் கேட்டபோதுதான் எனக்கு என் மொழியில் சூட்சுமம் உள்ள விஷயம் தெரிந்தது. என் மொழியில் கிறித்தவ மதப்பிரச்சார மொழி படிந்திருக்கிறது. உபதேசம் செய்யும் மொழி. அந்த மொழியில் நான் என் வாழ்க்கையின் யதார்த்தங்களைச் சொல்ல முடியாது என உணர்ந்தேன். ஆகவே நான் எனக்கான மொழியை தேட ஆரம்பித்தேன் அவ்வாறுதான் நான் இலக்கியத்துக்குள் வந்தேன்

அறிவியலாளரான எனக்கு இலக்கியத்தின் நுட்பங்கள் ஏதும் தெரிந்திருக்கவில்லை.  இலக்கியவாசிப்புகூட சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனால் அறிமுகத்திலேயே இலக்கியத்தின் இலக்கு என்ன எது இலக்கியத்தில் உண்மையிலேயே முக்கியம் என்று அவர் எனக்கும் நண்பர்களுக்கும் அறிவுறுத்தினார். இலக்கியம் என்பது கோட்பாடுகளோ கொள்கைகளோ உபதேசங்களோ அல்ல அது வாழ்க்கையின் அறியப்படாத நுண்ணிய தளங்களை கற்பனை மூலம் கண்டு சொல்வதுதான் என்று எங்களுக்குச் சொன்னார் என்றார் வறீதையா

சிறப்புரையாற்றிய தேவதேவன் பேசும்போது நான் நல்ல பேச்சாளான் அல்ல. இருந்தும் ஜெயமோகன் என்னை ஒரு சாட்சியாக அழைத்தார் என எண்ணிக்கொள்கிறேன் என்றார் எண்பதுகள் முதலே வேதசகாயகுமாரை அவர் கவனித்து வருவதாகவும் இலக்கியத்தின் அழகியலை முன்வைத்து பேசிய ஒரு மரபைச் சேர்ந்தவர் அவர் என்றும் சொன்னார். இலக்கியத்தை அரசியலாக மட்டுமே கண்ட ஒரு காலகட்டத்தில் இலக்கியத்தின் இலக்கியத்துக்காக குரலெழுப்பியவர் அவர் என்றார்.

இலக்கியத்தை அணுகும்போது மூன்று வழிகளை நாம் காணலாம். இலக்கியத்துக்குள் நுழையும் படைப்பாளிகளை பிரமிள் கடுமையாகவே எதிர்கொள்வார். எல்லாரும் ஏன் எழுதவேண்டும், உன்னால் முடிந்தால் நிறையவாசி, மிச்சநேரத்தில் ஏதாவது ·புட்பால் விளையாடு, எழுதியே ஆகவேண்டியவன் மட்டும் எழுதட்டும் என்று சொல்வார். ஆனால் சுந்தர ராமசாமி அவரை தேடிவரக்கூடிய அனைவரிடமும் அன்புடனும் பிரியத்துடனும் பேசி அவர்களை ஊக்கமூட்டுவார். சிறப்ப்பாக எழுதக் கற்றுக்கொடுப்பார். இன்னொரு தரப்பு உண்டு. மொழியே ஓர் அற்புதவிஷயம்தானே , அதில் நீ என்ன எழுதினாலும் அது உன்வரைக்குமாவது சிறந்ததே என்று சொல்வது. அப்படிச்சொல்பவர் யாரென நான் சொல்லவேண்டியதில்லை

இந்த மூன்று வழிமுறைகளுமே சிறந்தவைதான். இலக்கியத்தின் பாதைகள் அத்தனை பெரியவை. வேதசகாயகுமார் இலக்கியத்தில் போராடும் பாதையை தேர்வுசெய்தவர். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து இலக்கியத்துக்காக வாதாடுபவர். சமீபத்தில் அவரது பல கட்டுரைகளை வாசித்தேன். வெங்கட் சாமிநாதனைப்பற்றிய அவரது கட்டுரை மிக முக்கியமானது. பிரேம் போன்றவர்கள் சாமிநாதனின் அறாச்சீற்றத்தை ஒரு எளிய தனிநபர் காழ்ப்பு போல கருதி அவரை நிராகரித்து எழுதிய போது மிகுந்த தர்க்கத்துடன் தீவிரமாக சாமிநாதனின் இலக்கியப் பங்களிப்பை நிறுவுகிறார் வேதசகாயகுமார்

அறுபது வயது என்பது ஒரு நிறைவுணர்வை அளிக்கக்கூடியதாக சிலருக்கு இருக்கலாம். சிலருக்கு செயலூக்கத்துக்கான தொடக்கமாகவும் இருக்கலாம். குறிப்பாக நாஞ்சிநாடன் அவரது அறுபதுக்குப் பின்னர்தான் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.அதேபோல வேதசகாயகுமாரின் இயங்கவேண்டும் என்றார் தேவதேவன்.

நாஞ்சில்நாடன் வராத காரணத்தால் நான் கடைசியாக வேதசகாயகுமாரைப்பற்றி உரையாற்றினேன். தேவதேவன் பேச்சாளர் அல்ல என்று தெரியும். இருந்தாலும் அவர் என் மனதில் வாழும் பெரும் கவிஞர். என் நண்பருக்கு கவிஞனின் ஆசி கிடைக்கவேண்டும் என எண்ணினேன். வேறு எந்த வாழ்த்துக்களையும் விட அது மேலானது, வெறும் சொற்களாகவே இருந்தால்கூட என்பதே என் எண்ணம்.

வேதசகாய குமார் நவீன இலக்கியத்தின் மூன்றாம் தலைமுறை விமரிசகர். வ.வெ.சு அய்யர், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் முதல் தலைமுறை. க.நா.சு,சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் இரண்டாம் தலைமுறை. ராஜ்கௌதமன், தமிழவன், ராஜமார்த்தாண்டன் போன்றவர்கள் மூன்றாம் தலைமுறை

ஓர் இலக்கிய விமரிசகனாக அவரது பாணி என்பது இலக்கியப்படைப்பை மிகக்கூர்ந்து பலமுறை வாசிப்பதும் அதன் எல்லா தகவல்களையும் தகவல்பிழைகளையும் விடுபடல்களையும் கணக்கில் கொள்வதும் அவற்றை வைத்துக்கொண்டு சாத்தியமான மிக அதிக வாசிப்பை நிகழ்த்துவதும் ஆகும். இந்தவகையான வாசிப்பை பிரதிமைய விமரிசனத்தின் [Textual Criticism]ஓர் இயல்பாகக் கொள்ளலாம்.

ஓர் இலக்கியப் படைப்பு பல்வேறு வாழ்க்கைசார்ந்த, பண்பாடு சார்ந்த நுட்பங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பது வேதசகாயகுமாரின் கொள்கை. எந்த அளவுக்கு நுட்பங்களை அந்த ஆக்கத்தில் இருந்து ‘எடுக்க’ முடிகிறதோ அந்த அளவுக்கு அந்த ஆக்கம் முக்கியமானது என்பதே அவரது அளவுகோல்.

இலக்கியப்படைப்பில் உள்ள உத்திநயங்கள் புதுமைகள் போன்றவற்றுக்கு வேதசகாயகுமார் எந்த மதிப்பையும் அளிப்பதில்லை. அவை என்ன இசத்தை சார்ந்தவை என்பதை கணிப்பதில்லை. அவரைப்பொறுத்தவரை அவை வாழ்க்கையைப் பேசும் மொழிக்கட்டுமானங்கள் மட்டுமே. அவர் வாழ்க்கைநுட்பங்களை வைத்தே இலக்கியத்தை மதிப்பிட்டார்.

சமீபகாலமாக ஒரு பண்பாட்டுவிமரிசகராக ஆகியிருக்கும் வேதசகாய குமார் தமிழில் தமிழியம் திராவிடவாதம் போன்ற கருத்தாங்கள் உருவான சூழலைப்பற்றிய ஒரு மாற்றுச் சித்திரத்தை விரிவான தரவுகள் மூலம் உருவாக்கிவருகிறார். அவற்றை அவர் சீராக எழுதாமல் அவ்வப்போது முன்வைக்கும் சில கருத்துப்புள்ளிகளாக மட்டுமே சொல்லியிருக்கிறார் என்றேன். அந்த புள்ளிகளை விரிவாக எடுத்து மறு ஆக்கம்செய்யும் பொறுப்பு அவரது மாணவர்களுக்கு உண்டு. அவ்வாறு நடந்தால் தமிழ் பண்பாட்டு வரைபடத்தில் முற்றிலும் புதிய ஒரு கொள்கை அறிமுகமாகும். அதன் பங்களிப்பு நம் பண்பாட்டு ஆய்வுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் என்றேன்.

வேதசகாயகுமார் ஏற்புரை வழங்கினார். தன் வாழ்நாள் முழுக்க ஒரு கடுமையான சண்டைக்காரராக இருந்ததை நினைவுகூர்ந்தார். கருத்துக்கள் மேல்கொண்ட அபாரமான பிடிப்பே அதற்குக் காரணம். எழுபதுகளில் வாசித்த ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், எ·ப்.ஆர்.லூயிஸ் போன்றவர்களின் நவீனத்துவ விமரிசன அளவுகோல்கள் அப்போது மனதில் ஆழமாக பதிந்திருந்தன. இன்று மெல்ல மெல்ல பிடிவாதங்கள் கரைந்து எல்லா இலக்கியச் செயல்பாடுகளும் தன்னளவில் முக்கியமானவையே என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்.

தன் வாழ்நாளில் அதிக பாதிப்பைச் செலுத்தியவர்கள் பேரா.ஜேசுதாசனும், சுந்தர ராமசாமியும் என்றார் வேதசகாயகுமார். சுந்தர ராமசாமியின் பாதிப்பு என்பது சொந்த வாழ்க்கையை பழுதில்லாமல் வைத்துக்கொள்ள உதவியது என்றார். தன் நண்பர்கள் அ.கா.பெருமாள் போன்றவர்களையும் சக ஊழியர்களையும் நினைவுகூர்ந்து நன்றி சொன்னார்.

அ.கா.பெருமாள் தொகுத்து நன்றி கூற விழா ஒன்பது மணிக்கு முடிவுற்றது. விழாவுக்குப்பின் வெளியே தேநீரும் பிஸ்கட்டும் குடித்துக்கோண்டு மேலும் ஒருமணிநேரம் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

 

முந்தைய கட்டுரைவேதசகாயகுமார்’60
அடுத்த கட்டுரைகாந்தி மேலும் கடிதங்கள்