கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால் அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சாந்த நோக்கில் இத்தகைய ஆவணபப்டுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை.

ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைபப்டுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களைப்பற்றிய கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. அவர்களை நாம் மனக்கண்ணில் வரைந்துகொள்கிறோம். இன்று அவர்களுக்கு முகங்களை உருவாக்கியிருக்கிறோம். தாடிமீசையுடன் வள்ளுவரும், அடர்ந்த பெரிய மீசையுடன் கம்பரும்.

ஏன்? காரணம் நாம் படைப்பை படிக்கையில் படைப்பாளியுடன் உரையாடுகிறோம் என்பதே. அருவமான எழுத்தாளனுடன் நம்மால் பேச முடிவதில்லை. நமக்கு உருவம் தேவையாகிறது. எந்தக் காரணத்தால் கடவுள்களுக்கு உருவம் அமைந்ததோ அதே காரணத்தால்தான் நாம் கலைஞர்களுக்கும் உருவம் அளிக்கிறோம்.

பெரும் கலைஞர்களின் உருவத்தைப் போற்றுவது உலக மரபு. ஹோமரின் சிலை நமக்குக் கிடைக்கிறது. நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் கோயில்கொண்டிருக்கிறார். புகைப்படக்கலை வந்தபின்னர் இது இன்னும் முக்கியமானதாக ஆகியது. பாரதியின் பாடல்களுக்கு நிகராகவே அவரது தீவிரமான கண்கள் கொண்ட புகைபப்டங்களும் ஆர்யா வரைந்த ஓவியமும் தமிழ் மக்களின் மனதில் பதிந்திருக்கின்றன. அந்த சித்திரங்களே கூட மக்களிடம் உக்கிரமாக உரையாடக்கூடியவையே. அவரது பாடல்களில் இருந்து அந்த முகத்தை பிரிக்க முடியாது

கலைஞனின் உடல் அவனுடைய கருத்துக்களின் பிம்பமாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் அது அவன் சொன்ன அனைத்துக்கும் உரிய குறியீடாக ஆகிறது. ஆகவேதான் நாம் கலைஞனின் உடலை ஆவணப்படுத்துகிறோம். நம் நாட்டில் முறையான ஆவணப்பதிவுகள் அனேகமாக இல்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது. ரவி சுப்ரமணியம் இயக்கிய ‘ எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன், ஜெயகாந்தன் ‘ என்ற ஆவணப்படம் அதில் ஒரு முக்கிய சாதனை.

இந்த ஆவணப்படத்தின் சிறப்பு முறையான சீரான பேட்டி போல அல்லாமல் ஒரு ரகசியக் காமிரா எடுத்தது போல ஜெயகாந்தனை இது பதிவுசெய்திருக்கிறது என்பதே. ஜெயகாந்தன் காமிரா உணர்வே இல்லாமல் ஏதோ நிலையில் பேசிக் கோண்டே இருக்க காட்சி அவரது மாறிக்கொண்டே இருக்கும் முகபாவனைகளை, கையசைவுகளை, உடல்மொழியை பதிவுசெய்தபடி மௌனமாக மாறிக் கோண்டே இருக்கிறது. ஜெயகாந்தனின் ‘மடத்தில்’ பலநாள் சென்றவன் என்ற முறையில் அவரது கொட்டகையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருக்கும் உணர்வை இந்த ஆவணப்படம் உருவாக்குகிறது. இதுவே அதன் வெற்றி.

ஜெயகாந்தனின் விரல்கள் அவர் பேசும்போது செய்யும் அசைவுகளை நானும் கவனித்திருக்கிறேன். அவர் கவனிக்கும்போது அவை ஒன்றுடன் ஒன்று முறுக்குகின்றன. சிந்திக்கும்போது வேகமாக தாளமிடுகின்றன. பேசும்போது அவர் முன்னகர்வதும் ஒரு கருத்து முடிவடைந்ததுமே சற்று தோள் தளர்வதும் உண்டு. மீசையைக் கோதுவது, பக்கவாட்டில் நோக்கியபடி அசைவிழந்து இருப்பது, லேசாக தொடையைத் துள்ள வைப்பது என அவரது நுண்ணிய சலனங்களை இந்த ஆவணப்படத்தில் காணும்போது அவரது அந்தரங்க உரையாடலின் சபைக்கு பல்லாயிரம் பேரை ரவி சுப்ரமணியன் கொண்டு சென்றிருக்கிறார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

ஜெயகாந்தனின் ஆண்மை நிறைந்த சிரிப்பு பல கோணங்களில் அழகுறப்பதிவாகியிருக்கிறது. கோபம் கொப்பலிக்க, நக்கலுடன், கனிவுடன், தனக்குத்தானே என அவர் சிரிக்கிறார். வயதாக ஆக சிரிப்பதற்கான காரணங்கள் பெருகிவருகின்றன போலும். ஓங்கூர் சாமியின் சிரிப்பு அவரிலும் சற்றே தொற்றிக் கோண்டது போலும்.

ஜெயகாந்தனின் கதைகளை கவனிக்கும் வாசகர் அவர் எழுதுவதில்லை, காட்டுவதும் இல்லை, உரையாடுகிறார் என்று உணர்ந்திருப்பார். அதை சொற்பொழிவுத்தன்மை என்று சிலர் சொல்லியதுண்டு. உண்மையில் மேடையில்கூட ஜெயகாந்தன் சொற்பொழிவாற்றுவதில்லை. உரையாடிக் கோண்டே இருக்கிறார். அது பொதுவாக இடதுசாரிப் பணியாளர்களின் இயல்பு. ப.ஜீவானந்தம் பற்றி சொல்லும் சுந்தர ராமசாமி இதை குறிப்பிடுகிறார். சுந்தர ராமசாமியேகூட உரையாடலில் எப்போதும் ஈடுபட்டிருந்தவர்தான்.

ஜெயகாந்தனின் கதைகளுக்குள் ஒலித்த அந்த உரையாடலின் குரலை நாம் பல  வண்ணங்களில் பல அழுத்தங்களில் இந்த ஆவணப்படமெங்கும் காண்கிறோம். சாதாரணமாக பேசியபடியே வந்து சட்டென்று மேலெழுந்து ஓர் தரிசன ஒளியைப் பெறுபவை அவரது சொற்கள். அவரது சிறந்த சிறுகதைகளை தவிர்த்தால் ஜெயகாந்தன் சொல்லிய மன எழுச்சியின் ஒளிபடிந்த அழகிய வரிகளினாலேயே அவர் நினைவுகூரப்படுவார்.

இந்த ஆவணபப்டத்திலும் அத்தகைய பல தருணங்கள் மிக இயற்கையாகப் பதிவாகியிருக்கின்றன. கன்னடர்கள் தங்கள் நாட்டில் தமிழ் படிப்பதை தடை செய்வது, திருவள்ளுவர் சிலையை வைக்க மறுப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயகாந்தன் சொல்லும் பதில் உதாரணம். ‘நாம் கன்னடக் கவிஞனுக்கு சிலை வைப்போம். கன்னடம் பயிற்றுவிப்போம். பெருந்தன்மையும் நல்லியல்பும் என்றால் என்ன என்று நாம் அவர்களுக்குக் கற்பிப்போம்…”

ஜெயகாந்தன் அவ்வாறுதான் சொல்ல இயலும். ‘இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்ய’ மட்டுமே அவரால் சொல்ல இயலும். அவரது வேதம் திருக்குறளே. அது ஒரு மதநூல் போல அவரை ஆட்கொண்டிருக்கிறது. அதன் பின் பாரதி. ஜெயகாந்தனின் சாரம் என்ன என்றால் ‘அவரிடம் உள்ள உண்மையான உள்ளார்ந்த இலட்சியவாத அம்சமே’  என்று நான் பதில்சொல்வேன். அந்த இலட்சியவாதம் குறளைக் கண்டடைந்தது. இந்த ஆவணப்படமெங்கும் நாம் தொடர்ந்து குறளின் ஒலியைக் கேட்கிறோம். அந்த இலட்சியவாதமே அவரை பாரதியின் நீட்சியாக சமகாலத்தில் நிலைநாட்டியது.

ரவி சுப்ரமணியன் அவரிடம் பொதுவாக தமிழ் வாசகர்கள் கேட்க விரும்பு கேள்விகளை கேட்கிறார். பல வினாக்கள் தீவிரமானவை. சில வினாக்கள் சீண்டும் தன்மை கொண்டவை. ஜெயகாந்தன் தனிபப்ட்ட முறையில் சீண்டும் தன்மை கொண்ட கேள்விகளுக்கு மிக நிதானமாக பதில் சொல்கிறார். அவர் திராவிட இயக்கத்துடன் சுயநலத்துக்காக சமரசம் செய்துகொண்டாரா? சங்கராச்சாரியாரை அவர் எப்படி ஆதரித்தார்? அவர் சினம் கொண்டு உறுமுவது சமூகம் சார்ந்த அற்பத்தனங்களையும் போலித்தனங்களையும் பற்றிய பேச்சு வரும்போதுதான். சில இடங்களில் அவரது சொற்கள் உதடசைவாக ஆகும் அளவுக்கு சினம் எழுகிறது.

ஜெயகாந்தனின் சொந்த ஊரான கடலூர், அங்குள்ள கடற்கரை காந்தியவாதியான அவரது தாய்மாமா அவரது குடும்பம் என அவரது அறியப்படாத உலகங்களுக்குள் செல்லும் ஆவணப்படம் அவரது இசையார்வம் , இடதுசாரி அரசியல்மேல் அவருக்குள்ள அழியாத பற்று என பல தளஙக்ளுக்கு விரிகிறது. ஆனால் முதலாளித்துவ ஆதரவாளர் ஆகிவிட்டாரா என்ற வினாவுக்கு ஜெயகாந்தன் ‘மார்க்ஸ் கண்டது பதினெட்டாம் நூற்றாண்டுக்குரிய குரூரமான சுரண்டல் முதலாளித்துவத்தை மட்டுமே. இன்றைய முதலாளித்துவத்தின் நவீன முகங்களை அவர் ஊகிக்கவில்லை’ என்று நேரடியாக விடை சொல்கிறார்.

இளையராஜாவின் பின்னணி இசை இப்படத்துக்கு பெரிய பின்பலம். குறிப்பாக இசை தொடங்கும் இடங்கள் இசையமைப்பாளர் ஜெயகாந்தனை எந்த அளவுக்கு நுட்பமாக புரிந்தவர் என்பதற்கான சான்றுகள். ‘நாம் அசோகரை உருவாக்குவோம். அலக்ஸாண்டர்களாக ஆவதில்லை’ என்று அவர் சொல்லியதுமே இசை பொங்கி எழும் இடம் ஓர் உதாரணம்.

செழியனின் ஒளிப்பதிவு அழகுறக்காட்டுவது, திரையை நிறைப்பது என்ற வேலையை உதறிவிட்டு செயற்கையாக ஏதுமில்லாமல் பதிவுசெய்வது தெரியாமல் பதிவுசெய்ய முயல்கிறது. ஜெயகாந்தனின் கையசைவுகள் போன்றவற்றை உரிய இடங்களில் காமிரா சென்று தொடுவது ஒளிப்பதிவாளர் தன் பணியை அறிந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.

சமீபத்தில் சாகித்ய அக்காதமியின் நிதியுதவியுடன் பல எழுத்தாளர்களைப்பற்றிய ஆவணப்படங்கள் எடுக்கபப்ட்டுள்ளன. போதிய நிதி வசதியுடன் நுட்பமாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முதன்மை பெற்று நிற்கிறது. தயாரிப்பாளரான இளையராஜா நன்றிக்குரியவர்.

[‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ எண்ணம் எழுத்து இயக்கம் ரவி சுப்ரமணியன், ஒளிப்பதிவு செழியன், இசை இளையராஜா, படத்தொகுப்பு: ஆர்.ஜி.பிமனோகர், எல்லோரா ஆவணபப்டங்கள் வெளியீடு]

http://jeyamohan.in/?p=396

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்

http://jeyamohan.in/?p=427

http://jeyamohan.in/?p=428

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

http://www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/20.htm

முந்தைய கட்டுரைசெபாஸ்டின் கவிதைகள்
அடுத்த கட்டுரைகீதை அகம்