இரண்டாவது பகுத்தறிவியக்கம் – கடிதம்

அன்புள்ள ஜெ,

தி ஹிந்து கட்டுரை ‘தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்’ வாசித்தேன். இரண்டாவது மூட நம்பிக்கை காலத்தைப் பற்றி வழக்கம்போல வரலாற்று பின்னணியில் வைத்து ஒரு கோட்டுச் சித்திரத்தை அளித்துள்ளீர்கள்.

நானும் அந்தப் பேராசிரியர் போல என் அனுபவத்தில் சிலரைக் கண்டிருக்கிறேன். உயர்கல்வி கற்றவர்கள். ‘சோதிடம் நியூட்டனின் இயற்பியலின் அடிப்படையில் அமைந்தது. ஏனெனில் நிறைகள் ஒன்றை ஒன்று ஈர்ப்பது போல கிரகங்கள் மனிதனை influence செய்கின்றன.’ மேலும் இ.எம் எனர்ஜி பீல்ட்ஸ் போல என்னென்னவோ சொல்லி ஹீலிங் முறைகளைப் பற்றியும் பேசக் கேட்டிருக்கிறேன்.

/இரண்டையும் புரிந்துகொள்ளாமல் குழப்பிக்கொள்ளும் இன்றைய போலி அறிவியலில் இருந்து தப்ப, இன்னொரு அறிவியக்கம் இங்கே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது பகுத்தறிவியக்கம் அது./ அறிவியல் பற்றிய நம் குழும விவாதங்களில் இதை நோக்கியே பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

தமிழில் உள்ள அறிவியல் நூல்கள் கூட பெரும்பாலும் explanation வகை நூல்களாகவே இருக்கின்றன. இன்னும் தமிழில் அறிவியலின் வரலாறு மற்றும் தத்துவம் பற்றி ஆழமாக எழுதப்படவே இல்லை என்று நினைக்கிறேன். கிடைக்கும் நூல்கள் கூட அரைகுறை முயற்சிகளாகவேப் படுகின்றன. ஒரு global view-ல் எழுதப்படவில்லை. பிற இந்திய மொழிகளில் கூட இருக்காது என்றே ஊகிக்கிறேன். ஒருவேளை பெங்காலியில் இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதை எழுதும் முயற்சியாக சொல்வனம் இதழுக்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரை ‘இயற்பியலும் தத்துவமும்’. கட்டுரையின் மொழியை http://gurunitya.wordpress.com/ தளத்திலுள்ள உங்கள் மொழிபெயர்ப்பு கட்டுரையில்-இருப்பும் அறிதலும்- இருந்து பெற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். இந்தக் கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்தை எழுத வேண்டுகிறேன்.

அன்புடன்
ராஜா.

அன்புள்ள ராஜா

அக்கட்டுரையை நான் முன்னரே வாசித்திருந்தேன். முக்கியமான கட்டுரை. தமிழில் அச்சுபிச்சு நகைச்சுவைகள் இல்லாமல் எழுதப்படும் எல்லா அறிவியல்கட்டுரைகளையும் நான் ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.

அறிவியலும் தத்துவமும் சந்திக்கும் புள்ளி என்பது முன்னூகங்களை உருவாக்கிக்கொள்ளும் இடம்தான். இந்த எல்லையற்ற பிரபஞ்சவெளியை நோக்கி வினாக்களை எய்து விடைகளாக சிலவற்றை உருவகித்துக்கொள்ளும் தருணம். அதன்பின் அறிவியல் தன் தர்க்கத்தின் பாதையை மேற்கொள்கிறது. தத்துவம் தன்னுடைய தர்க்கத்தின் பாதையை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று எப்போதுமே கொள்ளல் கொடுத்தல் உறவையே கொண்டுள்ளன என்று நினைக்கிறேன். அந்த தளத்தை உங்கள் கட்டுரையும் வெளிப்படுத்தியிருந்தது

ஜெ

முந்தைய கட்டுரை’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்
அடுத்த கட்டுரைஇந்தியச் சமூகத்தின் அறம் எது? -இமையம்