இரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள்

அன்புள்ள ஜெ:

நலமா?

அண்மையில் வேலை விஷயமாக மும்பை சென்றேன். அங்கிருந்து மறுபடியும் ரயிலில் முப்பது மணி நேரம்  பயணம் செய்து  சென்னை வர அலுப்பாக இருந்ததால்  அப்படியே  கோவா,  உடுப்பி,  மாஹே,  குதிரேமுக் மற்றும் ஷிமோகா சென்று சென்னை திரும்பினேன். அதில் குதிரேமுக் மிக அமைதியான இடம்.  காட்டுக்குள் ஒரு மிக அழகான குளம் . கண்ணாடி போல நீர். பல வர்ண மீன்கள் ஒட, சுற்றிலும் அடர்ந்த காட்டின் பேரோசை. 

பயணத்தில் , அதன் இடைவெளிகளில், விஷ்ணுபுரம் முழுவதுமாக படித்தேன். அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும். பிங்கலனும் திருவடியும் சங்கர்ஷணனும் மற்ற சிறு பாத்திரங்களும் (யோகவிரதர் மற்றும் தலையில் தேங்காய் விழுந்து இறந்து போன லாமா பிட்சு!) என்னில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

நான் வெகு காலம் விஷ்ணுபுரத்தை படிக்காமல் சும்மா வைத்திருந்த்தேன். அலுவலகப் பயண நேரத்தில் ஒரு நாற்பது பக்கங்கள் படித்தேன். பிறகு  என் எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ள புத்தகம் என்று கற்பனை செய்து கொண்டு அதை வேளை நடுவில் எல்லாம் சர்வசாதரணமாக படிக்கக் கூடாது என்று எண்ணினேன். பிறகு இப்பொழுது தான்  படித்து முடித்தேன்.

மிஞ்சுவது என்னவோ பெருமூச்சே. நாவல் முடிவதும் அவ்வாறே. பெரும் படைப்புகள் எல்லாம் ஏன் பெருமூச்சுடனே முடிகின்றன?

*-*-*

என் நண்பர்களுக்காக தமிழ் இலக்கியம் குறித்தும் தங்களின் படைப்புகள் குறித்தும் இரு ஆங்கில பதிவுகள் எழுதியுள்ளேன். சில நண்பர்களுக்கு தமிழ் தெரியாது. சிலருக்குத் தெரியும். ஆனால் ஆங்கில இலக்கியதில் மட்டும் ஆர்வம். அவர்களுக்காக எழுதிய பதிவுகள் இவை. சற்று அவசரமாக எழுதிய நீண்ட பதிவுகள் இவை:

http://themonkeymeditates.blogspot.com/2008/05/student-asked-zen-master-master-when.html

http://themonkeymeditates.blogspot.com/2008/05/dance-of-prajna-and-karuna.html

தகவல் பிழைகள் இருப்பின் அவை என் தவறுகளே. மற்ற சில அறிவுத்துறைகள் பற்றி ஆரம்பித்து அதை இணைத்து தங்கள் நாவல்கள் பற்றி எழுதியுள்ளேன். இந்த முறை சரியான  ஒன்றா? அதே போல் ஒரு நாவலைப் பற்றி எழுதும் போது அதன் கதைக்கரு மற்றும் கதைஓட்டத்தை பற்றி எழுதுவது சரியா?

இதே போல் மற்ற சில பதிவுகள் (ஆங்கிலத்திலும் மற்றும் தமிழிழும்) எழுத விருப்பம்.

தங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன்,
அர்விந்த்
 

அன்புள்ள அரவிந்த்,

தங்கள் இணையப்பதிவுகளைக் கண்டேன். நான் வாசித்தவரை பெரிய படைப்புகள் வாழ்க்கையின் அர்த்தமின்மையைப்பற்றிய ஓர் நிறைவுணர்வையே ஏற்படுத்துகின்றன. நூற்றுக்கிழவனுக்கு ஏற்படும் சலிப்பு நிறைந்த முழுமையுணர்வை. குறிப்பாக தல்ஸ்தோய், தாமஸ் மன்… நாவல்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக தொகுத்துச் சொல்கின்றன. ஒரு வாழ்க்கையை கற்பனையில் நாம் வாழ்ந்து முடித்த அனுபவத்தை அளிக்கின்றன. அப்படி அளித்தால்தான் அது நல்ல நாவல். அந்த அனுபவத்தை சற்று கழித்து நாம் நம் சொந்த அனுபவங்களால், நம் சிந்தனையால் பகுத்து அறியவும் தொகுத்துக் கொள்ளவும் முயல்கிறோம். அச்செயல் வழியாக நாம் அந்நாவலைக் கடந்து செல்கிறோம். அதற்கு பல காலம் பிடிக்கலாம்.

உங்கள் இணைய தளக் கட்டுரைகளை வாசித்தேன். காடு, ஏழாம் உலகம் பற்றிய பதிவுகள் நுண்மையானவையாக அழகிய மொழியில் சொல்லப்பட்டுள்ளன. அந்நாவல்கள் மேலான உங்கள் ஈடுபாடும் கூர்ந்த வாசிப்பும் அவற்றை உங்கள் அனுபவமாக விரித்துக்கொள்ள எடுத்துக் கொண்டுள்ள முயற்சியும் தெரிகிறது. ‘நான்?’என்று கேட்கும் [அஹம்!] பறவை விஷ்ணுபுரத்தில் ‘ஏன்?’ [கா?] என்ற்கிறது.

ஒரு நாவலின் தளங்கள் பலவகைப்பட்டவை. அதன் கதையோட்டம் மூலம் வெளியாகும் வாழ்க்கைச்சித்திரம் ஒருவருக்கு நெருக்கமாக இருக்கலாம். அதன் சாரமான தேடல் இன்னொருவருக்கு நெருக்கமானதாக இருக்கலாம். அதன் மீதான நம் வசிப்பையே நாம் முன்னிறுத்தவேண்டும். நீங்கள் தொடர்ந்து எழுதுவது தமிழுக்கு முக்கியமானது. உங்கள் நோக்கில் உள்ள ஆழமான தீவிரம் பொதுவாக தமிழில் குறைவு. அரசியல் நோக்கே இங்கே அதிகம். அதைவிட எழுதுவது உங்கலுக்கு நல்லது. அது உங்கள் தேடலை கூர்மைபப்டுத்தும். மன ஓட்டங்களை கோர்வையாக்கும். ஆழமான நித்யமான ஆனந்தம் ஒன்றை உங்களுக்கு அளிக்கும்.

உங்கள் தளத்தின் தலைப்பு அழகானது. குரங்கு நிலையின்மையின் அடையாளமாக நம் தியானமரபில் நெடுங்காலமாகச் சொல்லபப்ட்டு வருவது.

ஜெயமோகன்

********

அன்புள்ள நண்பர் வ.மணிகண்டன்

கவிதை அரங்கை நீங்கள் குறிப்பெடுத்ததைப் பார்த்தபோதே எழுதுவீர்கள் என நினைத்தேன். எழுதும் குறிப்புகள் சிறப்பாக உள்ளன. நன்றி. பேசபப்டும் கவிதைகளுக்கு இணைய இணைப்பு அளிக்கவும்.

http://pesalaam.blogspot.com/2008/05/1.html

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைமன்மோகன்சிங்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபிறர் பார்வைகள்:சில சுட்டிகள்