இரண்டுவகை வரலாறுகள்

வணக்கம் திரு.ஜெயமோகன்,

உங்களுடன் முதல் முறை தொடர்பு கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பற்றிய சிறு அறிமுகம் – என் பெயர் ராஜ் ஜெயராமன் (முழு பெயர் தியாகராஜன் ஜெயராமன்). எனது பூர்வீகம் காஞ்சிபுரம். தற்பொழுது கொலம்பஸ், ஒஹயோ, அமெரிக்காவில் வசித்து வருகிறேன். மென்பொருள் துறையில் இருக்கிறேன்.

பொதுவாக எனக்கு இலக்கிய பரிச்சயம் குறைவு. வார பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்து, சில தமிழ் மற்றும் ஆங்கில நாவல்களுக்கு பிறகு பிறகு ஒரளவிற்கு வேதாந்த நூல்கள், உலக ஆன்மீக தரிசனங்கள், பகவத் கீதா தொடர்பாக படித்தேன்.

முதல் முக்கியமான இலக்கிய அறிமுகம் உங்களது வலை தளம் தான் – 2010இல் இருந்து படித்துக்கொண்டு வருகிறேன். உங்களது புத்தக வடிவ படைப்புகளில் – அறம் வரிசையில் சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், வணங்கான் – இன்று படித்தாலும் என்னை நெகிழ செய்பவை. விஷ்ணுபுரம் ஞான சபை விவாதங்கள் படித்து சிலாகித்தேன். விஷ்ணுபுரத்தை இன்னும் நான் அசை போட்டுக்கொண்டே இருக்கிறேன், இது நான் வளர வளர என்னுடன் தங்கி வளர்கிறது. ஹிந்து மதத்தின் ஆறு தரிசனங்கள் மிக அருமை.

உங்களின் ஆன்மீக கட்டுரைகள் எனக்கு பல திறப்புகளை தொடர்ந்து கொடுத்து கொண்டு இருப்பவை. மதம், கலாச்சாரம், சடங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய உங்கள் பார்வை என்னை வியக்க வைக்கிறது. நான் எனது சிறு வயதில் வீட்டுப்பெரியவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு இப்பொழுது விடை கிடைத்து இருக்கின்றது. நீங்கள் எழுதுவதில் பெரும்பாலும் ஒரு வகையில் ஆன்மீக சாரம் இழையோடுவதாகவே எனக்குப்படுகிறது. ஒருவனின் சுய உச்சத்தை அடைய தூண்டுதலும், இந்த பிரபஞ்சத்தை வியப்புடன் பார்க்கும் மன இயல்பிற்கும் வழி காட்டுகிறது. அறிந்து கொள்வது பேரின்பம்

இரு கேள்விகள்:

1) வரலாறு – எது உண்மை எது பொய் என்று அறியவே முடியாத ஒன்று அல்லவா இது? ஓரு மேலோட்டமான சித்திரம் கிடைக்க இது உதவலாமே தவிர, இதை வைத்துக்கொண்டு எதையும் ஸ்திரமாக நிறுவ முயல்வது, தர்க்கம் செய்வது, தேசிய/இன/குல சிறுமை/பெருமை பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இது அறிவு தளத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படுவதற்கும் நீடிப்பதற்கும் என்ன தகுதி இருக்கிறது?

2) உலக அரசியலிலும் மதத்திலும் இந்த நம்பிக்கை சார்ந்த வரலாறு ஏற்படுத்திய அளவிற்கு வேறெந்த துறையும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பது எனது கருத்து. இந்த (பெரும்பாலும் கட்டுவிக்கப்பட்ட) வரலாறு மனிதனின் கூட்டு-மன காம குரோதத்தின் ஒரு தந்திரமாக இருப்பதால் தான், பழங்குடி முதல் நவீன ஜனநாயகம் வரை ஒரு பொது சமுதாய ‘எதிரி’ எப்பவும் தேவை படுகின்றதா? இப்படி மட்டும் தான் மனிதக்கூட்டம் திரள முடியுமா? அறம் என்பது எப்பவும் முட்டி மோதி அடைவதாக மட்டுமே இருக்கும் ஸூக்ஷுமம் என்ன?

உங்களது நேரத்திற்கு நன்றி.

-ராஜ் ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்,

வரலாற்றைப்பற்றிய சோர்வையும் நம்பிக்கையையும் பெரும்பாலும் எல்லா அசல் சிந்தனையாளர்களும் மாறிமாறி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வரலாறு பற்றி இன்று நிலவும் அத்தனை அவநம்பிக்கைகளையும் ஒட்டுமொத்தமாகக் கூரிய முறையில் வெளிப்படுத்தியவர் நீட்சே.

மலையாளவிமர்சகர் சச்சிதானந்தன் ஒருமுறை எழுதினார். கேரளத்தில் இடதுசாரிகள் அல்லாதவர்களால் அதிகம் மேற்கோள்காட்டப்பட்ட சிந்தனையாளர் நீட்சேதான் என. நீட்சே வரலாறு என்று நாம் சொல்லும் அனைத்தையும் நிராகரிக்கிறார். குலமரபு வரலாறு தவிர பிற அனைத்துமே அதிகாரநோக்குடன் உருவாக்கப்படும் புனைவுகள் என்கிறார்.

ஆக இரண்டுதரப்புகள் இங்கே உள்ளன. மார்க்ஸியத்தின் ஆதாரமான நம்பிக்கையே வரலாற்றுவாதம்தான். வரலாற்றைத் தொகுத்து தர்க்கபூர்வமாக அடுக்கி அடையும் புரிதல்களை கோட்பாடாக முன்வைப்பதையே வரலாற்றுவாதம் என்ன்கிறோம்.மார்க்ஸியம் வரலாற்றை தன்பார்வையில் தொகுத்துமுன்வைத்தபடியேதான் இருக்கிறது

மார்க்ஸியத்தை நிராகரிப்பவர்களில் மிகச்சிலரே வேறுவகையான வரலாற்றுவாதம் நோக்கிச் செல்கிறார்கள். மற்றவர்கள் வரலாற்றுவாதத்தையே நிராகரிக்கிறார்கள். வரலாறு எந்த நியதியும் சாரமும் அற்றது என்றும் நாம்தான் அதில் அவற்றையெல்லாம் நம் வசதிக்காக ஏற்றிக்கொள்கிறோம் என்றும் வாதிடுகிறார்கள். இந்திய அறிவுச்சூழலில் இன்றுவரை நடந்துகொண்டிருப்பது இநத இரண்டுதரப்புகள் நடுவே உள்ள விவாதம்தான் என சுருக்கமாகச் சொல்லலாம்

நீங்கள் பேசுவது அந்த இரண்டாவது குரலையே. திரும்பிப்பார்த்தால் வரலாற்றைக்கொண்டு ‘பிறரை’ கட்டமைத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் வெறுப்பை குவித்து அதை ஓர் அதிகாரகருவியாக ஆக்கியிருக்கிறார்கள். வரலாறுவழியாக அழிவுதான் உருவாகியிருக்கிறது, ஆக்கமல்ல, வரலாறற்ற தன்மை என்பது ஒரு பெரியவிடுதலை என்ற உங்கள் எண்ணம் எழுவதும் உண்மையே.

என் இளமையில் நான் பின்தொடர்ந்த நவீன இலக்கிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நம்பிக்கையை கொண்டிருந்தவர்களே. ஆற்றூர் ரவிவர்மா, பி/கெ.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி… என்னுடைய எண்ணங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் நித்ய சைதன்ய யதி. மேலைத்தத்துவ அறிஞரான நித்யா நீட்சேயை பெரிய மரியாதையுடன் நிராகரிப்பவராக இருந்தார்.

என் தரப்பை சுருக்கமாக இபப்டிச் சொல்கிறேன்.மானுடகுலமெங்கும் நாம் காணும் ‘பிறன் உருவாக்கம்’ அதன் மூலம் வெறுப்பு குவிக்கப்பட்டு அரசியலாயுதமாக ஆக்கப்படுதல் வரலாற்றின் மூலம் நிகழ்வதல்ல. நாம் நம் பார்வையில் வரலாறற்றவர்கள் என்று சொல்லத்தக்க பழங்குடிகள் அனைவரிடமும் உள்ளது அந்த மனநிலை. பழங்குடிகளின் வரலாறென்பதே ‘நாம் X பிறர்’ என்னும் இருமையைக் கட்டமைப்பதாகவே உள்ளது.

அதன்பிறகுள்ள மானுட வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமென்றால் இருபோக்குகள் அதிலுள்ளன. அந்த ஆதிப்பழங்குடிமனநிலையை பிரம்மாண்டமாக ஆக்கிக்கொள்ளும் வரலாற்றெழுத்து ஒரு சரடு. அதுவே பெரும்பாலும் பெரும்போக்காக உள்ளதென்பதையும் நான் மறுக்கவில்லை.

ஆனால் கூடவே நேர் எதிரான ஒரு வரலாற்றெழுத்துமுறையும் உள்ளது. அது நாம் Xபிற ர் என்ற இருமையைத் தொடர்ந்து கரைத்தழிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கியதாக வரலாற்றை உருவாக்கிக்கொள்கிறது. விரிந்துகொண்டே செல்கிறது.

இவிரு வரலாற்றெழுத்துமுறைகளும் ஊடும் பாவுமாக ஓடி நெய்த வரலாற்றைத்தான் நாம் வரலாறு என்று இப்போது பயின்றுவருகிறோம். இந்தவகையான தொகுக்கும் வரலாற்றெழுத்து, ஒருங்கிணைக்கும் வரலாற்றெழுத்து நிகழாத நிலப்பகுதிகள் பிரம்மாண்டமான இனக்குழுக்குவியல்களாக மட்டுமே எஞ்சுகின்றன. அவர்களுக்குள் உள்ள பேதங்களை களையமுடியவில்லை. அழிவுகளை தடுக்கமுடியவில்லை. பல ஆப்ரிக்க நாடுகளை உதாரணமாகச் சொல்லலாம்

அனைத்து ‘தேசிய’ வரலாற்றெழுத்துமுறைகளும் அவ்வகையில் முற்போக்கானவையே. அவை பிரிந்து போரிட்டுக்கிடக்கும் மக்கள்திரளை ஒன்றாக்குகின்றன. தேசங்களை கட்டி எழுப்புகின்றன. சங்ககாலத் தமிழகம் வேளிர்களும் குறவமன்னர்களும் கடற்சேர்ப்பர்களும் போரிட்டு அழிந்துகொண்டிருந்ததைக் காட்டுகிறது. அவர்களில் முடியுடை மூவேந்தர்களை உருவகித்த வரலாற்றெழுத்து ஆக்கபூர்வமான விளைவையே உருவாக்கியது. அம்மூவேந்தரையும் ‘தமிழ்மன்னர்கள்’ என்ற பொதுமைக்குள் கொண்டுவந்த சிலப்பதிகாரத்தின் வரலாற்றெழுத்து மேலும் முற்போக்கானது.

இந்த தேசியவரலாறுகளின் வளர்ச்சிப்போக்கில்தான் உலகளாவிய வரலாற்றெழுத்து உருவானது. உலகத்தை, மானுடகுலத்தை ஒரேவரலாற்றுப்பரப்பாக எழுதுவதென்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்தது. இருபதாம்நூற்றாண்டில்தான அது பரவலாக ஏற்கப்பட்டது. இன்று யோசிக்கையில் மனிதகுலம் உருவானபிறகு நிகழ்ந்த மாபெரும் அறிவுப்புரட்சிகளில் ஒன்று அது என தோன்றுகிறது.

இவ்வாறு வரலாற்றைத் தொகுத்து எழுதுவதன்மூலமே நாம் பேதங்களை மறந்து ஒன்றாக உணர ஆரம்பிக்கிறோம். நேற்றை திரும்பிப்பார்த்தால் ஒன்று தெரியும், இந்தக்காலம் அளவுக்கு பாதுகாப்பான, இனிய காலகட்டம் மனித வரலாற்றில் முன்பு எப்போதுமே இருந்ததில்லை. இந்த இடத்தை நாம் வந்தடைய நமக்கு உதவியது நாடு என்ற பிரக்ஞை, உலகம் என்ற பிரக்ஞை.

இந்த வரலாற்றுணர்வை உருவாக்குவதற்கு அத்தனை இலக்கியமேதைகளும் தத்துவஞானிகளும் பங்களிப்பாற்றியிருக்கின்றனர். தல்ஸ்தோயும் அரவிந்தரும் காந்தியும் ரஸ்சலும் எல்லாம் இணைந்து உருவாக்கிய பிரக்ஞை அல்லவா இது?

ஆகவே நம் முன் இரண்டு வகை வரலாற்றெழுத்துகள் உள்ளன. ஒன்று பிரிவுபடுத்தும் வரலாற்றெழுத்து. இன்னொன்று இணைக்கும் வரலாற்றெழுத்து நான் இரண்டாவது வரலாற்றெழுத்தை நம்புகிறவன். அதை ஒட்டி நிற்பவன். அதுவே மனுக்குலத்தை உருவாக்கிய அடிப்படை பிரக்ஞை என நினைப்பவன்.

நான் இனக்குழுவரலாற்றைவிட தேசியவரலாற்றை ஏற்பேன். தேசியவரலாற்றை நான் நிராகரிப்பது அது மானுடவரலாறின் முன்பு வைக்கப்படும்போதுதான். பிறனை உருவாக்கும் எந்தவரலாற்றுக்கும் எதிரானவன்

ஆகவே ஒட்டுமொத்த வரலாற்றுநிராகரிப்பு நோக்கு எனக்கு உடன்பாடானதல்ல. அது ஒரு சோர்வுநோக்கு.

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளையானை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்