கடைசிக்கண் – கடிதம்

அன்புள்ள ஜெ,

கடைசிக்கண் மொழியில் கொஞ்சம் முயற்சிக்குறைவு தெரியும்படி இருந்தாலும் இவ்வரிசைக் கதைகளில் முக்கியமானது. ஆஸ்பத்திரி என்பது நவீன இலக்கியத்திலே முக்கியமான ஒரு களம். மரணமும் வலியும் நிறைந்த இடம். அந்த இடத்தில் மனிதனின் பெருமையும் சிறுமையும் இயல்பாக வெளிப்படுகின்றன. ஆஸ்பத்திரியை விஜய்சூரியன் அருமையாக எழுதியிருக்கிறார்.

இரண்டுவகையிலே அதை எதிர்கொள்ளக்கூடிய இரண்டு மனிதர்கள். அப்பா, மகன். அப்பா வாழ்க்கை முழுக்க வன்முறையும் சுயநலமுமாக அலைந்தவர். எந்த நல்லியல்பும் இல்லாதவர். எதையுமே மறுபரிசீலனை செய்யாதவர். அவருடைய மகனாகப் பிறந்த காரணத்தாலேயே கருணையும் நெகிழ்ச்சியும் கொண்டவன் மகன்.

அப்பா கடைசிக்கணம் வரை கருணையை உணரவில்லை. ஆனால் அவரது கடைசிக்கணத்தில் அவரது கண் மகன் வழியாகக் கருணையைப் பார்த்துவிட்டது. அந்த மந்திரக்கணத்தை மெய்சிலிர்க்கும்படிச் சொல்லிவிட்ட காரணத்தால்தான் இது ஒரு நல்ல கதை. மற்றபடி இதன் நடையையும் விவரிப்பையும் எல்லாம் ‘அமெச்சூர்’ தனமானது என்றுதான் சொல்லுவேன்.

அந்தக்கணத்தில் அப்பா செத்துப்போனாலும் அவரது கதை முடியவில்லை என்று நினைத்தேன். அவர் அந்தக்கணத்திலே கண்டுகொண்டது என்ன? அவருக்குள் இருக்கக்கூடிய கருணையையா? அவரது மகன் அவருடைய ஒரு துளிதானே? ஒருநாள் கூட உணராத ஒரு பெரிய விஷயம் தனக்குள் இருந்ததை அவர் உணர்ந்துகொண்டாரா?

அதேபோல் இந்தப்பையன் எப்போதாவது அவரது கண்ணை உணர்ந்துகொள்வானா? அதெல்லாம் அதிகப்படியான சிந்தனைகள். ஆனால் அந்த சிந்தனைகளைக் கதை அளிக்கிறதென்பதே பெரிய விஷயம்தானே.

விஜய் சூரியனின் முதல்கதை இது என்றால் மிகவும் பாராட்டுக்குரியவர்.

சண்முகம்

முந்தைய கட்டுரைவிரிவடையும்போது வளர்தல்
அடுத்த கட்டுரை‘சீர்மை ஒரு கிளாஸிக்’ – கடிதங்கள்