நூறுநிலங்களின் மலை – 4

எங்கள் பயணம் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியின் அதிகம் அறியாத உச்சிமலைச் சமவெளிகளை, பனிச்சிகரங்களை, ஆழ்மலையிடுக்குகளை உத்தேசித்து திட்டமிடப்பட்டது. மிகவிரிவான திட்டமும், அதிகாரத் தொடர்புகளும் இன்றி இப்பகுதிகளுக்குச் செல்ல முடியாது. ஸன்ஸ்கர் சமவெளி போன்ற பகுதிகள் சமீபகாலம் வரையில் முழுமையாக ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருந்தன. சாகசச்சுற்றுலாவுக்கு அவை திறக்கப்பட்டது இப்போதுதான். ஆகவே அனேகமாக தமிழில் அப்பகுதியை சென்று கண்டு எழுதப்படும் முதல்குறிப்புகள் இவையாக இருக்கலாம்.

சாகசச்சுற்றுலாவுக்கு இப்பகுதியைத் திறந்துவிடுவதில் அரசுக்கு ராஜதந்திரநோக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லலாம். இவை ஐரோப்பியர் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளாக ஆகும்தோறும் இவற்றின்மீதான சர்வதேச அக்கறை அதிகரிக்கிறது. அது இந்திய நலன்களுக்குச் சாதகமானது. மேலும் பெரும் பொருட்செலவில் இச்சாலைகளைப் பராமரிக்கும் ராணுவத்தின் பணத்தில் பெரும்பகுதி திரும்பக்கிடைக்கிறது. ஆனால் அரசு இங்கே இந்திய நடமாட்டத்தை ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. எங்கள் பயணத்தில் நாங்கள் எங்களைத்தவிர பிறரை அபூர்வமாகவே கண்டோம்.

ஸுரு-ஸன்ஸ்கர் சமவெளி இன்றும்கூட சுற்றுலாவுக்குரியதல்ல. நல்ல உடல்நலமும், சாகஸங்களில் உண்மையான ஆர்வமும், நிலக்காட்சிகள் மீது பித்தும் கொண்டவர்கள் மட்டுமே இங்கே பயணம் செய்யமுடியும். ஆகவே நான் எவரையும் பொதுவாக இங்கே செல்லும்படி சிபாரிசு செய்யமாட்டேன். காரணம் உணவு தண்ணீர் முதலியவை கிடைப்பதில்லை. மனித அசைவே பெரும்பாலும் கிடையாது. மிகமிக அபாயகரமான சாலை. வண்டி பழுதானால் அதற்கு அடுத்த கணத்து வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க அதிருஷ்டத்தை நம்பியதுதான்.

ஆனால் எல்லாம் சரியாக அமைந்தால்கூட முக்கியமான ஒரு சிக்கல் உண்டு.காஷ்மீரை விட்டு மேலே ஏற ஏற காற்றில் ஆக்ஸிஜன் குறைவு. ஆகவே மூச்சுத்திணறலும் தலைவலியும் வரும். எனக்கு தலைவலி வரவில்லை. ஆனால் நுரையீரல்மீது ஒரு இரும்புச்சட்டையை போட்டுவிட்டதுபோல ஒரு கனம், பிடிப்பு இருந்துகொண்டே இருந்தது. பத்தடி நடந்தால்கூட வாய்வழியாக மூச்சுவிட்டு குனிந்து நின்றுவிடவேண்டும். எத்தனை மூச்சுவிட்டாலும் போதாது.

ஒரே வழி மாணவர் ராணுவப்பயிற்சிகளில் கற்றுக்கொடுப்பதுதான். நெஞ்சை நன்றாக நிமிர்த்தி ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வைத்திருந்து வெளியே தள்ளினால் அந்தப் பிடிப்பு குறையும். வாயால் பலமுறை ஆழமாக அதைச்செய்யும்போது ஏற்படும் நிம்மதியை அனுபவிப்பதற்காகவே அந்த மூச்சுத்திணறலை வரவேற்கலாம் என்று திரும்பிவந்தபின் தோன்றுகிறது. ஆனால் சிறிய அளவில் இதயநோயோ உயர் ரத்த அழுத்தமோ உடையவர்களுக்குக் கூட இப்பகுதி மிக அபாயகரமானது. அதை ஆரம்பத்தியிலேயே எச்சரித்துவிடுகிறார்கள்.

கிருஷ்ணனுக்கும் கிருஷ்ணராஜுக்கும் மூச்சுத்திணறலுடன் தலைவலியும் இருந்தன என்றார்கள்.. ஒருகோப்பை குளிர்ந்த நீரைக் குடித்தால் உடனே அந்தத் தலைவலி நின்றுவிடும். அரைமணிநேரம் தாக்குப்பிடிக்கலாம். மீண்டும் தாக்கும். என் உடல்நிலை எச்சிக்கலும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்துகொண்டேன். குழுவிலேயே தேவதேவனுக்கு அடுத்தபடி நான்தான் மூத்தவன்.

விடுதியறையில் இரவில் எனக்கு சரியாகத் தூக்கமில்லை. ஒன்பது மணிக்கு படுத்ததுமே தூங்கிவிட்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கு விழித்துக்கொண்டேன். அதன்பிறகு இரண்டுமணிநேரம் மூச்சுத்திணறல், குளிர் நடுக்கம். தூக்கமில்லாமல் படுத்திருக்கையில் அந்த இரவு நீண்டு நீண்டு சென்றுகொண்டே இருப்பதுபோல் தோன்றியது. நினைவுகூர வேண்டியவர்களை முழுக்க நினைவுகூர்ந்து கற்பனை செய்யவேண்டியவற்றை முழுக்க கற்பனைசெய்து சலித்து நேரத்தைப்பார்த்தால் ஒருமணிநேரம் கூட தாண்டியிருக்கவில்லை. இப்படியே விடியப்போகிறது என நினைத்திருக்க எப்போதோ தூங்கிப்போனேன்.

காலையில் எழுந்து குளித்து வெயில் எழுவதற்குள்ளேயே கிளம்பினோம். எங்கள் இலக்கு ஸுரு சமவெளியைத்தாண்டி ஸுரு சமவெளி வழியாக பென்ஸீலா கணவாய் வழியாக படும் என்ற இடம் வரை செல்வது. இந்திய எல்லை அங்கே முடிகிறது. அது ஒரு ராணுவமையம். அதற்குமேல் அனுமதி கிடையாது. உண்மையில் அந்த மலைச்சாலை ராணுவநோக்கத்துக்காகப் போடப்பட்டது. பெரிய சக்கரங்களும் உயரமான அடிப்பக்கமும் கொண்ட ராணுவ டிரக்குகள் அங்கே பெரிய சிக்கலில்லாமல் செல்லமுடியும். நாங்கள் கிளம்பிய சிலநிமிடங்களிலேயே அந்தச்சாலையில் மணிக்கு பத்துகிலோமீட்டர் வேகத்திலேயே செல்லமுடியும் என்று கண்டுகொண்டோம்.

மிக அபாயகரமான சாலை. கூழாங்கற்கள் பரவிய மெல்லிய மலைக்கீறல் என்று அதைச் சொல்லலாம். ஒருபோதும் சுற்றுலாப்பயணிகளை அந்த சாலைவழியாகப் பயணிக்க ஆலோசனை சொல்லமாட்டேன். பிரச்சினைகளுக்குத் தயாரான மனம் கொண்டவர்களுக்கானது அது. நான் எப்போதும் இத்தகைய அபாயங்களை பொருட்படுத்துபவன் அல்ல. ஆனால் இம்முறை அஜிதன் கூடவே இருந்தான். அது ஒரு படபடப்பை அளித்தபடியே இருந்தது.

வழியில் ஓர் ஓடையை தாண்டவேண்டியிருந்தது. வண்டியில் இருந்து இறங்கி ஓடையை பாறைகள் வழியாக குதித்தும் நீரில் முழங்கால்வரை நனைந்துகொண்டும் தாண்டினோம். பனியுருகிய நீரில் கால்பட்டபோது முதலில் ஒரு மரத்தல். கால்சதை ரப்பராக மாறியதுபோல. பின்பு நரம்புகள் வழியாக ஓர் உளைச்சல் படர்ந்தேறியது. முழங்கால் வரை நரம்புகள் நீலம் பாரித்து புடைத்துவிட்டன. ஓட்டுநர் வண்டியை நீரில் இறக்கி மறுபக்கம் கொண்டுவந்தார். கவிழ்ந்துவிடப்போவதுபோல சரிந்தும் அசைந்தும் மறுபக்கம் வந்து நின்றது வண்டி.

.

மலைகளைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம். ஸ்ரீநகரில் இறங்கியது முதலே மலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மலைகள் சலித்துப்போக வேண்டும். ஆனால் ஒவ்வொரு மலையும் ஒரு புதியமனிதரைப்போல இருந்தது. வடிவங்களின் முடிவிலி. வழிந்தோடிய நிலையில் நிலைத்துப்போனவை. சரிந்துவிழப்போன நிலையில் பிரமித்தவை. அள்ளிக்குவிக்கப்பட்டவை. நேர்வெட்டாக வெட்டி விலக்கப்பட்டவை. விரல்களால் அளையப்பட்டவை. பிசைந்து உருட்டி வைக்கப்பட்டவை. பிய்த்து எடுக்கப்பட்டு எஞ்சியவை.

மலையடிவாரங்கள் உருகிச்சென்ற பனியால் அரிக்கப்பட்டு விதவிதமான சிலைவடிவங்களை அமைத்திருந்தன. நான் அமெரிக்காவில் கிராண்ட் கான்யன் ஆற்றுப்படுகையில் கண்டதுபோல ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்ட கூம்புகள். மண்கோபுரங்கள். கஜூராஹோ ஆலயங்களில் உள்ளதுபோன்ற கோபுரங்களால் ஆன கோபுர வடிவங்கள். வெயிலின் கோணம் மாறுபடும்தோறும் கோபுரங்கள் மாறிக்கொண்டே இருந்தன. சில புன்னகைக்கும் முகங்கள். சில தியானத்திலாழ்ந்த தலைகள். மலைகளின் பக்கவாட்டில் நீண்டு சரிந்த நிழல்களின் குளிரை இங்கிருந்தே உணரமுடியும் போலத் தோன்றியது.

மலைகள் எழுப்பும் கற்பனைகளுக்கு அளவே இல்லை. அந்த மலைக்குவியல்களில் அனேகமாக எவற்றிலும் மனிதக்காலடிகள் பட்டிருக்க வாய்ப்பில்லை. மலையிடுக்குகளின் இருண்ட ஆழங்களில் இன்னும்கூட மானுடம் அறியாத மர்மங்கள் இருக்கலாம். வினோத மிருகங்கள். விசித்திரமான கனிமங்கள். கற்பனையில் அந்த மலையிடுக்குகள் வழியாக ஏறிச்சென்று இருண்டு குளிர்ந்த இடுங்கிய வழியில் நடந்தேன்.

ஸுரு சமவெளி இமயமலையின் நன்கு பாதுகாக்கப்பட்ட அழகிய ரகசியங்களில் ஒன்று என சுற்றுலாத்துறை விளம்பரம் செய்கிறது. உண்மையிலேயே கடுமையான தேடல் கொண்டவர்கள் மட்டுமே அங்கே சென்றுசேர முடியும். ஸூரு ஆறு மேலும் மேலும் கடுமையானதாக ஆனபடியே வந்தது. அதன் ஒலி அருவியொன்று பக்கத்தில் கொட்டுவதுபோலக் கேட்டுக்கொண்டிருந்தது. ஆற்றின் இருபக்கமும் விரிந்த புல்வெளியின் பச்சைக் கதுப்பு மீது வால்களை உதறியபடி குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. வெள்ளைக்குதிரைகள், கரியகுதிரைகள், மாந்தளிர் நிறம் மின்னும் குதிரைகள்.

இங்கே கோடைகாலம் தொடங்கி பனி உருக ஆரம்பித்ததும் குதிரைகளையும் மாடுகளையும் கொண்டு நிலங்களை உழுது பயிரிட்டுவிடுகிறார்கள். அதன்பின் குதிரைகள் முழுமையாகவே அவிழ்த்து விடப்படுகின்றன. அவை மேய்ந்து உடலைப்பெருக்கிக் கொள்கின்றன. மக்கள் புல்லை வெட்டி வெட்டி வீட்டுக்குமேலே மெத்தை மெத்தையாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். ஸுரு சமவெளி மக்கள் முழுக்கவே வைக்கோல் போருக்கு அடியில்தான் வாழ்கிறார்கள் என்று சொல்லலாம்.

வீடுகளின் அடித்தளத்தில் தொழுவம் உள்ளது. தொழுவம் என்றால் நமது ஊர்போல திறந்த கொட்டகை அல்ல. உள்ளே செல்வதற்கான வழி மட்டுமே உள்ள அறைகள் அவை. அவற்றுக்குமேல் பலகைகள் போடப்பட்டு மனிதர்களுக்கான குடியிருப்பு. மேலே புல்லும் கீழே மாடுகளும் நடுவே மனிதர்களும் என்பதுதான் சன்ஸ்கரின் வீட்டு அமைப்பு. பூட்டானில் இதேபோன்ற வீடுகளைக் கண்ட நினைவு வந்தது.

குளிர் ஆரம்பிப்பது வரை குதிரைகள் காட்டுமிருகங்கள்தான். அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் மேய்ந்துகொண்டிருந்தன. வெயில் அடித்த இடங்களில் படுத்து குஞ்சிரோமம் காற்றில் பறக்க கண்மூடி அசைவிழந்து அமைந்திருந்தன. மாடுகள் மேயும் புல்வெளி மனதுள் ஆழ்ந்த அமைதியை நிறைக்கிறது. வாழ்க்கை சிக்கலற்றதாக இனிய ஒழுக்காக தோன்றச்செய்கிறது.

ஸுருசமவெளி இமையமலையின் பனிப்பாலைவெளியில் உயிரின் சிறு குமிழி. அந்தச்சிறு படுகையில் பலவகையான பறவைகள். முக்கியமாக செவ்வலகு கொண்ட காகம். [Red-billed Chough] நமது ஊர் காகங்களை விடப்பெரியது அலகு மஞ்சள்நிறமாக இருப்பதுபோலத்தான் எனக்குப்பட்டது. அபூர்வமாக பெருங்காகமாகிய ராவன். தூரத்தில் இருந்து பார்த்தால் ஏதோ சிறிய தேங்காய்நெற்று என்று தோன்றக்கூடிய திபெத்திய பனிக்காகம் [Tibetan Snowcock]. அத்துடன் யாக்குகளும், பசுக்களும், கழுதைகளும் ,குதிரைகளும் மேய்ந்துகொண்டிருந்தன.


ஓரு தமிழனுக்கு சுழித்தோடும் நீரில் இறங்கி குளிக்கவேண்டும், குறைந்தது காலையாவது நனைக்கவேண்டும் என்ற ஆசை எழுந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் ஸுரு ஒரு மரண ஆறு அதன் பனிக்கட்டிநீரை உள்ளூர்க்காரர்களே கூடுமானவரை தீண்டுவதில்லை. வேகமும் அதிகம். கிட்டத்தட்ட நான்குநாட்கள் ஸுருவை பார்த்துக்கொண்டே சென்றோம். நான் சிந்துவைப் பார்த்ததில்லை. சிந்துவின் இந்தத் துணைநதி சிந்துவேதான். ஆனால் தொடமுடியவில்லை.

ஸுருசமவெளியில் உள்ள ஜூலிடாக் என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கே இருந்த டீக்கடையில் டீ குடித்தோம். மதிய உணவுக்குச் சொன்னோம். அஜிதனுக்கு கம்பிளியால் செய்யப்பட்ட காலுறைகள் வாங்கிக்கொண்டேன். கனமானவை. கையால் பின்னப்பட்டவை. இருநூற்றைம்பது ரூபாய் விலை சொன்னார்கள். வேறு எங்கும் பயன்படுத்தமுடியாது. ஆனால் அங்கே குளிரில் அவன் கால்கள் விரைப்பதாகச் சொன்னான்.

ஜூலிடாக் கிராமத்துக்கு அப்பால் ஸுரு சமவெளி இன்னும் விரிவாகப் பரவ ஆரம்பிக்கிறது. பிரம்மாண்டமான ஏரி ஒன்று வற்றிப்போன அடிநிலம் போலத் தோன்றுகிறது அது. பதினைந்து கிலோமீட்டருக்கு மேல் நீளமும் பத்துகிலோமீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான கூழாங்கல் பரப்பு. சாலை மலையை ஒட்டி அந்தச் சமவெளியைச் சுற்றிக்கொண்டு செல்கிறது. சமவெளிக்குள் உள்ள விரிந்த புல்வெளியில் மதியவெயிலில்கூட பறவைகள் சிறகடித்து அமர்ந்துகொண்டிருந்தன. அப்பால் சிமிண்ட் சேற்றை அள்ளிப்பரப்பியது போல சதுப்பு. நடுவே ஸூரு ஓடிக்கொண்டிருந்தது.

ரங்க்துன் மடாலயம் தெரிய ஆரம்பித்தது. திபெத்திய கெலுக்பா மதப்பிரிவால் அமைக்கப்பட்ட இந்த மடாலயம் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அள்ளி அணைக்கவரும் கரங்கள் போல அரைவட்டமாக விரிந்த இமயமலை முகடுகளுக்கு நடுவே தன்னந்தனியாக நிற்கும் செங்குத்தான பாறைக்குன்றுக்கு மேல் கட்டப்பட்ட இந்த மடாலயத்தின் தோற்றமே அற்புதமானது. யானைக்கூட்டங்களுக்கு கீழே குட்டி நின்றுகொண்டிருப்பதுபோல.

குன்றின் பாதி உயரம் வரை கார் செல்லமுடியும். அங்கிருந்து மடாலயத்துக்கு ஏறிச்செல்லவேண்டும். அதற்கு கல்லை அடுக்கிப்போடப்பட்ட படிகள். பழைமையான கட்டிடம். திபெத்தின் வீடுகளைப்போலவே மடாலயமும் கட்டப்பட்டிருந்தது. மலைக்கற்களை அடுக்கிக் கட்டியிருந்தனர். கூழாங்கற்களின் உருளைத்தன்மை காரணமாக சுவர்களுக்கு சமமான பரப்பும் மடிப்புகளில் கூர்மையும் அமைவதில்லை. ஆகவே ஒட்டுமொத்த கட்டிடமே ஒருவகையான வளைவுத்தன்மையுடன் இருக்கும். கட்டிடத்தின் உயிரற்றத்தன்மைக்கு பதிலாக இந்த மழுங்கல் ஓர் உயிர்த்தன்மையை அளிப்பதாகத் தோன்றியது.

சுவருக்குமேல் சாணியையும் மண்ணையும் குழைத்து பூசியிருந்தனர். அதில் பூசிய கைவிரல்கள் தெரிந்தன. இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட மடாலயச்சுவர்களில் ஆங்காங்கே சுவரோவியங்கள் சிவப்பு நீலம் மஞ்சள் வண்ணங்களைக்கொண்டு வரையப்பட்டிருந்தன. சுவர்களுக்கு மேலே பெரிய மரத்தடிகள் பரப்பப்பட்டு இரண்டடி உயரத்துக்கு சுள்ளிகள் அடுக்கப்பட்டிருந்தன. சுள்ளிகளின் சுவரோர விளிம்பு கச்சிதமாக தெரிந்தது. அதில் செவ்வண்ணம் பூசப்பட்டிருந்தது. சுள்ளிகளுக்கு மேல் இமயத்தின் சப்பைக்கற்கள் வைக்கப்பட்டு மேலே மண் பூசப்பட்டிருந்தது. கனமான பெரிய தூண்கள்.

[பத்மசம்பவர்]

இங்குள்ள ஒரு கல்வெட்டின்படி இந்த மடாலயம் இருநூறாண்டுகளுக்கு முன்பு கெலெக் யாஷி டாக்பா [Gelek Yashy Takpa] என்ற திபெத்திய் மதகுருவால் ஸுரு பள்ளத்தாக்கை ஆண்ட பௌத்த மன்னர் சேவாங் மாங்யுல் [Tsewang Mangyul] அவர்களின் உதவியால் கட்டப்பட்டது. மடாலயத்தில் நாங்கள் செல்லும்போது பதினைந்து பௌத்தபிக்குகள் இருந்தனர். பூசைகளும் வகுப்புகளும் முடிந்து அவர்கள் ஓர் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த மடாலயத்துக்குச் சொந்தமாக நிறைய கழுதைகள் உள்ளன. அவை சுற்றியுள்ள புல்வெளிகளில் மேய்ந்தன. அவற்றை ஓட்டிச்சென்று வெளியே இருந்து உணவுப்பொருட்களைக் கொண்டுவந்தால்தான் அங்கே வாழமுடியும். பௌத்தபிட்சுகளில் பாதிப்பேர் வெளியே சென்றிருந்தார்கள்.

தலைமைபிட்சு வந்து எங்களுக்கு சைத்யத்தை திறந்து காட்டினார். திபெத்திய பௌத்த கோயில்கள் அனைத்துக்கும் உரிய அமைப்புதான். உயரமான இரு பீடங்கள். ஒன்று தலாய் லாமாவுக்கும் இன்னொன்று பஞ்சன் லாமாவுக்கும். இரண்டிலும் அவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட தோல் இருக்கைகளில் செம்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. அவற்றின் முன்னால் உள்ள உயரமற்ற மேஜையில் பொன்னிற வேலைப்பாடுகள் கொண்ட செம்பட்டு. மேஜைமேல் நூல்கள் விரிந்த நிலையில் கிடந்தன.

[வஜ்ரயோகினி- புத்தர்]

உயரமான அந்த அறையின் நடுவே கூரையமைப்பு மேலே திறந்து ஒளி உள்ளே கொட்டும்படி அமைக்கப்பட்டிருந்தமையால் அறை ஜொலித்துக்கொண்டிருந்தது. சுவர்களில் திபெத்தியச் சுவரோவியங்கள். இருபக்கமும் துவாரபாலகர்களான பூதங்கள். திபெத்திய மகாகாலபூதத்தின் வடிவம் நீலநிறத்தில் வரையப்பட்டிருந்தது. தர்மபாலன் என்று திபெத்தியர்கள் வழிபடும் இந்த பூதம் அழியாத பௌத்த தர்மத்தின் காவலனும்கூட. திபெத்திய காலசக்ரத்தின் ஓவியம் சுவரில் இருந்தது. சுவரோரமாக இருந்த பெரிய அலமாரியில் கண்ணாடிக்கு அப்பால் நூற்றுக்கணக்கான வெண்கலச்சிலைகள். புத்த மைத்ரேயர், சாக்யமுனி புத்தர், தாராதேவி, போதிசத்வர்கள். டோங்கா எனப்படும் திபெத்திய ஓவியத்திரைகள் தொங்கின.

பட்டில் பொதியப்பட்ட நூற்றுக்கணக்கான சுவடிகளில் நூல்கள் அடுக்கப்பட்டிருந்தன. பல தொன்மையான திபெத்திய மடாலயங்களில் பற்பலநூற்றாண்டுக்கால பழைமை கொண்ட நூல்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. அங்கே சுவடிகளும் தோல்புத்தகங்களும் செல்லரித்தோ பூச்சிகளாலோ அழிவதில்லை. இயற்கையான குளிர்சாதன வசதி கொண்டவை. பௌத்தஞானத்தின் அழிந்துபட்ட பல தொன்மையான நூல்கள் திபெத்திய மடாலயங்களில் இருந்துதான் மீட்கப்பட்டன. தாராநாத் பானர்ஜி திபெத்திய பௌத்த நூல்களைக் கண்டடைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்களில் முக்கியமானவர்.

குருபீடங்களுக்குப் பின்பக்கம் சுவரை ஒட்டி பிரம்மாண்டமான சிலைகள் இருந்தன. நடுவே சாக்கியமுனி புத்தரின் சிலை பூமிஸ்பர்ச முத்திரையுடன் அமர்ந்திருந்தது. வலதுபக்கம் திபெத்திய பௌத்தமதத்தை நிறுவியவரான பத்மசம்பவர் இடக்கையில் வஜ்ரமும் வலக்கையில் அறிவுறுத்தல் முத்திரையும் உறுத்த விழிகளுமாக அமர்ந்திருந்தார். இடப்பக்கம் வஜ்ரயோகினியை தழுவிய நிலையில் உள்ள வஜ்ரயோக புத்தர். வஜ்ரயோகினிக்கும் புத்தருக்கும் நான்குதலைகளும் கோரைப்பற்களும் உறுத்துவிழிக்கும் கண்களும் இருந்தன.

மூன்றுசிலைகளின் இருபக்கமும் சற்று சிறிய சிலைகள். மடாலயத்தை அமைத்த கெலெக் யாஷி டாக்பாவின் சிலை இருந்தது. மேலும் பல லாமாக்களின் சிலைகள். இச்சிலைகள் எல்லாமே மரத்தால் செய்யப்பட்டவை. அவற்றின்மீது அரக்கு பூசப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்பு மேலே செந்நிறமும் வெண்ணிறமும் பூசப்படுகிறது. பொன்னிறத்தில் அணிகளும் ஆடைகளும் வரையப்படுகின்றன. மூன்றாள் உயரமான சிலைகள் நுணுக்கமான சிற்ப-ஓவிய வேலைப்பாடுகள் கொண்டவை. அந்தச் சூழலில் நாம் தொன்மையான ஓர் உலகத்தின் முன்னால் சென்று நிற்பதுபோன்ற கனவை மனதில் நிறைத்தன அச்சிலைகள்.

ரங்துன் மடாலயத்தை சுற்றி வந்தோம். அங்கே அமைதி இறுகிச் செறிந்து கிடந்தது. கையால் அந்த அமைதியை அள்ளிவிட முடியும், அளைய முடியும் என்பதுபோல. குளிர்ந்த காற்று, கண்களை கூசச்செய்யாத மிதமான வெளிச்சம், வசந்தகாலத்தின் மண்மணம், தூரத்து மலைகளின் விரிந்த சரிவுகள் எல்லாமே அமைதியின் வடிவங்களாக இருந்தன.

மீண்டும் ஜூலிடாக் கிராமத்துக்கு வந்தோம். சமவெளியில் இறங்கி கூழாங்கல் பாதையில் அசைந்து அசைந்து வருவதற்கு இரண்டு மணிநேரம் ஆகியது. மாலையாகிவிட்டிருந்தது. ஜூலிடாக் கிராமத்தை கிராமம் என்று சொல்வது மங்கலவழக்கு. மொத்தமே இருபது வீடுகள். இரண்டு டீக்கடைகள். வீடுகளைச்சுற்றி மலைக்கற்களை அடுக்கி இடுப்பளவு உயரத்தில் சுவர் போலக் கட்டியிருந்தார்கள். ஊர்நடுவே திபெத்திய பிரார்த்தனை உருளை கொண்ட ஒரு சிறிய கோயில். நான்கு சிறிய திபெத்திய வழிபாட்டுகோபுரங்கள். அவ்வளவுதான்.


[ரங்துன் மடாலயம்]

இங்குள்ள மக்கள் மஞ்சள் இனத்தவர்கள். பகார்வால்கள் [Bakarwal] என்று அழைக்கப்படும் மேய்ச்சல்நில மக்கள். மொத்த ரங்துன் பகுதியிலும் இரண்டே கிராமங்கள்தான். இன்னொரு கிராமமான யுல்டோவை இங்கிருந்து பார்த்தாலே காணலாம். இந்தமக்கள் குறுகிய கோடைகாலத்தில் பயிரிடப்படும் கோதுமையை மட்டுமே விளைச்சலாகப் பெறுகிறார்கள். சிலசமயம் அறுவடையே நிகழாமல்போகும் என்கிறார்கள். தானியத்தையும் வைக்கோலையும் தங்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாக வைத்துக்கொள்கிறார்கள்.

இவர்களின் முக்கியமான வருவாய் செம்மறியாட்டின் ரோமமும் யாக்கின் தோலும் குதிரைகளும்தான். அவற்றை கார்கில் வரை நூறு கிலோமீட்டருக்குமேல் மலைப்பாதையில் பயணம்செய்து கொண்டு சென்று விற்கிறார்கள். அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்ப வருகிறார்கள். அது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே. எஞ்சிய நாளெல்லாம் மேய்ச்சல், குளிருக்கு அடக்கமாக வீட்டுக்குள் அமர்ந்திருத்தல் என மந்தமாக நகரும் வாழ்க்கை. காலம் மிக நீண்டது. வாழ்க்கைச்செயல்பாடுகள் மிகமிகக் குறைவு. கிட்டத்தட்ட முதலைகள்போன்ற வாழ்க்கை.

ஆனால் இவர்களின் நுரையீரல்கள் மிக வலிமையானவை. பெரிய எடைகளுடன் இவர்கள் ஏறிச்செல்லும் மலைச்சரிவுகளைக் காணும்போது நமக்கு நெஞ்சு வலிக்கும். கோடைநிலங்களுக்குரிய பலவகையான தொற்றுநோய்கள் இங்கில்லை. ஆகவே மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை. கல்வி, மருத்துவம் அனைத்துக்கும் மடாலயத்தையே நம்பியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் ஆயுள் மிக நீண்டது. நூறு வயதுவரை வாழ்வது ஆச்சரியமான நிகழ்வே அல்ல.

இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. ஸுரு சமவெளியில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் ஷியா முஸ்லீம்கள். பர்க்காசிக் கிராமத்துக்குப் பிறகு பௌத்தர்கள் வாழ்கிறார்கள். ஷியா முஸ்லீம்களின் தொடர்ந்த தாக்குதல்களுக்கு ஆளாகும் பௌத்தர்கள் தற்காப்புக்கு வேறு வழியில்லாமல் சென்ற பத்துப்பதினைந்தாண்டுகளாக மெல்ல கிறித்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே வந்து தங்கும் கிறித்தவபோதகர்கள் அவர்களுக்கு நிதியுதவியும் சட்ட உதவியும் வழங்குகிறார்கள். அது ஒரு அதிகாரச் சமநிலையை இங்கே உருவாக்கியிருக்கிறது.

பௌத்தர்கள் பெரும்பாலானவர்கள் கிறித்தவ இரண்டாம் பெயருடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பௌத்தத்தையும் விட்டதாகத் தெரியவில்லை. மடாலயங்களுக்குச் செல்வதும் பௌத்தச் சடங்குகளைச் செய்வதும் தொடர்ந்து நிகழ்கிறது.

ஜூலிடாக்கிலேயே தங்கலாமென முடிவெடுத்தோம். மணி ஐந்தாகிவிட்டிருந்தது. அதற்குள் நல்ல குளிர் ஆரம்பித்தது. டீக்டையில் பேசினோம். டீக்கடைக்காரரின் வீடு அருகில்தான். டீக்கடையையே வலுவான நிரந்தரக் கட்டிடமாகக் கட்டி மேலே சுற்றுலாப்பயணிகளுக்கான அறைகளை அமைத்துக்கொண்டிருந்தார். பக்கத்திலும் ஒரு கட்டிடம் கட்டிக்கொண்டிருந்தார். ’அடுத்தமுறை வரும்போது வசதியாக தங்கலாம் சார்’ என்று சிரித்தபடி சொன்னார்.

ஆனால் அங்கே அதிகம் பயணிகள் வருவதுபோலத் தெரியவில்லை. அவ்வளவு சிரமப்பட்டு வருபவர்கள் பெரும்பாலும் ரங் துன் மடாலயத்துக்கு வரும் பௌத்த தீர்த்தாடகர்கள்தான். நாங்கள் சென்ற அன்று ஒரே ஒரு பயணிகள் குழுவைத்தான் பார்த்தோம். சீனத்தோற்றம் கொண்டவர்கள். மூன்று பெண்கள். சிரித்துப்பேசிக்கொண்டு சாப்பிட்டார்கள்.

ஜூலிடாக்கில் ஓட்டல் உரிமையாளரின் இல்லத்தில் தங்குவதற்கு முடிவெடுத்தோம். அவரது வீடு கிராமத்துக்குள் இருந்தது. அவரது மனைவியும் இரு குழந்தைகளும் தங்கையும் அங்கே இருந்தனர். வீடு திபெத்திய வழக்கப்படி கீழ்த்தளத்தில் தொழுவத்துடன் இருந்தது. மேலே மரத்தரையிட்ட அறைகள். அதற்குமேலே சுள்ளியடுக்கி புல்மெத்தை ஏற்றப்பட்ட கூரை.

எங்களுக்கு அளிக்கப்பட்ட இரு அறைகளும் நன்றாகவே இருந்தன. ஐந்துபேர் வசதியாகவே தங்கலாம். பயணிகள் தங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. மெத்தைகள் போடப்பட்டு குட்டி மேஜைகளுடன் அமர்ந்து பேசவும் படுக்கவும் வசதியானவையாக இருந்தன. கனமான ரஜாய்கள் ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லாமே பளிச்சிடும் நிறம் கொண்டவை. நம்முடைய இல்லங்களில் நாம் அப்படி ரத்தச்சிவப்பு நிறத்தை பரப்பி வைப்பதில்லை. ஆனால் ரங்துன்னின் பனிப்பாலையில் வெண்மையும் காபிநிறமும்தான் ஒரே வெளியுலக நிறங்கள். இல்லத்திலாவது நிறங்களை நிறைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. நிறம் என்பது உயிரின் வெளிப்பாடு. உணர்ச்சிகளின் சின்னம். வாழ்க்கையின் பதிவு.

அறைக்குள் மெத்தையில் படுத்துக்கொண்டேன். கண்ணாடிச்சன்னல் வழியாக வெளியே பார்க்கமுடிந்தது. ரங்துன் மடாலயம் பெரும் புல்வெளிக்கு அப்பால் மலைகளின் அடியில் தனிமையாகத் தெரிந்தது. ஒரு கோணத்தில் மடியில் கையை வைத்து கண்மூடி அமர்ந்திருக்கும் சாக்கியமுனியின் தோற்றம் போலவே இருந்தது அந்தக்குன்று. அதன்பின்னால் மலைச்சரிவுகளில் மாலை ஒளி விரிந்து கிடந்தது. வெள்ளிமுடி சூடிய மலைச்சிகரங்கள் காலமின்மையில் அமைந்திருந்தன.

[ரங்துன் மடாலயம். எங்கள் அறையிலிருந்து]

மடாலயத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஓங்கிய மாமலைகளுக்கு முன்னால் சிவப்புக்குல்லாயுடன் பணிந்து நிற்பது போல தெரிந்தது. மறுகணம் அந்த மலைகளிடமிருந்து எதையோ கேட்டு பிடிவாதத்துடன் நின்றுகொண்டிருப்பதுபோல. இந்தப் பகுதியில் குளிர்காலத்தில் எவருமே இருக்கமாட்டார்கள். மடாலயத்தில் மட்டும் பிட்சுக்கள் இருப்பார்கள். ஒருவரோடு ஒருவர் ஒட்டியவர்கள் போல, நடுவே எரியும் நெருப்புடன், ஒருவேளை உணவுண்டு, மந்திரமும் தியானமுமாக.

ஏன் இங்கே இந்த மடலாயம் கட்டப்பட்டது? இந்தப்பனிமலைகளின் மௌனத்திலிருந்து அது எதைக் கற்றுக்கொள்கிறது?

[ரங்துன் மடாலயம், இணையத்தில் இருந்து]

[ரங்துன் மடாலயம் குளிர்காலத்தில். இணையத்தில் இருந்து]

மிகமெல்ல ஒரு தியானநிலை கைகூடி வந்தது. நானும் காலமற்றவனானேன். என் சிந்தனை கரைந்தழிய கண் மட்டும் உயிருடன் எஞ்சியது. பசுக்களும் குதிரைகளும் மேயும் பசும்புல்வெளியை அப்பால் எழுந்த மலைகளில் மெல்ல நிறம் மாறிக்கொண்டிருந்த மாலைவெயிலை அபாரமான ரத்தினநீல நிறத்தில் மேகமில்லாத துல்லியத்துடன் இருந்த வானை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்பு அவை மட்டும் அங்கே இருந்தன. பார்ப்பவன் மறைந்துவிட்டிருந்தான்.

கிருஷ்ணனும் நண்பர்களும் வந்து ஸுரு வரை நடந்துசெல்லலாமா என்று கேட்டார்கள். அப்போதுதான் விழித்துக்கொண்டேன். போக ஆசையாக இருந்தது. ஆனால் உடலையும் மனத்தையும் அந்த இடத்திலிருந்து அசைக்க முடியவில்லை. வரவில்லை என்று சொன்னேன். மீண்டும் கண்ணாடிச்சன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அருகே தேவதேவன் களைத்துப்போய் படுத்திருந்தார்.

மலைச்சிகரத்தின் பனி பொற்கவசமாக ஆகியது. சரிவுகளில் இருள் வழிந்திறங்கி மடிப்புகளுக்குள் தேங்கின. பொற்பூச்சு மெல்ல சிவந்து குருதிப்பூச்சாக ஆகியது. வெளியே மாடுகள் இல்லம் திரும்பும் ஓசைகள். பெண்குரல்கள் அவற்றை அதட்டின. யாக்குகள் மெல்ல நடந்து கிராமத்தின் சுவர்களுக்குள் சென்று மறைந்தன. கீழே தொழுவத்தில் மாடுகள் முட்டிமோதி நுழையும் ஒலிகள். குழந்தைகளின் கிரீச்சிடும் குரல்கள். அப்பால் புல்வெளி நோக்கி ஐந்துபேர் கைகளை ஆட்டிக்கொண்டு பேசிக்கொண்டு சென்று பளபளக்கும் நீர்க்கொந்தளிப்பின் விளிம்பில் நின்றார்கள். வானில் செம்மை கரைந்து கீழிறங்கிக்கொண்டே இருந்தது, மலைகள் நிழல்களாக மாறின.

அனைத்தும் இருண்டபின் வானத்தில் எழுந்து நின்ற மலைச்சிகரத்தின் பனியாலான நுனி மட்டும் பொன்னிறமாக மின்னியது. மண்ணில் இருந்து பிரிந்து அந்தரவானில் நிற்பதுபோல. எவரையோ ஏற்றிக்கொண்டு செல்ல வந்த விண்ணக பொன்விமானம் போல. கீழே ரங்துன் மடாலயத்தில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. சிறிய மின்மினி போல அது இருளில் நின்றது.

ஏதோ ஒன்று நிகழ்ந்து மெல்ல மெல்ல மறைந்தது. அது நிகழ்ந்ததைப் பார்த்தவன் இல்லாமலிருந்தான். கதவு கிரீச்சிட அஜிதன் உள்ளே வந்தபோது நான்கு பக்கமும் எல்லையற்று திறந்த வெளியில் இருந்து அவன் தன்னை திரட்டிக்கொண்டான். சிதறிய பாதரசப்பிசிறுகளை பெரிய பாதரசத்தால் தொட்டு உருட்டித் திரட்டுவதுபோல இருக்கிறேன் என்ற சொல்லைக்கொண்டு அனைத்தையும் மீண்டும் ஒன்றாக்கிக்கொண்டான்.

[மேலும்]

முந்தைய கட்டுரைவிதைக்காடு
அடுத்த கட்டுரைஒரு முதற்கடிதம்