சொல்வனம், பதில் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

திரு. ராம் சொல்வனத்தில் வெளிவரும் இசைக்கட்டுரைகள் குறித்து உங்களுக்கு எழுதிய கடிதத்தைப் படித்தேன். சொல்வனத்தின் எடிட்டர் குழுவில் ஒருவன் என்ற முறையிலும், சொல்வனத்தின் இசைக்கட்டுரைகளுக்குப் பொறுப்பானவன் என்ற முறையிலும் நான் பதில் எழுதுகிறேன்.

உங்கள் நண்பர் கெவின்கேர் பாலா சொல்லும் ‘நெம்ப கஷ்டம்’ என்னவென்று இப்போதுதான் புரிகிறது :-)

திரு.ராம் இதுவரை சொல்வனத்துக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவர் சொல்வது போல சிலமுறை அல்ல. முதல் கடிதம் முதல் கட்டுரை வந்தபின். ”அக்கட்டுரையை எழுதிய ஸ்ரீ என்பவர் யாரோ தெரியாது. ஆனால் அவரது அக்கட்டுரை என்னைப் பொருத்தவரை தண்டம். சும்மா ப்ளாக்கில் கத்துக்குட்டிகள் எழுதுவதுபோல எதையோ எழுதியிருக்கிறார். இசையைப்பற்றி எழுதுவது அத்தனை விளையாட்டான காரியமல்ல. அவர் அவரது இசை ஞானத்தை வளர்த்துக்கொண்டு எழுத முற்படுவது அவருக்கும், வாசகர்களுக்கும் நல்லது. உங்கள் ஆசிரியர் குழுவில் முடிந்தால் இசையறிந்த ஒருவரையாவது சேர்த்துக்கொள்ளவும், எடிட் செய்தாவது போடலாம். ” என்ற மூன்று வரிகள்தான் அந்தக் கடிதம்.

அதற்கு பதிலாக ‘இந்தக் கட்டுரையை எழுதிய ஸ்ரீ இசையைப் பற்றித் தெரியாதவர் அல்ல. அவர் ஒரு சிறந்த இசைக்கலைஞர். அவருடைய பிற கட்டுரைகளை அவருடைய வலைப்பதிவில் படிக்கலாம்’ என்று சொல்வனம் சார்பாக பதில் அனுப்பப்பட்டது.

அதற்கு ராமிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பின் ஐந்து கட்டுரைகள் வெளிவந்தபின் ஐந்தையும் விமர்சித்து ஒரு மிகக்கடுமையான கடிதம் வந்தது.

1) இந்திய இசையின் மார்க்க தரிசிகள் – நான் முன்பே சொன்னது போல மோசமான கட்டுரை
2) ஏக்கத்தில் ஆழ்த்தும்.. – சுயவிளம்பர போஸ்ட்
3) சிபேலியஸ் – நேம் ட்ராப்பிங்
4) இளையராஜாவின் ரயில் பயணம் – நிலாப்பாட்டு, இரவுப்பாட்டு, பஸ்பாட்டு என தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பைப் போல இதுவும் ஒரு தொகுப்பு.

“இனிமேல் இசை குறித்த கட்டுரைகளை வெளியிடவே வேண்டாம்” என்றும் சொல்லியிருந்தார்.

இந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பவில்லை. பொருட்படுத்தத் தக்க ஒரு விமர்சனத்தையும் முன்வைக்காமல், ஒற்றை வாக்கியங்களில் இது நேம் ட்ராப்பிங், இது சுய விளம்பரம், இது ப்ளாக்தனம் என நிராகரிக்கும் கடிதத்துக்கு என்ன விதமான பதில் எழுத முடியும்? சுந்தரராமசாமியை வெறும் நூலகர் என்று ஒருவர் சொன்னால் அவர் சு.ரா எழுதியவற்றைப் படித்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வருமா என்ன?

சொல்வனத்தில் வெளியிடப்பட்ட இசைக்கட்டுரைகளில் பிற இலக்கியப் பத்திரிகைக் கட்டுரைகளில் இருக்கக்கூடிய ‘இலக்கியத்தனம்’ இல்லாமலிருக்கலாம். இசை தலையில் வெடித்து முகுளத்தை உடைத்து நெஞ்சை நிறைத்தது, அவர் ஷட்ஜத்தில் நின்று ஒரு சுழற்று சுழற்றினார், கார்ட் ப்ராக்ரஷனைக் கேட்டபோது உடம்பெல்லாம் புல்லரித்தது என்ற வரிகளால் நிரம்பி, இறுதியில் ஒரு சோகத்தை அள்ளித் தெளிக்கும் தன்மை கொண்டவையாக இல்லாமல் இருக்கலாம். ஒரு அட்டகாசமான ஆரம்பம், அசத்தலான முடிவு என்பவை இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் ரா.கிரிதரன் தவிர இந்த கட்டுரைகள் எழுதியவர்கள் அனைவருமே ஆரம்பநிலை எழுத்தாளர்கள். ஆனால் அனைவருமே ரா.கிரிதரன் உட்பட அனைவருமே இசைக்கலைஞர்கள். ஸ்ரீ என்ற ஸ்ரீராம் ஒரு சிதார் இசைக்கலைஞர். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இரண்டிலும் ஆழமான புலமை உண்டு. ஓப்லா விஸ்வேஷ் கிதார், கீபோர்ட் இரண்டையும் நன்றாக வாசிக்கக் கூடியவர். மெல்லிசைக் கச்சேரிகளில் வாசித்தவர். கிரிதரன் கீபோர்ட் இசைக்கலைஞர் என்பதோடு மட்டுமல்லாமல், பல இசை வகைகளின் வரலாறுகளையும், இசைக்கலைஞர்களின் வரலாறுகளையும் வெகு சிரத்தையாகக் கற்று வருபவர், தெளிவான பல புரிதல்கள் உடையவர். விக்கி என்ற விக்னேஷ் இந்த மூவரைக் காட்டிலும் ஆழமான இசைக்கலைஞர்.  மேற்கத்திய செவ்வியல் முறையாகக் கற்றவர். கர்நாடக சங்கீதம் முறையாகக் கற்றவர். எனக்குத் தெரிய இவருக்கு வாசிக்கத் தெரியாத இசைக்கருவிகளே இல்லை. பல இசைவகைளை அவற்றின் தியரியோடு சேர்த்துத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர்.

இதுவரை இசை குறித்து சொல்வனத்தில் எழுதிய அனைவரிடமும் ராம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்கள் இசையைக் குறித்து எதுவும் தெரியாமல் வெறும் சுயவிளம்பரமோ, நேம் ட்ராப்பிங்கோ செய்தார்கள் என நிரூபிக்கலாம். இதை நான் ஒரு சவாலாகவே முன் வைக்கிறேன்.

சொல்வனம் வழியாகத் தமிழில் ஒரு சிறிய ஆனால் முக்கியமான மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. வெறுமனே விக்கிபீடியா தகவல்களால் நிரப்பாமல் முதல்முறையாக முறையாக இசையைக் கற்றவர்கள், இசைக்கலைஞர்கள் தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஏராளமான, பிரபலமான இசைக்கலைஞர்கள் எழுதுகிறார்கள். ஆனால் தமிழில் வெகு அரிதாகவே இசைக்கலைஞர்கள் இசையைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அதனால் இசையைப் பற்றிய மிக மேலோட்டமான புரிதல் கொண்ட கட்டுரைகள், இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை எழுதிவிட்டு – இசையைக் குறித்து ஒரு வார்த்தை கூட எழுதாமல், ‘என்னைப்போல உலக இசையை யார் எழுதியிருக்கிறார்கள்’ என்று ‘எழுத்தாளர்கள்’ கேட்கும் அபத்தமெல்லாம் நடந்து கொண்டிருக்கிறன.

இசையின் பெரும் ரசிகன் என்ற முறையிலும், பல இசை வகைகளில் அறிமுகம் கொண்டவன் என்ற முறையிலும், தமிழில் எழுதப்படும் பல இசைக் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவன் என்ற முறையிலும், சொல்வனத்தில் எழுதப்படும் இசைக்கட்டுரைகள் மீது எனக்குத் தனிப்பட்ட அக்கறை உண்டு. உண்மையாலுமே இசை தெரிந்தவர்களைக் கொண்டு சொல்வனத்தில் இசைக்கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்ற எழுச்சி என்னிடம் உண்டு. தொடர்ந்து பல பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களிடமும், மேற்கத்திய இசைக்கலைஞர்கள் பலரிடமும் தமிழில் எழுதுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டு வருகிறேன். அப்படி எழுதியவர்களே கிரிதரன் நீங்கலாக மற்ற நால்வரும். (கிரிதரன் ஏற்கனவே தமிழின் பல பத்திரிகைகளிலும் எழுதி வருபவர்).

சொல்வனம் அளித்த இசைக்கட்டுரைகளில் நிச்சயம் இசை குறித்த ஆழமான புரிதலும், அனுபவமும் உண்டு.

1) இந்திய இசையின் மார்க்க தரிசிகள் – கட்டுரை சென்ற நூற்றாண்டில் நம் இந்திய இசைக்கு அறிமுகமான இசைக்கருவிகளைக் குறித்து விரிவாகக் கூறுகிறது. அதிலும் வெறுமனே மாண்டலினை எடுத்தார், அதை இந்திய இசைக்கு ஏதுவாக மாற்றி வாசிக்க ஆரம்பித்தார் என்று சொல்லவில்லை. என்னென்ன விதமான மாற்றங்கள் தேவைப்பட்டன என்பதை விரிவாகவே கூறுகிறது. தம் ஆரம்ப நாட்களில் சந்திக்க நேர்ந்த சவால்களையும், போதாமைகளையும் அந்த இசைக்கலைஞர்களே கூறும் யூட்யூப் பேட்டிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தத் தகவல்களை ஸ்ரீராம் விக்கிபீடியா வழியாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு மேண்டலின், சிதார், கிதார், வீணை இந்த ஒலிவடிவங்களுக்கிடையேயான நுணுக்கமான சிறு சிறு வேறுபாடுகளும் தெரியும். இசை என்றால் மூலாதாரத்தில் கிளம்பி முகுளத்தை உடைத்து சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இந்தக் கட்டுரை பிடிக்காது. ஆனால் இசைக்கருவிகளில் காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களைக் குறித்தும், ஒரு இசைக்கருவி ஒரு இசை வடிவத்திலிருந்து இன்னொரு இசை வடிவத்துக்குக் கைமாறும்போது ஏற்படும் மாற்றங்களைக் குறித்தும், அந்த மாற்றங்களை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இசைக்கலைஞர்கள் சந்திக்கும் சவால்களைக் குறித்தும் அறிந்து கொள்ள நினைக்கும், இசை குறித்த எந்தவிதமான புரிதலும் இல்லாமலே இவற்றைக்குறித்துப் பேசிவிட முடியும் மேன்ஷன் நண்பர்கள் கிடைக்காத துர்பாக்கியசாலிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

2) ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும்: நண்பர் ஓப்லா விஸ்வேஷ் இதை ஒரு கட்டுரை வடிவில் எழுதவில்லை. அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு எழுதிய இரண்டு ஆங்கில மடல்களை இணைத்து ஒரு கட்டுரை வடிவில் மாற்றியது நான்தான். பொதுவாகவே இசை குறித்து எழுதுபவர்கள் ‘ஹப்பா, என்ன கார்ட் ப்ராக்ரஷன்’ என்றோ, ‘என்னம்மா ஃப்யூஷன் செய்திருக்கிறான்’ என்றோ சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள். ஆனால் உண்மையாலுமே அந்த ஃப்யூஷன் என்ன விதமான அடிப்படைக்கூறுகளில் நிகழ்ந்திருக்கிறது, மேற்கத்திய செவ்வியலுக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் என்ன விதமான இணைத்தன்மைகள் இருக்கின்றன என்பதை ஒரு எடுத்துக்காட்டோடு வாசித்துக்காட்டி விளக்கியிருக்கிறார் விஸ்வேஷ். அதிலும் இது முதலில் நண்பர்களுக்கிடையே பரிமாறப்பட்ட மடலை இது பல வாசகர்களுக்கு இளையராஜாவின் ஃப்யூஷன் குறித்த புரிதலை உருவாக்கும் என்று நான் நினைத்ததால் பொது தளத்துக்கு வந்தது. தமிழ் கூறும் நல்லுலகின் வாசகர்களுக்கு ‘எப்படி வாசிக்கிறேன் பாத்தியா’ என்று காண்பிக்கும் சுயவிளம்பர எண்ணம் கிஞ்சித்தும் இல்லை.

ராமுக்கு இந்தக் கட்டுரை பேசும் ஃப்யூஷன் குறித்துப் பேசுவதற்கு எதுவுமில்லை. அதன் டெக்னிக்கல் விஷயங்களில் எதுவும் குறைகளைச் சுட்டிக்காட்ட முடியவில்லை. மாறாக இதை ‘சுயவிளம்பரம்’ என்று ஒதுக்கியாயிற்று.

3) ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள்: இது ஒரு இசைக்கலைஞர் குறித்த Bio Sketch. தமிழில் இது போன்ற வாழ்க்கைச் சித்திரங்கள் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. (தம்மை ‘உலக இசை’ அறிந்த ஒரே எழுத்தாளராகக் காட்டிக்கொள்பவர்கள் எழுதும் கட்டுரைகள் இப்படிப்பட்டவை). ஆனால் இந்த வாழ்க்கைச்சித்திரத்தில் வெறும் உணர்ச்சிகரமான தகவல்களோடு நிறுத்தாமல், ரா.கிரிதரன் சிம்பொனி இசையின் நான்கு கூறுகளைப் பற்றி விளக்கிக் கூறுகிறார். இந்த நான்கு இசைக்கூறுகளை சிபேலியஸ் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார், என்ன மாற்றங்கள் செய்தார் என்று விரிவாகவே விளக்குகிறார். ராமைப் பொருத்தவரை இது வெறும் நேம்ட்ராப்பிங். ஏனென்றால் சிபேலியஸ் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. எதுவும் தெரியாது என்ற மனநிலையிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்ற மனநிலையோடு உள்நுழையலாம். இல்லையென்றால் ‘ச்சீ போ, இது வெறும் நேம் ட்ராப்பிங்’ என்று விலகிப்போகலாம். எதிர்பார்த்தபடியே அவர் விலகிச்சென்றிருக்கிறார்.

4) இளையராஜாவின் இசைப்பயணம்: இதுதான் ராம் சொன்ன நிலாப்பாடல், இரவுப்பாடல் போன்ற பாடல் தொகுப்பு. எந்த இசை குறித்த சேனலிலும் பார்க்கலாம். ப்ளாகுகளில் படிக்கலாம். விக்கி இளையராஜா ‘ரயில் பாட்டு’ என்ற சூழலில் ஒரேவிதமான இசையைத் தராமல் எப்படிப் பல்வேறு இசை நுணுக்கங்களால் வேறுபடுத்தியிருக்கிறார் என்று விரிவாக விளக்குகிறார். ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டோடு விளக்குகிறார். இந்த கட்டுரையைப் படிக்க நேரிடும் இன்றைய இசையமைப்பாளர்களில் பலர் தன்னுடைய படைப்புத்திறனைக் குறித்து இக்கட்டுரை நாணச்செய்யும். மேலும் இக்கட்டுரை பேசும் double-stop, arpegio உத்திகளைக் குறித்து டிவி சேனல்கள் பேசி நான் கேட்டதில்லை. ஒருவேளை நண்பர் ராமின் திருவல்லிக்கேணி மேன்ஷனின் டிவி சேனலில் வருகிறதோ, என்னவோ?!

5) ஐந்தாவதாக வந்த இசைத்தெரிவு ’எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா’ குறித்து ராம் சொல்லியிருக்கும் ஒரே விமர்சனம் ‘கன்னட கௌளை ராகத்திற்கும், மார்கஹிந்தோளத்துக்கும் மேலோட்டமான வித்யாசம் கூடத் தெரியாத அறிவுஜீவிகள் அதில் இசைத்தெரிவு கட்டுரைகள் எழுதுகிறார்கள்’ என்பது. ஒரு கட்டுரையில் கிடைக்கும் தகவல் பிழையை வைத்து அந்தக்கட்டுரை முழுவதையும் நிராகரிக்கும் மனநிலை இது. கொஞ்ச நாட்கள் முன்பு நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையை விமர்சித்து அரவிந்த் கண்ணையன் ’sophies choice’ பிழையை மேற்கோள் காட்டி எள்ளலாகக் கடிதம் எழுதிய மனநிலை இது.

நண்பர் ராம் அவர்களுக்கு,

இந்த மனநிலை எனக்கும்  இருந்திருக்கிறது நண்பரே! எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு வரை நான் படிக்க நேரிட்ட பல கட்டுரைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் குறித்து வெகு எள்ளலான மனநிலையே எனக்கு இருந்திருக்கிறது. ஒவ்வொரு தகவல் பிழையைப் பார்க்கும்போதும் ‘இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியல… இவன்லாம் எழுத வந்துட்டான்’ என்று எள்ளலாக நண்பர்களிடம் சொல்வேன். ஜெயமோகனின் கட்டுரைகளிலும், கடிதங்களிலும் இருக்கும் எழுத்துப் பிழைகளை மட்டுமே வைத்து ஏளனமாகப் பேசி ஒதுக்கும் ஒரு கூட்டம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா நண்பரே? ஏன், ஷாஜியின் கட்டுரைகளை ஜெயமோகன் மொழிபெயர்த்தபோது ஃப்ரெஞ்சு இயக்குநர் ‘Renoir’-ஐ ‘ரென்வா’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ’ரெனாய்ர்’ என்று மொழிபெயர்த்துவிட்டார். விடுவானா உலகப்படங்களை உரித்து வைத்திருக்கும் சேதுபதி? உடனே ஒரு மெயில்: ‘அது ரெனாய்ர் இல்லை, ரென்வா. இப்போதெல்லாம் டிவிடிக்களில் extra feature வருகிறது. அதைப்பார்த்திருந்தால் கூட நீங்கள் சரியாக மொழிபெயர்த்திருப்பீர்கள்’.  மொத்த கட்டுரை குறித்து எனக்கிருந்த ஒரே விமர்சனம் அதுதான். பெயரையே ஒழுங்காக எழுதவில்லையே இவன்லாம் சினிமா குறித்து என்ன எழுதப்போறான்? என்றுதான் தோன்றியது.

“எனக்குத் தெரிந்த அளவு சினிமாவோ, இசையோ யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் வந்துவிடுகிறான்கள், நானும் எழுதுகிறேன் என்று” – என்ற இந்த மனநிலை மாற எனக்கு இரண்டாண்டுகள் தேவைப்பட்டது. நானாகவே கட்டுரை எழுத ஆரம்பிக்கும் வரை. அதுவரை நண்பர்கள் விமர்சனமும், கொஞ்சம் திறந்த மனமும் பெரும் உதவி புரிந்தது.

நண்பரே, உங்களுக்கு உண்மையிலேயே இந்த இசைக்கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் இசை குறித்த விமர்சனங்கள் இருந்தால் அவற்றை எழுதி அனுப்புங்கள். ரசிக மனநிலையிலிருந்து ஒதுக்குகிறீர்கள் என்றாலும் சரி, அதையாவது எழுதுங்கள். இசை குறித்ததொரு விவாதமாவது எழும், இசையைக் குறித்து ஆர்வமோடு கற்றுக்கொள்ள வரும் பிறருக்கு உதவியாக இருக்கும். எந்த ஒரு படைப்பிலும் குறை உண்டு. இந்த இசைக்கட்டுரைகளிலும் பிழைகள் இருக்கலாம், குறைகள் இருக்கலாம். சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் திருத்திக் கொள்வதற்கான திறந்த மனநிலையோடே இருக்கிறோம். அதை விடுத்து இது ப்ளாக்தனம், இது சுயவிளம்பரம், இது தண்டம், இது நேம் ட்ராப்பிங், நான் படித்த பிற இசைக்கட்டுரைகளைப் போல இல்லை என்றெல்லாம் சொல்வது யாருக்குமே உபயோகமாக இருக்கப் போவதில்லை. மாறாகப் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் பல இசைக்கலைஞர்களையும் நீங்கள் மனச்சோர்வில்தான் தள்ளப்போகிறீர்கள்.

லத்தீன் அமெரிக்காவின் இசை, ராய் இசை குறித்து எழுதியிருக்கிறேன் என்று வெறும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் எழுதிவிட்டுப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் அறிவுஜூவிகளிடமிருந்து நமக்கு ஆண்டாண்டு காலமானாலும் விடுதலையே கிடைக்காது.

“இந்திய இசை குறித்து திட்டவட்டமான கருத்துக்களை எடுத்துவைக்கும் அளவுக்கு நிச்சயம் இசை அறிவு எனக்கு உண்டு” – என்று நீங்களே சொல்லியிருமிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் இசை குறித்து எழுதினால், அது நன்றாக இருந்தால் நிச்சயம் சொல்வனத்தில் பிரசுரமாகும். எந்தவிதமான நேர்மையான கட்டுரைகளையும், விவாதங்களையும் சொல்வனம் நிச்சயம் வரவேற்கும். மற்றபடி இதுபோன்ற ஒருவரி ஒதுக்கல்களுக்கு நிச்சயம் பதில் எதிர்பார்க்காதீர்கள்.

என்னுடைய தனிமடல் முகவரி: [email protected] [நீங்கள் உங்கள் கடிதத்தில் கேட்டிருப்பதால் தருகிறேன்].

அன்புடன்,
சேதுபதி

 

அன்புள்ள சேதுபதி அருணாச்சலம்

கடிதம் எழுதிய நண்பர் ராம்  என் இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். முறையாக சங்கீதம் கற்று திருவையாறில் அரங்கேற்றமும் செய்தவர். ஆகவே அவரது தரப்பை நான் புரிந்துகொள்கிறேன்

ஆனால் அவரது கடிதத்தைப்பற்றி இசை நிபுணர்கள் என நான் நினைக்கும் இருவரிடம் பேசினேன். அவர்கள் அது ராமின் தனிப்பட்ட மனப்பதிவே ஒழிய சொல்வனத்தின் கட்டுரைகளில் பல மிக முக்கியமான பதிவுகள் என்றே சொன்னார்கள்.

அதில் ஒரு நண்பர், மேலை இசையிலும் கீழை இசையிலும் பரிச்சயம் உள்ளவர்[ துறவி. ஆகவே அவர் பெயரை சொல்லவில்லை] சொன்ன கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழில் நாம் இன்னமும் இசையை புறவயமாகப் பேசும் ஒரு மொழியையும் பேசுமுறையையும் உருவாக்கவில்லை. ஆகவே ஒவ்வொருவரும் அகவயமாக ஒன்றை நினைத்து அதுவே சரி என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். நுண்கலையை புறவயமாகப்பேச ஒரு பொதுவான தளம் தேவை. அது தொடர்ந்த பேச்சுகள் மூலம் பலரும் ஓர் இடத்தில் ஒன்றுகூடும்போது மெல்லமெல்ல உருவாகி வரக்கூடிய ஒன்றாகும். அப்போதுதான் ஒருவர் சொல்வதென்ன என்று மற்றவர்களுக்கு புரியும் .அதுவரை பிறர் சொல்வதை வெற்றுச்சொற்களாகவே கேட்டுக்கொண்டிருப்பார்கள்’

நான் அதை பெரிதும் ஏற்றுக் கொள்கிறேன். நான் உயிர்மையில் ஷாஜி எழுதிய கட்டுரைகள் மிக முக்கியமானவை என்றே எண்ணுகிறேன். ஆனால் இன்னொரு முக்கியமான இசை ரசிகனாகிய யுவன் அவற்றை ஒரெ வீச்சில் ஒதுக்கியதை கண்டேன். காரணம் சொல்லவும் அவரால் முடியவில்லை. இசையை புறவயமாக பார்ப்பதே யுவனுக்கு கசப்பை அளிக்கிறது என்றே எனக்கு பட்டது.

இது ஒரு சிக்கலான நிலைதான். காலப்போக்கில் மாறலாம். எனக்கு, ஒரு எளிய இசை ரசிகனாக, சொல்வனத்தின் கட்டுரைகள் மிக மிக உதவியானவையாக இருந்தன

ஜெ

 

சொல்வனம் கடிதங்கள்

சொல்வனம்,, இசை ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைசென்னையில்…
அடுத்த கட்டுரைசில வாசகர் கடிதங்கள்