ஏன் விவாதிக்கிறேன்

இரு வெவ்வேறு நண்பர்கள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் இலக்கியமல்லாத விஷயங்களில் ஏன் ஈடுபடுகிறேன் என்று கேட்டார்கள். ஏன் வாழ்க்கைபற்றி வாசகர் எழுதும் கடிதங்களுக்கு பதில்கள் அளிக்கிறேன்? இதெல்லாம் இலக்கியவாதியின் பணியா? அவர்கள் சென்ற சிற்றிதழ் யுகத்தைச் சேர்ந்தவர்கள். ’வேறு எழுத்தாளர்கள் இப்படிச் செய்வதே இல்லையே’ என்றார் ஒருவர்.

இந்தக் கடிதங்கள் எல்லாமே கட்டுரைகளும் கூட. இவற்றை எழுதுவதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வினாக்களை எனக்கு எழுதியறிவிக்கும், என்னுடன் விவாதிக்க விரும்பும் ஒரு பெரிய நட்புச் சூழல் உருவானது. அவர்களிடம் விவாதிப்பதற்காக நான் இவற்றை எழுதினேன்.

எழுத்தாளர்கள் இப்படி வாழ்க்கைபற்றி நேரடியாக உரையாடலாமா என்ற வினா இலக்கியச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் இலக்கியப்பழைமைவாதிகளிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் டாக்டர் சிவராம காரந்த் என்றும் இப்படிப்பட்ட பெரும் உரையாடலிலேயே இருந்தார். கலைக்களஞ்சியங்களை உருவாக்கியவர் அவர். நாட்டாரியல், சூழியல், வரலாற்றாய்வு, பண்பாட்டாய்வு என பல துறைகளில் தீவிரமாக எழுதியவர்

சுந்தர ராமசாமிகூட எப்போதும் இப்படிப்பட்ட உரையாடலில்தான் இருந்தார். அன்றைய சூழலில் சு.ரா பெரும்பாலும் பேசினார், அபூர்வமாக கடிதங்கள் எழுதினார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவான கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவை அச்சானது மிகக்குறைவு என்பதே வேறுபாடு.

இன்றையசூழல் இணையம் என்னும் அந்தரங்கம் சிதையாத பொதுவெளியை உருவாக்கி அளிக்கிறது. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். இது சரியா தவறா என காலம்தான் சொல்லவேண்டும். என் மனமும் நுண்ணுணர்வும் வழிகாட்டும் திசையில் சென்றுகொண்டிருக்கிறேன்.

எனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக வாழ்க்கையைப்பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் வாழ்க்கையின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை வாழ்க்கையை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாடவாழ்க்கை நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனிதவாழ்க்கையை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.

இந்த வாழ்க்கைத்தரிசனம் எழுத்தாளனுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே வாழ்க்கையை அவதானிப்பவன். என்னுடைய சொந்தவாழ்க்கையை,ப்போலவே என்னைச்சூழ்ந்துள்ள வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான மனிதர்களை கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த இணையவிவாதம். சொந்தவாழ்க்கையின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் வாழ்க்கை எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.

நான் எழுதவந்த காலம் முதலே இலக்கியத்தை மட்டும் எழுதியவன் அல்ல. வரலாறு, மதம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களும் என்னுடையவை. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து ,ஆசிரியர்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் இலக்கியத்துக்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள சூழியல் இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். இயற்கை மருத்துவம் இயற்கை வேளாண்மை போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். இத்துறை முன்னோடிகளை நேரில் சந்தித்துப்பழக்கம் கொண்டவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது இலக்கியம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர வாழ்க்கை வாழும் சராசரி தமிழ் எழுத்தாளனாக நான் என்றும் இருந்ததில்லை.என் இரண்டாவது கட்டுரையே டி.டி.கோசாம்பி பற்றிய ஓர் அறிமுகக்கட்டுரைதான்

உலக இலக்கியத்தில் நான் மதிக்கும் பெரும் படைப்பாளிகள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி இலக்கியம் வரலாறு மதம் என மூன்று தளங்களில் ஒரேசமயம் செயல்பட்டவர்கள்தான். ஆனால் அவரால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது வாசிப்பின் எல்லைகள். இரண்டு, அவரது காலகட்டம் இலக்கியத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய நவீனத்துவ யுகம் என்பது

எம்.கெ.அய்யப்பனுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட மலையாளச்சிந்தனையாளர் எம்.கோவிந்தன் அவரது மாணவர் பி.கெ.பாலகிருஷ்ணன் ஆகியோரை நான் நன்கறிவேன். அவர்களை நான் முன்மாதிரிகளாகக் கொள்பவன். அவர்களும் இலக்கியத்தை வரலாற்றின், பண்பாட்டாய்வின், மெய்யியல் நோக்கின் ஒரு பகுதியாக நினைத்துச் செயல்பட்டவர்களே. பெரும் விவாதங்கள் அவர்களைச் சுற்றி நடந்துள்ளன. மலையாளப்பண்பாட்டையும் சமூகத்தையும் சீண்டி நிம்மதியிழக்க்ச்செய்பவர்களகாவே அவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே ஒவ்வொருநாளும் ‘புயலின் கண்சுழி’யில் வாழ்ந்தவர்கள்.

ஆனால் நான் கற்றவற்றை வெற்றுத்தகவல்களாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் எழுத்தாளன் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் வாழ்க்கையை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப்பதில்களில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் விளக்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை என்பதை வாசகர் கவனிக்கலாம்.

என் வாசிப்பையும் சிந்தனையும் அவற்றின் கடைசிச் சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி அணுகியாகவேண்டிய வாழ்க்கைத்தருணங்களை நான் இக்கடிதங்களில் சந்திக்கிறேன். என் ஆற்றல் முழுமையைக்கொண்டும் அவற்றைப்பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த வரலாறு, சமூகவியல், பண்பாட்டுக்கூறுகள் , மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன.

என் கருத்துக்களை விரிவான வரலாற்று, பண்பாட்டு, ஆன்மீகப் பின்னணியில் வைத்து விவாதித்து அடைந்திருக்கிறேன். அந்தப்பின்னணியைச் சொல்லி அவற்றை தருக்கபூர்வமாக முன்வைத்திருக்கிறேன். வாசகர்கள் தங்கள் வாழ்க்கையின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் வரலாற்றுப்பெருக்கில் பண்பாட்டு ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன். இவ்விவாதத்தின் இரண்டாவது பயன் அது.

இந்த வகையான வரலாற்று, பண்பாட்டு, ஆன்மீக உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே இலக்கியவாசிப்பு நிகழமுடியும். அவ்வாறு விரிந்த வரலாற்று-பண்பாட்டு-ஆன்மீக விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே இலக்கியவாசிப்பு நிகழும் என்றால் அது இலக்கியஉத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும்.வாழ்க்கையுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய இலக்கியங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.

ஆகவே இந்த விவாதங்கள் இலக்கியத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் இலக்கியம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.

இந்த விவாதங்கள் முற்றிலும் அறிவுத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் அறிஞனின், ஆய்வாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த விவாதப்புள்ளிகளில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெறுகிறேன்.

இங்கே ஒன்றைச் சுட்டியாகவேண்டும். நான் என்னுடைய ஆர்வமும் கல்வியும் திரண்டுள்ள தளங்களில் மட்டும் நின்றே வாழ்க்கையை அணுகுகிறேன். வரலாறு, சமூகப்பண்பாட்டியல், மெய்யியல் ஆகிய மூன்று துறைகளும் கடந்த முப்பதாண்டுக்காலமாக நான் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டிருக்கும் களங்கள். இத்தளங்களில் நான் என்னை முழுத்தகுதி கொண்டவனாகவே நினைக்கிறேன். சுய கல்வியாலும், முதன்மையான ஆசிரியர்களைக் கொண்டிருத்தலாலும். இந்த எல்லைக்கு அப்பால் சென்று நான் கருத்துக்கள் சொல்வதில்லை. அறிவியல், பொருளியல் போன்ற களங்களில் நுழைவதேயில்லை. சினிமா, இசை, அரசியல் போன்று எல்லாரும் ஏதோ ஒன்றைச் சொல்லும் தளங்களில் கூட மிகுந்த எச்சரிக்கையுடன் அவை என் தளங்களைச் சந்திக்கும் புள்ளிகளை அடையாளம் கண்டு அங்கே நின்றுகொண்டு மட்டுமே கருத்துச்சொல்கிறேன்

இந்த சுய எல்லை அறிதல் இத்தகைய விவாதங்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் எழுத்தாளர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு இலக்கியத்துக்கு அப்பால் அடிப்படைத்தகவல்கள் கூடத் தெரியாது. இலக்கியமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய விவாதங்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. இதை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் இதைப்போல விரிவான விவாதத்துக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். யானை பிளிறுகிறது என எலி பிளிற ஆரம்பித்தால் கிழிந்துவிடும்.

முந்தைய கட்டுரைகள்

1. ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?

2. ஊடகங்கள் அரசியல் விவாதங்கள்

3. விவாதமுறை பற்றி மீண்டும்

4. ஏன் பொதுப்பிரச்சினைகளைப்பேசுவதில்லை

5 நாம் ஏன் வரலாற்றை வெறுக்கிறோம்
6 விவாதங்களின் எல்லை
7 ஏன் சங்கடமான வரலாற்றைப்பேசவேண்டும்?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2010

முந்தைய கட்டுரைஎம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்