புலிக்கலைஞன்

 

அன்புள்ள ஜெயமோகன்

சமீபத்தில் அசோகமித்ரனின் “புலிக் கலைஞன் ” சிறுகதை மறுமுறை படிக்கும் பொழுது ஒரு சாதாரணக் கதை ஒரு வரியில் அதன் உச்சிக்கு சென்றுவிட்டதாக உணர்தேன் .

அந்த வரி “இவன்தான் சற்று முன்பு புலியாக இருந்தவன் ” என்று அந்த புலிக் கலைஞன் சர்மாவின் காலில் விழும் பொழுது அசோகமித்திரன் இவ்வாறு எழுதி இருப்பார் .இந்த வரியுடன் மேற்கொண்டு நகராமல் சற்று நேரம் நின்றுவிட்டேன் .சட்டையைக் கழற்றி சாட்டையால் முதுகில் அடித்தது போன்ற ஒரு வரி அது .பசியில் வாடும் ஒருவன் தான் கற்ற வித்தை முழுவதையும் இந்த உலகத்தின் முன் சமர்ப்பித்து விட்டு ,கையேந்தி நிற்கிறான் ஒன்றுமில்லாமல் …அபொழுது கூட அவன் தன்னுடைய வித்தைக்கு வேலை வேண்டும் என்று தான் கேட்பான் …பசியையும் ,ஒருவனின் ஆளுமையையும் ஒரு சேர நகர்த்தி விளிம்பில் வைத்துப் பார்த்திருப்பார் அசோகமித்திரன் .வெல்வது பசியாகத்தான் இருக்கும் .

அசோகமித்ரனின் எழுத்தில் துளி கூட பாசாங்குத் தன்மை இல்லை ,மானுடப் பண்புகள் கொஞ்சம் கூடத் தவறிவிடாமல் சொல்லிச்செல்கிறார் .மானுட தரிசனம் அவருக்கு எளிதாகக் கைகூடிவிடுகிறது .

முரளி .

 

அன்புள்ள முரளி,

கலைஞன் அவனுக்குரிய கலையின்பீடத்தில் ஏறும் கணத்தைச் சொல்லக்கூடிய மகத்தான கதைகளில் ஒன்று புலிக்கலைஞன். அவ்வகையில் உலகமொழிகளில் இதுகாறும் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஒருசில கதைகளில் ஒன்று

அந்த ‘டகர் பாயிட்’ கலைஞனைப்பற்றிக் கடந்த இருபத்தைந்தாண்டுகளாகச் சொல்லிவரக்கூடியவன் நான். அவன் அவனைச் சூழ்ந்துள்ள பிறரது கண்களில் ஒரு ஏழைத்தொழிலாளி மட்டும்தான். சோற்றுக்கும் துணிக்கும் இரந்து நிற்கும் பல்லாயிரங்களில் ஒருவன் மட்டுமே. அவனை அப்படித்தான் அவர்கள் நடத்துவார்கள்

ஆனால் அவனுக்குத்தெரியும் அவன் புலியாக முடியும் என்று. ஆகவே அவன் தன்னைப்பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையையும் கொண்டிருப்பான். தன் கலையைப்பற்றி மிதமாக, ஆனால் தன்னம்பிக்கையுடன் அவன் சொல்லும் வரிகளைக் கவனியுங்கள் .’நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.”

பொதுவாக உலகியல்நோக்கு மேலோங்கிய பொதுச்சமூகம் கலைஞர்களைத் தேவையற்றவர்களாக மட்டுமே எண்ணும். நிலப்பிரபுத்துவகால மனநிலை அவர்கள் ஒருவகை ஒட்டுண்ணிகள், ஆகவே பணிந்து நயந்துவாழவேண்டியவர்கள் என நடத்தும். ஆனால் எங்கும் அறிவார்ந்த ஒரு சிறிய மையத்திலாவது கலைக்கும், அறிவியக்கத்துக்கும் ஒரு தனிமதிப்பிருக்கும்

தமிழ்ச்சூழலில் கலைஞன் அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாகவேண்டிய அற்பஜீவி என்று பார்ப்பவர்களே அதிகம். படித்தவர்கள் மட்டுமல்ல தங்களை அறிவுஜீவிகள் என நினைத்துக்கொள்பவர்கள்கூட அப்படித்தான்

சமீபத்தில் நான் புலிக்கலைஞனை நினைத்துக்கோண்டது பாண்டிசேரி நிகழ்ச்சி பற்றி நான் எழுதியதற்கு நம் இணைய மொண்ணைகள் ஆற்றிய எதிர்வினைகளைப்பார்த்தபோதுதான். கலைஞனும் ஆட்டோ ஓட்டுபவனும் ஒன்றுதான், யார் வேண்டுமானாலும் ஆட்டோ ஓட்டலாம் என்பதுபோல யார்வேண்டுமானாலும் கலையை உருவாக்கலாம், ஆகவே கலைஞன் அடக்கமாகப் பணிந்துதான் இருந்தாகவேண்டும் என்றவகையில் எழுதித்தள்ளினார்கள் நம்மூர் மொண்ணைகள்.இப்படி அறிவுஜீவிகள் என நினைப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் உலகில் எங்காவது இருக்குமா என்பதே ஐயம்தான்

அங்கே வந்து நிற்கிறான் டகர்பாயிட் காதர். அவனுக்குத்தெரியும் கலை என்பது ஒரு திறமை அல்ல என்று. தொழில் அல்ல என்று. விற்பனைப்பொருள் அல்ல என்று. அதற்கு அவன் செய்திருக்கும் தவம் என்பது ஒரு சமூகத்தில் சர்வசகஜமாகப்புழங்கும் எளிமையான பயிற்சி அல்ல என்று. ‘நம்மளுது வேற மாதிரிங்க’ என்கிறான் அவன்.

அவன் புலியாக மாறும் அந்தமாயக்கணம் அவனைப் பிறிதொன்றும் செய்யவிடாது. நம்முளுது வேற மாதிரிங்க என அவன் இந்த மொண்ணைச்சமூகத்திடம் சொல்லிக்கொண்டிருப்பான். ’எல்லாமே ஒண்ணுதான், என்னய்யா பெரிசா?’ என அவர்கள் அவனிடம் சொல்லிக்கொண்டே இருபபர்கள். வரிசையறியாது பரிசில் கொடுத்தமைக்காக கண்ணீருடன் பரிசைப்புறக்கணித்துச் சென்ற சங்ககாலக் கவிஞன் முதல் நடந்துகொண்டே இருக்கிறது இந்த நாடகம்.

நான் நினைத்துக்கொண்டேன், படித்து சம்பாதித்து தன்னையும் அறிவுள்ளவன் என நினைத்துக்கொண்டிருக்கும் தமிழ் மொண்ணைகளிடம் டகர்பாயிட் காதர் ஒரு கலைஞன், அவன் வேறுமாதிரி என்று எத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதினால் புரியவைக்க முடியும் என்று. முடியவே முடியாதென்றே பட்டது

அவன் புலியாகும் அந்தக்கணத்தில் மகத்தான ஒன்று நிகழ்கிறது. பல்லாயிரம்பேரில் ஒருவன் அந்தப்பல்லாயிரம்பேர் சார்பில் அவர்கள் சென்றடையமுடியாத ஒரு புள்ளியைச் சென்று தொடுகிறான்! அதுவரை மானுடம் அடையாத ஒன்றை அடைகிறான்!

இந்த மானுடகுலத்தின் கோடானுகோடிபேரில் சிலரே அதை அடைந்திருக்கிறார்கள். அடையமுயல்பவர்கள்கூட சிலரே. அவர்கள் பல்லாயிரம்பேர். அவர்கள் அடைந்தவை வழியாகவே அறிவும் நாகரீகமும் வளர்ந்து முன்னகர்கின்றன.

டகர்பாயிட் காதர் அடைந்த அந்தப் புள்ளி கலையில், இலக்கியத்தில், சிந்தனையில், அறிவியலில் எப்போதும் ஒரு பெரும் அறைகூவலாக இருந்துகொண்டிருக்கிறது. அதுவே எந்த ஒரு சமூகத்தையும் வழிநடத்துகிறது.அதை அடைந்த அந்தக் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து தங்களை அழித்துக்கொண்டு அங்கே சென்று சேர்ந்தவர்கள்.

ஆம், அவர்கள் சாமானியர்கள் அல்ல. பிழைப்புக்காகத் தொழில்செய்யும் ஒருவரிடம் அவரை ஒப்பிடுவது அறியாமையின் உச்சம். அவர்களைச் சாமானியர்களாக நடத்துவது வழியாக அவர்களை நாம் அவமதிக்கிறோம். அவர்கள் சென்று தொட்ட அந்த புள்ளியை இழிவுசெய்கிறோம்

அந்த இலட்சியப்புள்ளியை வழிபடக்கூடிய சமூகமே முன்னேறும் சமூகம். அந்த புள்ளியை நோக்கிச் சென்றவர்கள், அதைத் தொட்டவர்கள் மதிக்கப்படக்கூடிய, வழிபடக்கூடிய சமூகமே அறிவார்ந்த சமூகம். உலகமெங்கும் அப்படித்தான் அது நிகழ்ந்துள்ளது

அன்புள்ள முரளி, அந்த டகர்பாயிட் காதர் எவரென்று ஊகிக்கமுடியவில்லையா என்ன? பிழைப்புக்காகச் சினிமாநிறுவனத்தில் எடுபிடியாளைப்போல வேலைபார்த்த மெலிந்த மனிதர் அவர். அங்கே காரைக் கழுவச்சொன்னபோது ‘நான் ஓர் எழுத்தாளன்’ என்று அவர் சொன்னார். அதற்காக வெளியேற்றப்பட்டார். அவர் கைகளில் கனத்த பையுடன் வீடுவீடாக அப்பளம் விற்றிருக்கிறார். விதவிதமான நிறுவனங்களில் குற்றேவல் வேலைகள் செய்து அவமதிப்புகளைத் தாங்கியிருக்கிறார்.

பயந்த மனிதர்.ஒடுங்கிக் குறுகி நிற்பவர். குரலெழுப்பி ஒரு சொல் சொல்லும் திராணியற்றவர். பட்டினி வழியாகவே வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர். சென்னைபெருநகரத்தின் சக்கரங்கள் ஏறித் துவைத்துச்செல்லும் சாமானியர்களில் ஒருவர்.

அவருக்கு ஒருபோதும் எழுதுவதற்கான காகிதத்தை வாங்கும் வசதி இருந்ததில்லை. துண்டுப்பிரசுரங்களின் பின்பகுதியில், அச்சகம் வெட்டிப்போட்ட மிச்சக்காகிதத்தில் எழுதினார். அமர்ந்து எழுத ஓர் இடம் அமைந்ததில்லை. கூட்டம் கூடும் முன்பு பூங்காக்களில் பனியில் சென்றிருந்து எழுதினார்

ஐம்பதாண்டுக்காலம் தன்னுடைய கலைத்திறனின் கடைசிச்சாத்தியத்தையும் படைப்புகளாக ஆக்கி முன்வைத்தார். இச்சமூகம் இந்நூற்றாண்டில் உருவாக்கியமேதைகளில் ஒருவர். கலைஞனை காலமோ சூழலோ தோற்கடித்துவிடமுடியாதென்பதற்கு நம் கண்ணெதிரே வாழும் உதாரணம்.

அவரது கலையும் உதாசீனப்படுத்தப்பட்டது.அவர் வாசித்த நூல்களின் பெயர்களைக்கூட அறிந்திராதவர்கள் அவர் கண்ணெதிரே அறிஞர்கள் என்று கொண்டாடப்பட்டனர். அவர் உருவாக்கிய கலையின் தொலைதூரவெளிச்சம்கூட தீண்டமுடியாதவர்கள் கலைஞர்கள் என இங்கே மணிமுடிசூட்டிக்கொண்டனர். புறக்கணிக்கப்பட்டு, வசைபாடப்பட்டுத் தன் எளிய சூழலில் வாழ்பவர் அவர்.

கதையில் கண்ணீருடன் வந்து நின்று டகர்பாயிட் காதர் சொல்கிறான்.


‘நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.

”நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அதுதான் என்ன பண்ணும்? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. அவன் இப்போது அழுது கொண்டிருந்தான்.

அவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒவ்வொருமுறையும் நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். இதோ இப்போது கூட. என் வீட்டுச்சுவரில் இருக்கும் அவரது இனியமுகத்தைப் பார்க்கிறேன்.

பாரதியிடம் புதுமைப்பித்தனிடம் அசோகமித்திரனிடம் தொடர்ந்து இந்த மொண்ணைச்சமூகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. ‘ஆமா நீ என்ன பெரிசா கிழிச்சே? அவன் ஆட்டோ ஓட்டுறான் நீ எழுதுறே.நான் வியாபாரம் பண்றேன். எல்லாம் சமம்தான்’. அதுதான் நவீனசிந்தனை என அரைவேக்காட்டுக்கும்பல் அந்த மொண்ணைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது.

என்ன சொல்ல? இப்போது உங்கள் குறிப்பு வழியாக மீண்டும் புலிக்கலைஞனை வாசித்தேன்.டகர்பாயிட் காதர்! உங்களைச் சூழ்ந்திருக்கும் மொண்ணைச்சமூகத்தின் சார்பாகக் கண்ணீருடன் உங்கள் பாதங்களைப் பணிந்து மன்னிப்புக் கோருகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசலில் நின்றுகொண்டு…