கேள்வி பதில் – 05, 06, 07

‘நான்காவது கொலை’ எழுதியதன் நோக்கம் என்ன?

— பாஸ்டன் பாலாஜி.

திண்ணை இணையத்தளத்தில் நிறையத் தீவிரமாக எழுதிவிட்டேன் என்று தோன்றியது. ஒரு வேடிக்கைக்காக எழுதிப்பார்த்தேன். பொதுவாக எழுத்தாளர்கள், பூனை ஒழிந்த வேளையில் பல்லைக் கல்லில் உரசிக் கூர்ப்படுத்துவதுபோல, இதேபோல பல பயிற்சிகளைச் செய்வது உண்டு. பெரும்பாலும் வசைக்கவிதைகள் அங்கதங்கள் நக்கல்கள். இவை தனிச்சுற்றுக்குள் சுற்றுமே ஒழியப் பிரசுரமாவது இல்லை. நான்காவது கொலை பிரசுரமாயிற்று; அவ்வளவுதான். [புதுமைப்பித்தன் ஒரு பயங்கர ‘பலான’ கதை எழுதி கைப்பிரதியில் நீண்டகாலம் உலவவிட்டிருக்கிறார்]

-*-

செய்திகளைச் சிறுகதையாக்கித் தருவது சிறப்பா? வரலாறாகவே மிகைப்படுத்திச் சுவைபடச் சொல்லல் மேலா?

— பாஸ்டன் பாலாஜி.

செய்திகளைச் செய்திகளாகத் தருவதே சிறப்பு. சிறுகதை, செய்திகளைச் சொல்வதற்கான ஊடகமல்ல. செய்திகளை ஆராய்வதற்கான ஊடகம்; செய்திகள் வழியாகச் செய்திகளுக்கு அப்பால் உள்ள விஷயங்களைச் சென்று சேர்வதற்கான ஊடகம். செய்திகளைக் கதையாகச் சொல்லிப்பார்ப்பது செய்திகளை ஒருவகையில் தொகுத்து அவற்றின் சாராம்சத்தை உருவகிப்பதற்கான யத்தனமே.

வரலாறு மிகைப்படுத்துவது அல்ல. மிகைப்படுத்துவதற்குப் பேர் புராணம். வரலாறு என்பது செய்திகளை ஒர் ஒழுங்குக்குள் அமைத்துக் காட்டி அதன்மூலம் சென்றகாலம் குறித்த ஒரு மனச்சித்திரத்தை உருவாக்குவது. வரலாறு ‘நேற்று இப்படி நடந்தது, இதன்படிப் பார்த்தால் நாளை இப்படி நடக்கலாம்’ என்று கூறும் நோக்கம் கொண்டது.

செய்தி, இலக்கியம், வரலாறு ஆகியவை நெருக்கமானவை, ஆனால் துல்லியமான வேறுபாடு கொண்டவை. செய்தி என்பது ஏதோ ஒருவகையில் நம் கனவத்தைக் கவரும் தகவல். அச்செய்தியை நம் கற்பனை மூலம் நிஜம்போலவே விரித்து அதன் உள்ளுறைகளை புலப்படவைத்தால் அது இலக்கியம். அச்செய்தியை வேறு செய்திகளுடன் இணைத்து ஓர் அமைப்பை உருவாக்கினால் வரலாறு.

-*-

எனக்கு அறிமுகமாகும் அண்டை வீட்டார்கள், தமிழ்ச்சங்க நண்பர்கள் என்று சிலருக்குத் தமிழ் புத்தகங்கள் அறிமுகம் செய்வதை முயற்சித்து வருகிறேன். இதுவரை விகடன், கல்கி, காலச்சுவடு படித்து வந்தவர்கள். புதுமைப்பித்தன், நரசய்யா, இரா.முருகன், சு.ரா. என நான் கொடுக்கும் புத்தகங்களை ரசிக்கிறவர்கள், ‘விஷ்ணுபுரம்’ கொடுத்தால் திருப்பியடிக்கிறார்கள். நானே மிகவும் கஷ்டப்பட்டு அறுபது பக்கம் தாண்டுகிறேன். ஏன்?

— பாஸ்டன் பாலாஜி.

எந்த ஒரு அறிவுத்துறைக்கும் எந்த ஒரு கலைக்கும் அடிப்படைப் பயிற்சி தேவை. அது இல்லாமல் அணுகக் கூடிய அறிவுத்துறையோ கலையோ இல்லை. அப்படி அணுகக் கூடிய அறிவுத்துறை அல்லது கலை என நான் நினைப்பவை சில உண்டு. கவனித்தால் அத்துறைகள் நம் சூழலுக்கு மிகப்பழகியவை என்பதனால் அதற்கான பயிற்சியை நம் சூழல் நமக்கு இயல்பாக அளித்திருக்கும் என்று தெரியும். நாம் திரைப்படப் பாடல்களைக் கேட்க எந்தப் பயிற்சியும் எடுப்பது இல்லை. ஆனால் பயிற்சி இல்லாமல் தமிழ் மரபிசையைக் [கர்நாடக இசை] கேட்க இயலாது. ஆனால் வெளிநாட்டினருக்கு நம் திரைப்படப்பாடல்களைக் கேட்கவே பயிற்சி தேவைப்படுவதைக் கவனித்திருக்கிறேன்.

அறிவுத்துறைகளுக்கான பயிற்சி என்பது அத்துறைகளின் அடிப்படை விதிகள், அடிப்படை கருதுகோள்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுதலாகும். கலைகளுக்கான பயிற்சி என்பது அக்கலைகளை அனுபவமாக மாற்றும் குறியீட்டு அமைப்பை நம் மனதுக்குள் நிரப்பிக் கொள்வது.

இசை, ஒலிகளினாலான குறியீட்டமைப்பு. ஓவியம், வண்ண வடிவங்களின் குறியீட்டமைப்பு. இலக்கியம் சொற்களினாலான குறியீட்டமைப்பு. ஒரு குறிப்பிட்ட ஒலியமைப்பைக் கேட்டதும் இது இன்ன ராகம், இந்த ராகத்தின் உணர்வு இத்தகையது என்ற மனப்பிம்பம் நம்மில் உருவாகக் காரணம் நமக்குள் இருக்கும் குறியீட்டுக் கட்டுமானமே. தூரிகைவண்ணத்தீற்றல்களைக் கண்டாலே மனப்பதிவியல் [impressionism] என நம் மனம் நினைக்கிறது. அதேபோல இலக்கியத்துக்கும் ஒரு குறியீட்டுக் கட்டுமானம் உள்ளது, அது நமக்குள் இருக்கவேண்டும்.

இசைக்கும் ஓவியத்துக்கும் பயிற்சி தேவை என்றால் ஏற்கும் நாம் இலக்கியப்பயிற்சி பற்றிக் கவலைப்படுவது இல்லை. காரணம் அது மொழியில் இருக்கிறது, மொழிதான் நமக்குத் தெரியுமே என்று நினைக்கிறோம். அது ஒரு தவறான நினைப்பு. இலக்கியம் மொழியில் எழுதப்படுவதில்லை, மொழிக்குள் செயல்படும் தனிமொழியில் எழுதப்படுகிறது. அதை இலக்கியத்தின் மீமொழி [Meta language] எனலாம். அந்த மொழி தெரிந்தால் மட்டுமே இலக்கியத்துக்குள் நுழைய முடியும். அந்த மீமொழி குறியீட்டு மொழி எனலாம். அதுதான் வாசகனின் கற்பனையைத் தூண்டி ஒரு படைப்பு சொல்லாமல் உணர்த்தும் விஷயங்களை உணரச்செய்கிறது. தமிழ் பிறந்ததுமே இக்குறியீட்டுமொழியும் பிறந்துவிட்டது . சங்ககாலம் முதல் அது பலவாறாக வளர்ந்துவருகிறது. உலக இலக்கியத்துடன் உரையாடி இருபதாம் நூற்றாண்டில் அது மேலும் விரிவு கொண்டுள்ளது.

எந்த ஒரு கலையையும் அறிய ஒரேவழி அதனுடன் நெருக்கமான தொடர்ந்த தொடர்பு வைத்துக் கொள்வதுதான். இசை புரியவில்லை என்றால் ஒரேவழி தொடர்ச்சியாகக் கேட்பதுதான். தொடர்ச்சியாகப் படிப்பதே இலக்கியத்துக்குள் நுழையவழி. ஆகவே புதிய வாசகர்களுக்கு அவர்கள் அறிந்த தள நூல்களையே முதலில் அளிக்கவேண்டும். என் சிபாரிசு தி.ஜானகிராமன். பிறகு சுந்தர ராமசாமி. கடைசியாகத்தான் விஷ்ணுபுரம் அல்லது புயலிலே ஒரு தோணி [ப.சிங்காரம்]. வாசகர்கள் இலக்கியப்படைப்பு முக்கியமானது, அதைப் படிப்பது அவசியமானது என்ற எண்ணத்துடன் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். சுந்தர ராமசாமியின் சொற்களில் சொன்னால் எட்டாம் வகுப்பு கணிதத்துக்குக் கொடுக்கும் கவனம் கொடுத்துப் படித்தால் புரியாத இலக்கியப்படைப்பு ஏதுமில்லை.

இன்னொரு விஷயம், ஒரு புதிய இலக்கியப்படைப்பு முற்றிலும் புதிய ஒரு ரசனைக்களத்தை உருவாக்குகிறது. அதுவரையிலான இலக்கிய மரபை நாம் அறிந்திருந்தால்கூட அது நமக்கு பிடி கிடைக்காமல் போகலாம். பிறகு பேசிப்பேசித் தெளிவாகிறது. ‘ஜெ.ஜெ. சில குறிப்புகள்’ வெளிவந்த காலகட்டத்தில் சுந்தர ராமசாமிக்கு தினமும் கடிதம் வரும் அது புரியவில்லை என. அதைப் புரியக்கூடிய நூல்களின் பட்டியலில் சேர்ப்பீர்கள் இன்று. விவாதிக்கும்தோறும் படைப்பு தெளிவடையும்

மூன்றாவது விஷயம் படைப்பின் இயல்பு. என் ‘காடு’ நாவல் எளிதாகச் சொல்லிச்செல்வது. காரணம் அதன் பேசுபொருள் முதற்காதல். ஆகவே இயல்பாக அதைப் படிக்கலாம். ஆனால் விஷ்ணுபுரம் சிக்கலான தத்துவப்பிரச்சினைகளையும் வரலாற்று முரண்பாடுகளையும் குறித்துப் பேசுவது. ஆகவே அதன் அமைப்பு மொழி ஆகியவை சிக்கலானவை. எல்லா படைப்பும் எல்லாருக்கும் உரியதல்ல. விஷ்ணுபுரம் மரபு மீது ஆர்வம், தத்துவ ஈடுபாடு ஆகியவைகொண்ட வாசகர்களுக்கு உரியது. சிலரது மனம் அதில் படியாமலேயே போய்விடலாம். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ ‘காடு’ ஆகியவற்றை ஈடுபட்டு படித்த ஜெயகாந்தனால் விஷ்ணுபுரம் பத்து பக்கம் படிக்க முடியவில்லை. அவரது படைப்புலகில்கூட புராணங்களின் சிறு அம்சம் கூட இல்லை என்பதைக் காணலாம். அது இயல்பானதே. இதிகாசங்களிலும் காவியங்களிலும் ஊறிய மலையாளத் திறனாய்வாளர் குட்டிகிருஷ்ணமாரார் ‘போரும் அமைதியும்’ [தல்ஸ்தோய்] ஒரு இலக்கியநூலே அல்ல என்றார். என்னால் காஃப்காவின் படைப்புகளை ரசிக்கவே முடியவில்லை. அதை அப்படியே விட்டுவிடுவதே உசிதமானது.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 04
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 08