புதியவர்களின் கதைகள் 6, பீத்தோவனின் ஆவி-வேதா

மினியாப்பொளிஸ் உள்ளூர் விமான நிலையம். அங்கும் இங்குமாக ஆட்கள் சிதறிக் கிடந்த கூட்டமில்லாத காத்திருக்கும் அறை. தடித்த கண்ணாடிச் சுவரின் முன் இணைகோடு வரிசைகளாய் நீண்டிருக்கும் காலி இருக்கைகள். கண்ணாடிச் சுவரின் உயரத்துக்கு வெளியே மேகங்கள் கவிந்த மங்கலான சாம்பல் நிற வானம். கீழே மிகப்பெரிய திறந்த வெளி மைதானம். ஒரு சரக்கு விமானம் இரையை விழுங்கி விட்டு பழகிய வழியில் திரும்பும் கிழப்பாம்பு போல ஊர்ந்து கொண்டிருந்தது .

கூடத்தின் ஆளற்ற இருக்கையின் வரிசையில் எதிர் இருக்கையில் காலை நீட்டி சரிந்து அமர்ந்திருந்தான். காதில் இசைக்குமிழ்கள். கண்கள் மூடியிருந்தன.

இரு பெரிய பயணப் பெட்டிகளை சிரமத்துடன் கூடத்துக்குள் இழுத்து வந்தாள். தலையை அரைவட்டமடித்து திருப்பி சுற்றத்தில் யாருமில்லை என்பதை கவனித்து, அவன் அருகில் சென்று பெட்டிகளை நிறுத்தி அவனிடம் ஏதோ சொன்னாள். பதில் வராததால் குரலை உயர்த்தி இரண்டாம் முறையாக,

“தொந்தரவுக்கு மன்னிக்கவும்…. இவைகளைப் பார்த்துக்கொள்ள முடியுமா இதோ உடனே திரும்பிவிடுகிறேன்!” என்றாள், உரத்த குரலில்.

குரல் கேட்டு நிமிர்ந்து காதிலிருந்த இசைக்குமிழ்களை தற்காலிகமாக விடுவித்தவாறு “ஓ, நிச்சயமாக” என்றான்.

“பெட்டிகளை தனியாக விட்டுபோனால் காமிராவில் கவனித்து காவலர்கள் உடனே எடுத்துச்சென்று விடுவார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி போராடி பெட்டிகளை மீட்டு வருவற்குள் என் விமானமே கிளம்பிவிடும். ..ஒரு முறை அப்படித்தான் ஆகிவிட்டது. இதோ உடனே வந்துவிடுகிறேன்”

“பிரச்சினையில்லை. சென்று வாருங்கள்”

வேகமாக நடந்து இடப்புறம் வளைந்து நீளும் பாதையில் சென்று மறைந்தாள்.

சராசரி உயரமுள்ள அறுபது வயது மதிக்கத்தக்க அமெரிக்கப் பெண்மணி. தளர்ந்த, ஆனால் அணிவகுப்பின் மிடுக்கு அன்றாட நடையிலும் பழகிவிட்ட சிப்பாயைப்போன்ற ஒழுங்கு பொருந்திய நடை.

சில நிமிடங்களில் திரும்பி வந்து, ”உங்களுக்குத் தொந்தரவில்லை என்றால் நான் இங்கே உட்காரவா?” என்றாள்.

“ஓ நிச்சயமாக!”

காலை மடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து இசைக்குமிழ்களை நிரந்தரமாகக் கழற்றி அருகில் வைத்தான்.

“இசைக்குமிழ்களை காதிலிருந்து அகற்றியதற்கும் மிக்க நன்றி. இது இளைய தலைமுறையின் ஒரு உடல் உறுப்பு போலவே ஆகிவிட்டது. …என் மகள்களை இவைகள் இல்லாமல் உணவு மேசையில் பார்க்க முடிந்ததை என் சாதனைகளுள் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும்”

“ஆமாம் மன்னிக்க வேண்டும்… கொஞ்சம் தூங்கி விட்டேன்… நீங்கள் அழைத்ததை கவனிக்கவில்லை”

“உங்களை விழிக்க வைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன். உதவிக்கு மிக்க நன்றி. உங்கள் உறக்கத்திற்கு தடையாக இருக்கமாட்டேன். ” என்று விலகி கிளம்பப் போனாள்.

“அப்படியொன்றும் இல்லை அமருங்கள். நான் பகலில் தூங்குவதில்லை. …எவ்வளவு நேரந்தான் மேக மூட்டத்தையும் சரக்கு விமானத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக என் விமானம் பாஸ்டனில் கிளம்ப தாமதமாகிவிட்டது. இங்கு இறங்கும் முன்பாகவே நான் ஏற வேண்டிய விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானம் நான்கு மணி நேரம் கழித்துத்தான். அதிகாலை வரை விழித்துக்கொண்டிருந்த களைப்பில் கண்ணயர்ந்து விட்டேன் ”

“நல்லது. கையிலிருந்த புத்தகத்தை விமானத்தில் கண்விழித்துப் படித்துவிட்டேன்…எனக்கும் நேரத்தைக் கடத்தவேண்டும்….ஐ ஆம் சேரா பலின்ஸ்கி. …சேரா என்று அழைதாலே போதும்,” நட்புடன் புன்னகைத்து கையை நீட்டினாள்.

பார்த்தவுடன் மரியாதை கொள்ளச் செய்யும் கண்ணியமான தோற்றம். இரும்புத்துரு நிற கேசம். வெள்ளை முள்ளங்கி நிற முகத்தில் கண்கள் மரகதப் பச்சைகள்.

”சந்திப்பதில் மகிழ்ச்சி, என் பெயர் சிவா”

மென்மையாக கைகுலுக்கிவிட்டு அவன் கால் இப்போது இல்லாத எதிர் இருக்கைக்கு சில இருக்கைகள் தள்ளி அமர்ந்தாள்.

“நீ இந்தியன் அல்லவா. உன்னைப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது”

“நான் பேசும் ஓட்டை ஆங்கிலத்தை வைத்துத்தான், இல்லையா?”

“என் அன்பு இளைஞனே. …ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கற்காத பெரும்பான்மையைப் போலவே நீயும் எண்ணுகிறாய். ஆங்கிலத்தில் பெரும் புலமைகொண்ட அறிஞர்கள் பலரின் தாய்மொழி ஆங்கிலம் அல்ல தெரியுமா… வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளும் குழந்தைகளைக் கொண்ட தேசம் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. சந்தேகமில்லை. …என்னைப்பற்றி நீ ஏதும் கேட்கவில்லையே?”

“ஆமாம். பாதித்தூக்கதில் எழுந்ததில் மறந்து விட்டேன். உங்கள் பெட்டிகளைப் பார்த்தால் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவருடையது போலத் தெரிகிறது!”

“ஆமாம். போலந்தில் என் அம்மாவைப் பார்க்கப் போகிறேன். இரண்டு மாதம் அவளுடன் இருக்கத் திட்டம். அதற்கு முன் வியன்னா ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவின் சிறப்பு விருந்தினராகச் செல்கிறேன். மூன்று நாளும் தொடர்ந்து பீத்தோவனை மட்டுமே பியானோவில் இசைக்க வேண்டும். …..என்ன ஒரு வதை!”

சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தாள். அழகிய பல் வரிசை. இடையில் ஒன்றோ இரண்டோ தங்கப்பற்கள்.

“நல்லது. பதிலுக்கு நானும் ஒரு உதவிகேட்க வேண்டும். தளத்தின் அடுத்த மூலையில் ஒரு ஸ்டார்பக்ஸ் கடை உண்டு. என் பெட்டியைப் பார்த்துக் கொள்ள முடியுமென்றால் சொல்லுங்கள்…. உடனே திரும்பி விடுகிறேன். உங்களுக்கும் ஏதாவது வேண்டுமானால் வாங்கி வருகிறேன்”

“ஆம். எனக்கு ஒரு கறுப்பு காஃபி மட்டும், சிறிய கோப்பை”

“இதோ வருகிறேன்”. எழுந்து வேகமாக நடந்தான் சிவா. நீண்ட நேரம் ஒரே இருக்கையிலிருந்த களைப்பு சற்று விலகியது போல இருந்தது. ஏதாவது வேண்டுமா என்று ஒரு சம்பிரதாயத்துக்காக கேட்ட உடனேயே அவள் ஆம் என்று ஏற்றுக்கொண்டு காஃபி வாங்கி வரச்சொன்னது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்க வாழ்க்கையில் இவளைப்போல ஒரு பெண்ணை நண்பர்களின் இல்லங்களில் அல்லாமல் பொது இடத்தில் அவன் சந்தித்ததில்லை.

“இதோ உங்கள் காஃபி” அவள் கையில் கொடுத்துவிட்டு சர்க்கரைப் பாக்கெட்டுகளை அவள் அருகில் வைத்தான்.

“மன்னிக்கவேண்டும் என் அன்புப் பையா! நீ காபி வாங்கச் சென்ற பிறகுதான் என் கைப்பயைக் குடைந்து பார்த்தேன். பழைய தலைமுறை ஆள் நான். உனக்குத் தர என்னிடம் பணம் ஏதுமில்லை. புது தலை முறை போல ஆகவேண்டுமானால் கைப்பையை ரொக்கப் பணத்தால் நிரப்புவதை நிறுத்து… என்று கத்துவாள் என் கடைசி மகள். வழக்கமாக சில இருபது டாலர் தாள்களாவது வைத்திருப்பேன். மறந்து விட்டேன் போலிருக்கிறது. உண்மையிலேயே நீ என்னை மன்னிக்க வேண்டும். வங்கி அட்டை இருக்கிறது சிறிது நேரத்தில் ஏடிஎம்மில் எடுத்துத் தருகிறேன். …மிகவும் தேவைப்பட்டது …காஃபிக்கு மிக்க நன்றி”

“ஒன்றும் பிரச்சினையில்லை. இவை போன்றவை நடப்பதுதான். நான் தவறாக எண்ணவில்லை. …ஏடிஎம் தேடி நீங்கள் சிரமப்பட எந்த அவசியமும் இல்லை”

சூடான காஃபியை மெல்ல உறிஞ்சிச் சுவைத்தான் சிவா.

“எல்லா இந்தியர்களையும் போல நீயும் கணினித்துறை நிபுணன்தானா?”

“இல்லை. …எங்கள் உறவினர் குடும்பங்களில் உயிரியல் படித்த பெரும் தவறைச் செய்த ஆள் நான் மட்டுந்தான்….பிறகு மூலக்கூறு உயிரியலில் பிஎச்டி முடித்தேன். மேற்கொண்டு ஆராய்ச்சிப் பயிற்சிக்காக மாஸசூஸட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறேன், சில பல ஆண்டுகளாக. …உதவித்தொகை வழி ஆராய்ச்சிப் படிப்பு… ஒரு அறிவியல் மாநாட்டுக்காக சியாட்டில் செல்கிறேன்”

“சரிதான். நீ படிப்பதை விடுவதாக இல்லை போல..”

“அப்படி இல்லை. …படிப்பு என்னை விடுவதாக இல்லை. அது தான் உண்மை”

வாய்விட்டு உரக்கச் சிரித்தாள்.

“உன்னிடம் சொல்ல வேண்டுமென நினைத்தேன்…ம்..இப்போது நினைவு வந்து விட்டது. ரஹ்மன் என்றொரு பையன் அவனுடன் இன்னொரு பையன். உலக அமைதிக்கான நொபல் பரிசு விழாவில் அருமையாக வாசித்தார்கள் என்று என் தோழி சொன்னாள்”

“ரஹ்மான் பையன் அல்ல. இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கு ஐம்பது வயதாகிவிடும் …இதை உங்கள் தோழியிடமும் நீங்கள் சொல்லவேண்டும்”

“ஆச்சரியம்தான். தியானம் யோகம் இதெல்லாம் உங்கள் ஊர்ச்சரக்குதான் இல்லையா. அதுதான் காரணம் என நினைக்கிறேன்.. ….ம்…இந்திய ஆண்கள் வயதானாலும் இளமையாகத்தான் தோன்றமளிப்பார்கள் போல” என்றாள், குறும்பாக கண்ணைச் சிமிட்டியபடி.

“நான் ரஹ்மானை அளவுக்கு வயதானவன் அல்ல. ஒரு பதினைந்தாவது குறைவுதான்”

“பயப்படாதே. எனக்கு ஏற்கனவே மணமாகிவிட்டது. மேலும் என்னைவிட முப்பது வயது இளைய ஆண்களை மணக்கும் திட்டம் எதுவும் இப்போது எனக்கில்லை”

“தெளிவுபடுத்தியமைக்கு நன்றி சேரா. என் பயமெல்லாம் இப்போது விலகிவிட்டது”

இருவரும் ஒருசேர சிரித்தார்கள்.

காப்பியை சில மிடறுகள் விழுங்கி விட்டு தியானம் செய்பவள் போல கண்களை மூடியிருந்தாள் சேரா. சிவா அமைதியாக வேறு திசையில் பார்த்துக்கொண்டு சில மிடறுகள் குடிக்க முயன்றான்.

கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று நினைத்துக்கொண்டு அதன் சங்கடத்துடன் சற்று பணிவாகவே பேசினான்.

“உரையாடலின் பாதியில் எழுந்து சென்றதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். தொடர்ந்து பீத்தோவன் வாசிப்பதை வதை என்றீர்கள். விளையாட்டுக்குத்தான் சொன்னீர்கள் என்றாலும் இதை நீங்கள் சொன்ன விதத்தில் ஏதோ ஒன்று உறுத்துகிறது. காஃபி வாங்கித் திரும்பும்போது ஏன் அப்படிச் சொன்னீர்கள் என்று யோசிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை”

கண்களைத் திறந்து நிமிர்ந்து அமர்ந்தாள். “மன்னிக்க வேண்டும்! நடுவே எதையெதையோ நினைத்துக்கொண்டேன். தனியாக வியன்னாவுக்கு சார்லி இல்லாமல் நான் மட்டும் செல்வது இது தான் முதல் முறை. அதனால்தான்”.

சிவாவின் கண்களில் தெரிந்த குழப்பத்தை கவனித்து விட்டு, “மன்னிக்க வேண்டும். சார்லி என் கணவர். இறந்து ஒருவருடம் ஆகிறது. இன்று எனக்கு அசடு வேடம் போல” தலையை பக்கவாட்டில் விசிறி அசைத்து குனிந்து கண்களை தேய்த்துக்கொண்டு மெலிதாக கொட்டாவி விட்டாள்.

“மிகவும் வருந்துகிறேன்!” என்று சொல்லிவிட்டு தலையை பின்னுக்கிழுத்து அமர்ந்தான் சிவா.

“மன்னிக்கவும், வருந்துகிறேன் …இதைத்தவிர இன்று நாம் வேறு எதுவுமே பேச மாட்டோம் போல”

சொல்லி விட்டு பெரிய ஒரு நகைச்சுவையைச் சொல்லி விட்டதைப் போல உரக்கச் சிரித்தாள்.

“புதியவர்களுடன் அறிமுகமாகும்போது வானிலையைத் தவிர வெறெதைப் பற்றியும் பேசக்கூடாது. அவர்களாகவே வேறு விஷயங்களைப் பற்றி பேசும்வரை. இது என் ஆங்கில ஆசிரியை கற்பித்தது”

“சரிதான். இதையெல்லாம நான் கற்கவே இல்லை. அப்படியென்றால் பிரச்சினையெல்லாம் என் ஆங்கில ஆசிரியை மேல்தான் என நினைக்கிறேன்”

மீண்டும் ஒரு உரத்த சிரிப்பு.

மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசாமல் வேறு திசையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

சீருடையணிந்த ஒரு காவலர் இரைச்சலான வாக்கிடாக்கியில் புரியாத ஆங்கிலத்தில் ஏதோ பேசிக்கொண்டே மென்மையாக உறுமும் செஹ்வே வண்டியில்கடந்து சென்றார்.

“உன் கேள்விக்கு வருகிறேன். நன்றாகக் கேட்டாய். ..மேற்கத்திய சாஸ்திரீய இசை பற்றி உனக்கு அறிமுகம் உண்டுதானே”

“ஆம். அறிமுகம் மட்டுந்தான். நானே கற்பித்துக்கொண்ட ஓரளவு அடிப்படைகள் …அவ்வளவுதான். கேட்கப் பிடித்தவைகளைக் கேட்பேன். பீத்தோவன் எனக்குப் பிடிக்காது என்று சொல்லமாட்டேன்…. எனக்கு மிகவும் ஆதர்ஷம் என்றால் பாஹ் மற்றும் ஷோபேன்”

ஆச்சரியம் ஒளிரும் விழிகளுடன் சிவாவின் கண்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே, “எனக்கும்தான். …இன்றைய தேதியில் எனக்கும் பீத்தோவன் ஆதர்ஷம் கிடையாதுதான். ஆனால் என்ன செய்வது…என் நிபுணத்துவம் முழுக்கவும் அதில்தான் என்பதுதான் பெரும் துரதிருஷ்டம்…. இதை நான் வேறு யாரிடமும் சொல்ல முடியாது என்பதுதான் இதன் பெரும் சோகம்”

இதை நான் யாரிடமும் சொல்ல முடியாது என்பதுதான் இதன் பெரும் சோகம் என்பதை ஒரு மந்திரத்தைப் போல மீண்டும் ஒருமுறை சொல்லிவிட்டு அயர்ச்சியுடன் கண்களை மூடிக்கொண்டாள்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். இதைப்போன்ற உரையாடல்களில் சொல்வதற்கு பெரும்பாலும் அவனுக்கு எதுவும் இருப்பதில்லை. நான் வேறு என்னதான் சொல்லவேண்டுமென இவள் எதிர்பார்க்கிறாள்? ஏதாவது காரணம் சொல்லி விட்டு எழுந்து சென்றுவிடலாமா என்றும் யோசித்தான்.

இது போன்ற சமயங்களில் கைபேசியை எடுத்து அதில் எதையாவது வாசிப்பது அவன் வழக்கம். கைபேசியை பாக்கெட்டிலிருந்து எடுத்து அதில் மணி பார்த்தான். விமானம் வந்து சேர இன்னும் இரண்டுமணி நேரமாவது இருக்கிறது. பெட்டிகள் நடுவில் கண்ணை மூடி அவள் அமர்ந்திருந்த விதத்தை கொஞ்சநேரம் பார்த்த்துக்கொண்டிருந்ததில் ஒருவித பரிதாப உணர்ச்சி மேலிட்டது.

“நீங்கள் ஏதோ வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதை மறைக்கத்தான் பத்து நிமிடம் முன் பழகிய என்னிடம் கூட மிகவும் விளையாட்டாகப் பேசுகிறீர்கள். நீங்களே சொன்னதால் அதைப்பற்றிக் கேட்டேன், மன்னிக்க வேண்டும்”

சில நொடிக்குப்பிறகு கண்களைத் திறந்து, “இதைப்பற்றி யாரிடமாவது பேசவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உன்னிடம் பேச நேரிடும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை”

“ உங்களுக்கு கச்சேரிக்கான அழைப்புகள் நிறைய இருக்கும் என்றால் அவைகளை நீங்கள் ஏன் நிறுத்தவேண்டும்? எனக்குப் புரியவில்லை”

சில நொடிகள் தயங்கி அசைவின்றி இருந்தாள். திடீரென எதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டது போன்ற ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தாள்.

“இதே அழைப்பின் பேரில் கடந்த பத்து வருடமாக வியன்னாவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு சௌகர்யமான தேதிகளில் பல நாடுகளில் பல மேடைகளில் இன்னும் இரண்டு வருடம் வரை நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டுள்ளேன். ஆனால் என் வாழ் நாளில் நான் கடைசியாக வாசிக்கப்போகும் கச்சேரி இது தான் என நினைக்கிறேன். இந்த முடிவு ஒவ்வொரு நிமிடமும் உறுதியாகி வருகிறது”

“என் அறியாமையை நீங்கள் மன்னிக்க வேண்டும்….நீங்கள் புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞர் என்பது எனக்குத் தெரியாது….மேற்கத்திய சாஸ்த்ரீய இசையை ஹாபியாக கேட்பதோடு சரி….மீண்டும் கேட்கத் தூண்டினால் அதுதான் என்னைப் பொருத்தவரை நல்ல இசை. பீத்தோவன் இசை பற்றி எனக்கு அதிமாகவெல்லாம் தெரியாது. ஒரு பாமர இசை ரசிகனாக மனதில் பட்டதைச் சொன்னேன்…. அதுவும் உங்களைப் போன்ற இசைமேதை ஒருவரிடம் இதைப்பற்றியெல்லாம் விவாதிக்கும் தகுதி எனக்கு உண்டு என்றும் நான் நம்பவில்லை”

“இல்லை இல்லை. ஒருபோதும் அப்படிச்சொல்லாதே. இசையைப்பற்றி விவாதிக்க இசையைக கற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இசையை ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் முக்கியம். உனக்குத்தான் போதுமான அளவு உனக்கு இசை தெரிந்திருக்கிறதே …அதுவே போதும். நான் சொல்லப்போவது உனக்கு நிச்சயம் புரியும் என நினக்கிறேன். நான் சொல்லப்போவது சிக்கலான இசை நுணுக்கங்களைப் பற்றியதல்ல”

“சொல்கிறேன். …என் கணவர் சார்லி என் மிகச்சிறந்த நண்பர். இதுபோன்ற விஷயங்களை அவரிடம் அருமையாக விவாதிக்க முடியும். சென்ற வருடம் சாலை விபத்தில் அவர் இறந்த பிறகு ஒரு எண்ணம் என்னை ஒரு தொற்று நோயைப்போல பீடித்துக் கொண்டுவிட்டது. ஒரு கடும் வியாதியைப் போல நாள்தோறும் என்னுள் வளர்ந்து மெல்ல மெல்ல என்னைத் தின்று கொண்டிருக்கிறது. அதை நான் யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும்”

“அப்படியென்றால் தாராளமாகச் சொல்லுங்கள். என் விமானத்துக்கு இன்னும் மூன்று மணி நேரம் மீதமிருக்கிறது”

முகம் இறுகி சுவாசம் குழைந்து மூச்சை சிலமுறைகள் வேகமாக இழுத்து விட்டாள். இப்போது அவள் முகம் முழுக்க மாறி முற்றிலும் வேறு பெண் போல இருந்தாள்.

“என் இளைய மகளுக்கு ஏறக்குறைய உன் வயதுதான். என் மூன்று மகள்களுக்கும் மணமாகி எனக்கு ஐந்து பேரப்பிள்ளைகள். வேலை எதுவும் செய்யாமலேயே விரும்பியபடி பயணங்கள் செய்து வாழ்நாள் மீதியையும் கழித்துவிட முடியும். …சேமிப்பில் பிரச்சினை ஏதுமில்லை. இனிமேலும் நான் சாதிக்க விரும்புவது என்று ஏதுமில்லை. நான் பியானோ இசைக்காத உலகத்தின் குறிப்பிடத்தக்க மேடைகள் சில தான் மீதி. …ஆனால் என் வருத்தம் அது பற்றியதல்ல”

பெரும் சோகமான செய்தி ஒன்றை சொல்லத்தயாராவது போல தயங்கி பேச்சை நிறுத்தினாள். முகம் திடீரென மாறி அதில் வேதனையின் நிழல் படர்ந்தது.

“இனி இதை நான் வேறு எவரிடமும் சொல்லவே முடியாது. ஆகவே யாராவது ஒருவரிடம் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்”

“தாரளமாகச் சொல்லுங்கள்…கேட்கிறேன்”

ஏதோ தீர்மானத்தால் உந்தப்பட்டது போல அவசரமாக சில மிடறுகள் குடித்தாள். சிறு மவுனத்துக்குப்பின் தொடர்ந்தாள்.

“சார்லி என் மிகச்சிறந்த நண்பன். அவன் என் பள்ளிநாள் நண்பன் காதலன். …என் கணவன். என் மூன்று குழந்தைகளுக்கும் தகப்பன். அவனுடன் எவரும் ஒரு நாளும் பிணக்கம் கொள்ள முடியாது. …அற்புதமான மனிதன். பதினைந்து வயது முதல் அவனை அறிவேன். அன்றிலிருந்து தொடர்ந்து அவனோடு ஒன்றாக வாழமுடிந்ததை என் வாழ்நாளின் பெரும் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளில்லை. அவனோடு வாழ்ந்த ஒவ்வொரு மணியிலும் இதை நான் அறிவேன் என்பதால் என்றாவது அவனை நான் இழக்கத்தான் வேண்டும் என்பதில் பெரிதாக எனக்கு வருத்தமில்லை என்றுதான் சொல்லவேண்டும்… நானும் ஒருநாள் சாகத்தானே வேண்டும்? ….அதிலும் துளியும் எனக்கு வருத்தமில்லை. இனிமேல் நான் வாழ்ந்துதான் என்ன ஆகப்போகிறது?”

கூடத்தில் அருகில் அவர்கள் இருவரைத் தவிர எவருமில்லை. பெட்டிகளை கவனமாகப் பாதுகாப்பது சந்தேகிக்க இடமுள்ள பெட்டிகள் மற்றும் நடவடிக்கைகளை காவல் அலுவலகத்துக்கு உடனே தெரிவிக்கும்படி கோரும் ஒலி பெருக்கியின் அறிவிப்பு ஒலித்தது. அது முடிந்ததும் கனத்த அமைதி. விமான நிலையங்களில் வழக்கமாக ஒலிக்கும் பின்ணனி இசை ஏதுமில்லை.

வேடிக்கையும் விளையாட்டும் மறைந்து உரையாடலில் திடீரென இறுக்கம் சூழ்ந்து கொண்டதை எதிர்பார்க்கவில்லை என்பதால் சற்று அசௌகர்யமாகவும் உணர்ந்தான் சிவா. அவள் முகத்தில் ஏற்படும் தீவிரத்தைப் பார்த்தால் அவளின் மனநலம் மீது அவனுக்கு சிறிது அச்சமும் எழுந்தது.

“சார்லி இறந்த அன்று அவனுடன் நானும் காரில் சென்றிருக்க வேண்டும். ஒரு கச்சேரிக்கான தயாரிப்பில் இருந்ததால் அவனைத் தனியாகச் செல்ல விட்டேன்”

“அவனை அடக்கம் செய்த பிறகு சில வாரங்கள் வரை என் பெண்கள் என்னைத் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டார்கள். பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஒரு மாதம் கழித்து என் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டேன். வழக்கம் போல கச்சேரிகளிலும் இசைக்க ஆரம்பித்துவிட்டேன். நன்கு பழக்கப்பட்ட சர்க்கஸ் புலிபோல. எந்தப் பிரச்சினையும் இல்லை”

“என் வீட்டுக்குத் திரும்பி ஒருமாதம் கழிந்தது. என் மகளின் தோழியின் திருமணம். அவள் என்னை வற்புறுத்தி அழைத்துச்சென்றாள். சின்ன வயதில் இருந்தே என் மகள்களுடன் எங்கள் வீட்டில் வளர்ந்த பெண். திருமண விழாவில் இசைநிகழ்ச்சியும் இருந்தது. கலைஞனின் பெயர் நினைவில்லை. ஆனால் அவன் பிரபலமான ஆள் அல்ல. சிவந்த முகமும் குழந்தை போன்ற கண்களும் கொண்ட ஒரு நடு வயது இந்தியன்….ஹிந்துஸ்தானி இசையாம்…. ஒருமணி நேரமும் ஒரு பாடல்தான்…உயிரை உருக வைக்கும் பாடல்”

கம்மிய குரலை செருமி சரிசெய்துவிட்டு சீரான குரலில் தொடர்ந்தாள்.

“சார்லி இறந்த போது நான் உண்மையில் அழவில்லை. அதையும் நான் உனக்குச் சொல்லவேண்டும். சம்பிரதாயமான கறுப்பு உடையணிந்து துக்கம் விசாரிக்க வந்த விருந்தினர்களுடன் யாரோ ஒருவரின் சடங்கில் பங்கேற்பது போல அமைதியாக அமர்ந்திருந்தேன்”

“ஆனால், இரண்டு மாதம் கழித்து அன்று இரவு, இசைக்கூடத்தில் அந்தப்பாடலைக் கேட்டு அழுதேன். மானுட இருப்பின் துயரத்தையெல்லாம் தன் குரலால் கரைத்து அந்த இசைக்கூடத்தையே முழுக்க நிரப்பி விட்டான் அந்த ராட்சசன்…தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். வனாந்தரத்தில் வழிதவறி விட்ட சிறுமியைப்போல. அந்த இசைக்கூடமே ஒரு இறுக மூடிய சீசா போலவும் கூடத்தில் இருந்த நாங்கள் அனைவரும் அதில் உள்ள திரவத்தில் மூழ்கிக் கிடந்தது போலவும் இருந்தது அந்த இரவு. …என்னால் அப்படி அழமுடியும் என்பதை என்னாலும் நம்பமுடியவில்லை. என் மகள் பயந்து விட்டாள்… என்றாலும் திட்டமிட்டு என்னை அழ விட்டதைப்போல என் உள்ளங்கையை இறுகப்பற்றிக்கொண்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“அந்தப்பாடல் முடிந்ததும் அதுவே போதும் என்று வெளியேறி விட்டேன். அதைப்போன்ற ஒரு பாடலை அதுவரை நான் கேட்டதில்லை. இனிமேல் கேட்க எந்த அவசியமும் இல்லை”

பெரும் துயரச்செய்தி ஒன்றை வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்ள முயல்வது போல நீண்ட பெருமூச்சு ஒன்றை உதிர்த்தாள். ஏதோ வசியத்தில் கட்டுண்டதைப்போல அசையாமல் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் சிவா.

“அவன் அன்று பாடியது எந்த ஒரு குறிப்பிட்ட பாடலும் அல்ல. அது வெறும் ஆலாபனை மட்டும் தான் என்று தெரிந்ததும் மின்னல் தாக்கியது போல உணர்ந்தேன். …மிகப்பெரிய மூடனைப் போல உணர்ந்தேன். ஒரு மேதையின் முன் நிற்க நேர்ந்த மூடனைப்போல வெட்கி குறுகினேன்…வாழ்நாள் முழுக்க நான் முயன்று சேகரித்த என் இசை அறிவு அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு அவை அனைத்தையும் எதிர்பாராத ஒரு நொடியில் திடீரென நான் இழந்து விட்டதைப் போல. அந்த இழப்பை என்னால் தாங்கவே முடியவில்லை”

“சொன்னேன் அல்லவா. நான் வெறும் சர்க்கஸ் புலி. …அவ்வளவுதான். எத்தனையோ வருடங்கள் தொடர்ந்து பழகிய வித்தைகளை மேடையில் செய்து காண்பிக்கிறேன். பழகிய புலி நெருப்பு வளையத்துக்குள் பாய்வது போல. ….சிறிய உலோக உருளையில் மீது உடலைக் குறுக்கி நிற்கும் யானையைப் போல. அல்லது மூன்று பேர் மாறி மாறி வீசும் பிளாஸ்டிக் தட்டுகள் ஒன்றைக்கூட தவற விடாமல் நாலா புறமும் பாய்ந்து கவ்விக் கொண்டு திரும்பும் கோல்டன் ரிட்ரீவர் நாயைப்போல. வெறும் பயிற்சி. வெறும் வித்தை. இதைக் கேட்டுத்தான் கூடியிருப்பவர்கள் சிலிர்த்துப்போய் கைதட்டுகிறார்கள்”

நிலை குத்திய பார்வையோடு கற்சிலையைப்போல அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் மேலும் தீவிரம் கூடியிருந்தது. ஆயுதங்கள் ஏதுமின்றி நிற்கும் வெறிபிடித்த கொலைகாரியைப் போல இருந்தாள்.

“அந்த இந்தியனைப்போல சொந்தமாக ஒரு பாடலைக்கூட என்னால் இசைக்க முடியாது. ஆனால் இதைத்தான் நான் கடந்த ஐம்பத்தைந்து வருடங்களாகச் செய்து வருகிறேன். யாரோ இயற்றிய பாடல்களை வெட்கமின்றி மீண்டும் மீண்டும் இசைத்துக்கொண்டு. …பயிற்சி மீண்டும் பயிற்சி, துல்லியம் மேலும் துல்லியம். நான் இசைப்பது வெறும் பயிற்சியின் தொழில் நுட்பம். அவ்வளவுதான். ஏற்கனவே யாரோ வரைந்து முடித்த ஒரு ஓவியத்தைப் பார்த்து அதைப்போலவே துல்லியமாக இன்னொரு பிரதி எடுப்பதைப்போல”

“நான் பியானாவில் இசைப்பதெல்லாம் தாளக்கருவியின் ஊசலின் முன் வருடக்கணக்கில் உட்கார்ந்து ஒவ்வொரு ஸ்வரமாக பயிற்சி செய்தது. …முக்கியமாக இதெல்லாம் யாரோ ஒருவரின் இசை. அதை நான் பயிற்சி மட்டுந்தான் செய்கிறேன். …பிறகு அதைப்போலவே முயன்று இசைக்கிறேன். அவ்வளவுதான் …இதில் கலை எங்கே இருக்கிறது?…நான் கலைஞன் அல்ல, ஒரு சாதாரண தொழில் நுட்ப பணியாள், அல்லது அதைப்போன்ற ஒரு இயந்திரம் அவ்வளவு தான்”

“ஒரு சர்க்கஸ் மிருகத்தைப் போல நான். என் வாழ்நாள் முழுதும். …சொல்லப் போனால் என் வாழ்நாள் முழுதையும் அதைப்போன்ற ஒரு அற்பமான பயிற்சியில் வீணடித்து இழந்துவிட்டேன். இந்த எண்ணத்தைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”

கண்ணீர் வழிந்தோடும் முகத்துடன் சிலையைப்போல அமர்ந்திருந்தாள் சேரா. மீள முடியாதவொரு பெரும் பாதாளத்துக்குள் நிற்பது போல உணர்ந்தான் சிவா.

”இதை எண்ணிப் பல நாட்கள் தனிமையில் அழுதேன். யாரிடமாவது சொல்லி என் வேதனையைத் தணிக்க விரும்பினேன். என்னை மிகவும் அருளப்பட்ட மனித ஜீவனாகக் கருதும் என் நண்பர்கள். அன்பும் மரியாதையும் அச்சமும் ஒரு சேர ஒரு தேவதையைப்போல என்னை அணுகும் என் மாணவர்கள். …எவரிடமும் நான் இதை ஒருபோதும் சொல்ல முடியாது. … மேலும் இந்த முக்கியமான உண்மையை அவர்களிடம் சொல்லாமால் மறைத்து அவர்களை ஏமாற்றிக்கொண்டும் வருகிறேன். எவ்வளவு பெரிய துரோகம்!”

“…என் மகள்களிடம் சொல்ல முயன்றேன்….. அவர்களைப் பொறுத்தவரை அப்பா இறந்த துயரத்தில் இருக்கும் அவர்களின் அன்பு அம்மா நான். அவ்வளவுதான். நான் மருந்து மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடுகிறேனா என் இதயத் துடிப்பு ஒழுங்குடன் இருக்கிறதா என்பதில்தான் அவர்கள் கவனம் முழுதும்”

கண்ணீர் வழியும் கன்னங்களுடன் சத்தமின்றி உதடுகள் கோணி அழுதுகொண்டிருந்தாள். அவள் உடல் குலுங்கி நடுங்கிக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் பல வருடங்களாக அவள் சொல்லிக்கொண்டிருப்பது போலவும் அதையெல்லாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டு அசையாமல் அங்கு அமர்ந்திருப்பதைப் போலவும், ஒரு கணம் தானும் அவளும் காலத்தின் வெளியில் தனிமையில் உறைந்து விட்டதைப் போல எண்ணிக்கொண்டான் சிவா.

ஏதோ சொல்ல நினைத்து முயன்று வாயை அசைத்தான். ஆனால் வார்த்தைகள் உருப்பெற்று வரவில்லை.

“வாழ்நாளையே முழுக்க வீணாக்கியதுடன் இப்படி யாரிடமும் சொல்ல முடியாத ஒரு வேதனையை அனுபவிப்பதன் இழிநிலையை எண்ணியும் அழுதேன். இதற்கெல்லாம் என்மேல் சுய இரக்கம் கொண்டும் இன்னும் அதிகமாக துயரங்கொண்டு கதறி அழுதேன்….பல நாள்கள்”

சிலையைபோல சில நிமிடம் அமர்ந்து விட்டு கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவனைப்பார்த்து, “நான் சொல்வது புரிகிறதல்லவா” என்றாள்.

அவளின் வெண்ணிற முகம் இன்னும் வெளிறிப்போய் ஆனால் சற்றே தெளிந்தது போல இருந்தது.

“ஆம். நன்றாகப் புரிகிறது”

“இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய். …நீதான் பெரிய படிப்பெல்லாம் படித்த ஆளாயிற்றே?”

நிமிர்ந்து அமர்ந்தான். நிதானமாக ஆழமாக இழுத்து வெளிப்பட்டது சுவாசம். மேற்கொண்டு பேசுவதற்கு ஏதுமில்லாத அறிமுகமில்லாதவர்கள் போல அமைதியாக இருந்தார்கள் இருவரும்.

ஏதோ சொல்ல ஆரம்பித்து பிறகு தயங்கி நின்றான்.

“ ….உங்களுக்கு இதுவரை தெரியாத எதையும் நான் சொல்லப்போவதில்லை. வேறு எவரும் சொல்லப்போவதும் இல்லை. நான் மேற்கத்திய இசையை முறைப்படி கற்றவன் அல்ல. அதன் நுட்பங்கள் எனக்குப் பிடிபடுவதில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்”

“இந்திய இசையிலும் துல்லியத்தை நோக்கிய இயந்திரத்தனமான பயிற்சிகள் உண்டுதான். ஆனால் கலைஞன் தன் சொந்த படைப்புத்திறனை வெளிக்காட்ட முகாந்திரமும் வாய்ப்புகளும் அதில் பெருமளவில் உண்டு. சொல்லப்போனால் பல தலைமுறைகளாக பாடப்பட்டு வரும் சம்பிரதாயமான ஒரு ராகத்தை மெருகூட்டி புதிய ஒரு மோஸ்தரில் வெளிப்படுத்தும் ஆலாபனையில்தான் ஒரு இசைஞனின் கலையின் தனித்திறன் அடங்கியிருக்கிறது”

“ஆனால் மேற்கத்திய இசைப்பயிற்சியில் துல்லியத்தின் நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். …இது ஒரு முக்கியமான வித்தியாசம்தான். ஆனால் அந்த துல்லியத்தில் நுட்பத்தில் தன்னை இழந்துவிட்டால் பிரச்சினையில்லை”

“நான் பழைய மரபுகளைச் சேர்ந்தவள் குழந்தை. உன்னைச் சந்தித்து சில மணி நேரம்தான் ஆகியிருக்கும். ஆனால் உன்னை நெடுநாள் அறிந்திருப்பதைப்போல உன்னிடம் என்னென்னவோ சொல்லிவிட்டேன் என்பது எனக்கும் ஆச்சரியம்தான். சிறு குழந்தையைபோல அழுதும் விட்டேன்…. இந்தத்தொந்தரவுக்கெல்லாம் நீதான் என்னை மன்னிக்க வேண்டும். இந்தக் கிழவியின் புலம்பலையும் அழுகையையும் பொறுத்துக்கொண்டதற்கும் கேட்டதற்கு உனக்கு நன்றி. …கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்”

“உங்களின் வேதனையைப் புரிந்து கொள்கிறேன்….நீங்கள் என்னை விடவும் வயதில் அனுபவத்தில் பெரியவர். உங்கள் அளவு அனுபவம் எனக்கில்லை …ஆனால் நான் சொல்வதை நீங்கள் தவறாக மட்டும் எண்ணக்கூடாது”

“…இப்போது நீ நினைப்பது எதுவானாலும் அதை நிச்சயம் சொல்லத்தான் வேண்டும்”

கைப்பையைத் திறந்து துவாலையால் முகத்தை அழுந்தத்துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். இப்போது அவள் முகம் தூங்கி எழுந்த குழந்தையைப்போல உணர்ச்சிகள் அற்று வெறுமையாக இருந்தது.

“ஆம் நீங்கள் சொல்வதை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் என் அன்னையைப் போன்றவர். நான் ஒரு சிறிய பயல்…… ஆனால் நான் சொல்லப்போவதையும் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்”

“என் மனப்பாரம் ஏற்கனவே பாதியாகக் குறைந்து விட்டது. எதுவானாலும் நீ தயங்காமல் சொல்ல வேண்டும். இந்தக் கிழவி நிச்சயம் கோபப்படமாட்டாள்”

“நீங்கள் பீத்தோவனின் இசையைத்தான் இசைக்கிறீர்கள். அது உங்களுடையது அல்ல. உண்மைதான். ஆனால் பீத்தோவனின் ஒரு பாடலை இசைக்கும் அந்தக் குறிப்பிட்ட கணத்தில் இசைக்கூடத்தில் இருக்கும் அனைவருக்குமே நீங்கள்தான் பீத்தோவன் …இல்லையா…. இதை நீங்கள் எப்படி மறுக்க முடியும்? … சில மணிகளாவது பீத்தோவனாகவே மாறுவது அல்லது சில மணிகளாவது பீத்தோவனின் உலகத்தில் வாழ முடிவது என்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்…. எல்லா மனிதர்களுக்கும் இது கைகூடுவதா என்ன?”

“அப்படியா சொல்கிறாய்…? நானும் அப்படித்தான் நினைப்பேன். ..என்னிடமே கூட சிலர் இதைச்சொன்னதும் கூட உண்டு”

“ஆனால் கொஞ்ச காலமாக எனக்கு எல்லாவற்றின் மீதும் கேள்விகள். சந்தேகங்கள். …உன்னைப்போல அறிமுகமில்லாத புதிய ஒருவரிடமிருந்து இதைக்கேட்கும்போது அதெல்லாம் உண்மைதான் என்ற நம்பிக்கை மீண்டும் வலுப்படுகிறது”

“உங்களுக்குத் தெரியாத எதையும் நான் சொல்லப்போவதில்லை என்பதை ஆரம்பத்திலேயே சொன்னேன். எனக்குத் தெரிந்தவரை கலைஞர்களின் மனம் பிற மனிதர்களை விடவும் நுட்பமானது. மிகவும் விசித்திரமானதுங்கூட. ..இதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை”

இப்போது முதலில் சந்திக்கையில் இருந்தைப் போல ஆகிவிட்டிருந்தது அவள் முகம்.

“இயற்கையின் மீதான மனிதனின் புரிதல்கள்… அவை பற்றிய மனிதனின் எண்ணங்கள். இதை முன்வைத்து மனிதனுக்கும் மனிதனுக்குமான உரையாடல். இந்த உரையாடலில் உள்ள புரியாத இடைவெளிகளின் சில அங்குலங்களையாவது ….இசை நிரப்பத்தான் செய்கிறது. இல்லையா. …இதில் பிறர் இயற்றிய இசை என்றும் அல்லது நாம் இயற்றிய சொந்த இசை என்றும் அகங்காரம் கொள்ள அல்லது ஆதங்கப்பட ஒரு மனிதனுக்கு என்ன தேவை இருக்கிறது?”

“இசைக்கூடத்தில் நிரம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான மனிதர்களை அவர்களின் எத்தனையோ விதமான கவலைகளிலிருந்தும் ரகசியமான துயரங்களிலிருந்தும் கொஞ்ச நேரத்துக்காவது மீட்டெடுக்கும் மந்திரம், தாயின் பரிவைப் போன்ற ஆறுதலான வெம்மை உங்களின் விரல்களில் ….என்பது….. எவ்வளவு, எவ்வளவு பெரிய கொடுப்பினை!”

உறைந்தது போல் அமர்ந்திருந்த சாரா துள்ளிக்குதித்து எழுந்தாள். விழிகள் அகன்று முகத்தில் இரத்தச் சிவப்பு படர்ந்தது.

“ஒருவேளை இதைப்போல உன்னைப் போன்ற புதியவவர்கள் என்னிடம் இதையெல்லாம் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்ததுதான் என் பிரச்சினையோ? எது அப்படியோ. என் மனப்பாரம் அனைத்தும் குறைந்து விட்டது”

“ஒருவேளை… நான் வெறும் இயந்திரம் இல்லைதான். என் நண்பர்கள் சொல்வது போல…சார்லி சொல்வது போல…. ஒரு வேளை நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட ஆள்தானா?”

“இதில் எதற்காக உங்களுக்கு சந்தேகம்?

“என் இன்றையை நாளை நீ நிறைத்து விட்டாய். நீ என் தேவதை….உன்னை நான் மறக்கவே மாட்டேன் பையா. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்…. நான் இனியும் துயரப்பட ஏதுமில்லை” என்று கூவினாள்.

“ஆமாம் …என் விமானத்துக்கு வேறு நேரமாகிவிட்டது” என்றாள் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு.

குனிந்து கனத்த பெட்டிகளுள் ஒன்றைத் திறந்து குறுந்தட்டுகளை கைநிறைய எடுத்து முகப்பில் அவளின் புகைப்படத்துடன் கூடிய உறையில் ‘என் அன்பு குழந்தைக்கு -சேரா’ என்று ஆவேசத்துடன் கிறுக்கி வேகமாக கையெழுத்திட்டாள். அவன் கைகளில் குறுந்தட்டுக்களைத் திணித்தாள்.

எதிர்பாராத கணத்தில் அவன் கன்னத்திலும் முத்தமிட்டு, விலகி பெட்டிகளை இழுத்துக்கொண்டு ஓடினாள். சிறிது தூரம் சென்று நின்று திரும்பி ஒரு சிறுமியின் உற்சாகத்துடன், உரத்த குரலில்,

“குறுந்தட்டில் உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பு. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் என்னை மறந்து விடாதே”

சொல்லி விட்டு திரும்பி ஓடினாள்.

“பெட்டியை இழுத்துசெல்ல நான் உதவவா?”

என்று கேட்டதையும் பொருட்படுத்தாமல். கனத்த பெட்டிகளை கைக்கு ஒன்றாக இழுத்துக்கொண்டு சிறுமியைப் போல ஓடும் அவள் முதுகைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

முந்தைய கட்டுரைராஜகோபாலன், வாயுக்கோளாறு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதா ,பீத்தோவனின் ஆவி – கடிதங்கள்