பிம்பங்கள்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்’ கேள்விக்காக மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்த பதில் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. இறந்தவர்களைக் குறை சொல்லவேண்டியதில்லை, இனி என்ன ஆகப்போகிறது என்ற மன நிலை பல வருடங்கள் முன்பே என்னை விட்டுப் போயிருந்தாலும், மனதில் ஒரு தயக்கம் இருக்கும். ‘மனுசன்னா ரெண்டு குறை இருக்கும்’ என்று தெரிந்தவைகளைக் கூட ஒதுக்கித் தள்ளியே சிந்தித்து வந்துள்ளேன். அல்லது ஒரு புரட்சிக்காக (பீர் கோப்பை மாதிரி), நல்ல பிம்பங்களைக்கூட உடைத்து (எந்த வித ஆதாரமும் /அறிதலும் இன்றி) பேசியிருக்கிறேன்.

இந்த கட்டுரை இந்த பிம்பங்களை, அல்லது அதன் உடைப்புகளை எப்படி நம் புரிதலுக்குப் பயன்படுத்துவது முக்கியம் (தள்ளி விட்டு அல்ல) என்று தெளிவாக சொல்கிறது. அந்த உண்மை வரலாறுகள் அல்லது பிம்பங்கள் மூலம் நம் எண்ணங்களின் திசைகளை சரியான வழியில் தீர்மானிக்க முடியும். மேலும், நம் வழியில் , சிந்தனைப் போக்குகளின்பால் உறுதியாக இருக்க இப்படி முழு உண்மையும் தெரிந்து எடுக்கும் முடிவுகள்தான் தேவை. வெறும் பிம்பங்கள் சார்ந்து பெறப்படும் சிந்தனைகள் நம் நம்பிக்கையைப் பெறுவதில்லை. மனதார அவற்றை நாம் நம்புவதில்லை. அவை வெறும் தகவல்களாக, நண்பர் கூட்டத்தில் வித்தியாசமானவனாகக் காட்டிக்கொள்ள மட்டுமே நிற்கும்.

இது ஒரு பெரிய தேசிய ஆளுமைகளுக்கு மட்டும் நாம் செய்து பார்க்கவேண்டியது அல்ல. இதை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் செய்யும் போது, அதன் வழி அறியப்படும் நட்புகள், உறவுகள் இன்னும் ஆழமனதாக, உண்மையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் இருதரப்பும் இந்தப் பார்வையில் இல்லாதபோது இதை செயல்படுத்துவதில் சிக்கல்கள் நிறையத்தான் உள்ளது. எங்காவது, யாராவது தொடங்க வேண்டும் தானே.

உங்களின் இந்த பதிலுக்கு நன்றி.
அன்புடன்,
கெளதம்

முந்தைய கட்டுரைதிருச்சி நட்புக்கூடல்- விஜயகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைசிந்தனையின் தேங்குசுழிகள்