ஞாநியும் பரதேசியும்

ஞாநி பரதேசி பற்றி எழுதியிருந்ததை ஒரு நண்பர் அனுப்பி வைத்திருந்தார். சினிமா பற்றிய எந்த விவாதத்தையும் நடத்தவேண்டாமென்பதே என் முடிவு. ஆனல் இந்த விஷயத்தில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். இது சினிமாபற்றியது அல்ல. இந்த ஞாநி வகையறாக்கள் ஊடகங்களில் உருவாக்கும் புழுதி பற்றியது.

ஞாநி முன்பு கடல் வெளிவரவிருந்தபோது இதேபோன்ற உச்சகட்ட வெறுப்பைக்கொட்டி எழுதியிருந்தார். ஊடகவியலாளன் என்றால் அவன் உக்கிரமாக வசைபாடவேண்டும் என்ற மனச்சிக்கலின் விளைவு என்ற எண்ணம் மட்டுமே அப்போது எனக்கிருந்தது. இல்லை, இது இணையம் உருவாக்கும் வேறுவகை மனச்சிக்கல் என்றார்கள் நண்பர்கள். வேறெந்த விஷயத்தைப்பற்றி எழுதுவதைவிடவும் வரப்போகும் முக்கியமான படத்தைப்பற்றி எழுதுவதற்கு இணையத்தில் ‘லைக்கு’கள் வந்துகுவியும். அந்தப் படத்துக்காகக் கோடிக்கணக்கில் செலவிட்டு செய்யப்படும் பிரச்சாரத்தின் துளியைத் தானும் அறுவடைசெய்துகொள்ளும் முனைப்பு அது. ஒருமுறை ருசிபார்த்துவிட்டால் அதன்பின் அது விடாது.

ஆனால் ஞாநியின் எழுத்து அது மட்டும் அல்ல. பரதேசிபடத்தில் பாலா நடிகர்களைக் குச்சியால் மூர்க்கமாக அடித்து உதைத்து நடிப்பு சொல்லித்தருகிறார், அவர் ஒரு மனநோயாளி, அவரை மனநோய்க்காப்பகத்திற்கு அனுப்பவேண்டும்- ஞாநியின் திருவாசகங்கள்.

இவரைப்போன்றவர்களால் ஆளப்பட்ட சோவியத்நாட்டில் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் கூட்டம் கூட்டமாக உளச்சிகிழ்ச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கே வதைபட்டு செத்தழிந்தார்கள். அந்தச்செயல்பாடுகளின் பின்னாலிருக்கும் உளவியல் என்ன என்பது இவரது எழுத்துக்களைப்பார்க்கையில் தெரிகிறது. எளியகருத்துக்களைக் கொண்டு சமூக அதிகாரத்தைக் அடையும் அரசியல்வாதிகள் கலைஞர்களைக் கண்டு அடையும் கலக்கம் மட்டும்தான் இது. இன்று இவர்களிடம் இருக்கும் மிகச்சிறிய ஊடகஅதிகாரத்தைக்கொண்டு இவர்கள் கலைஞர்களை இவ்வகையில் வதைக்கிறார்கள். பெரிய அதிகாரம் என்றால் ஸ்டாலினின் கமிசார்களாக அமர்ந்திருப்பார்கள்.

உளச்சிகிழ்ச்சை என்பது பிடிக்காதவர்களை வதைக்கும் ஒரு முறை என்றும், ஒருவரை வைய அவரை மனநோயாளி என்று சொல்லவேண்டும் என்றும் ஞாநி புரிந்துகொண்டிருக்கும் விதம் அருவருப்பூட்டுகிறது. ஸ்டாலின் நம்முடைய அரசியல்சூழலில் இருந்து மறைவதற்கு வாய்ப்பே இல்லையோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது

இப்போது பரதேசி படம் வந்துவிட்டது. அதைப்பார்ப்பவர்களுக்குத் தெரியும் அந்த விளம்பரப்படத்தில் பாலா நடிகர்களை அடிப்பதாகக் காட்டியிருப்பது முழுக்க அந்தப்படத்தில் வந்த காட்சிகளைத்தான் என்று. அவர் நடிக்காத காரணத்துக்காக எவரையும் அடிக்கவில்லை, மாறாக நடிப்புச் சொல்லித்தருகிறார் என்று தெளிவாகிவிட்டது. பரதேசி குழுவினரே விளக்கமும் அளித்துவிட்டனர். பரதேசிபடத்தை ஞாநி பார்த்தும் விட்டார். தான் தவறாகப்புரிந்துகொண்டமைக்காக ஒரு சொல் மன்னிப்புகோர ஞாநி முன்வந்தாரா? அடுத்த வசைபாடலுடன் கிளம்பத்தான் அவருக்குத் தோன்றுகிறது.

ஹாலிவுட்டில் நடிப்பு சொல்லித்தரமாட்டார்கள் என்று எல்லாமறிந்த சினிமாமேதையின் பாவனையில் ஓர் அலட்டல். பாலாவுக்கு இவர் சினிமா சொல்லித்தருகிறார். துணைநடிகர்களுக்கு நடிப்புச் சொல்லித்தருவதற்கென்று கோடிக்கணக்கில் ஊதியம் கொடுத்து நடிப்புப்பயிற்சியாளர்களை அமர்த்துவது ஹாலிவுட் வழக்கம். தேர்ந்த நடிகர்களுக்குக் கூட தனிப்பயிற்சியாளர் நடிப்பு சொல்லித்தருவார்கள். அப்படி நடிப்புப்பயிற்சியாளர்கள் அமைப்பதை நானே நேரில் கண்டிருக்கிறேன்

ஏனென்றால் சினிமாநடிப்பு என்பது பல்வேறுவகையான அசைவுகளைப் பலர்சேர்ந்து இணைத்து ஒத்திசைவுடன் செய்யவேண்டியது. அதற்குப் பயிற்சி இன்றியமையாதது. தேர்ந்த நடிகர்கள் அதற்குமேல் அவர்களுக்குரிய பங்களிப்பு ஒன்றை நிகழ்த்துவார்கள். தமிழ் சினிமாவில் நடிகர்கள்தேர்வு, நடிப்புப்பயிற்சி எதற்கும் தனியாக ஆள் கிடையாது. எல்லாமே இயக்குநரின் பொறுப்பு.

ஞாநி சினிமாவுக்குள் இருந்தவர். ஒரு படத்தின் தயாரிப்புச்செலவு, தயாரிப்பு நாட்கள், நடிகநடிகையரின் ஊதியம், நடிகைகளின் வயது, அப்படப்பிடிப்பின்போது நிகழ்ந்த அற்புதநிகழ்ச்சிகள் என அனைத்துமே விளம்பரத்துக்காக மிகைப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும் என்று அறியாதவர் அல்ல அவர். ஒரு சினிமாவில் பயன்படுத்தப்படும் அனைத்துப்பொருட்களும், உலோகப்பொருட்கள்கூட, ரப்பரால் செய்யபடும் டம்மிகளாகவே இருக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

இயக்குநர் என்றல்ல , சூப்பர்ஸ்டார் கூட எவரையும் உண்மையில் அடிக்கமுடியாது. நடிகர்களை அடிப்பது என்ன, ஒரு கடைசிநிலை ஊழியனைக்கூட எவ்வகையிலும் தண்டிக்கவோ தாக்கவோ முடியாது. உடலால் மட்டுமல்ல சொற்களாலும். லட்சக்கணக்கான ரூபாய் இழப்ப்பு வரக்கூடிய தவறுகளின்போதுகூட ஒரு சொல் எல்லைமீறிப் பேசிவிடமுடியாது. பேசினால் பரதேசி படப்பிடிப்பு மட்டுமல்ல தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்தப்படப்பிடிப்பே நின்றுவிடும் என்று தெரியாதவரா ஞாநி? மிகமிக நன்றாகத்தெரிந்தவர்தான்.

அப்படியென்றால் ஏன் இதைச்செய்கிறார்? இந்தச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு சினிமாசெய்திகளைக் கண்பிதுங்க வாசிக்கும் மூடர்களிடம் சினிமாக்கலைஞர்களைப்பற்றி வசைபாடுகிறார். தன்னுடைய வன்மத்தையும் காழ்ப்பையும் கொட்டுகிறார். அவ்வளவுதான். அதற்கான காரணங்கள் அவரது தனிவாழ்க்கையில் உள்ளன.

ஞாநியை நான் இருபதுவருடங்களுக்கு முன் சந்தித்தபோது அவர் தமிழ் வணிக சினிமாவில் நுழைந்து அலைகளைக்கிளப்பும் கனவுகளுடன் இருந்தார்.தொலைக்காட்சியில் தொடர்களை இயக்கி அவற்றில் நடித்துக்கொண்டிருந்தார். அவை நாலாந்தரக் குற்றவியல் தொடர்கள் .அவரது நடிப்பு ரசிகர்களைத் துணுக்குறச்செய்யும் அளவுக்கிருக்கும்– இவர் இதற்குமுன் சினிமாநடிப்பு என எதையாவது பார்த்திருக்கிறாரா என்று. நான் சந்தித்தபோது நான் மலையாளசினிமா பற்றிச் சொன்னேன். சினிமா வேகமானதாக இருக்கக்கூடாது , மெல்லத்தான் ஓடவேண்டும் என்பது அன்று என்னுடைய எண்ணம். அதைச்சொன்னதும் அவர் தன்னுடைய சினிமா எப்படிஎல்லாம் இருக்கும் என்று என்னிடம் கைகளை வீசிக்காட்டி விளக்கினார். எனக்கு சினிமாபற்றி அன்று எதுவுமே தெரியாதென்றாலும் இவருக்கு சினிமாக்கலையுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகத் தோன்றியது

எதிர்பார்த்ததுபோலவே ஞாநி எல்லாவகையிலும் தோற்றுப்பின்வாங்க நேர்ந்தது. அரசு தொலைக்காட்சியில் வெற்றி முக்கியமல்ல, தொடர்புகளே முக்கியம். அதைக்கொண்டு அவர் சில திராபையான தொடர்களை எடுத்தார் அவ்வளவுதான். ஞாநியின் சினிமா அனுபவங்கள் கசப்பானவை என்பதை நான் அறிவேன். ஆனால் வேறு வழியே இல்லை. அவ்வளவுசெயற்கையாக இருக்கும் அவரது நடிப்பு .

ஞாநியின் கோபம் என்பது மிகமிகத் தனிப்பட்ட காழ்ப்பு சார்ந்தது. இன்று தமிழில் சினிமா பற்றி எழுதக்கூடிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் அனைவருமே வணிகசினிமாவுக்குள் நுழைய பெரும் கனவுகளுடன் முட்டிமோதியவர்கள். சில படங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உண்டு. அந்த வாய்ப்பு கிடைக்காமல் வருடங்களைத் தொலைத்தவர்கள் உண்டு. இன்றும் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்பவர்களும் உண்டு. தோல்வியின் அவமதிப்பு அவர்களில் வன்மமாகத் தேங்கிவிட்டிருக்கிறது. அவர்களைப்பொறுத்தவரை சினிமாபற்றி எழுதுவதென்பது அந்த விஷத்தை சினிமாக்கலைஞர்கள் மீது உமிழ்வதுதான்

எழுத்தாளர்கள் சினிமாவுக்குச்சென்று நல்ல சினிமாவுக்காக ஏதும் செய்யவில்லை என்று சொல்லும் ஞாநி அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்றுதான் உள்ளூர நினைக்கிறார். நான் என் முதல்படமான கஸ்துரிமான் எழுதியபோதே ஞாநி விஷத்தைக்கொட்டினார். கஸ்தூரிமான் எவ்வகையிலும் ஒரு தரமற்ற படம் அல்ல. நான் அதில் எதையும் பங்களிக்கவும் இல்லை. என் வாய்ப்பு அப்போதுதான் ஆரம்பிக்கிறது. ஞானி அந்த வாய்ப்புகள் எனக்கு வந்துவிடக்கூடாது என்று பதறினார்

கஸ்தூரிமான் வெளிவந்தபோது அதில் ஒரு வில்லிக்கதாபாத்திரத்தின் சித்தரிப்பை சுட்டிக்காட்டி அது தலித்துக்களை இழிவுபடுத்துகிறது, தலித்துக்கள் அந்தப்படத்துக்கு எதிராகப் போராடவேண்டும் என்று சொன்னார் ஞாநி. அதைவிடமுக்கியமாக அந்தக் கதாபாத்திரத்துக்கு முழுக்கமுழுக்க நானே பொறுப்பு, என்னை சினிமாக்காரர்களும் தமிழர்களும் புறக்கணிக்கவேண்டும் என அறைகூவினார்![சமீபத்தில் ஒரு தோற்றுப்போன எழுத்தாளவிமர்சக ஆசாமி நீர்ப்பறவை படத்தில் ஒரு காட்சியில் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு படத்துக்கு வசனகர்த்தாதான் பொறுப்பு என்று எழுதியிருந்தார்!]

முதலில் அந்தக்கதாபாத்திரம் தலித் அல்ல. அது படத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. அந்தப்படம் ஒரு மொழிமாற்றப்படம். மூலத்தில் உள்ள அதே கதாபாத்திரம் அதே வசனங்களைப் பேசியது. மூலத்தில் நடித்த அதே நடிகைதான். அதுவும் அவருக்குத்தெரியும். ஆனால் அதெல்லாம் அல்ல அவரது இலக்கு.

உண்மையில் ஒரு கீழான கதாபாத்திரத்தைக் கண்டதும் அது ஒரு தலித் என நினைக்கும் ஞாநியின் மனநிலையையே அவர் ஆராயவேண்டும். அது ஒரு சுயசுத்திகரணத்திற்கு வழிவகுத்திருக்கும். ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் எதிர்மறையாக இருந்தால் உடனே அது இழிவுபடுத்தல் என ஆரம்பிக்கும் மனநிலையைப்பற்றி என்ன சொல்ல? அப்படியென்றால் எந்த வகை மனிதர்களை எதிர்மறையாகக் காட்டலாம்??

இதைத்தான் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் செய்தார் ஞாநி. பெயர்தெரியாத ஏதோ உதவி இயக்குநர் நாலாந்தர இணைய இதழ் ஒன்றில் எஸ்.ராமகிருஷ்ணனின் சினிமாவாய்ப்புகளை இல்லாமலாக்கும் நோக்குடன் எழுதிய அப்பட்டமான அவதூறுக்கட்டுரையை தன்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் புழக்கத்துக்கு விட்டார் அவர். [அதைப்போன்ற அப்பட்டமான அவதூறுக் கட்டுரைகள் என்னைப்பற்றியும் வந்துள்ளன. ]ஞாநியின் உணர்ச்சிதான் என்ன? சினிமாவில் எழுத்தாளர்கள் வெற்றிபெற்றுவிடக்கூடாது, ஏனென்றால் அது அவர் தோற்ற துறை. ஓர் ஆளுமையின் கீழ்மையின் அடிமட்டம் இது.

ஞாநி என்னுடைய மதிப்புக்குரியவராகவே இருந்தார். இளமையின் கோபத்துடன், அடிப்படையான இலட்சியவேகத்துடன் எழுதிய ஞாநிதானா இந்தக் காழ்ப்பைக்கொட்டும் ஞாநி என்று சந்தேகப்படுகிறேன். என் தலையெழுத்து, நான் நம்புகிறவர்கள் எல்லாம் கடைசியில் இப்படிக் கழனிப்பானைக்குள் கைவிட்டுவிடுகிறார்கள்.

ஞாநி உட்பட இந்தக் கும்பல் பாலாவைப்பற்றி என்னென்னவோ வசைபாடியிருப்பதைப் பார்க்கிறேன். எவ்வளவு கீழ்மை. இந்த அளவுக்கு வசைபாட, சமூகவிரோதிபோல வேட்டையாடப்பட , அந்தக்கலைஞன் தமிழ்ச்சமூகத்திற்குச் செய்த அநீதிதான் என்ன? இந்த சில்லறை எழுத்தாளர்கள் எவரைவிடவும் சமூகப்பொறுப்புடன்கூடிய படங்களை அவர் எடுத்திருக்கிறார். தமிழின் குரலை இந்திய அளவில் கொண்டுசென்று நிறுத்தியிருக்கிறார். இங்குள்ள அடித்தள மக்களின் வாழ்க்கையைக் காட்டியிருக்கிறார்

அவதூறுசெய்தும் வசைபாடியும் கலைஞர்களை அழிக்கநினைக்கும் இந்த ஆசாமிகளைப் பார்க்கையில் பாலாவின் ஒரு கதாபாத்திரம் சொல்வதுபோல ‘டேய் நீங்கள்லாம் யாரு? உங்களப்பத்தி நீங்க என்னடா நினைச்சுக்கிட்டிருக்கீங்க?’ என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

முந்தைய கட்டுரைவெறும்முள்-கடிதம்
அடுத்த கட்டுரைநிலமிலி