ஆப்ரிக்காவின் நிகழ்காலமும் நமது இறந்தகாலமும்

அன்பு ஜெ சார்.

வணக்கம். வெங்கடேஷ் (கென்யா).

நீங்களும் குடும்பமும் நலம்தானே?

கென்யாவில் ஜனாதிபதி தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடந்தது.
சென்ற 2007 தேர்தலின் பின்னான வன்முறையில், அதிகபட்ச உயிர்ச்சேதங்களும், பெரும்பான்மை மக்களின் இடப்பெயர்வும் நடந்திருந்ததால் (உள்நாட்டிலேயே இன்னும் அகதி முகாம்கள் இருக்கின்றன.), இம்முறை சூழ்நிலை சற்று பதட்டமாகவே இருந்தது. வெளி மக்கள் பெரும்பாலும் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த நாடு சென்றார்கள்; நான், மல்லிகா, இயலும் ஒரு மாத விடுப்பில் கோவை வந்திருந்தோம். இப்போது தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. Ukuru Kenyatta ஜெயித்திருக்கிறார். இதில் விநோதம் என்னெவென்றால், சென்ற தேர்தலின்போது நடந்த வன்முறைகளுக்காய் இவர் மீது ICC-ல் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது!

நான் மட்டும் நாளை மறு நாள் கென்யா திரும்புகிறேன்.

விடுமுறையில் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு நானும்,இயலும் சென்றிருந்தோம்; தமிழினியில் வசந்தகுமார் சாரைச் சந்தித்தது மிகவும் சந்தோசமாயிருந்தது. நான் ஜெமோ வாசகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.(மகனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாய் சொன்னார்; இயலுக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தந்தார்.)

கென்யா பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். நீங்கள் சொன்னதுபோலவே, அனுபவங்களைக் கட்டுரையாகவோ நாவலாகவோ எழுதிப்பார்க்குமாறு சொன்னார். கென்யா கிளம்ப இருப்பதால் இன்று போன் செய்திருந்தேன்; கோவையில் சு.வேணுகோபால் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் இருப்பதாகச் சொன்னார். (திருப்பூர் கண்காட்சியில் வேணுகோபால் புத்தகங்கள் கிடைக்கவில்லை).

மணல்கடிகை, காவல் கோட்டம் வாங்கி வந்தேன்; மணல்கடிகை முடித்துவிட்டேன்; கோபால் சாருக்கு எழுதவேண்டும். காவல் கோட்டம், அங்கு சென்றுதான் படிக்கவேண்டும்.

சிறுகதைகள் முழுதும் இன்னும் படிக்கவில்லை (தீபம் படித்தேன்); ஆற அமரப் படிக்கவேண்டும்.

வாசகர்களோடு இவ்வளவு ஆத்மார்த்தமாய், அன்பாய், நெருக்கமாய் உங்களைத்தவிர எந்த எழுத்தாளர் உரையாடுகிறார்?

குடும்பத்திற்கு அன்பு.

ப்ரியமுடன்
வெங்கடேஷ்

அன்புள்ள வெங்கடேஷ்

நலம்தானே? கென்யா சென்றிருப்பீர்கள்

குடும்பமும் உங்களுடன் இருப்பதனால் உற்சாகமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் பல பயணங்களில் அலைந்து இன்றுதான் நாகர்கோயில் வந்தேன். இங்கே மின்சாரமே இல்லை. கென்யாவில் மின்சாரம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆப்ரிக்க அரசியல் மீதும் வரலாறு மீதும் எனக்கு எப்போதும் ஓர் ஆர்வமுண்டு. பலசமயம்கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருப்பேன். காங்கோ, நைஜீரியா, கென்யா, தென்னாப்ரிக்காவின் அரசியலையும் வரலாற்றையும் அக்கறை எடுத்துக்கொண்டு வாசித்திருக்கிறேன். ஆனால் உண்மையான வரலாற்றை இலக்கியம் வழியாகவே வாசிக்கமுடியுமென்பது என் எண்ணம். அவ்வகையில் நைஜீரியா மட்டுமே நெருக்கமாக இருக்கிறது.

என் ஆர்வத்துக்கான காரணம் ஆப்ரிக்காவின் இனக்குழு அரசியலில் நாம் நமக்கான வரலாற்றுப்பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்பதே. இந்தியாவின் வரலாறு சென்றிருக்கக்கூடிய இன்னொரு திசையில் ஆப்ரிக்கா சென்றிருக்கிறது என்பதே என் எண்ணம். இப்படி நாம் ஆகாமலிருந்திருந்தால் என்பதற்கான உதாரணம் ஆப்ரிக்கா. நம் வரலாற்றையும் சமூக அமைப்பையும் புரிந்துகொள்வதற்கான மிகச்சிறந்த வழி ஆப்ரிக்காவுடன் ஒப்பிடுவதே.

ஆப்ரிக்க தேசங்களின் சிக்கல் என்னவென்றால் அங்குள்ள இனக்குழுக்களுக்குள் ஒரு சமரசமும் ஒருங்கிணைவும் உருவாகவில்லை என்பதுதான். பலநாடுகளில் அரைநூற்றாண்டுக்காலமாக உள்நாட்டுப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தேசங்களே அழிந்தபின்னரும் போர் நிற்கவில்லை

அந்த இனக்குழுப்போர்கள் புதியதாக உருவானவை அல்ல. முன்பு எப்போதுமே நடந்துகொண்டிருந்தவைதான். காலனியாதிக்க அரசுகள் தங்கள் நலனுக்காக ராணுவம் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன . காலனியாதிக்கம் அகன்றதும் அவை மேலெழுந்தன. இன்றைய நவீன ஆயுதங்கள் அவற்றைப் பேரழிவுத்தன்மை கொண்டவையாக ஆக்குகின்றன. கனிவளங்களுக்காக ஐரோப்பா அந்தப் போர்களை ஊக்குவிக்கிறது. வளர்ச்சிப்போக்கும் ஜனநாயகமும் கொண்ட ஆப்ரிக்க நாடுகள் சிலவே

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் ஆப்ரிக்காவும் இந்தியப்பெருநிலமும் ஒரேபோல இருந்திருக்கும். இங்கும் பல்லாயிரம் இனக்குழுக்கள் ஒருவரோடொருவர் கடும் மோதல்களில் ஈடுபட்டிருந்தனர். வரலாற்றின் பரிணாமத்தில் அந்த இனக்குழுக்கள் ஒரு பெரும்சமூக அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டனர். இந்தியப்பண்பாட்டை ஒட்டுமொத்தமாக அந்த ஒருங்கிணைவின் கதை என்று விளக்கிவிடமுடியும்.

சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒருங்கிணைவு என்பது அடுக்கதிகாரமாக மட்டுமே நிகழ முடியும். இனக்குழுக்கள் மேல்மேலாகவே அடுக்கப்பட முடியும். நம் சாதியமைப்பு அவ்வாறு உருவானதே.அதற்கு இங்கே உருவான கருத்தியல் மேலாதிக்கங்களும் அரசியல் அதிகாரங்களும் எல்லாம் காரணம்.

உதாரணம் சங்ககாலத் தமிழகம் முடிவில்லாப் பூசல்ககளின் மண். ஆனால் மூவேந்தர்கள் உருவானபோது அந்தப்பூசல்கள் இல்லாமலாயின. மூவேந்தர்களில் ஒருவர் பிற இருவரையும் வென்றால் நிரந்த அரசும் அமைதியும் அதன் விளைவான பொருளியல் வளர்ச்சியும் பண்பாட்டு மலர்ச்சியும் உருவாயின.

அவ்வகையில் பார்த்தால் அந்த மேலாதிக்கங்களும் அதிகாரங்களும்தான் நம்மை ஒரு சமூகமாகத் திரட்டின என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் வென்றடக்குதல் மற்றும் சுரண்டல் மூலமே நாம் இன்று காணும் நம்முடைய சமூக அமைப்பு உருவாகி வந்தது. இது உருவாகி வந்திராவிட்டால் நாம் போரிடும் பழங்குடிக்குலங்களாக, அழிவை மட்டுமே அறிந்தவர்களாக இருந்திருப்போம்.

மார்க்ஸ் அடிமைமுறையே நவீனநாகரீகத்தையும் அடிமைமுறைக்கு எதிரான மனிதாபிமான நோக்கையும் உருவாக்கியது என்று சொல்வதைப்போன்ற ஒரு முரண்பாடுதான் இதுவும்.

தன் நிலப்பகுதிகளில் உள்ள இனக்குழுக்களை வென்று ‘குலசேகரன்’ ஆக மாறிப் பேரரசனாக ஆன சோழன் தன் மக்களை சுரண்டி உபரியைச் சேர்க்கிறான். அதைக்கொண்டு பெரும் ராணுவத்தை அமைக்கிறான். அந்த ராணுவம் தமிழ் நிலமெங்கும் சென்று புதிய நிலப்பகுதியைக் கைப்பற்றுகிறது.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களில் வாழும் இனக்குழுக்கள் வலுக்கட்டாயமாக மையநீரோட்டத்துடன் கலக்கப்படுகிறார்கள். இப்படித்தான் இங்கே நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு உருவாகியது. ராஜராஜசோழன் செல்லுமிடமெல்லாம் ஆகமமுறை வழிபாட்டையும் நிலஉடைமைமுறையையும் உருவாக்கினான் என்பதன்பொருள் ‘மையநீரோட்டத்துக்கு இழுத்தல்’ என்பதுதான்

இந்த நிலப்பிரபுத்துவ அமைப்பில் அடிமைத்தனம் உள்ளது. சுரண்டல் உள்ளது. சாதி முறை சோழர்காலத்தில்தான் ஆழமாக நிலைநாட்டப்பட்டது. அதை நிலைநாட்டும் கருத்தியல்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. ஆனால் இது முந்தைய பழங்குடிச்சமூக அமைப்பைவிட மேலானது, வளர்ச்சிப்போக்குள்ளது. இதிலிருந்து அடுத்த கட்டச் சமூக வளர்ச்சி நிகழமுடியும்.

இன்றைய நவீனச்சூழலில் நின்றுகொண்டு நாம் நேற்றையை மேலதிகாரங்களை வெறுப்புடன் பார்க்கிறோம். அவை வெறும் தீங்குகள் மட்டுமே என நினைக்கிறோம். ஆனால் அவையே நம்மை தொகுத்து சமூகமாக ஒருங்கிணைத்தன என்பதை மறந்துவிடுகிறோம்.

இது ஆப்ரிக்காவில் நிகழவில்லை. எத்தியோப்பியா [அபிசீனியா] தவிர பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் பேரரசுகள் உருவாகவில்லை. ஆகவே மக்கள் தொகுக்கப்படவில்லை. பேரரசு என்பது ஒரு மழைநீர்ப் பெருக்கு போல. சிறு குட்டைகளை இணைத்து ஒன்றாகிக் கொண்டுசெல்கிறது அது. பேரரசுகள் இல்லாத ஆப்ரிக்காவில் பழங்குடிச்சமூகங்கள் தேக்கநிலையில் நூற்றாண்டுகளாக நின்றுவிட்டன

பழங்குடிச்சமூகத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று பிறன் உருவாக்கம் என்பது. தன் சுயத்தை அழுத்தமாக வரையறுத்து நிலைநிறுத்தும் வழி அது. நாம்- அவர்கள் என்ற பிரிவினை பழங்குடிமனதில் ஆழப்பதிந்திருப்பதை எப்போதும் காணலாம்.

இந்த மனவிலக்கம் அவர்களைச் சூழ்ந்து ஒரு மின்சார வேலிபோலப் பாதுகாக்கிறது. புறப்பாதிப்புகள் இல்லாமலாக்கி நிலையாக வைத்திருக்கிறது. தங்கள் சமூக அமைப்பு நிலைத்து நீடிக்கவேண்டுமென்பதற்காக அவர்கள் இதைச்செய்கிறார்கள். இந்த வேலி அவர்களைப் புறப்பாதிப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கான வருடங்கள் அபப்டியே உறையச்செய்கிறது. அவர்கள் பழங்குடிகளாக நீடிப்பதற்கான காரணம் இதுவே.

ஆகவே பழங்குடிகள் உக்கிரமான பிறவெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடையே வணிகம் அல்லது மேலாதிக்கம் மூலம் காலப்போக்கில் ஒரு சமரசம் உருவாகிவந்தால்தான் உண்டு. மற்றபடி தீராப்போர்கள்தான்.

அதுதான் இந்தியாவிலும் நிகழ்ந்தது. அந்தப்போரின் படிப்படியான சமரசத்தின் விளைவே இந்துமதம் என்பது. அதிலுள்ள பன்மைத்தன்மை, அதிலுள்ள உரையாடல், அதிலுள்ள மேலாதிக்கப்போக்கு எல்லாமே அதன் விளைவுகள்தான். சமணம் பௌத்தம் போன்றவை அந்த சமரசத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவை.

அந்த சமரசம் நிகழாத ஆப்ரிக்கமண்ணில் குருதி உலராமலேயே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

வசந்தகுமார் சொன்னது போல நீங்கள் ஆப்ரிக்கா பற்றிய உங்கள் அனுபவங்களை எண்ணங்களை எழுதலாம். நமக்குத்தேவை விதவிதமான வாழ்க்கையனுபவங்கள்தான். ஆனால் இவை புலம்பெயர்ந்தவர்கள் வழக்கமாக எழுதும் தங்கள் உள்வட்ட வேடிக்கைகளோ வம்புகளோ ஆக இருக்கக்கூடாது. அந்த மண்ணையும் மனிதர்களையும் புரிந்துகொள்ளக்கூடியவையாக அமையவேண்டும்

அதற்கு ஒரு வாய்ப்பு உங்களுக்கு அமைந்துள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைஆட்சிப்பணித்தேர்வுகளில் தமிழ்
அடுத்த கட்டுரைபதிலளிக்கப்படாத கடிதங்கள்