மகாபாரதப்போர்முறைகள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா,

மஹாபாரதப் போர் முறைகள் பற்றிய ஆவணங்கள் உள்ளனவா? சீனாவில் போர் முறைகள் பற்றி முறையாக அனைத்தும் ஆவணப்படுத்தி உள்ளார்கள், ஆனால் நம் பாரதத்தில் அவ்வாறு இல்லை என்று ஒரு வாதம் கேட்டேன். மிகப்பெரிய போராக நடந்த பாரதப் போர் பற்றிய ஆவணங்கள் கூடவா இல்லை? நான் வியாசர் மகாபாரதம் படித்தது இல்லை. ராஜாஜியின் மகாபாரதம் மட்டுமே படித்துள்ளேன். அதில் போர் முறைகள் பற்றி ஆழ்ந்த குறிப்புகள் இல்லை என்பது உண்மையே. வியாசர் மகாபாரதத்திலோ அல்லது தனியாகவோ பாரதப் போர் முறைகள், வியூகங்கள், வெற்றி தோல்விகள் பற்றிக் குறிப்புகள் உள்ளனவா?

சிவரஞ்சனி.

அன்புள்ள சிவரஞ்சனி,

எனக்குத்தெரிந்து மகாபாரதப்போர்முறைகள் ஆவணப்படுத்தப்ப்டவில்லை. மகாபாரதத்தில் உள்ள குறிப்புகளைத் தொகுத்து சிலவற்றை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

சொல்லப்போனால் நம்முடைய பழங்காலக் கலைகள் எவையுமே சீரானமுறையில் ஆவணப்படுத்தப்படவில்லை. ஓரளவேனும் இன்றும் எஞ்சுவன சிற்பக்கலையும் மருத்துவக்கலையும் மட்டுமே. அவற்றுக்கு நடைமுறைசார்ந்த தேவை இருந்தது.

காரணம் இக்கலைகள் இங்கே குலமரபாக, சாதிமரபாக மட்டுமே நீடித்தன. அவ்வாறு நீடிப்பது அவற்றில் தொடர்ச்சியான வளர்ச்சி நிகழ வாய்ப்பாக அமைந்தது. ஒருமுறை மயிலாடியில் ஒரு கல்சிற்பியிடம் பேசியபோது அவர் தன் வயது முபத்தெட்டு என்றும் சிற்பக்கலையில் அனுபவம் முப்பத்திரண்டு வருடங்கள் என்றும் சொன்னார்.

இக்கலைகள் குல,சாதி அமைப்பாக நீடித்தமைக்கு அதுவே காரணம். ஒருகுழந்தை அந்தக் கலைக்குள்ளேயே பிறந்து விழுகிறது, அதிலேயே வளர்கிறது. கலைத்திறன் ஒரு தனிநபரின் தேடல் அல்லது பயிற்சி என்றில்லாமல் ஒரு மக்கள்தொகையினரின் கூட்டான செயல்பாடாக அமைகிறது. பலரின் பங்களிப்புகள் ஒன்றாகத்திரண்டு ஒற்றை சரடாக ஆகி அது வளர்கிறது.

நம் சிற்பக்கலையில் இந்த வளர்ச்சியைக் காணமுடியும். பற்பல நூற்றாண்டுகளாக, பல்வேறு எதிர்மறைச்சூழல்களிலும் இக்கலைகள் அழியாமல், தொடர்ச்சி அறுபடாமல் நீடித்தமைக்கு இந்தக் குல-சாதி முறைதான் காரணம்

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதலாளித்துவம் அறிமுகமாக ஆரம்பித்தபோது இந்தக் குல -சாதி முறை சார்ந்த தொடர்ச்சி அழிய ஆரம்பித்தது. பல கலைகளுக்குப் புதிய மாணவர்கள் கிடைக்காமலானார்கள். சிற்பமும் மருத்துவமும் பல சிதைவுகளை அடைந்தாலும் ஓரளவு நீடித்தன. நடைமுறைப்பயன் இல்லாத பல கலைகள் அழிந்தன. அவற்றில் ஒன்று போர்க்கலை

போர்க்கலை பதினேழாம் நூற்றாண்டு வரை தேவையான ஒன்றாக இருந்தது. சிற்றரசர்களால் பேணப்பட்டது. ஆங்கில ஆட்சி உருவாகி அவ்வரசர்களின் அதிகாரமும் படைபலமும் இல்லாமலானபோது அவற்றுக்கான தேவை இல்லாமலாயிற்று. நவீன ஆயுதங்கள் வர வர அவை மேலும் வழக்கொழிந்தன

நான் என் இளமையில் குமரிமாவட்டத்தில் பல முக்கியமான போர்க்கலை ஆசான்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாருமே கிராமப்பொருளியலால் கைவிடப்பட்டு சாப்பாட்டுக்கே அலைந்துகொண்டிருந்தார்கள். இருபதுவருடங்களுக்கும் மேலாக அக்கலைக்காக வாழ்க்கையைச்செலவிட்டவர்கள் அவர்கள்.

திருவிழாக்காலங்களில் அவர்கள் சில வித்தைகளைக்காட்டிக் கொஞ்சம் பணமும் கைத்தட்டல்களும் பெறுவார்கள். மற்றபடி கோமாளிகளாக குடிகாரர்களாக அன்னியர்களாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு மாணவர்கள் இல்லை, அவர்கள் அதை ஊக்குவிக்கவுமில்லை. ‘ஏன்னோட இந்த கலை அழியட்டும் மக்கா’ என்று என்னிடம் சொன்ன பல ஆசான்கள் உள்ளனர்.

போர்க்கலையுடன் வர்மவைத்தியக்கலையும் பிற ரகசியஉடற்கூறியல் ஞானங்களும் கலந்திருந்தன. அந்த ஆசான்களுடன் அவை அப்படியே மறைந்தன.

எந்த விஷயமும் சமூகத்தில் ஏதேனும் ஒரு வடிவில் இருக்கும்போது மட்டுமே அதன் இலக்கியக்குறிப்பு அர்த்தம் கொள்கிறது. இல்லாவிட்டால் அந்தக் குறிப்பு ஒரு சொல்லாக மட்டுமே எஞ்சும்.வேலன் வெறியாட்டு என்று சங்கப்பாடல் சொல்லும் ஆடல் என்ன என்று சங்கப்பாடலை மட்டும் வைத்துச் சொல்லிவிடமுடியாது. அது கேரளப்பழங்குடிகளிடம் இன்றும் நீடிப்பதே அச்சொல்லை விளக்குகிறது

மகாபாரதப்போர்முறைகளின் பரிணாமம் அடைந்த நிலைகள் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் அழிய ஆரம்பித்தன. ஆகவே மகாபாரதம் முதல் ரகுவம்சம் வரை சொல்லப்படும் பல தகவல்களுக்கு இன்று சரியான விளக்கம் இல்லை

ஆனால் அவ்வாறு கலைகள் முற்றாக அழிய வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தியா மிகப்பிரம்மாண்டமான தேசம். இதன் பண்பாட்டுப்பாதிப்பு மொத்த கீழை உலகு முழுக்க உள்ளது. எங்கோ எல்லாமோ ஏதோ வடிவில் இருந்துகொண்டுதான் இருக்கும். தேடினால் கிடைக்கும்

மகாபாரதப்போர்க்கலைகளைப்பற்றி ஒருவர் இந்தியாவின் நூற்றுக்கணக்கான போர்க்கலைமரபுகளையும் குலமுறை பயிற்சிகளையும் கருத்தில்கொண்டு ஆராயலாம். திபெத் சீனா பர்மா இலங்கை தாய்லாந்து கம்போடியா ஜப்பான் வரை பரந்துகிடக்கும் போர்க்கலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு பெருமுயற்சி மூலம் மொத்தக்குறிப்புகளையும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடியும்

ஆனால் அப்படி எதுவும் இதுவரை நிகழவில்லை. அத்தகைய முயற்சிகள் பெரும் அமைப்புகளால் தேவையான நிதியுதவிகளுடன் பலர் சேர்ந்து கூட்டாக செய்யக்கூடியதாகவே இருக்கும். இங்கே இத்தகைய ஆர்வங்கள் சில தனிநபர்களின் ஓய்வுநேரப்பணிகளாகவே நிகழ்கின்றன. ஆகவே அவை ஆர்வம் மட்டுமே உள்ள எளிய முயற்சிகளாக, கற்பனையைத் துணைகொள்பவையாக உள்ளன

எதிர்காலத்தில் நிகழலாம்.
ஜெ

முந்தைய கட்டுரைலங்காதகனம்-கடிதம்
அடுத்த கட்டுரைவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்