«

»

Print this Post

நிம்மதி

அம்மா இறந்தபோது
ஆசுவாசமாயிற்று
இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்
எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்

இனி என்னால்
காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்
முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை

இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து
தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்
ஓடிவரும் ஒரு அலறல்
என்னை திடுக்கிடச்செய்யாது

இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது
கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை
பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த
பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து
தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்
நேற்றோடு இல்லாமலாயிற்று

இனி நான்
சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்
நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு
நேற்று அணைந்தது

தன் தவறால்தான்
நான் துன்பப்படுகிறேன் என்ற
கர்ப்பகால பிரமைகளிலிருந்து
அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.

ஒருவழியாக அவள் என்னை
பெற்று முடித்தாள்

[கல்பற்றா நாராயணன்]

[2,3-3-2013 அன்று ஆலப்புழாவில் நடந்த கல்பற்றாநாராயணன் கவிதையரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை]

தொடர்புடைய பதிவுகள்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34831

Switch to our mobile site