ஒழிமுறி- டானியேல்- மலையாற்றூர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

இன்று காலை செய்தித்தாள் வாசித்தபோது அடைந்த அதிர்ச்சி வருத்தம் கொண்டு இதை எழுதுகிரேன்

கேரள அரசு விருதுகளைப் பார்த்தபோது தோன்றியவை இவை

1. சிறந்த நடிகருக்கான விருது லாலுக்குக் கிடைத்திருக்கவேண்டும். ஒழிமுறியில் நடிப்பு அவ்வளவு நன்றாக இருந்தது.

2.சிறந்த நடிகைக்கான விருது மல்லிகாவுக்கு ஒழிமுறிக்காகக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்

3. சிறந்த திரைக்கதைக்காக உங்களுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும்

*

அதன் பின்னர் வாசித்தேன் நீங்கள் ஜே சி டானியேல் பற்றி எழுதிய கட்டுரை மேலும் அதிர்ச்சி அளித்தது. எனக்கு மிகப்பிரியமான மலையாற்றூர் பற்றி எழுதியதை வாசித்தபோது. ஸ்ரீ கோபாலகிருஷ்ணனின் வெளிவராத நூலில் உள்ளதாகச்சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருக்கவேண்டுமென்பதில்லை. இப்போது என் எஸ் மாதவன் மலையாற்றூர் எக்காலத்திலும் கலாச்சார செயலர் ஆக இருக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். இறந்தவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் சொல்லலாமே. குறிப்பாக அவரது குடும்பமும் இன்று இந்தியாவில் இல்லை

எப்படி இருந்தாலும் எனக்குப்பிரியமான கலைஞர் மலையாற்றூர். யந்திரம் வேருகள் அஞ்சுசெண்டி சர்வீஸ் ஸ்டோரி பிரிகேடியர் கதைகள் போன்ற படைப்புகள் காலத்தை வெல்லும்.

மோகன்லாலுக்கு உங்கள் வழியாக ஒரு விருது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறே ஆகட்டும்

சீதாராம் நெல்லிச்சேரி

அன்புள்ள சீதாராம்,

ஊடகங்கள் முழுக்க ஒழிமுறி சிறந்த படமாக அமைந்திருக்கவேண்டும் என்று பலர் சொல்வதைக் காட்டுகின்றன. ஒழிமுறி வெளிவந்த நாள்முதல் இன்றுவரை டிவிட்டர் அல்லது ஃபேஸ்புக்கில் அதைப்பற்றிய புகழ்மொழிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றுவரை கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. லால், மல்லிகா இருவருக்கும் விருது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற பேச்சு உள்ளது. இந்தப் பேச்சே பெரிய விருதுதான். இது அந்தப் படம் வெறும் விருதால் நிலைநிற்பது அல்ல என்று காட்டுகிறது. மற்றபடி ஜே.சி.டானியேல் பற்றிய படம் அங்கீகாரம் பெற்றது இயல்பே. ஏனென்றால் இறந்த பின்னும் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்ற வரலாறு உருவாகிவிடக்கூடாது

மலையாற்றூர் பற்றி சேலங்காட்டுகோபாலகிருஷ்ணன் அவர் இருக்கும்போதே கட்டுரைகள் எழுதிவிட்டார். அவை நூலாகவும் வெளிவந்துள்ளன. படத்தில் நேரடியாகவே பெயர்சொல்லிக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி எனக்கும் மலையாற்றூர் மிகப்பிடித்த எழுத்தாளர். முன்னரே அவரைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம்

மலையாற்றூர் டானியேல் புறக்கணிக்கப்படக் காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டு வலுவாகவே உள்ளது. படத்தில் அவரைப்போல மாடர்ன் தியேட்டர் சுந்தரமும் அய்யர் என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. சுந்தரம், அய்யர் அல்ல முதலியார் என்று பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த விவாதம் வழியாக மலையாற்றூரின் இடம் என்ன என்பது தெளிவானால் நல்லதுதான்

ஜெ

அன்புள்ள ஜெ

விருதுப்பட்டியலில் இடம்பெறாத நல்ல மலையாளப்படங்கள் பற்றிச் சொன்னீர்கள். இத்ர மாத்ரம், அன்ன்யும் ரசூலும் போன்ற படங்கள் எந்த விருதையும் பெறவில்லை. வேறு எந்த மொழியில் வந்தாலும் அந்தப்படங்களை முதல்பரிசுப் படங்களாகவே நினைத்திருப்பார்கள்

சங்கர்நாராயணன்

அன்புள்ள சங்கர்,

ஆமாம், நான் எல்லாப் படங்களையும் சொல்லவில்லை. டி வி சந்திரனின் பூமியின் அவகாசிகள் முக்கியமான படம். அதுவும் விருது எதையும் பெறவில்லை

விருதுகள் எங்கும் ஒரு குறிப்பிட்ட வகையில்தான் கொடுக்கப்படுகின்றன.விருதுக்குரிய படங்களின் ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. அவை எல்லாமே தரமான முதன்மையான படங்கள். அதன் பின் அந்தப் படங்களுக்குள் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதுதான் சாத்தியம். ஏனென்றால் கலைப்படைப்புகளில் ஒன்றைவிட இன்னொன்று துல்லியமாக மேலானது என்று மதிப்பெண் போட்டுத் தரம்பிரிக்க முடியாது. மலையாளத்தில் இந்த வட்டத்திற்குள் முக்கியமல்லாத ஒரு படம் வருவதில்லை என்பதனால்தான் அந்த விருது அவ்வளவு முக்கியமானதாக, கௌரவமானதாகக் கருதப்படுகிறது

இவ்வருடம் ஏராளமான நல்ல படங்கள். ஜே.சி.டானியேல் பற்றிய படம் அங்கீகரிக்கப்பட்டாகவேண்டும். தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் நிதியளித்த படங்களுக்கு விருதுகளில் ஒரு தனி இடம் உண்டு. இவையெல்லாம் விருதுகளைத் தீர்மானிக்கின்றன. ஒழிமுறி தவிர்க்கவே முடியாத இடத்தில் இருந்தது. அந்த விருது அவ்வாறு கிடைத்ததுதான்.

சரிதான் , அடுத்த வருடம் பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைஈழம் -கொலைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைநிலம், கடிதங்கள்