குகைகளின் வழியே – 20

நேற்றிரவு ஜேய்ப்பூர் வந்து அறைதேடினோம். எல்லா அறைகளும் ஆட்களால் நிறைந்திருந்தன, ஏதோ சில திருமணங்கள். ஜேய்ப்பூருக்கு வந்து தேடியபோதும் அறைகள் கிடைக்கவில்லை. கடைசியில் ஜேய்ப்பூரின் பழைய அரண்மனைக்கு அருகே ஒரு ஓட்டலில் அறை கிடைத்தது. மதுமதி ஓட்டலும் ஒரு பழைய அரண்மனைக் களையுடன் இருந்தது. நேர்முன்னால் அரண்மனையின் பெரிய கோட்டை சுவர் இடிந்து கிடந்தது.

காலையில் கிளம்பி கொரபுட் வழியாக ஆந்திரம் நோக்கி வர ஆரம்பித்தோம். வழியில் ஒருவரிடம் வழி விசாரித்தோம். அவர் ஒரு தபால்அதிகாரி. அவர் செல்லவேண்டிய தபால் அலுவலகம் நாங்கள் செல்லும் வழியில்தான் இருந்தது. அவரை ஏற்றிக்கொண்டோம். பெயர் சாஹூ.அவர் பொதுவாகப்பேசிக்கொண்டே வந்தார். நவீன் பட்நாயக்கின் ஆட்சியில் தொடர்ச்சியாக ஒரிசா முன்னேறிக்கொண்டே வருவதாகச் சொன்னார். கடந்த பதினைந்தாண்டுக்காலமாக வந்த வளர்ச்சியையைத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார். சாலைகள் , கிராமப்புற குடிநீர் திட்டங்கள் மின்சாரம் எல்லாமே சமீபத்தில் வந்தவை. ஐம்பதாண்டுக்கும் மேலாகக் காங்கிரஸின் ஆட்சி மாநிலத்தை நிராதரவாக விட்டிருந்தது என்றார்

அதைப்பற்றி நிறைய சிந்தித்தேன் உண்மையில் இந்திய அரசியலில் பல மாநிலங்களில் மாநிலக்கட்சிகள்தான் வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ் ஆளும்போது எந்த முதலமைச்சருக்கும் மக்களிடம் பதில்சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லை. அவர் மேலிடத்தயவால் பதவிக்கு வருகிறார். அந்த சமையலறை அரசியலில் சிலகாலம் ஓட்டிவிட்டு விலகிச்செல்கிறார். மாநிலம் முழுக்கவே அதிகாரிகளின் ஆட்சிக்கு விடப்பட்டிருக்கும். அவர்கள் எதையுமே செய்யக்கூடாதென்ற கொள்கை கொண்டவர்கள். ஐம்பதாண்டுக்காலம் காங்கிரஸ் ஆட்சியில் நிர்க்கதியாகக் கிடந்த ஆந்திரா என்.டி.ராமராவின் ஆட்சியில் எப்படித் துயில் கலைந்து முன்னேறி இன்று இந்தியாவின் செல்வ வளம் மிக்க மாநிலங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நான் நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். இன்று பிகாரின் நிதீஷ் குமார் பற்றியும் அதைச்சொல்லலாம். மோடி கூட ஒரு வகை மாநில ஆட்சியாளர்தான்

ஆனால் இது விதியும் அல்ல. மாநில அரசியால்வாதி சுரண்ட ஆரம்பித்தால் அவர் எந்த சக்திக்கும் அஞ்சாமல் செய்துகொண்டே இருக்கலாம். மாநிலத்தின் எல்லா அமைப்புகளையும் சீரழித்து குட்டிச்சுவராக்கலாம். சிறந்த உதாரணம் தமிழக ஆட்சியாளர்கள். பயணம் முழுக்க நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் இரு பெரும் அரசியல்கட்சிகளாலும் கைவிடப்பட்ட மின்துறை காரணமாக தமிழகம் அடைந்துகொண்டிருக்கும் பெரும் பின்னடைவு பற்றித்தான். தமிழகத்தில் உள்ள முக்கியமான தொழில்கள் பல வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இப்போது அடைந்துள்ள தொழில்துறை பின்னடைவை மீட்டெடுக்க இருபத்தைந்தாண்டுகள்கூட ஆகலாம். ஒருவேளை அடுத்த இருபத்தைந்தாண்டுகளில் நாம் பிகாருக்கு வேலைதேடிச் செல்ல நேரலாம்


நாங்கள் மாவோயிசப் பிரச்சினை பற்றிக்கேட்டோம். சாஹூ மாவோயிஸ்டுகளைப்பற்றிய சாதகமான எண்ணம் கொண்டவராக இருந்தார்.. மாவோயிசப்பிரச்சினை எங்கோ காடுகளுக்குள் நிகழ்கிறது, ஊருக்குள் மக்களுக்குப்பிரச்சினை இல்லை என்றார் ஆனால் அவர்கள் வந்த பின்னர்தான் இந்த நிலப்பகுதி ஆட்சியாளர் கண்களுக்குப்பட்டது இந்த மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு உருவானது என்றார்,

நாங்கள் நேராக ஆந்திர எல்லைக்குள் செல்லும் திட்டம் வைத்திருந்தோம். சாஹூ நாங்கள் கண்டிப்பாகப் பார்த்தாகவேண்டிய இரு இடங்களைப்பற்றிச் சொன்னார். ஒன்று முச்சுந்த் என்ற ஊரில் உள்ள பழங்குடியினரின் வாரச்சந்தை. அன்று அச்சந்தை உண்டு என்றார். காலை ஏழுமணிக்கே கூடும் அந்தச் சந்தை மதியம் வரை நீடிக்கும். அங்கே ஒரிசாவின் எல்லாப் பழங்குடிகளும் வருவார்கள் என்றார். குறிப்பாக இன்னமும் பொறுக்கி உண்ணும் வாழ்க்கையில் உள்ள, உடையணியும் வழக்கம் இல்லாத போண்டா பழங்குடியினரைக் காணமுடியும் என்றார். இன்னொரு விஷயம் டுடுமா என்ற நீர்வீழ்ச்சி.

அவரைத் தபால்நிலையத்தில் விட்டுவிட்டுத் திரும்பிப் பயணமானோம். அறுபது கிலோமீட்டர் சாலைப்பயணம். இப்பகுதியில் பேருந்து வசதிகள் மிகமிக குறைவு. டாட்டாவின் ஆட்டோ போன்ற பெரிய வண்டிகள் வாடகைக்கு ஓடுகின்றன. நம்மூரில் அதிகம்போனால் எட்டுபேர் ஏறக்கூடிய இந்த வண்டிகளில் இங்கே ஐம்பதுபேர் செல்கிறார்கள் என்றால் நம்பமுடியாதுதான். ஆனால் உண்மை. வண்டிக்குமேல் பதினைந்துபேர் அமர்ந்திருக்கிறார்க்ள். முன்பக்கம் பானெட்டில் நாலைந்துபேர். நான்குபக்கமும் இருபதுபேர் வரை தொங்கிக் கிடப்பார்கள். உண்மையிலேயே வண்டியை கண்ணால் பார்க்கமுடியாது.

பைக்கில் சென்ற இருவரை நாங்கள் வழியில் சந்தித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது முச்சுந்து அங்காடியா? என்றார்கள். ஒரிய மொழியில் அங்காடி என்றால் சந்தை. ஆம் என்றோம். அவர்களே இருபது கிமீ தூரம் முன்னால்சென்று வழிகாட்டினார்கள். செல்லும்வழியிலேயே ஏராளமானவர்கள் சென்றுகொண்டிருந்தனர். எல்லாரும் கைநிறைய கனத்த பொட்டலங்களும் பொதிகளும் பைகளும் வைத்திருந்தனர். சந்தைவிட்டு செல்கிறார்களா என்றார் கிருஷ்ணன். ஆனால் எங்களூரில்கூட கையில் பொருட்கள் இல்லாமல் எவரும் சந்தைக்குச் செல்வதில்லை. சந்தை என்பது விற்று வாங்கவேண்டிய இடம்.\


அது முச்சுந்து ஊரின் சாலைச் சந்திப்புதான். அங்கே இயல்பாகவே உருவான சந்தை அது. நூற்றுக்கணக்கான பழங்குடிப்பெண்களும் ஆண்களும் அமர்ந்து எதையெதையோ விற்றுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் காய்கறிகள். வெங்காயத்தண்டுகள், தக்காளி, காரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு. இப்பகுதியில் அதிகம் விற்க்ப்படும் ஒரு பொருள் சாம்பிராணி. மலையில் பூச்சிக்கடியில் இருந்து தப்ப அது இன்றியமைததாக இருக்கலாம். விதவிதமான அலுமினிய நகைகள், ரிப்பன்கள் போன்ற அழகுப்பொருட்கள். முப்பது வருடம் முன்பு அருமனையிலோ மஞ்சாலுமூட்டிலோ இருந்தது போன்ற ஒரு சந்தை.

போண்டா பழங்குடிகளைப்பார்த்தோம். பெரிய அலுமினிய , இரும்பு வளையங்களைக் கழுத்தில் அணிந்த கரிய பெண்கள். ஆப்ரிக்கச்சாயல் கொண்ட குள்ளமான மெலிந்த மக்கள். கால்களிலும் கைகளிலும் அதேபோல இரும்பு அலுமினிய வளையங்கள். கழுத்தைத் திருப்பக்கூட முடியாது என்று தோன்றுமளவுக்கு கட்டைவிரல் கனமான பத்துப்பதினைந்து வளையங்கள். அத்துடன் நுணுக்கமாகக் கோர்க்கப்பட்ட பாசிமணிமாலைகளை பட்டையாக மார்புவரை அணிந்திருந்தார்கள். அதுதான் பெண்களின் மேலாடை. அதற்குக்கீழே வெற்று மார்புகள். இடுப்பில் இரண்டுசாண் அளவுக்குப் பட்டையாக அதேபோல பாசிமணி மாலைகள். வேறு உடையே இல்லை. நிர்வாணமான பழங்குடிகள் இந்தியாவிலிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். ஒரு துணியைப் குளிருக்குப் போர்த்துவதுபோல சிலர் போர்த்திக்கொண்டிருந்தார்கள்.

மூக்கில் புல்லாக்கு போல பெரிய அலுமினிய நகைகளை அணிந்த பழங்குடிகள் வேறு இனக்குழு. மஞ்சளின பழங்குடிகள் இருந்தனர். ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் பழங்குடிகளில் 30 வயதுக்குமேற்பட்டவர்கள்தான் இப்படி பாரம்பரிய உடைகளில் அல்லது உடையின்மையில் இருந்தனர். அவர்களின் பெண்கள் மிக நவீனமாக இருந்தனர். சுடிதார் போட்டு ஷாம்பூ போட்ட கூந்தலை விரித்து நகைகளும் வளையல்களும் அணிந்து சந்தையில் சிரித்துப்பேசிக்கொண்டு உலவினார்கள்.

சந்தையின் மறுஎல்லை மது மற்றும் சூதாட்டத்துக்குரியது. வரிசையாக பானைகளில் நீர்த்த கள்போன்ற எதையோ வைத்துக்கொண்டு அமர்ந்ந்திருந்தனர். குழாய் கொண்ட குடுவை போல ஒரு அகப்பை. பாம்பாட்டியின் மகுடி போல சின்னதாக இருந்தது. அதை திரவத்தில் முக்கி எடுத்தால் அந்தக் குழாயின் மறுமுனை துளை வழியாக உறிஞ்சிக் குடிக்கலாம். அது கள் அல்ல. மஹுவா என்ற காட்டுப்பூவை நீரில் போட்டுக் கொதிக்கச்செய்து காய்ச்சி உருவாக்கப்படும் ஒருவகை மது. மஹுவா நம்மூர் ஊமத்தைபோன்ற ஒரு செடி. இதை மது என்று சொல்லமுடியாது, மூலிகைவடிநீர் எனலாம். இதில் சாராய அம்சம் மிக குறைவு. ஆனால் குடித்தால் மண்டையை அறைந்துவிடும்

மதுவை எவர் வேண்டுமானாலும் சாம்பிள் கேட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்டவர்கள் காறிக்காறித்துப்பிக்கொண்டிருந்தார்கள். விற்பவர்களே அவ்வப்போது அள்ளி அள்ளிக் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூடக் குடித்தார்கள். பழங்குடிகள் வாழ்க்கையின் மகிழ்ச்சி இந்த மதுவில்தான். சாபமும் இதுதான். இதிலிருந்து இவர்களை மீட்பதே கடினம். நரம்பு முறுக்கத்தையும் மூளைச்சிக்கல்களையும் உருவாக்குவது இந்த மது. பிற பகுதிகளில் இது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஓர் ஆதிவாசி இளைஞன் குடித்துவிட்டு ஒரு தூணை இறுகப்பற்றியபடி அமர்ந்திருக்க அவன் அம்மாவும் இரு பெண்களும் அவனைப் பிய்த்துப் பிடுங்கி எடுக்க முயல்வதைக் கண்டோம். அவர்கள் இழுக்க இழுக்க அவன் மேலும் இறுக்கமாக தூணைப்பிடித்துக்கொண்டான். உச்சகட்ட அச்சத்தில் இருந்தான். மூக்கிலும் வாயிலும் கோழை. சட்டென்று அவன் மல்லாந்து விழுந்தான். வலிப்பு வந்துவிட்டது. காக்காய் வலிப்புபோல வாயும் கையும் இழுத்துக்கொண்டு அதிர்ந்தன. கோழை ஒழுகியது. அம்மாக்காரி மார்பில் அறைந்துகொண்டு முகத்தைப் பிய்த்துவீசுவது போல சைகை செய்தபடி கதறிக்கதறி அழுதாள். கொஞ்சநேரத்தில் வலிப்பு நின்றுவிட்டது.போதையில் கிடந்தான்.

அந்த இளைஞன் உயர்தர சட்டையும் பாண்டும் அணிந்திருந்ந்தான். செல்பேசி வைத்திருந்தான். அப்படியேன்றால் காசு இருக்கிறது என்று பொருள். அதை மஹுவாமது குடித்தே அழிப்பான். அதைத்தவிர எதையுமே அவனால் செய்யமுடியாது. இந்ந்த ஆதிவாசி வாழ்க்கையை அவர்களின் தனித்துவம் கொண்ட வாழ்க்கை என்று சொல்லி அதை ஒரு வேடிக்கைப்பொருளாகப் பேணுவது அறம்தானா என்ற எண்ணம் ஏற்பட்டது எனக்கு. அவர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அந்த வாழ்க்கையில் நாம் ஏற்றிச் சொல்லும் எந்த மகத்துவமும் உண்மை அல்ல.

ஒட்டு மொத்தமாக இந்தப்பழங்குடிகளிடம் இருக்கும் ஆப்ரிக்கத்தன்மை ஆச்சரியமூட்டுவது. கரிய நிறம், கல்மணிமாலைகள் மட்டுமல்ல. லப்பா என்ற பேரில் ஆப்ரிக்கப்பழங்குடிகள் நெற்றியில் கட்டும் துணிபோலவே ஒன்றை இவர்களும் கட்டியிருக்கிறார்கள். நம்பீபியாவின்  பழங்குடிகளின் சந்தையில் அதிகம் விற்கப்பட்ட பொருள் உலர்ந்த இறைச்சியும் கருவாடும்தான். இங்கும் அதுவே. இவர்களின் புரோட்டின் உணவு அதுதான். அதை இவர்கள் கொஞ்சம் கூட வீணாக்குவதில்லை. உலர்ந்ந்த இறைச்சியையும் மீனையும் சுடாமலேயே சாப்பிடக்கூடியவர்கள். நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உலகமெங்கும் பரவியிருக்கும் ஓர் ஆப்ரிக்க இன ஒருமைப்பாடு உண்டா என்று நினைக்கத்தோன்றியது. இந்த இன வலைப்பின்னல் நம்முடைய பண்பாட்டுக்கு அடியில் நிலத்தடிநீர் போலபரவியிருக்கிறது. அதில் முளைத்தவர்களே நாமும்.

இந்தமக்களில் மிக இளமையானவர்கள் தவிர ஆரோகியமானவர்கள் எவருமே இல்லை. தொல்நோய்கள் பலவிதமான முழைகள் முண்டுகள். செல்லரித்துக் கறுத்த பற்கள். கழுத்தில் அயோடின் பற்றாக்குறை விளைவான கழலைகள். வளைந்த எலும்புகள். மிதமிஞ்சிய மஹுவா பானத்தால் மழுங்கிப்போன நரம்புகளின் விளைவான நடுக்கம். அர்த்தமற்ற வெறிப்பு கொண்ட கண்கள். இந்த மக்கள் ஒருகாலத்தில் முழுநிறைவு கொண்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம், கண்டிப்பாக இப்போது இல்லை. இவர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள். எவ்வளவு துரிதமான முறையில் இவர்கள்

இப்பகுதியில் கிறித்தவ மிஷனரிகள் இம்மக்கள் நடுவே பெரும் பணியாற்றி வருகிறார்கள்.எங்கும் அவர்களுடைய பணியாளர்களை காணமுடிந்தது. இம்மக்களை அவர்கள் மதம் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கூடவே இந்த இழிவிலிருந்தும் அவர்களை மீட்டு மேலான வாழ்க்கையை அவர்களுக்கு அளிக்கவும் கூடும் . மதமாற்றம் பற்றி அவர்களைக் குறைகூறுபவர்கள் அந்த மிஷனரிகள் அம்மக்களுக்குச் செய்வதைத் தாங்களும் செய்வது மட்டுமே உகந்த வழி என தோன்றியது.

முந்தைய கட்டுரைநித்யாவின் கையெழுத்து
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 21