லோகி4,தனியன்
July 5, 2009 – 12:05 am2003 டிசம்பரில் லோகித தாஸ் எனக்கு முதல்முறையாக ·போன்செய்தார். ”என்பெயர் லோகிததாஸ்” என்றார். ”நான் மலையாள சினிமாவுக்கு கதை எழுதுகிறேன்…டைரக்ட் செய்வேன்…”. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு அப்போது சினிமாவுடன் அதிகமான தொடர்பு ஏதும் இல்லை. வசந்த் எனக்கு தெரிந்தவர். அழகம்பெருமாள் ஊர்க்காரர். அவ்வளவுதான். ”நாம் சந்திக்க முடியுமா?” என்றார் லோகி. ”கண்டிப்பாக” என்றேன்.”அடுத்தவாரம் திருவனந்தபுரம் வருவேன் அப்போது சந்திக்கலாம்” என்றார். நானே திருவனந்தபுரம் வருகிறேன் என்றேன்
திருவனந்தபுரத்துக்கு நான் சென்றேன். லோகி அங்கே ஆர்யாஸ் ஓட்டலில் தங்கியிருந்தார். நான் தொலைபேசியில்பேசியபின் நேரில்பார்க்கச் சென்றேன். லோகியை சந்தித்ததும் நான் துணைக்கு யாரும் இல்லையா என்றேன்.”உண்டாய்ருந்நு” என்று சொல்லி பயங்கரமாகச் சிரித்தார். அந்த சிரிப்பிலேயே எங்களுக்கு இடையே எந்த திரையும் இல்லாமல் ஆகியது. ரகசியங்கள் இல்லாத மனிதர் லோகி. காழ்ப்புகள் கோபங்கள் கணக்குகூட்டல்கள் இல்லாத நேரடியான மனிதர். அப்படியே தன்னை நம் முன் திறந்து வைப்பவர்
அவரைச் சந்திக்க எனக்கு ஒரு சின்ன தயக்கம் இருந்தது, சினிமாக்காரர் என்று. அதேசமயம் லோகி என் மனம் கவர்ந்த பெரிய எழுத்தாளர். அந்த ஆர்வமும் உந்தியது 1987 ல் நான் காஸர்கோட்டில் இருக்கும் போது என் நண்பன் பிரதீப் ஒருநாள் சொன்னான், ”டேய் ஒரு படம் வந்திருக்குடா…படம்னா அது படம்.வது ஒருமாதிரி பித்து பிடிக்கக் வச்சிடுது…தாங்கமுடியாத படம்…” அது தனியாவர்த்தனம். நான் மறுநாள் போகலாம் என்று பிரதீப்பை அழைத்தேன். ”அய்யோ அதை இன்னொருதடவை பார்ப்பதா? நினைத்தே பார்க்கமுடியவில்லை” என்றான்
காஸர்கோட்டில் திரையரங்கில் அமர்ந்து நான் அந்தப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டேன். இருபத்து மூன்று வருடம் கழித்து இன்றுகூட பாலன் மாஸ்டரை நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது. மூத்த மகனுக்கு பைத்தியம் இருக்கும் என்று சாபம் உள்ள ஒரு புராதன குடும்பம். மூடநம்பிக்கைகள் ஆட்சி செய்யும் மனங்கள். பைத்தியமாக சங்கிலிக் கட்டில் கிடக்கும் மூத்த மாமன் ஒருநாள் மருமகன் பாலன் மாஸ்டரிடம் தன் கட்டை அவிழ்த்துவிடும்படி சொல்லி மன்றாட பாலன் அவிழ்த்துவிடுகிறார். மாமன் குளத்தில் குதித்து தற்கொலைசெய்துகொள்கிறார்
அந்தக்குற்ற உணச்சியால் கொஞ்சம் பயப்படும் பாலன் மாஸ்டரை அடுத்த பைத்தியமாக ஆக்குகிறது குடும்பம். அவர் மேலுள்ள பேரன்பினாலேயே அவரை ஊரெங்கும் வைத்தியம் மந்திரவாதம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி பரப்பி பைத்தியமாக்குகிறார்கள். எவரையும் புண்படுத்தி அறியாத பலனின் மறுப்பும் கண்ணீரும் கோபமும் எல்லாமே பைத்தியமாக விளக்கம் கொள்கின்றன. தப்பமுடியாத விதியில் அகப்படும் அவரை அவர் அன்னையே விஷம் வைத்துக் கொல்கிறாள்.
அந்தப்படத்தில் மம்மூட்டி மிக அற்புதமாக நடித்திருந்தார். படிப்படியாக பைத்தியமாகும் அவரது கண்கள்! அந்தப்படத்தின் கடைசி காட்சிதான் என்னை உலுக்கியது. இறந்துபோன பாலன் மாஸடரின் சிதைக்கு தீகொளுத்தும் அவரது ஐந்து வயது மகனில் காமிரா நிலைகொண்டு படம் முடிகிறது!
அதன்பின் எத்தனை படங்கள். லோகி விடுதிக் கதவைத்திறந்து புன்னகையுடன் ”வரூ” என்றபோது அத்தனைபடங்களின் அழுகையும் சிரிப்பும் ஆவேசமும் ஒரே அலையாக வந்து என்னைத்தாக்கியதுபோல் இருந்தது. உள்ளே அமரச்செய்தார். ”நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பாஷாபோஷினியில் உங்கள் அனுபவக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். என் ஆதர்ச எழுத்தாளர் மாதவிக்குட்டி போல எளிமையும் கவித்துவமும் உள்ள எழுத்து ”என்றார்
கஸ்தூரிமான்
அன்று ஒருமணி நேரத்துக்குள் நான் லோஹியிடம் அபாரமாக நெருங்கி ”என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறீர்கள் லோகி” என்று அதட்டவும் அவர் ”ஜெயமோகனுக்கு இதெல்லாம் தெரியாது. ஜெயமோகன் ஒரு முட்டாள்” என்று சொல்லவும் ஆரம்பித்திருந்தோம்.. லோகி எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பவர் உற்சாகமாக குலுங்கிச் சிரிக்கக் கூடியவர். எந்நேரமும் கண்களில் ஒரு புன்னகை கொண்டிருப்பவர். ”நமக்கு தமிழிலே ஒரு படம்செய்யணும்”என்றார். ”அயோ நானா?”என்றேன் ”எனக்கு சினிமாவே தெரியாது..” ”எனக்கு தெரியும்” என்றார் லோகி ”ஜெயமோகன் சினிமாவுக்கு வரணும். சினிமா ஒரு தீங்கும் செய்யாது. சில சௌகரியங்கள் தரும். வாழ்க்கையில் வீணாகும் நேரத்தை மிச்சப்படுத்தும்” என்றார்.
லோகி எடுக்க உத்தேசித்த படம் ‘செம்பட்டு‘. எடுக்கப்பட்டிருந்தால் தமிழின் மகத்தான படமாக, லோகியின் மாஸ்டர்பீஸ் ஆக இருந்திருக்கும். அது கொடுங்கல்லூர் தேவியாக இருக்கும் கண்ணகியைப்பற்றியது. அந்த ஆலயத்தில் சேவைசெய்யும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்தான் நாயகி. சமகாலத்தில் நடக்கிறது கதை. உண்மையில் அவள் கண்ணகியின் சொந்த ரத்தம். வாழ்க்கையின் ஓர் உச்சகட்டத்தில் அவளில் இருந்து கண்ணகி வெளியே வருவதே கதையின் முதிர்கணம்.
கதையின் ஒற்றைவரியைக் கேட்டு நான் பிரமித்தேன். முதலில் அதை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. இப்போதுகூட அதை தமிழில் எடுக்கமுடியாது என்றே எண்ணுகிறேன். ”இதை மலையாளத்தில் எடுக்கலாம் லோகி” என்றேன். செம்பட்டு மீரா ஜாஸ்மினுக்கும் கனவாக இருந்தது. அவரே தயாரிப்பதாக இருந்தார். எட்டுநாள் கொடுங்கல்லூர் மீனபரணி திருவிழாவின் காவுதீண்டல் போன்ற சடங்குகள் படமாக்கவும்பட்டன. ஆனால் லோகிக்கு அதை கண்ணகியின் மொழியில் எடுக்க வேண்டும் என்று ஆசை.
லோகியிடம் நான் இன்னொரு கதையை எடுக்கலாம் என்று வற்புறுத்தினேன். செம்பட்டு போன்ற கதை தமிழின் திரை விமரிசகர்களுக்கே பிடிகிடைக்காது. இன்னும் எளிமையும் கவித்துவமும் கொண்ட ‘பெரச்சன்‘ என்ற கதையை லோகி சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விக்ரம் போன்ற ஒரு வலுவான நடிகர் அதற்குத்தேவை. மீரா ஜாஸ்மின் உண்டு. அதைச்செய்யலாம் என்றேன்.
வீட்டுக்கு வந்த நான் அந்தக்கதையை காங்கேயன் என்ற பேரில் தமிழாக ஆக்கினேன். இப்போதும் அது ஒரு வலுவான, எளிமையான, கவித்துவமான திரைக்கதையாக என்னிடம் இருக்கிறது. ஆனால் லோகிக்கு நடிகர்கள் கிடைக்கவில்லை. விக்ரமை சந்திக்கவே அவரால் முடியவில்லை.கலாபவன் மணி ”சொடக்குபோடுங்கள் வருகிறேன்” என்றார். அவரைவைத்தே ஆரம்ப்க்கலாம் என்று பேசினோம்.
அடுத்த வாரம் லோகியும் அவரது உதவியாளர் மனோஜும் தயாரிப்புநிர்வாகியான தர்மனும் என்னைச் சந்திக்க நாகர்கோயில் வீட்டுக்கு வந்திருந்தார்கள். எனக்கு பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்தார் லோகி. படத்தை அவரது நண்பர் ஒருவர் தயாரிப்பதாகச் சொன்னார். அவர் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து வடக்கும்நாதன் என்ற படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இன்னும் இரண்டுமாதத்தில் அந்தபடம் முடியும் என்றும் உடனே தமிழில் இதை ஆரம்பித்துவிடலாம் என்றும் சொன்னார்.
லோகிததாஸ், சிந்து லோகிததாஸ், பிரசன்னா, இளையராஜா, ஒளிப்பதிவாளர் கிச்சாஸ்
மீண்டும் ஒருமாதம் கழித்து லோகி என்னைக் கூப்பிட்டார். இம்முறை லக்கிடியில் உள்ள அவரது பண்ணைவீட்டுக்குச் சென்றேன். லோகியே என்னை பாலக்காட்டுக்கு வந்து காரில் அழைத்துச்சென்றார். ஒவ்வொரு முறையும் என்னை அவரே வந்து அழைத்துச்செல்வது லோயின் வழக்கம். ஒருமுறைகூட இன்னொருவரை அனுப்பியதில்லை. ஒருமுறைகூட அவரே வந்து ரயிலேற்றிவிடாமல் இருந்ததும் இல்லை. கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார் ”ஜெயமோகனை லோகிக்கு அவ்வளவு பிடித்திருந்தது. ஜெயமோகன் என்று சொனனலே கண்களில் அந்த பிரியம் தெரியும்” என்று. நான் வழிபட்ட ஒரு கலைஞன் அத்தனை தூரம் எனக்குந் நெருங்கியதனாலேயே நான் அவரை பார்க்க முடியாமல் ஆகியது. மரியாதைக்குப்பதிலாக பிரியம் மட்டும் பெருகியது.
அவரது வீட்டில் இளம் மழையும் குடியும், இலக்கியப்பேச்சுமாக நான் சிலநாட்கள் தங்கியிருந்தேன். லோகி காங்கேயனை எடுப்பது சரியா என்று ஐயப்பட்டார். அந்தப்படம் ஓடாது, அதில் ‘கமர்ஷியல்‘ அம்சங்கள் இல்லை என்று பலர் சொன்னார்களாம். நான் எதிர்த்து வாதிட்டேன். அது உருக்கமான கதை, அதை தமிழ்மனம் ஏற்கும் என்றேன்.
ஆனால் லோகி ஒரு மனச்சிக்கலில் இருந்தார். மலையாளத் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பில் தேர்தலில் அவர் போட்டியிட்டு தோற்றிருந்தார். அவரை பழிவாங்கும்பொருட்டு ஒருவர் முன்பு கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை கேட்டு வழக்கு தொடுக்க லோகி வீம்புக்கு அடம்பிடிக்க அமைப்பு லோகிக்கு மலையாளத்தில் படங்களில் செயல்பட தடை விதித்தது. ஊடகங்களிடம் ‘சரி, மலையாளத்துக்கு என்னை வேண்டாமென்றால் எனக்கும் மலையாளம் வேண்டாம். நான் தமிழில் படம் எடுக்கிறேன்”என்று லோகி சொல்லிவிட்டார்
ஆகவே தமிழில் படம் எடுத்து அது ஓடியாக வேண்டும். ஓடுகிற படம் எடுப்பதைப்பற்றி அவருக்கு உபதேச மழைகள் கொட்டிக்கொண்டிருந்தன. ”மலையாளம் போல இல்லை சார் தமிழ். இங்கே ஜனங்களோட டேஸ்டே வேற” என்ற நிரந்தர வரி. மலையாளத்தில் அற்புதமான படங்களை எடுத்த பல இயக்குநர்கள் தமிழில் குப்புறக்கவிழ்ந்ததற்குக் காரணம் இந்த உபதேசம்தான். தமிழ்ச் சூழல் தனக்குத்தெரியாது என்ற தயக்கம் காரணமாக இயக்குநர்கள் அக்குரலுக்குச் செவி சாய்க்கிறார்கள்.
நாலுபாட்டு, ·பைட்டு, காதல்,செண்டிமெண்டு என்ற அந்த வாய்ப்பாடு இப்போதும் எல்லா இயக்குநர்களுக்கும் தயாரிப்புத் தரப்ப்பில் இருந்து ஓதப்படுவதுதான். ஆனால் தமிழில் சுயம்புவாக உருவாகிவரும் நல்ல இயக்குநர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள். எதிர்ப்பார்கள். தங்களுக்கு உறுதியாக தெரிந்த படத்தை எடுப்பார்கள். அதேசமயம் மலையாள இயக்குநர்கள் தமிழுக்காக ‘இறக்கி வந்து‘ இந்த ‘கமர்ஷியல்‘ ஆட்கள் கோரும் படத்தை எடுக்கிறார்கள். தான் மலையாளத்தில் எடுத்த அதே படத்தை ·பாஸில்கூட தமிழில் எடுக்கவில்லை, அவற்றை தரம் இறக்கியே எடுத்தார். ஆனால் அவை ஓடின.
இதில் என்ன சிக்கல் என்றால், ஒருவர் அவருக்கு உள்ளூர ஈடுபாடு உள்ள படத்தையே எடுக்க முடியும். நல்ல படங்கள் எடுத்த இயக்குநர்கள் தோல்வியால் கோபம் கொண்டு வணிகசினிமா எடுக்கும்போது அது கேவலமாகப்போவதைக் கண்டிருக்கிறோம். எந்த சினிமாவாக இருந்தாலும் எடுப்பவன் அதில் மானசீகமாக ஈடுபடவேண்டும். ஈடுபாடில்லாமல் எடுக்கும் சினிமா எவரையுமே திருப்திசெய்யாது.
லோகிக்கு நான் அவரது சில படங்களை தமிழில் எடுக்கலாம் என்றேன். கமர்ஷியலாகவும் கலைரீதியாகவும் நல்ல படங்கள் அவை. ஏன், ‘தனியாவர்த்தன‘த்தையே தமிழில் எடுக்கலாம் என்றேன். அந்தப் பிரச்சினை மலையாளத்தைவிட தமிழில் அதிகம். லோகி குழம்பிக்கொண்டிருந்தார். அவர் என்னை மீண்டும் தொடர்பு கொண்டது மலையாளக் ‘கஸ்தூரிமான்‘ படத்தின் நூறாவதுநாள் கொண்டாட்டத்துக்காக. நான் கிளம்பிச்சென்றேன். திரிச்சூரில் விழா.
லோகியின் மனைவி சிந்துவை அப்போதுதான் அறிமுகம் செய்துகொண்டேன். என்னுடைய இலக்கியவாசகி அவர். என் பெயரை லோகிக்குச் சொன்னதே அவர்தான். விழா சிறப்பாக நடந்தது. மம்மூட்டி வந்திருந்தார். சத்யன் அந்திக்காடு, சிபி மலையில் எல்லாரும் வந்திருந்தார்கள். அன்றுதான் மீரா ஜாஸ்மினையும் சந்தித்தேன்
லோகிததாஸ், நா முத்துக்குமர்
நான் மறுநாளும் லோகியுடன் இருந்தேன். ஆலுவாவில் பெரியாற்றின் கரையில் இருந்த அவரது பெரிய வீட்டில் சிலநாள் இருந்தேன். அப்போதுதான் லோகி கஸ்தூரிமான் படத்தையே தமிழில் எடுத்தால் என்ன என்றார். நான் அதை எதிர்த்தேன். அது மலையாளத்தில் ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும் லோகியின் நல்ல படங்களில் ஒன்று அல்ல. லோகி அவசரமாக எடுத்த படம் அது. அதன் திரைக்கதையைக் கூட லோகி எழுதிக்கொள்ளவில்லை. அந்தப் படத்தின் முக்கியமான குறையே அந்த கதைகக்ருவில் எந்தப்புதுமையும் இல்லை என்பதுதான். லோகியைப்போன்ற ஒருவர் தமிழுக்கு வரவேண்டியது அந்தப்படம் மூலம் அல்ல என்று நான் சொன்னேன்
கிட்டத்தட்ட லோகியை மனம் மாறச்செய்துவிட்டு, அவரது ‘தூவல்கொட்டார‘த்தை தமிழில் எடுக்கலாம் என உறுதிப்படுத்திவிட்டு, நான் ஊருக்கு வந்தேன். மறுவாரம் லோகி மீண்டும் நாககோயில் வந்தார். இம்முறை கஸ்தூரிமானை தமிழில் எடுப்பதை முற்றிலும் உறுதிப்படுத்திவிட்டிருந்தார். என்னை பேசிப்பேசி சம்மதிக்க வைத்தார். அவர் சொன்ன காரணங்கள் இரண்டு, ஒன்று தயாரிப்பாளர் வணிக வெற்றியை விரும்புகிறார். இரண்டு, காதல் இல்லாத தமிழ்ப்படம் ஓடாது என்று சொல்கிறார்கள். இதில் கல்லூரிக்காதல் உள்ளது.
எனக்கு அப்போது சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. சினிமாவுக்குப் போகத்தான் வேண்டுமா என்றே தயங்கிக்கொண்டிருந்தேன். நான் லோகி சொல்வதை ஏற்றுக்கொண்டேன். எல்லாமே உண்மை என்று எனக்குப்பட்டது. லோகி சென்னைக்குச் சென்று விஜய் பார்க்கில் அறை போட்டார். அழகிய தீயே படத்தில் நடித்து கவனத்துக்கு வந்திருந்த பிரசன்னா கதாநாயகனாக ஒப்பந்தம்செய்யப்பட்டார். நான் சென்னை சென்றேன். நான்குநாட்கள் கழித்து படம் பூஜை.
ஆனால் தயாரிப்பாளர் வரவில்லை. பல காரணங்களால் ‘வடக்கும்நாதன்‘ படம் அப்படியே நின்றுவிட கடும் பொருளாதார நெருக்கடியில் தயாரிப்பாளர் காணாமலாகிவிட்டார். நான் படத்திட்டத்தை கைவிட்டு விடலாம் என்றேன். ஷாஜியும் அதையே சொன்னார். ஆனால் லோகிக்கு அது கௌரவப்பிரச்சினையாக இருந்தது. மலையாளத்தில் அவர் விட்ட சவால்தான் காரணம். சட்டென்று அவர் படத்தை தானே தயாரிப்பதாக முடிவெடுத்தார்
நானும் ஷாஜியும் சினிமாவுக்கு புதியவர்கள். அதிர்ச்சியுடன் வேண்டாம் லோகி என்று மாறி மாறிச் சொன்னோம். லோகிக்கு தமிழ் சினிமா உலகமே தெரியாது. ஆனால் சினிமாவில் உள்ள வணிக சக்திகள் அவரை பேசிப்பேசியே கரைத்தன.ஒரே ஷெடியூலில் ஒருகோடி ரூபாயில் படத்தை முடித்துவிடலாம். முடிக்கும்போதே இரண்டுகோடி ரூபாய்க்கு வாங்க ஆள் தயாராக இருப்பார்கள். இரண்டுகோடியில் ஒரு படம் கிடைத்தால் யார்தான் வாங்க மாட்டார்கள்? அதாவது ஒருகோடி ரூபாய் இப்போதே கையில் இருப்பதைப்போல என்றார்கள். லோகி சிந்துவின் பெயரால் படநிறுவனம் ஆரம்பித்தார்.
[மேலும்]
சிந்து லோகிததாஸ், ஷாஜி [தமிழ் கஸ்தூரிமான் பூஜை 2004 
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)







2 Trackback(s)
You must be logged in to post a comment.