திருவண்ணாமலையில்…

கல்பற்றாநாராயணனின் ’இத்ரமாத்ரம்’ என்ற சிறிய நாவல் எனக்கு மிகப்பிரியமான மலையாள ஆக்கம். அது ஒரு பெண்ணின் அந்தரங்கத்திற்குள் செல்லும் கதை. அதை ஒரு பெண் மொழியாக்கம்செய்யலாமென நினைத்தேன். ஆகவே திருவண்ணாமலை ஷைலஜாவிடம் சொன்னேன். ஷைலஜா அதை மொழியாக்கம்செய்தபின் ஒருநாள் அமர்ந்து மொழியை செம்மையாக்கலாமென திட்டம். விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவை வரும் கல்பற்றா நாராயணன் அப்படியே திருவண்ணாமலை வந்தால் நன்றாக இருக்கும் என்றார் பவா செல்லத்துரை. எஸ்.கெ.பி.கருணாவும் அவரும் இணைந்து திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலைய மாடியில் உரையாடல்களுக்கான ஓர் அமைப்பையும் அதற்காக ஒரு சிறிய கூடத்தையும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் கல்பற்றா அதைத் திறந்து வைக்கலாமென்றும் சொன்னார்கள்.

ஆகவே விஷ்ணுபுரம் விழா முடிந்ததும் மறுநாள் மாலையிலேயே பேருந்தில் நானும் கல்பற்றாவும் திருவண்ணாமலை கிளம்பிவிட்டோம். பேருந்தில் வேலூர் சென்றோம். அங்கே வாடகைவண்டி வந்து காத்திருந்தது. பயணம் முழுக்க தூங்கிக்கொண்டே இருந்தோம். நேராக கருணாவின் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் சென்றோம். அங்கே விடுதியில் தங்கினோம். நான் உடனே தூங்கிவிட்டேன். கல்பற்றா தூங்காமல் குளித்துவிட்டு வாசிக்க ஆரம்பித்தார்.

பதினொரு மணிக்கு பவாவின் வீடு. பவா வீடு எப்போதுமே விருந்தினர் மாளிகை போல இருக்கும். அவரது தந்தை காலத்திலேயே அங்கே எவரெவரோ வந்து சாப்பிட்டு தங்கியிருப்பார்கள். அது கிறிஸ்துமஸ் காலம் ஆனதனால் இன்னும் அதிகமான கூட்டம். ஒவ்வொருவராக வந்துகொண்டே இருந்தார்கள். கல்பற்றா நாராயணன் ‘இங்க ஏன் இந்த கூட்டம்?’ என்று கேட்டார். ‘சார், நம் வருகையில் எந்த சிறிய அசௌகரியத்தையும் எப்போதும் உணராத ஒருவர் எங்காவது இருக்கிறார் என்றால் அவரை காண நாம் போவோமில்லையா?’ என்றேன். ‘ஆமாம், அதற்குக் காரணம் கூட தேவை இல்லை’ என்றார். ‘ஆம், அதுதான்’ என்று சொன்னேன்.

[கல்பற்றா நாராயணன் ]

’எழுபதுகள் வரை அப்படிப்பட்ட வீடுகளாக இருந்தன கேரள இடதுசாரிகளின் குடும்பங்கள்’ என்றார் கல்பற்றா. நக்சலைட்டாக புகழ்பெற்ற அஜிதாவின் அப்பா நாராயணனின் இல்லம் அத்தகையது. எம்.என்.விஜயனின் இல்லம் அத்தகையது. அதிகாரம் மெல்ல உடைமைகளைப் பெருக்குகிறது. எச்சரிக்கைகளை அளிக்கிறது. அதுவேலிகளாகவே கடைசியில் மாறுகிறது என்றார்.

பவாவை ஒரு சிறு நண்பர் குழு ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பெயர்களைச் சொன்னபோது புரியவில்லை. அடைமொழிகள் அல்லது புனைபெயர்கள் சொன்னபோது சட்டென்று புரிந்தது. செந்தழல்ரவி. அவர்தான் இணையத்தில் ஆபாசத்தைப்பரப்பிய போலி டோண்டு என்னும் மூர்த்தியை போலீஸிடம் பிடித்துக்கொடுத்தவர். இன்னொருவர் வரவணையான். இணையத்தில் வாசித்த நினைவு. ஆச்சரியம்தான், அசல்பெயர் எவ்வளவு சீக்கிரம் இல்லாமலாகிறது. ஆனால் ஈட்டிய பெயரால் ‘பிதுரார்ஜித’ பெயரை அழிப்பதென்பது ஒருவாழ்க்கைச்சாதனையே.

குட்டிரேவதியும் அவர் தங்கையும் குழந்தைகளும் காஞ்சனை சீனிவாசனும் வந்தார்கள். பவாவை அழைத்துக்கொண்டு சென்று படப்பிடிப்பு செய்தார்கள். ‘கதாநாயகன் கிளாமர் இல்லையே. ஜோடி யாரு?’ என்று வம்சியிடம் கேட்டேன். ’ஹிரோயினுக்கும் கிளாமர் கம்மிதான். எங்கம்மா’ என்றான். சீனிவாசனிடம் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் சொந்தமாக குதிரை வைத்திருக்கும் ஒரே இலக்கியவாதியான பவாவை அந்த ஆவணப்படம் உரிய முறையில் பதிவுசெய்யவேண்டும் என்று கோரினேன். குதிரை இன்னும் குட்டிதான். குல்ஸாரி என்று பெயர். அடுத்து உடைவாள் கேடயம் என எதையாவது வாங்கிவிடுவாரோ என்ற சிறிய பயம் ஏற்படாமலில்லை.

எஸ்.கே.பி.கருணா

1990 களில் திருவ்ண்ணாமலை முற்போக்கு குழுவின் எதிர்பார்ப்புக்குரிய எழுத்தாளராக இருந்தவர்கள் ஷாஜகான் போப்பு இருவரும். நாங்கள் அனைவரும் எழுதிய ஸ்பானியச்சிறகும் வீரவாளும் என்ற நவீனக்கதைத்தொகுதிக்கு விமர்சனம் எழுதிய அசோகமித்திரன் ஷாஜகானின் கதையைத்தான் முதன்மையான ஆக்கம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். வெவ்வேறு வகையில் இருவரும் எழுத்திலிருந்து விலகிச்சென்றுவிட்டனர். போப்பு இப்போது மீண்டும் நிறைய எழுதவும் மொழியாக்கம் செய்யவும் ஆரம்பித்துவிட்டார். ஷாஜகானை நான் மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தபின் பவா வீட்டில் மீண்டும் சந்தித்தேன். என்னைப்போலவே அவருக்கும் தலை நரைத்திருந்தது. தலைமையாசிரியராக மாறிவிட்டிருந்தார். அந்த தோரணை இருந்தது

ஷாஜகான் என்னைப்பற்றிய ஆழமான கோபங்களுடனும் மனக்குறைகளுடனும் இருப்பது தெரிந்தது. நட்பார்ந்த சூழல் காரணமாக அதை அதிகம் வெளிக்காட்டாமல் குத்தல்களாக சொல்லிக்கொண்டிருந்தார். அவர் என்னைப்பற்றிச் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறான புரிதல்கள், தவறான தகவல்கள். அவற்றை நான் தெளிவுபடுத்தியபோதும் அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆனால் எனக்கு அவரைப்பார்த்தது அன்றைய நாளின் மிகச்சிறந்த மகிழ்ச்சியாக இருந்தது.

பகல் முழுக்க அமர்ந்து இத்ரமாத்ரம் நூலை மொழியாக்கம் செய்தோம். இத்ரமாத்ரம் என்பது பல்வேறு மலையாள தொனிகள் உடைய சொல். இவ்வளவுதான், ’இவ்ளோவு’ என்று இரு அர்த்தம் வரும். மரணத்துக்குப்பின் ஒரு பெண்ணின் வாழ்க்கை நினைவுகூரப்படும் கதை. மரணவீட்டில் கேரளத்தில் பலரும் சொல்லும் வார்த்தை அது [மனுஷ்யன்றே காரியம் இத்ரமாத்ரம்] வாழ்க்கை இவ்வளவுதான் என்றும் வாழ்க்கையில் இவ்வளவு இருக்கிறது என்றும் அது ஒலிக்கிறது. அதை மொழியாக்கம் செய்ய முடியாது. ஆகவே சுமித்ரா என்றே பெயரிடலாமென முடிவெடுத்தோம்.

மதியம் மீனுடன் சாப்பாடு. மதியத்துக்குமேலும் புத்தகத்தை செம்மை செய்தோம். இரவு இயக்குநர் மிஷ்கின் வந்தார். அவரும் அவரது இளம் மகளும் நண்பர்களுமாக ஒரே சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருந்தது. நான் பவா பற்றிய ஆவணப்படத்தில் பவா பற்றி கொஞ்சம் பேசினேன். இரவு மிஷ்கின் என்னையும் கல்பற்றாவையும் எங்கள் விடுதிக்குக் கொண்டுசென்று விட்டார். அதன்பின் அவர் திரும்பிவந்து பவாவின் நிலத்தில் வளரும் குல்சாரியைப்பார்க்கச்சென்றதாக அறிந்தேன்.

மறுநாள் காலையில் கல்பற்றா திருவண்ணாமலைக் கோயிலைப்பார்க்க விரும்பினார். ஆகவே அவருடன் கோயில் சென்றேன். திருவண்ணாமலை கோயில் ஒரு கோயில் அல்ல ஒரு குட்டி நகரம் என்று எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. 1982 அங்கே நான் அனாதைச்சாமியாராக சிலநாட்கள் இருந்தபோது கோயிலே ஓய்ந்து கல்காடாக கிடக்கும். இப்போது எப்போதும் கூட்டம் இதுவும் ஒருவகையில் நன்றாகவே இருக்கிறது என்று தோன்றியது. அங்கிருந்து ரமணாசிரமம் சென்றோம். ரமணர் அமர்ந்திருப்பதுபோன்ற கற்சிலையை எப்போது பார்த்தாலும் முதலில் ஒரு துணுக்குறலும் பின் ஓர் அருகமைதல் உணர்வும் ஏற்படுதல் எனக்கு வழக்கம்

காலையுணவு பவா வீட்டில். ஒரே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். அண்டை அயல் நண்பர்கள் தொழிற்சங்கவாதிகள். சந்தடியிலும் மேலே சென்று அமர்ந்து நாவலை முடித்துவிட்டோம். முழு ஆடு வெட்டி பெரிய அண்டாவில் பிரியாணி. கல்பற்றா அவரது வாழ்க்கையின் மிகச்சிறந்த பிரியாணி என்றார். இயக்குநர் லிங்குசாமி, எஸ்.கெ.பி.கருணா வந்திருந்தனர். நீதித்துறையைச் சேர்ந்த வாசகர் ஆனந்த்தைச் சந்தித்தது மிக மனநிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. உணர்ச்சிபூர்வமாக இலக்கியம் வாசிப்பவராக, இலக்கியத்துடன் வாழ்க்கையை பிணைத்துக்கொள்பவராக இருந்தார் அவர். நீண்ட இடைவெளிக்குப்பின் தோழர் சந்துருவை பார்த்தேன். நான் முதல்முறை திருவண்ணாமலை வந்தபோது அவரது வீட்டில் இரவு தங்கியிருந்திருக்கிறேன், அவர் அப்போது வீட்டில் இருக்கவில்லை. அதன்பின் பலமுறை சந்திப்புகள்.

மதியம் லிங்குசாமி காரில் விடுதிக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்தோம். மாலை ஆறுமணிக்கு வம்சி புத்தகநிலையம் சென்றோம். அறுபது வாசகர்களுக்குமேல் எழுபதுபேருக்குமேல் வந்திருந்தார்கள். இடைவெளிக்குப்பின் திருவண்ணாமலை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அடையாளமாகவே ஒருகாலத்தில் இருந்த சுவரோவியங்களை வரைந்த பல்லவனை சந்தித்தேன். இதய அறுவைசிகிழ்ச்சை செய்தபொன் தேறிய நிலையில் இருந்தார்

வம்சி விழாவில் நான் அடைந்த ஓர் உணர்வு முக்கியமானது. இன்றைய காந்தி, அறம் இரு நூல்களும் உருவாக்கிய பாதிப்பு என்பது மிகமிக வித்திய்சானமானது. பிற நூல்கள் ஆழமான பாதிப்பைச்செலுத்தியிருக்கின்றன. அழகியல் ரீதியாக சிந்தனை ரீதியாக இலக்கிய நோக்கில். ஆனால் இவ்விரு நூல்களும் நேரடியாக வாழ்க்கையுடன் உரையாடியிருக்கின்றன. இந்நூல்களைப்பற்றி பேசும் எவரும் நூலைப்பற்றி பேசவில்லை, வாழ்க்கையைப்பற்றியே பேசினார்கள். தங்கள் வாழ்க்கையை அந்நூல் எப்படி மாற்றியமைத்தது என்றே பேசினார்கள். வடிவம் மொழி எதுவுமே முக்கியமில்லை. சொல்லப்போனால் எனக்கும் அந்த வாசகர்களுக்கும் நடுவே அந்த படைப்புகள்கூட இல்லை. ஒரு நேரடியான தொடர்பு. அதன் உத்வேகமும் உணர்ச்சிகரமும் இதுவரை நானறியாதது

வம்சிவிழாவில் கல்பற்றாநாராயணன் கூடத்தை திறந்துவைத்தார். பவா வரவேற்புரை. அதன்பின் எஸ்.கெ.பி.கருணா துவக்கவுரை நிகழ்த்தினார். கல்பற்றாவும் நானும் பேசினோம். கல்பற்றா உரையாடலைப்பற்றியும் நான் காந்தி உருவாக்கிய கருத்துரையாடல் மனநிலை பற்றியும் பேசினோம்.

எங்களுக்கு பத்துமணிக்கு ஜோலார்பெட்டிலிருந்தும் விழுப்புரத்தில் இருந்தும் ரயில். ஆகவே எட்டுமணிக்கே கிளம்பவேண்டியிருந்தது. கூடியிருந்த நண்பர்களுடன் அதிகமாக உரையாட முடியவில்லை. ஆனால் காரில் விழுப்புரம் சென்றுகொண்டிருந்தபோது உத்வேகம் மிக்க ஒருவாரம் மெல்ல மெல்ல முடிவுக்கு வருவதை உணர்ந்தேன். அதை வெல்ல விழுப்புரம் வரை எல்லா நண்பர்களையும் கூப்பிட்டு பேசிக்கொண்டே இருந்தேன்.

முந்தைய கட்டுரைஒரு விழா பதிவு
அடுத்த கட்டுரைநிதிவசூல்-கடிதம்