பொருளின் அறமும் இன்பமும்

நம்முடைய உரையாடல்களில் நாம் பெரும்பாலும் அரசியல் பற்றியே பேசுகிறோம். அரசியல் பற்றிய எந்தப்பேச்சுமே உள்ளடக்கத்தில் பொருளியலையே கொண்டிருக்கிறது. ஆனால் நாம் பொருளியல் பிரச்சினைகளை அனேகமாகப் புரிந்துகொள்வதேயில்லை. ஏனென்றால் பொருளியல் என்ற அறிவுத்துறையின் அடிப்படைகள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. மூலதனம் என்றாலோ உபரி என்றாலோ சரியான பொருளில் புரிந்துகொள்ள முடியாத ஒருவர் தேசவரலாற்றையும் அரசியலையும் தெளிவாக உள்வாங்கிக்கொள்ள முடியாதவரே.

ஆடம் ஸ்மித்

ஆனால் தமிழ்வழியாக வாசிக்கும் ஒருவருக்குப் பொருளியல்துறையின் அடிப்படைகளை வாசித்துப்புரிந்துகொள்ள உதவக்கூடிய நூல்கள் மிகக்குறைவு. 1970களில் தி.மு.கழக ஆட்சியில் பட்டமுதுகலை வரை தமிழ்வழிக்கல்வி என்னும் நோக்குடன் பல்வேறு துறைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான எழுதப்பட்டன. பல நூல்கள் மொழியாக்கம்செய்யப்பட்டன. அப்போது தரமான பொருளியல் அறிமுகநூல்கள் சில வந்தன. அவை நாற்பதாண்டுக்காலமாக மறுபதிப்பு செய்யப்படவில்லை

இச்சூழலில் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான பொருளியல் அறிமுக நூல் காலச்சுவடு பதிப்பகமும்சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்நூல். பொருளியலறிஞரான எஸ்.நீலகண்டன் இந்நூலை சரளமான மொழியில் மிகச்சிறந்த வாசிப்புத்தன்மையுடன் எழுதியிருக்கிறார். கொஞ்சம்கூடப் பாடப்புத்தகத்தன்மையே இல்லை என்பதுதான் இந்நூலின் மிக முக்கியமான அம்சம்.

நீலகண்டனின் நூல் பொருளியல் என்ற அறிவுத்துறையைக் கச்சிதமாக அறிமுகம்செய்கிறது. பொருளியல் என்ற துறையை உருவாக்கிய ஆடம் ஸ்மித்தின் வாழ்க்கையையும் அவரது புகழ்பெற்ற நூலான நாடுகளின் செல்வம் நூலின் உள்ளடக்கத்தையும் சுருக்கமாக விவரித்துத் தொழில்புரட்சியையும் அதன் மூலம் பொருளியல்சிந்தனைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் விவரித்து கார்ல் மார்க்ஸ் வரைக்குமான பத்து முக்கியமான பொருளியலறிஞர்களின் பங்களிப்பை விவரிக்கிறது.

பொருளியல் என்ற துறை உருவாவதற்கு அடிப்படையில் ஒரு பெரிய சிந்தனை மாற்றம் தேவையாக இருந்தது என்பதை இந்நூல் காட்டுகிறது. அதற்கு சுயநல நோக்கத்துட்ன் உழைத்துப் பொருளீட்டுவது பிழையல்ல என்ற எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கவேண்டியிருந்தது.அன்றைய கிறித்தவச் சமூகப்பின்னணியில் அது செல்வ வழிபாடாக[மாம்மன் வழிபாடு] முத்திரை குத்தப்பட்டது. ஆன்மாவை அழிக்கும் ஒழுக்கக் கேடாக மதவாதிகளால் கண்டிக்கப்பட்டது

எஸ்.நீலகண்டன்

ஆகவே பெர்னாட் மாண்டிவில்லி போன்ற பல்வேறு சிந்தனையாளர்கள் மதத்தின் செல்வ மறுப்பு நோக்கைக் கடுமையாக மறுக்கிறார்கள். செல்வம் சேர்ப்பதற்கான தனிமனிதர்களின் முனைப்பே ஒரு நாட்டை வளர்க்கும் என்று வாதிடுகிறார்கள். ஆடம் ஸ்மித் கூட நன்னெறி உணர்வுகளின் தத்துவம் என்ற ஒழுக்கவியல் நூலைத்தான் முதலில் எழுதுகிறார். அதில் அவர் கருணை என்ற அறத்தை முன்வைக்கிறார். அதன் பின்னர்தான் செல்வநாட்டத்தை முன்வைக்கும் அடுத்த நூலை எழுதுகிறார்.அதுவே பொருளியலின் மூலநூல் எனப்படும் ‘நாடுகளின் செல்வம்’

ஆர்வமூட்டும் தகவல்களின் பெருந்தொகை இந்த நூல். தொழிற்புரட்சியை உருவாக்கியது பல்வேறு இயந்திரங்களின் கண்டுபிடிப்புதான். குறிப்பாக நெசவு யந்திரங்களின் படிப்படியான பரிணாமம். அப்போதே இயந்திரங்கள் மனித உழைப்பை அழிக்கின்றன என்னும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. தொழிற்புரட்சிக்கு வித்திட்ட பறக்கும்நாடா என்னும் கைத்தறியை கண்டுபிடித்த ஜன் கே அனைவராலும் வெறுக்கப்பட்டு அனாதையாக லண்டனில் இறந்ததை வாசிக்கையில் வரலாற்றின் அபத்தமான இயங்குமுறை ஒரு சிறந்த புனைவுக்கு நிகராக நம்மை வந்தடைந்தபடியே இருக்கிறது.

நம் சமூகத்தில் வயதானவர்கள் கண்கூடாகப் பொருளியல் என்பதன் இருப்பை உணரும் இடம் ஒன்றுண்டு. விலைவாசி-கூலி இரண்டிலும் வரும் மாற்றம் பற்றி நினைக்கையில். ‘அந்தக்காலத்திலே படியரிசி ஆறணா. ஆனா தினம் நாலணாதான் கூலி…’ என்று அவர்கள் வியந்து சொல்வதுண்டு. பணமதிப்பின் மாற்றம் என்பது பொருளியலின் ஆக்கபூர்வமான சலனம். இந்நூலில் நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் விவசாயக்கூலி மாறவேயில்லை என்பதையும் ஆகவே அங்கே வாழ்க்கை அசைவில்லாமல் தேங்கிக்கிடந்தது என்பதையும் வாசிக்கையில் அந்த உண்மை சட்டென்று நம்மை வந்தடைகிறது. மிக இயல்வான விளக்கங்கள் வழியாக பொருளியலின் சலனவிதிகளை நாமே உணரும் கணங்களே இந்நூலை முக்கியமானதாக்குக்கின்றன.

இன்றைய நம் வாழ்க்கையின் அடித்தளக் கட்டுமானங்கள் என்று சிலவற்றைச் சொல்லமுடியும். முதல் விஷயம் பங்குச்சந்தைமூலம் திரட்டப்படும் பொதுமுதலீடு கொண்ட வணிக நிறுவனங்கள். இரண்டு அரசாங்கத்தின் நிதித் திட்டமிடல்கள். மூன்று நவீன வரிவசூல் முறை. இம்மூன்றும் எப்படி ஐரோப்பாவில் படிப்படியாக உருவாகி வந்தன என்பதை காட்டுகிறது இந்த அரிய நூல். இந்நூல் ஒரு சாதாரண வாசகனுக்கு அவனுடைய அரசியல், சமூகப்புரிதல்களை சட்டென்று மாற்றியமைத்துவிடக்கூடியது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

இத்தகைய அறிமுக நூல்களை சுவாரசியமாக எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் அசட்டு மொழி விளையாட்டுக்களோ நகைச்சுவைத்துணுக்குகளோ ஏதும் இந்நூலில் இல்லை. எளிமையாகவும் கச்சிதமாகவும் சொல்வதே ஒரு நல்ல நூலை உருவாக்கிவிடும் என்று உணர்ந்திருக்கிறார் ஆசிரியர். ‘முன்பிருந்தவை விவசாயம் சார்ந்த பொருளாதாரங்களாகத் திகழ்ந்தன. அத்தகைய பொருளாதாரங்களால் விவசாயத்தால் நேரடியாகவும் மறைமுகமானவும் ஈடுபட்டிருந்தவர்களைத் தவிர்த்து மற தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களை மிகக்குறைவானவர்களையே பேண முடிந்தது’ என்று ஆசிரியர் சொல்வது பொருளியலின் மிக முக்கியமான கருதுகோளான உபரியைப்பற்றி.

கவனமாக உருவாக்கப்பட்டுள்ள கலைச்சொல் பட்டியல் இந்நூலின் முக்கியமான அம்சம். முக்கியமான பொருளியல்சொற்களுக்கு சரியான தமிழ்ச்சொற்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொருளியலைப்பற்றி எழுதக்கூடியவர்களும் மொழியாக்கங்கள் செய்யக்கூடியவர்களும் அவசியம் பயன்படுத்தவேண்டிய ஒன்று.

[ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை : செவ்வியல் அரசியல் பொருளாதாரம் : எஸ்.நீலகண்டன். காலச்சுவடு பிரசுரம்]

ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை

முந்தைய கட்டுரைநிதிவசூல் அமைப்புகள் கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்