உரை வளம்

ஏராளமான தமிழ் வாசகர்கள் உரை என்பது உரைத்தல், உரைநடை போன்ற சொல்லாட்சிகளில் இருந்து வந்தது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அது பிழை. உறை என்ற சொல்லே தொடக்க காலத்தில் புழங்கிவந்திருக்கிறது. பின்னர் அதற்கு பாடபேதம் உருவாயிற்று. பாடபேதமில்லா உரை உரையே அல்ல என்பதனால். பாலில் சிறிதளவு பழைய தயிர் விட்டு உறைகுத்தும் செயலில் இருந்தே இச்சொல் வந்திருக்க வேண்டும் என்பது நூலோர் ஆய்வுமுடிவு. நமது சொந்தச்சிந்தனையை பழைய சிந்தனையின் ஒரு துளியை விட்டு புளித்து நுரைக்க வைப்பதே உரைவகுத்தல் எனப்படும்.

இவ்வாறு பால்கள் வழியாக தயிரானது அழிவிலாது ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று மதுரையில் உண்ணப்படும் தயிருக்கு மதுரைக்கூலவணிகன் சீத்தலை சாத்தனார் காலத்திலேயே தொடக்கம் இருந்திருக்க முடியும், ஏன், கபாடபுரம் தென்மதுரை தாண்டி அதற்கும் அப்பால் இருந்த குமரிக்கண்டம் வரை வரலாறு பின் நீண்டு சென்றிருக்க முடியும் என்று எண்ணும்போது உரைகுத்துதலின் மாண்பு நம்மை விம்மிதமடையச் செய்கிறது. அந்த முதல் துளித்தயிர் தமிழன் புளிக்க வைத்ததாக அன்றி வேறு எங்ஙனம் இருக்க முடியும்?

உரைகுத்த மிகச்சிறிதளவே மூலநூல் போதுமானது என்பதை நாம் காணலாம். நம்மிடம் எவ்வளவு பால் உள்ளது என்பதை ஒட்டியே உரையின் அளவு அமைகிறதேயொழிய மூலத்தயிரின் அளவையோ சிறப்பையோ ஒட்டி அல்ல என்று உணர்க. ஆயினும் அத்துளி இல்லாது மரபின் தொடர்ச்சி அமைவதில்லை.

இன்னொருசாரார் உரைத்துப்பார்த்தல் என்ற செயலில் இருந்து இச்சொல் வந்திருக்கலாம் என்று எண்ணுகிறார்கள். பொற்கொல்லர்கள் கடினமான கல்லில் தங்க நகைகளை உரசி நோக்கி மாற்று அறிவதுபோல மூலநூலின் மாற்று அறிவதற்கும் கூடவே ஒருபகுதியை சுரண்டி எடுத்துக் கொள்வதற்கும் இம்முறையானது பயன்படுத்தப்படுகிறது. எஞ்சி நம் கையில் நிற்கும் மூலநூலானது நூலோர் சுரண்டிய பழனி நவபாஷாண முருகன் போன்றது,மரபான முன்பக்கத்தரிசனமே சிறப்பு.

இன்றும் தமிழில் உரையர்தான் அறிஞர். ‘நரையும் உரையும் நாவலர்க்கழகு’ என்பது பழமொழி. மேலும் பிறரது உரைகளை நமது உரை வழியாகவே எதிர்கொள்ள முடியும். ஆகவே உரைவகுத்தலுக்கான சில முறைமைகள் இங்கு சுட்டப்படுகின்றன.

முக்கியமானது உரைக்குப் பலியாகும் நூல். எந்தப் பலிக்கும் கழுத்தில் மாலை போடவேண்டியது அவசியம். நேர்ந்து நெடுநாள் விட்ட பின்னர் மேளதாளங்களுடன் அழைத்துவரப்படவும் வேண்டும். தெய்வத்தின் வடிவமாக எண்ணி வணங்குதலும் மரபே. அனைத்துக்கும் மேலாக பலியானது தன்னைப் பலிகொடுக்க தானே தலையாட்டி ஒப்புதல் அளிக்கவும் வேண்டும். மூலநூல்களில் ·பலசுருதி அல்லது நூற்பயன் மற்றும் பாயிரங்கள் இதன் பொருட்டே உள்ளன.

மூலநூல் செறிவான பாக்களால் ஆனதாக, சிறியதாக இருத்தல் நல்லது. பகவத்கீதை, பிரம்மசூத்திரம், திருக்குறள், தொல்காப்பியம் போல. அஃதன்றி வியாச மகாபாரதத்துக்கு விரிவுரை வழங்க முற்படுதல் அதிதுணிவு. அவரவர் விதிப்பயனை அவரே அள்ளல் வேண்டும்.. மூலநூலானது சூத்திர வடிவில் இன்னதென்றறியாத சொற்களில் அமைந்திருக்குமென்றால் மிக்க நல்லது. ‘மெல்தோறும் அவல்நயம், நவில்தோறும் நூல்நயம்’ என்று பழஞ்சொல். வெறும் வாய்க்கு அவல் என்றும் பாடபேதம். ஒரு அம்பில் ஏழ்மரம் கொண்டவனின் கதை போல ஒரே நூலில் ஏழு நூல் காணும் தகைமை வேண்டற்பாலது. எழுநூறு நூல் காண்பவனை நூலோனும் வணங்குவான்.

அதற்கு மூலநூலை ‘இந்நூல் அன்றி எந்நூல்’ என்றும் ‘அண்டங்களை அடக்கிய ஆனையன் வயிறிது’ என்றும் சொல்லி முன்னரே நிறுவி வைத்தல் தேவை. திவசம் கொடுக்கும்தோறும் முன்னோர் தெய்வமாகிறார்கள், உரை எழுதும்தோறும் மூலநூல் தெய்வச்சொல்லாகிறது. மூலநூல் தெய்வத்தால் நேரடியாக அருளப்பட்டது என்று சொல்வது மத்தியாசிய வழக்கம். அருளியவனை தெய்வமாக்குதல் நம் வழக்கம். தமிழ்க்கடவுளே நேரில் வந்து வேலை சுவரில் சாற்றி வைத்துவிட்டு இருகைதட்டி ஆமோதித்ததாக எல்லாம் புராணம் உண்டு. பாடலைக்கேட்டு ஆடவல்லான் துள்ளிஎழுந்து ஆடிமகிழ்ந்ததாகக் கூட ஓர் புராணம் இருந்து, சற்றே மிகை என்று பட்டதால் பின்னர் அது ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.

கடுகைத்தறித்து, அதில் ஏழ்கடலைப்புகட்டி, இரண்டிலொன்று எனத்துணிந்து குறுகத்தறிக்கவும் துணிவுளோரே உரையர் என்க. நூலை எஞ்ஞான்றும் புகழ்ந்து ஒரு முன்னுரை வனைவது அவர் தம் இயல்பு. நூலைப் புகழ்தலென்பது உண்மையில் நம் உரையை மறுக்க ஒண்ணாததாக ஆக்குவது என்றறிக. அதில் அந்நூல் அளித்த மெய்ஞானத்திறவுகோலைப்பற்றிய விவரணைகள் தேவை. பின்னர் நூலுக்குள் நுழைக.

நூலை அவ்வக்கணத்தில் அந்தந்தச் சொல்லில் நின்று வாசித்தல் உரையருக்கு உரிய வழி. ‘தோள்கண்டார் தோளே கண்டார்’ என்று இதை கம்பன் சொல்வதை அறிக. ‘கற்கக் கசடற’ என்று கண்டால் கற்க என்னும் சொல்லிலேயே ‘திருகும் குடுமி விடியளவும் தேய’ நின்றாடுதல் நன்று. கற் என்று க என்றும் பிரிக்கலாம். கல் என்றும் கலம் என்றும் கலி என்றும் எத்தனையோ பொருள் கொள்ளலாம். பொதுவாக தமிழன்னை தன் பிள்ளைகளை விளையாட விட்டு ஓரமாக நின்று நோக்கி மகிழ்பவளாதலால் எதற்கும் அனுமதியுண்டு. மூங்கிலை வளைத்து கூடைவனைதல் போல பின்னர் அச்சொற்களை வளைத்து நாம் சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்லலாம் என்பதே உரையெனப்படும்.

உரையிற் பலவகை உண்டென்றறிக. அவை இரும்புக்கிரும்பு, இரும்புக்குப் பஞ்சு, பஞ்சுக்கிரும்பு, இரும்புக்கு உப்பு, பஞ்சுக்குநெருப்பு என ஐந்து வகைப்படும். காண்போம்

அ. இரும்புக்கிரும்பு. இது ஏற்கனவே இரும்புக்கடலை என நுவல்வோர் பல்லை உடைக்கும் நூலுக்கு எடைக்கு எடை இரும்பு அளித்தல். உதாரணம் திருவெண்ணை நல்லூர் மெய்கண்டதேவர் அருளிச்செய்த சிவஞானபோதமும் வார்த்திகமென்ற பொழிப்புரையும். திருவாவடுதுறை சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த சிற்றுரையோடு யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் பரிசோதித்து மேற்படியூர் சாதாசிவப்பிள்ளையவர்களால் சென்னபட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்ட பதிப்பு.

நூற்பா.:

அந்தக் கரண மவற்றினொன் றன்றவை
சந்தித்த தான்மாச் சகசமலத் துணரா
தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே!

உரை

சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இலக்கணமிரண்டாலும் பொருளுண்மை பெறற்பாற்றென்னு முறைமைபற்றி மேற்பிரமாணத்தாற் பெறுவிக்கப்பட்ட பதிபாச பசுக்களுக்கிலக்கணம் எதிர்நிறனிறையாக வைத்து கூறுவான்றொடங்கி அவற்றுன் இது மேலடுக்க நின்ற ஆன்மாவிலக்கணங் கூறுதனுதலிற்று.

சொற்பல்காமைப்பொருட்டும் ஒத்து வேறாயவழியும் இயைபுடைமையுணர்ந்து கோடற்பொருட்டும் ஈண்டு இதுவுமதுவென மாட்டெறிந்துரைத்த ஆசிரியர் இங்ஙனமுரைத்தது….

ஆ. இரும்புக்குப் பஞ்சு. இது இரும்புக்கு நிகராக எடைக்கு எடை பஞ்சை வைத்தல். குண்டு எடைக்கு வண்டி அளவு நிகர் என்பதே இதன் சூத்திரமாகும். மணல்வண்டி அல்லது மிருச்ச கடிகம் என்றும் பாடம்.

உதாரணம் பிரம்மசூத்திரம். விளக்கம்.அ.வெ. சுகவனேஸ்வரன். கலைஞன் பதிப்பகம்

நூற்பா

ஆனந்தமய: அப்யாஸாத்!!

உரை

மறுபடியும் மறுபடியும் சொல்லப்படுவதனால் பிரம்மமானது ஆனந்தமயமானதாக உள்ளது. தைத்த்ரீய உபநிஷத் மந்திரங்கள் 1-5 அடிப்படையில் இந்த சூத்திரம் அமைந்துள்ளது. ஆத்மா முதலில் உணவுமயமானதாகவும் பிறகு மூச்சுக்காற்றாகவும் அதற்குப் பிறகு மனோமயமாகவும் நான்காவதாக அறிவுமயமானதாகவும் இருப்பதாக உபநிஷத் கூறுகிறது. மேலும் அது பேசுகிறது. இந்த விஞ்ஞானமயத்திலும் வேறானது இதனுள் இருக்கும் ஆத்மா [தஸ்மாவ ஏதஸ்மாத் விக்ஞானமயாத் அன்யோஸ்ந்தர ஆத்மா ஆனந்தமய தை உ 11 5] உணவுமயமான உடலில் இருந்து படிப்படியாக மேலே போய் முடிவில் எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆத்மாவைக் காண்கிறோம். இது எல்லா உறைகளுக்குள்ளும் [கோசங்களுக்குள்ளும்] புதைந்து கிடக்கிறது. ராமானுஜர் இந்த ஆத்மா…

இ. பஞ்சுக்கு இரும்பு. இது பஞ்சுப்பொதிக்கு மேல் அதே அளவு இரும்பை ஏற்றிவைத்தல். பஞ்சு பறக்காமலாவதுடன், சமயங்களில் சப்பி பாடமாகி பின் பலகையாகவும் ஆக வாய்ப்புள்ளது. இதை ‘பழி ஓரிடம் பாவம் ஓரிடம்’ என்றும் சொல்வதுண்டு.

உதாரணம் வள்ளலாரின் அருட்பெரும்சோதி அகவல் உரை சரவணானந்தா. தயவுநூல் வெளியீட்டு அறக்கட்டளை. திண்டுக்கல்.

நூற்பா

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி!

[உ-வி]

ஒன்றான மக்கட் சமுதாயம் ஆன்மநேய ஒருமைப்பாட்டால் ஒத்துவாழவேண்டியதுதான் திருவருளாணையாம். சுத்த ஆன்ம உண்மை மனிதனின் பொறிபுலணர்வுக்கும் மனோகரண அறிவுக்கும் உயிர்விளக்கத்தன்மைக்கும் வெளியாகாதிருப்பதனால் உண்மைகொண்டு வாழமுனையாது புறத்தோற்றம் குணம் செயல் முதலியன கொண்டும் இயல்பாயிலாது கற்பித்துக் கொள்ளப்பட்ட சாதிமதசமயம் கொண்டும் மக்கள் பிணக்குறுகின்றனர். சாதியும் மதமும் சமயமும் மக்களினத்தை வேற்றுமைப்படுத்தியும் பிரித்துவைத்தும் முக்கியமாக வாழ்வில் சமநோக்கோடு பழக முடியாது செய்துவிடுவதனால் இவையெலாம் வெறுக்கப்படுகின்றன மெய்யறிவுளோர்களால்….

ஈ. இரும்புக்கு உப்பு. இதை ‘நஞ்சு எதுக்கு நாலுநாழி?’ என்ற பழமொழியினூடாகவும் சொல்வர். ‘மரத்தை மறைத்தது மாமதயானை’ என்றும் பாடம். மூலநூலை படிப்படியாக உண்டு செரித்து தன்னுள்தானாகி நிற்றலை இது குறிக்கிறது. வாதாபியை உண்ட அகத்தியன் இவ்வுரையனுக்கு உவமை. வயிறுகிழித்து வெளிவர வாதாபி முயன்றாலும் இஞ்சிக்கஷாயம் குடித்து, ‘வாதாபி செரித்தழிக!’ என்று சொல்லி ‘தன்னுள் தானடங்கி’ தான் அமர்ந்திருத்தல் இவ்வுரையர் இயல்பு. ஆயினும் உரையில் மூலநூல் நுண்வடிவமாக கலந்திருக்கும்.

உதாரணம் மாமுனிவர் கபிலரின் ஸாங்கிய தத்துவம். தமிழ் உரை கடலங்குடி பிரம்மஸ்ரீ நடேச சாஸ்திரிகள். கடலங்குடி பப்ளிகேஷன்ஸ். கல்யானையை கரும்புவாங்க வைத்தல் போல எல்லா தத்துவத்தையும் பாடிப்பாடியே வைதீகக் கரும்பை வாங்க வைத்துவிடலாம் என்பதற்கான உதாரணமிது என்பர்.

உ. பஞ்சுக்கு நெருப்பு. இதை ‘பத்த வச்சுட்டியே பரட்டே!’ என்ற பழமொழியால் குறிப்பிடுவர். உரைக்குப் பின் பஞ்சும்நெருப்பும் மறைந்து சுத்த துலாம்பாம்பரமான வெட்டவெளியெனும் சாம்பலே எஞ்சி நிற்பதனால் இப்பெயர். இதற்கு பென்னம்பெரிய உதாரணமாகி நிற்பது ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா அவர்களின் ஸ்ரீமத் பகவத் கீதா – தத்வவிவேசனீ -தமிழ் விரிவிரை. [கீதா பிரஸ் கோரக்பூர்] எந்த ‘மீசையில் மணிகட்டிய’ கிண்ணன் தத்துவத்தையும் கொஞ்சம் முயன்றால் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு அப்படியே ஓடிப்போய் ஒருகுடம் தண்ணீரும் சேந்திக் கொண்டுவரச் செய்துவிடமுடியும் என்பதற்கான உதாரணமிது என்று எண்ணி அறிஞர் இறும்பூது எய்துவதுண்டு.

உரைகளில் பலவகையான தமிழ்கள் பயின்று வருவதை பயில்வோர் அறியலாம். தமிழன்னை மாறுவேடமிடுவதில் திறன் கொண்டவளென்பது வரலாறு. ”உயிர்நிலத்து வினைவித்திட்டார்க்கு விளைவும் அஃதேயாகலின் நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாமென்றார். .இது சொற்பொருட் பின்வருநிலை. இவையிரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வருந்தீங்கு கூறப்பட்டது” என்று பரிமேலழகர் உரைசாற்றுகையில்

”நாம் நமது சூக்கும புத்தியை கெடுத்து தமோ குணத்தையளித்து தீரா நரகத்தையும் அடைவிக்கவல்ல புலாலை அபேக்ஷயாது எவ்வுயிர்களையும் நம்முயிர் போலெண்ணி எக்காலமும் நற்காரியங்களிலீடுபட்டு அனைவருக்கும் பரோபகாரமுள்ளவர்களாய் சரியை கிரியை யோகங்களையியற்றி ஞானமடைந்து முக்தியடைய எல்லாம் வல்ல கருணாகரக் கடவுளாகிய நம் இறைவனைப் பிரார்த்திப்போமாக” என்று ஜமீந்தாரிணி கி.சு.வி.லட்சுமி அம்மணி உரை நடைகொள்கிறது.

வைணவ உரை என்பது தமிழ்த் தளிகையில் சம்ஸ்கிருதம் கைதவறி விழுந்ததன் ருசி. புளியோதரையில் அக்கார அடிசில் என்றும் பாடம். ‘வெண்கலக் கடையில் யானை’ என்றும் சொல்பவரும் உளர்.

இருபதாம் நூற்றாண்டில் உரைகள் பல உருவாகியுள்ளன. பதிப்பகமென்றால் ஆளுக்கொரு திருக்குறள் போட்டாகவேண்டும் என்ற எண்ணம் பெருகவே நூல்கள் நனிசிறந்தன. பாடபேதத்தையே புதிய உரையெனக் கொள்ளலாம் என்பது இவ்வுரைகள் வழியாக தமிழகம் அறிந்த செய்தி. ‘மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ என்ற பாடலை தன் மக்களைத் தழுவி மற்றவர் குரலை [ஸ்டீரியோ சிடி பிளேயரில்] கேட்டல் இன்பமானது என்பது போன்ற நவீன உரைகள் இவ்வாறு உருவானவையே.

எனினும் ‘உண்மை என்பது சுருங்கச் சொல்லல்’ என்ற கோட்பாட்டினடிப்படையில் உரையாசிரியர் சுஜாதா என்னும் ரங்கராஜாச்சாரியார் அளித்த குறள் உரையே ஈடிணையற்றதாகும். குறுகத்தறித்த குறளை மறுகத்தறித்த உரை இது என்பர் சான்றோர். இதையொட்டி உருவான பற்பல உரைகள் இன்று காணப்படுகின்றன. ‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்’ என்ற குறளுக்கு ‘பசங்க பேச்சு கேக்கறதுக்கு ஜாலி’ என உரையமைக்கும் இன்றைய போக்கு இங்ஙனம் உருவானதே.

ஆயினும் நந்தமிழில் எதையும் புதிதாகச் செய்யலாகாது, முன்னோடி ஒருவர் இருந்தேயாவார். ‘முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொலினிதே அறம்’ [முகத்துக்கு நேர் அமர்ந்து இனிது நோக்கி அகம் நிறைந்து சொல்லும் சொற்கள் சிறந்த அறமாகும்] என்று வள்ளுவர் பரவசமாகச் சொன்னதை ‘நல்ல வசனத்தினாலே புண்ணியமுண்டு’ என்று விரிவாக விளக்கி உரை எழுதிய கவிராஜ பண்டிதர் மேற்படி சுஜாதா என்னும் பிரதிவாதி பயங்கரன் ரங்கராஜாச்சாரியாரின் முன்னோடியாவார்.

முந்தைய கட்டுரைவிதிசமைப்பவர்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 17