நித்யா கவிதை அரங்கு

கடந்த ஒன்பது வருடங்களாக நான் தமிழ் மலையாளக் கவிஞர்களின் கவிதைப் பரிமாற்ற அரங்கை நடத்தி வருகிறேன். அதன் பதிவுகள் திண்ணை இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. இந்த இணையதளத்திலும் அவை உள்ளன. இதுவரை பதிமூன்று அரங்குகள் நடந்துள்ளன. என்னுடைய ஓய்வு காரணமாக இருவருடங்கள் இடைவெளி விழுந்தது

சென்ற கவிதையரங்குகள் நண்பர்களுக்கு இடையேயான நட்புப் பரிமாற்றமாகவும், அழகிய சூழலில் உற்சாகமான சில தினங்கள் விடுமுறையாகவும் அமைந்தன. யுவன் சந்திரசேகர், கல்பற்றா நாராயணன் , வீரான் குட்டி போன்ற கவிஞர்கள் தொடர்ந்து அவ்வரங்கை நடத்த வேண்டும் என என்னிடம் கோரியபடியே இருந்தார்கள். அவ்வப்போது எழும் சோர்வை நீக்கு புத்துணர்வூட்டும் நிகழ்ச்சியாக அவை இருந்தன. ஆகவே அரங்கை புதிய படைப்பாளிகளை பங்கேற்கச்செய்து மீண்டும் நடத்தலாம் என நண்பர்கள் ஆர்வம் கொண்டார்கள்.

ஆகவே வரும் மேமாதம் 1,2,3 தியதிகளில் ஊட்டி நித்ய சைதன்ய யதி குருகுலத்தில் வைத்து தமிழ்-மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்கை மீண்டும் நடத்தலாமென எண்ணியிருக்கிறேன். குருகுலத்தின் இடவசதி மற்றும் வசதிகளைக் கருத்தில்கொண்டு அதிகபட்சம் இருபத்தைந்து பேரை மட்டுமே பங்கேற்கச் செய்ய முடியும். உணவு, தங்குமிடம் என் செலவில் அங்கேயே ஏற்பாடு செய்யப்படும். பங்கேற்பாளர் சொந்த செலவில் வந்துபோக வேண்டும்.

பங்கேற்கும் கவிஞர்களின் ஐந்து கவிதைகள் வீதம் மொழியாக்கம் செய்து மாற்று மொழி பங்கேற்பாளர்களுக்கு முன்னரே அனுப்புவோம். அவை அரங்கில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படும். விவாதங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு சொல்லப்படும். இதன் காரணமாக பங்கேற்பு உறுதி செய்யப்படுவதும் , உறுதி செய்தவர்கள் தவறாமல் கலந்துகொள்வதும் தேவையாகிறது. கவிஞர்கள் அல்லாதவர்கள் வெறும் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம்.

சென்ற காலங்களில் இக்கூட்டம் உற்சாகமாக நடைபெற்றதற்கும் , இன்றுவரை இனிய நினைவாக எஞ்சியதற்கும் காரணமாக அமைந்தவை சில விதிகள். அவை கண்டிப்பாக இம்முறையும் உண்டு.

1. பங்கேற்பாளர்கள் எல்லா அரங்குகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். அரங்குகளை தவிர்ப்பது கூடாது. முன்னரே செல்வதும் பிந்தி வருவதும் கூடாது

2. தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது.

3. கவிதை பற்றிய அரங்கு ஆகையால் உரையாடல் கவிதை குறித்து மட்டுமே அமைய வேண்டும். மட்டுறுத்துதல் உண்டு. அவற்றுக்குக் கட்டுப்பட வேண்டும்.

4. அழைப்பாளர்கள் அல்லாமல் பிறர் பங்கேற்க கூடாது. எவரையும் கூட்டிவரலாகாது. அழைப்பாளர்கள் பொதுவாக பிற பங்கேற்பாளர்களிடம் கலந்தாலோசித்து பொது ஒப்புதலின் அடிப்படையிலேயே அழைக்கப் படுவார்கள்

5. அரங்கிலும் அரங்குக்கு வெளியிலும் கண்டிப்பாக மது அருந்துதல் அனுமதிக்கப்பட மாட்டாது. இது முழுக்க முழுக்க ஒரு கவிதைச்சுற்றுலாபோல. எந்நிலையிலும் தனிப்பட்ட நட்புகள் சிதையலாகாது, மன வருத்தம் ஏற்படும் உரையாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்விதி.

ஆர்வம் உள்ள கவிஞர்கள் எனக்கு எழுதலாம். விபரம் தெரிவிக்கப்படும்.

அன்புடன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைவடகேரள வன்முறை-ஒரு கடிதம்