அம்பேத்கரின் தம்மம் 2

[தொடர்ச்சி]

அம்பேத்காரின் புத்தரும் அவரது தம்மமும் என்ற பெருநூலில் மூன்றாம் பகுதி மூன்றாம் அத்தியாயத்தின் தலைப்பு ‘தம்மம் என்பது என்ன?’ தர்மம் என்பதைப்பற்றி பல்வேறு கோணங்களில் வாசிக்கிறோம். ஆனால் இந்த ஒரு சிறிய அத்தியாயத்தில் உள்ள வரையறை அளவுக்குச் செறிவான வரையறையை எங்கும் காணமுடியாது.

அம்பேத்கர் அதற்கு ஆறு வரையறைகளை அளிக்கிறார். இந்த அத்தியாயம் பௌத்த மூலநூல்களை அடியொற்றியதாயினும் இது அமைந்திருக்கும் முறை பேரழகு கொண்டது. அந்த வைப்புமுறையிலேயே அம்பேத்கரின் தரிசனம் வெளிப்படுகிறது.

1 வாழ்க்கையில் தூய்மையை மேற்கொள்வது அறம்

2 வாழ்க்கையின் முழுமையை அடைவதே அறம்

3 நிர்வாணத்தில் அமைவதே அறம்

4 தேடலை இழப்பதே அறம்

5 அமைந்துள்ள இவையெல்லாம் நிலையற்றவை என்றுணர்வதே அறம்

6 கர்மம் என்பது நெறிக்கான கருவியே என உணர்வதே அறம்

இவை ஒவ்வ்ன்றையும் தனித்தனி தலைப்புகளாக ஆக்கி ஒவ்வொன்றின்கீழும் விரிவான தனி வரையறைகளை அளித்திருக்கிறார் அம்பேத்கர். இந்த ஆறு படிநிலைகளும் ஒரு எளிய மானுடன் வாழ்ந்து முழுமையை அடைவதற்கான ஆறு ஞானநிலைகள் என்று சொல்லலாம்.

ஒரு மனிதன் அவன் வாழும் சாதாரண நிலையில் அறம் சார்ந்த முதல் மெய்ஞானத்தை அடைகிறான். அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தானென்றால் அடுத்த அறைகூவலைச் சந்திக்கிறான். அடுத்த படி அது. அதிலேறினால் அடுத்த படி. அதன் கடைசிப்படியில் அவன் முழுமையடைகிறான். அந்தப்படி பிரபஞ்சஞானம் சார்ந்தது. மண்ணில் இருந்து விண்ணுக்கு ஆறுபடிகள். லௌகீக வாழ்விலிருந்து நிறைநிலைக்கான ஆறு படிகள்.

வாழ்க்கையில் தூய்மையை கைக்கொள்வது என்பதை அம்பேத்கர் முதலில் சொல்கிறார். அவரது நூலில் ஓர் அற்புதமான தலைகீழாக்கம் உள்ளது. தொன்றுதொட்டே இங்கு தூய்மையை ‘மனம்- வாக்கு- காயம்’ ஆகியவற்றில் உள்ள தூய்மை என்று சொல்லியிருக்கிறார்கள். மனதிலும் சொல்லிலும் உடலிலும் தூயவனாக இருத்தல். ஆனால் அம்பேத்கர் தலைகீழாக்கி, உடலில் சொல்லி மனதில் என்ற வரிசையில் அதைச் சொல்கிறார்

வேதாந்த மரபுக்கும் பௌத்ததுக்கும் இடையே உள்ள வேறுபாடே இங்குள்ளது. வேதாந்தத்தின்படி ஒருவன் மனதை தூயவனாக வைத்துக்கொள்வதே முதலில் தேவையானது. மனம் தூய்மையானால் சொல் தூய்மையாகிறது. சொல் தூய்மை என்றால் அவன் உடல் தூய்மை அடைகிறது. ஏனென்றால் வேதாந்த நோக்கில் மனதின் பருவடிவமே உடல். மனம் என்பது ஆன்மாவின் ஒரு தோற்றம். ஆகவே அதுவே உண்மையானது, உடல் அதன் மாயப்பிம்பம் மட்டுமே.

பௌத்தத்தில் அது நேர்தலைகீழ். உடலே தொடக்கப்புள்ளி. தொடங்கவேண்டிய இடம் அதுதான். ‘இதம்’ – இது- என்ற சொல்லில் இருந்துதான் சிந்தனை ஆரம்பிக்கிறது. அப்படி முதன்முதலாக ஆரம்பிக்கவேண்டிய இது என்ற புள்ளி வேதாந்தத்தில் மனம் தான். பௌத்ததில் அது என் உடல்

வேதாந்தத்தின்படி நான் என நாம் அறியும் முதல் சுயம் என்பது நம் அகம்தான். மாறாக பௌத்ததில் நம் உடல்தான் நாம் அறியும் முதல் சுயயதார்த்தம். பௌத்ததின்படி நம் உடல் பொய் அல்ல. மாயை அல்ல. வெறும் தோற்றம் அல்ல. இதுவே உண்மையின் முதல் படி. இதைத் தொட்டு, இது என்ன என்று கேட்டபடித்தான் நாம் ஆரம்பிக்கவேண்டும். ஆகவேதான் உடல்தூய்மையை முதலில் வைக்கிறார் அம்பேத்கர்.

உடல்தூய்மையில் இருந்து சொல்தூய்மை. அதிலிருந்து உளத்தூய்மை. குறள் ஒன்றில் இந்த இணைப்பு சொல்லப்பட்டுள்ளது. ‘உடல் தூய்மை நீராலமையும் அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்’ இதில் மூன்றுமே வந்துவிடுகிறது. உடலை நீரால் தூய்மைசெய்வதுபோல உள்ளத்தை வாய்மையால் தூய்மை செய்துவிடலாம் என்கிறார் வள்ளுவர்

இந்த பகுதியில் அம்பேத்கரின் மொழியில் வரும் அழகிய ஓர் கவிதையைச் சுட்ட விரும்புகிறேன். பௌத்த ஒழுக்க நெறிகளின்படி பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, பாலியல்நெறிபிறழாமை, தீநெறிசெல்லாமை என்னும் ஐந்து மாசுகளை கழுவிக்கொள்ளுதலே அகத்தூய்மை.

அவற்றை அடைந்தவன் நான்கு நல்லியல்புகளை அடைகிறான்.

அவன் உடலை உடலாக உணர்கிறான்.
உணர்வுகளை உணர்வுகளாக உணர்கிறான்.
மனதை மனதாக உணர்கிறான்.
கருத்துக்களை கருத்துக்களாக உணர்கிறான்.

ஒரு மந்திரம்போல இச்சொற்களைச் சொன்னபடி நான் அலைந்த நாட்கள் உண்டு. மிக எளிய வரிகள். ஆனால் எண்ணும்தோறும் விரிபவை. அம்பேத்கர் சொல்லும் வரிசையில் பார்த்தால் உடலை உடலாக உணர்வதிலிருந்தே எல்லாம் ஆரம்பிக்கிறது.

நாம் சாதாரணமாக ஒருபோதும் நம் உடலை உடலாக உணர்வதில்லை. நம் உடலை நாம் எப்போதுமே நாமாக உணர்கிறோம். நான் என்னும்போது எப்போதும் நம் உடல் நம் அகக்கண் முன் வருகிறது. அதிலும் இளமையில் நம் உடலே நாம் என்றிருக்கிறோம். நம் உடல் சார்ந்த தன்னுணர்விலிருந்து வெளிவருவதென்பதே அறிதலின் பாதையில் முதல் சவால்

பௌத்தத்தை பொறுத்தவரை இந்த உடல் நானல்ல என்று உணரும் வேதாந்தம் அதற்கு ஏற்புடையதல்ல. இந்த உடல் மட்டுமே நான் என்று உணரும் உலகாயதமும் ஏற்புடையதல்ல. உடலை உடல் மட்டுமாக உணர்தலே பௌத்தம் ஆணையிடும் முதல் அறிதல்.

ழாக் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியலாளர் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர். நவஃப்ராய்டியர் என அவரைச் சொல்கிறார்கள். ஃபிராய்டியச் சிந்தனைகளை குறியீட்டு அளவில் மறுவிளக்கம் கொடுத்தவர் அவர். அவரது புகழ்பெற்ற கோட்பாடு ஒன்றுண்டு. சிறுகுழந்தை தன் பதினெட்டுமாதம்வரை தான் என்னும் உணர்வே இல்லாமலிருக்கிறது. பதினெட்டாவது மாதத்தில்தான் அதற்கு தான் என்னும் உணர்வு உருவாகிறது.

பதினெட்டு மாதம் கழிந்து கண்ணாடியில் தன்னைப்பார்க்கும் குழந்தை அது தான் என அறியும் நிகழ்வே சுயம் உருவாகும் கணம் என்கிறார் லகான். இதை கண்ணாடிப்பருவம் என்கிறார். ஆம், அது சரி என்றே தோன்றுகிறது. கைக்குழந்தையிடம் பாப்பா எங்கே என்று கேட்டால் தன் வயிற்றைத்தொட்டு ‘இங்கே’ என்கிறது. பசியும் அதன் நிறைவும்தான் தான் என நினைக்கிறது அது. தன் உடல் வழியாகவே தன்னை அது அறிகிறது.

உடலை தான் என்று அறியும் புள்ளி அது. நம் உலகியல் சுயத்தின் தொடக்கம். நம் சமூக ஆளுமையின் பிறப்புக்கணம். ஆனால் அதற்கடுத்த ஒரு கணம் உண்டு. உடலை உடலாக மட்டுமே அறியும் கணம். உடல் உடலன்றி வேறல்ல என்று அறியும் கணம். அது நம் ஆன்மீக சுயத்தின் தொடக்கம். நம் அந்தரங்க ஆளுமையின் பிறப்புக்கணம்.

நான்கடவுள் படத்தில் மாங்காண்டிச்சாமியாக நடித்த கிருஷ்ணமூர்த்தி பாகவதர் உங்கள் நினைவுக்கு வரக்கூடும். பிறவியிலேயே கையும் இல்லை, காலும் இல்லை. இந்தக்குழந்தை சாகட்டும் என அம்மா நினைத்தாள். தாதி காட்டிய குழந்தையை ஒரு கணம் பார்த்தவள் பிறகு திரும்பியே பார்க்காமல் தட்டி எறிந்தாள்.ஓர் அத்தை அதை எனக்குக் கொடுத்துவிடு என்று சொல்லி வாங்கி வளர்த்தாள்.

அத்தை அந்தக்குழந்தையை ஒரு செப்புபோல வைத்திருந்தாள். திரியில் பால்நனைத்து அதற்கு ஊட்டினாள். அவளுக்கு இசைஞானம் இருந்தது. ஆகவே குழந்தைக்கும் முறைப்படி சங்கீதம் சொல்லிக்கொடுத்தாள். கைகால்கள் இல்லாத வெற்று உடல் மட்டுமான கிருஷ்ண மூர்த்திக்கு இசைகற்பிக்க பலர் தயாராகவில்லை ‘இதுக்கெல்லாம் சங்கீதம் வராது ‘ என்றார்கள். ஆனால் தேடல்கொண்டிருந்தால் குரு எப்படியும் கிடைப்பார். கிருஷ்ணமூர்த்தி இசைகற்றுத்தேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆல் இந்தியா ரேடியோவின் முதல்நிலைப்பாடகரானார்.

அபாரமான கணீர்க்குரல் அவருக்கு.அவர் பாடிக்கேட்கையில் மெல்லமெல்ல அவர் விஸ்வரூபம் எடுப்பதைக் காணமுடியும். நான் பாலாவிடம் சொன்னேன் ’சரிதான், வளையாத மூங்கிலில் ராகம் வளைந்து ஓடுதேன்னு பாட்டு இருக்கு. உடைஞ்ச மூங்கிலிலே வர்ர ராகம் உடைஞ்சிருக்குமா என்ன?’

பாகவதர் பாலாவிடம் சொன்னார் ‘ ரொம்பநாளைக்கு என்னை ஒரு முழு மனுஷனா என்னால நினைச்சுக்கிட முடியல்லை. நாலுபேரை பார்த்துப்பேசமுடியலை. அப்பதான் ஒருநாள் ஒரு வர்ணத்தை முழுசா ஆலாபனைபண்ணி முடிச்சேன். அப்ப தெரிஞ்சுது, நான் முழுசானவன்னுட்டு. இப்ப ஒரு கொறையும் இல்ல இப்ப..’ தன் உடலை கண்ணால் காட்டி ‘. இது இல்ல நான்….இது என்ன, வெந்துபோற கட்டை’ என்றார்

ஆம், உடலை உடலாக உணரும் கணம். ஞானத்தின் முதல் பொன்வாசல் திறக்கும் கணம். அம்பேத்கர் சொல்லும் கணம் அதுவே.

உடலை உடலாக மட்டும் உணரும்போது உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே உணர முடியும். நாம் உணர்வுகளை எண்ணங்களாக உணர்கிறோம். உணர்வுகளை தரிசனங்களாக கருதிக்கொள்கிறோம். எழுத்தாளனாகிய எனக்கு இது இன்றுவரை மிகப்பெரிய சவால். பலசமயம் ஒரு சிந்தனையை அல்லது கருத்தை முன்வைத்துப்பேசியபின்னர் நானே உணர்வேன். இது என் எண்ணமல்ல, என் கருத்தும் அல்ல. இது என் உணர்வு மட்டுமே என்று. நண்பர்களே, நாம் பேசிக்கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவை நம் உணர்வுகள் மட்டுமே.

வாழ்க்கையை பின்நோக்கிப்பார்த்தோமென்றால் நமது பெரும்பாலான கருத்துக்களை நாம் வெறும் உணர்ச்சிகரமான எதிர்வினைகளாகவே அடைந்திருக்கிறோம் என்பது தெரியும். அவை கருத்துக்களாக மாறுவேடமிட்ட உணர்ச்சிகள் என்பதை உணர்வோம். அப்படியே நம் வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களை தாண்டி வந்திருப்போம்

அன்பு என்பதும், பாசம் என்பதும், பற்று என்பதும்கூட உணர்ச்சிகளே. அவ்வுணர்ச்சிகள் எவ்வளவு மேலானவை என்றாலும் அவை உணர்ச்சிகளே என்பதை உணராதவரை அவை நமக்குச் சுமைகள்தான். ஏனென்றால் எல்லா உணர்ச்சிகளும் அவ்வுணர்ச்சியின் காரணிகளோடு, அவ்வுணர்ச்சியை உருவாக்கிய சூழலுடன் தொடர்பு கொண்டவை. எல்லா உணர்ச்சிகளும் விளைவுகள் தான். உணர்ச்சிகளுக்கு தானாக நிலைகொள்ளும் தன்மை இருப்பதில்லை. உணர்ச்சிகளுக்கு தன்னளவில் முழுமை இல்லை.

ஆகவே உணர்ச்சிகரமான எந்தக் கருத்தும் தற்காலிகமானதும் சமநிலையற்றதும்தான். உணர்ச்சிகரமான எந்தக்கருத்தும் முழுமையற்றதுதான்.பௌத்தம் அதன் எந்நிலையிலும் அறிவார்ந்தசமநிலையையே இலக்காக்குகிறது. ஆகவேதான் செவ்வியல் பௌத்தத்தில் பக்திக்கு இடமே இல்லை. நெகிழ்ச்சிக்கும் கொந்தளிப்புக்கும் இடமில்லை. தன்னைமறந்த களியாட்டங்களுக்கு இடமில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை அவரது மதமாகத் தேர்வுசெய்தமைக்குக் காரணமே இந்த அறிவார்ந்த தன்மைதான்.

மனதை மனமாக உணர்தலென்பது இன்னும் நுட்பமானது. மனம் என்பது ஓர் எதிர்வினை. ஒரு பிரதிபலிப்பு. அது என் இருப்பு அல்ல. அது அலைதான். நாம் கடலைக்காணவே முடியாது, அலைகளையே நாம் காணமுடியும். ஆனால் அலை என்பதல்ல கடல். பௌத்த தியானமுறையில் மனதை அலையழித்து அதை உண்மையாக அறிதலுக்கான விரிவான வழிமுறைகள் பேசப்பட்டுள்ளன.

நீங்கள் அனைவரும் மனம் என்றால் என்ன என்று அறிவீர்கள். ஆனால் அதன் பேருருவத்தை நாம் சாதாரணமாக அறியமுடியாது. அதற்கு ஒரு தருணம் தேவை. கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தன் உடலை அறிந்த தருணம்போன்றதே அதுவும். ஒரு பெரிய அவமானம், ஒரு பெரிய இழப்பு, ஒருபெரிய தவிப்பு உங்களை வந்தடையும்போது தெரியும் மனம் என்றால் என்ன என்று. உங்களுக்குள் கோடிக்கணக்கான பிசாசுக்கள் குடியிருப்பது தெரியும். .

என்னுடைய இருபத்திநான்கு வயதில் என் அம்மா தற்கொலைசெய்துகொண்டாள். நான் வருவதற்குள் அம்மாவை எரித்துவிட்டர்கள். அங்கிருந்தே நான் கிளம்பிச்சென்றேன். திருவனந்தபுரம் சென்று ஒரு விடுதியில் தங்கினேன். மனம் என்றால் என்ன என்று நான் அறிந்தது அன்றுதான். எண்ணங்கள் எண்ணங்கள். திரும்பத்திரும்ப ஒரே விஷயம் வெவ்வேறு சொற்களில். கட்டிடங்கள் பேருந்துகள் ஆட்கள் ஒலிகள் வானம் பூமி எல்லாமே அம்மாவின் மரணமாக இருந்தன.

தூக்கமில்லாமல் தவித்தேன். சொற்கள் அர்த்தமிழந்து பறந்த மனம். கொதிக்கும் இஸ்திரிப்பெட்டியை மண்டைக்குள் மூளை என வைத்தது போல. படுக்க முடியவில்லை. அமர முடியவில்லை. ஓடிக்கொண்டே இல்லை என்றால் பைத்தியமாகிவிடுவேன் என உணர்ந்தேன். பேருந்து மாற்றி சென்றுகொண்டே இருந்தேன். கடைசியில் மானந்தவாடி. அங்கிருந்து மேலும் சென்று தலைக்காவேரி வழியாக மைசூர். அப்பயணத்தில் ஒரு கணத்தில் நான் திரும்பி என் மனதை நானே பார்த்தேன்

என்ன இது என்று துணுக்குற்றேன். என்னை பின்தொடர்ந்துவந்த பிசாசுக்கள் தயங்கி நின்றன. நான் அவற்றை நோக்கி நடந்தேன், அவை கரைந்து நிழலுருக்களாக மாறி மறைந்தன. என் மனம் என்பது நானல்ல என உணர்ந்தேன். எனக்குள் ஆழத்தில் இருந்த ஓர் அசைவின்மை இந்த கொந்தளிப்புகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் இவற்றைப்பார்க்கமுடிகிறது. ஆம், இவை அலைகள்தான்,. கடல் அல்ல. ஆத்மானந்தரின் வரியாக அந்த அறிதலை தொகுத்துக்கொண்டேன். ‘Waves are nothing but water, so is the sea’

மனதை உணர்ந்த அந்தக்கணத்தில் நான் ஒரு விடுதலையை அடைந்தேன். அங்கிருந்து திரும்பி காசர்கோடுக்குச் சென்றேன். அப்போது எனக்குள் ஒரு விடியல் நிகழந்திருந்தது. அம்பேத்கரின் சொற்கள் இங்கே சுட்டுவது அதையே. மனதை மனமாக உணர்வது.

அடுத்து அவர் சொல்வது கருத்துக்களை கருத்துக்களாக காண்பது. அதன் உடனடிப்பொருளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. கருத்து என்றால் சொல்லப்படும், எழுதப்படும் ஓர் எண்ணம் என்ற பொருளில் தான் நாம் புழங்குகிறோம். அந்த அர்த்தமல்ல இங்கே உள்ளது. மனதுக்கும் ஆழத்தில், மனதுக்கு அடுத்தபடியாக கருத்து கூறப்படுகிறது என்பதை கவனிக்கவும். ஆகவே இந்தகக்ருத்து என்பது நாம் சொல்லும், பேசும் கருத்து அல்ல. பௌத்த மெய்ப்பொருளில் அச்சொல்லுக்கு ஆழமான அர்த்தம் உண்டு.

பௌத்தமெய்ப்பொருளின்படி இங்கிருப்பவை தர்மத்தின் பல முகங்களே. நீர் என்பது நீரின் தர்மம்தான். ஆனால் நாம் நீர் என நாமறிவது அந்த தர்மம் நம்மில் ஏற்படுத்தும் ஒரு கருத்தைத்தான். நீர் என்பது நாம் நம் உடலின் இயல்பால் மூளையின் இயல்பால் அறியும் ஒரு கருத்து. இப்படிச் சொல்லலாம். தர்மத்தை நம் பிரக்ஞை அறியும்போது உருவாவதே கருத்து.

நான் என்பது ஒரு கருத்து. பிரபஞ்சம் என்பது ஒரு கருத்து. அறிதல் என்பது இன்னொரு கருத்து. கருத்து என்பது தர்மத்தில் இருந்து நான் பெற்றுக்கொள்வது. தர்மம் என்னில் கொள்ளும் பிரதிபலிப்பு அது. என்னளவே சுருக்கப்பட்ட தர்மம் அது. என்னுடைய அந்தக்கருத்தை நான் தர்மம் என்று உணர்வதுதான் பொய். அதை களைந்து கருத்தைக் கருத்தாக மட்டுமே அறிவதுதான் பௌத்தம் சொல்லும் நான்காவது தெளிவு.

நம் கையிலிருக்கும் கண்ணாடித்துண்டால் நாம் வெளியுலகை பிரதிபலித்துக்கொண்டால் கிடைக்கும் பிம்பங்களைப்போன்றவை நம்மிடமிருக்கும் கருத்துக்கள். நம்முடைய கோணம் மாறும்தோறும் மாறிக்கொண்டே இருப்பவை அவை. நம் கண்ணாடித்துண்டின் அழுக்கையும் வண்ணத்தையும் கலந்துகொண்டவை. ஆனால் அந்த பிம்பங்களையே நாம் நம் உள்ளாகவும் புறமாகவும் அறிகிறோம்

அந்தக்கருத்தை கருத்தாக மட்டுமே அறிதலே அறிதலின் தூயநிலை என்கிறார் அம்பேத்கர். அக்கருத்துக்களை நாம் எப்போதும் பிரபஞ்சம் என நினைக்கிறோம். ஒளியை, காலத்தை, வெளியை எல்லாம் கருத்துக்கள் எனலாம். அவற்றை கருத்துக்களாக மட்டுமே அறிகையிலேயே அவற்றைத்தாண்டிச்சென்று அக்கருத்துக்களின் மெய்ப்பொருளாகிய மகாதர்மத்தை அறியமுடியும்.

ஆம் ஐவகை சுத்திகரிப்புகள் வழியாக நாம் அடைவது இந்த நான்கு மெய்யறிதல்களைத்தான். களிம்பைக் கழுவினால் கண்ணாடி தெளிந்துவருவதுபோல அழுக்கு கழுவப்படும்போது இந்த தெளிவு கைகூடுகிறது என்கிறார் அம்பேத்கர்.

உடல்,சொல்,மனம் என்ற மூன்றிலும் தூய்மை என்பதன் நீட்சியாக இந்த நான்கு நிலைகள் சொல்லப்படுகின்றன. உடல் தூய்மையடையும்போது அதை உடலாக உணரமுடிகிறது. சொல் தூய்மைடையும்போது உணர்ச்சிகளை உணர்ச்சிகளாக அணுக முடிகிறது. மனம் தூய்மையடையும்போது மனதை தூய்மையாக அணுகமுடிகிறது. இம்மூன்றும் தூய்மையடையும்போது கருத்துக்களாலான இப்ப்பிரபஞ்சத்தை கருத்துக்களாக அறியமுடிகிறது.

முதல் நிலையில் இதுவே தர்மம் என்கிறார் அம்பேத்கர். ஒரு செயல் உலகியல் தளத்தில் தர்மம் சார்ந்ததா அல்லவா என்பதற்கான அளவுகோல் இதுவே. அது நம் உடலையும் உணர்வுகளையும் மனதையும் கருத்துலகையும் தூயநிலையில் பார்க்க உதவுகிறதா என்றுதான். அவ்வாறு பார்க்க உதவுவதே அறச்செயல்,


[மேலும்]

[ ராஜபாளையம் நாற்று அமைப்பு சார்பில் நவம்பர் 2, 20102 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]

முந்தைய கட்டுரைபிழை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசினிமா, லாரிபேக்கர்-கடிதங்கள்