எஸ்.வி.ராஜதுரை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எஸ்.வி.ராஜதுரைக்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பவர் புகழ்பெற்ற வக்கீலான கே.விஜயன் அவர்களா?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்

இப்படிப்பட்ட நோட்டீஸை கே.விஜயன் அனுப்பியிருப்பாரென நினைக்கிறீர்களா? இவர் ஊட்டியைச்சேர்ந்த ஒரு ‘இளம்’ வழக்குரைஞர். எஸ்.வி.ராஜதுரை அவரைப் பயன்படுத்த்க்கொண்டிருக்கிறார்.

ஜெ

அன்புக்குரிய ஜெயமோகனுக்கு,

வணக்கம்.

எதேச்சையாய் அ.ராமசாமி முகநூலில் எழுதிய குறிப்பை வைத்தே ராஜதுரை நோட்டீஸ் குறித்து அறிந்தேன்.

இன்றைய நாள் முழுக்க இந்த வலியில் இருந்து என்னால் விடுபடமுடியாது என்றே தோணுகிறது

எவ்வளவோ விஷயங்களை பொல்லாப்புகளை பொச்சரிப்புகளை அவதூறுகளை வன்மங்களைப் பார்த்து சலித்த நீங்கள் இதை எதிர்கொள்ள நிச்சமாய் திகைத்துப் போயிருப்பீர்கள்.

நாம் அறிஞர் என்று மதிக்கும் ஒருவர் செய்த இந்தக் கீழ்த்தரமான காரியம் நெஞ்சை அறுக்கிறது.

எப்போதும் போல் இப்போதும் ஆண்டவன் உங்களுக்கு இதைஎதிர்கொள்ளும் தெம்பையும் தளும்பாத நிதானத்தையும் மறுபடியும் நீங்கள் எல்லோர்க்கும் பகிர்ந்து தரும் அன்பையும் இன்னும் ஆவேசமாய் மேழும் படைப்பூக்கத்தையும் உங்களுக்குத் தர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அருள்மொழி அஜிதன் சைதன்யாவுக்கு என் பணிவான வணக்கங்களும் அன்பான விசாரிப்புகளும்.

என் கரங்களால் உங்கள் கரத்தை இப்போது மானசீகமாய் சில நிமிஷங்கள் பற்றிக் கொள்கிறேன் ஜெயமோகன்.

அன்பாக
ரவிசுப்பிரமணியன்

அன்புள்ள ரவி

நீண்டநாட்களாயிற்று.நலம்தானே?

ஆம், இந்தத் தருணத்தில் நிதானத்துடனிருப்பதே முக்கியமென உணர்கிறேன்.

இப்போதுகூட இதை ஒட்டி எஸ்.வி.ராஜதுரை மேல் எந்தக் காழ்ப்பையும் வளர்த்துக்கொள்ளலாகாதென்றே நினைக்கிறேன். என்னுடைய முரண்பாடும் ஐயமும் அவரது கருத்துக்களுடன் மட்டுமே

எஸ்.வி.ஆர் அவரது காலம்கடந்தும் வாழப்போகும் இரு நூல்களை – அன்னியமாதல்,ருஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம்- இந்த அறிவிக்கை வழியாக இழிவுசெய்துவிட்டார் என்பதே என் வருத்தம்

ஜெ

ஜெயமோகனுக்கு
எனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள ஒரு குறிப்பை இங்கே அனுப்பியுள்ளேன். நீங்கள் அங்கு வருவதில்லை என்பதால்
அ.ரா.

ஜெயமோகனுக்கு எஸ்.வி.ராஜதுரை அனுப்பியுள்ள வழக்குரைஞர் கவனக் கடிதம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. நேர்ச் சந்திப்புகள் மிகக் குறைவு என்றாலும் மதிக்கப் பட வேண்டிய ஆளுமையாகவும் பின்பற்றப் பட வேண்டிய அறிவாளியாகவும் நினைக்கப்பட்டவர். அவரது நூல்கள் வழியாக அவர் எனக்கு ஆசிரியர். அவரது கையொப்பங்களுடன் இப்படியொரு கடிதம் என்பதை மனம் தாங்கவில்லை. கண்டிக்க வேண்டும் என நினைப்பதைவிட வருத்தப்படவே தோன்றுகிறது. எனது கண்டனங்களை விட என்னைப் போன்றவர்கள் படும் வேதனையும் வருத்தமும் ஜெயமோகனுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதால் என் வருத்தங்களை இங்கே பதிவு செய்கிறேன்

அ.ராமசாமி

அன்புள்ள அ.ராமசாமி,

நன்றி.

சிற்றிதழ்ச்சூழலில் சட்டென்று மிகையான சொல்லாட்சிகள் வருவது சாதாரணமானது. நான் அத்தகைய சொல்லாட்சிகளை பேச்சில் பயன்படுத்துவதில்லை என்பதனால் எழுத்திலும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அப்படி நிகழ்வதைப் பெரிதுபடுத்தலாகாது என்று பலமுறை எழுதியிருக்கிறேன். இப்போதும் அதுவே என் எண்ணம்.

ஆனால் இது சட்டபூர்வ ஆவணமாக நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மனநிலை மிக ஆபத்தான முன்னுதாரணம். அதை எஸ்.வி.ராஜதுரை செய்தது என்பது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.

ஜெ

அன்புள்ள ஜெய,

மன்னிக்கவும். இது குறித்து எழுதுவதற்கு.. ராஜதுரை அவர்களின்
சட்டஅறிக்கையை முழுமையாகப் படித்ததும் மனம் கொண்ட எழுச்சி இன்னும்
அடங்கவில்லை. இதை அவர் எழுதும்போது கைகள் நடுங்காமல் இருக்கலாம் ஆனால்,
இதைப் படிப்பவரின் மனம் தொடர்ந்து நடுங்கும்.

தொடர்ந்து உங்களின் கதைகளில்,கட்டுரைகளில் கவனம் கொள்ளும் அறம் இவர்
போன்றவர்களின் வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்பது நமது பிழை தான் போலும்.

–ஹாரூன்
சிங்கப்பூர்.

அன்புள்ள ஹாரூன்

நன்றி.

இந்த மொழியையும் இந்த மனநிலையையும் முன்வைக்க சமநிலை கொண்ட எவரும் அஞ்சவேண்டும் என்றே நினைக்கிறேன். அஞ்சாவிட்டால் இழப்பு அவருக்குத்தான். அவரது ஒழுக்கம் சார்ந்த, மொழிசார்ந்த நுண்ணுணர்வை அவர் இழக்கிறார். அது பெரிய இழப்பு

ஜெ

*

அன்புள்ள ஜெ,

இருபது வருடங்களுக்கு முன், எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் இணைந்து எழுதிய புத்தகமொன்றை (பெயர் நினைவிலில்லை) வாசிக்க முயற்சி செய்தேன். மிகவும் கஷ்டப்பட்டு பாதி புத்தகம் தாண்டி பிறகு ‘இது நமக்கு வேண்டாத வேலை” என்று விட்டுவிட்டேன். இடது, வலது, அரசியல் இது எதுவுமே என்னை என்றும் கவர்ந்ததில்லை என்பதால் இருக்கலாம். ஆனாலும், அப்புத்தகம் நேர்மையோடு எழுதப்படவில்லையோ என்ற சிறு சந்தேகம் அப்போதே தோன்றியதும் காரணமாக இருக்கலாம். (நான் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி பாருங்கள்!)

“எஸ்.வி.ராஜதுரையின் முக்கியமான பங்களிப்பை”ப் பற்றி நீங்கள் ஒரு இடத்தில் சொல்லியிருந்ததைப் படித்தபோது என் ‘prejudiced mind’-ஐ நினைத்து வருத்தப்பட்டேன். எப்படியானாலும் எனக்கு உவப்பளிக்காத விஷயம் பற்றியது என்பதால் ராஜதுரையின் எழுத்துக்களைப் படிக்க நான் விழையவேயில்லை.

அன்னிய நிதி பற்றி சொல்லும்போது அவர் பெயரையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தபோது, ‘நான் அப்பவே நினைச்சேன்’ என்று எண்ணி இறுமாந்தேன் :) அதற்கு மேல் அதில் எனக்குக் கருத்தில்லை.

மனித மனத்தின் வக்கிரங்களையும் உன்னதங்களையும் உங்களைவிட அழுத்தமாக அழகாக சொன்னவர்கள் இல்லை என்றே நினைக்கிறேன். (லலிதாங்கி திருவடியைப் பற்றி, அவன் வாழ்வு தன்னால் பாழாகக் கூடாது என்று எண்ணுவதை, இரண்டு நாட்களுக்கு முன் படித்தேன்!)

மனத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று துழாவி நுண்ணியவற்றை எல்லாம் சுரண்டி எடுத்து வெளியே போடும் உங்களை இந்த ‘நோட்டீஸ்’ இவ்வளவு பாதித்திருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை ஜெ!

நீங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தபோதே நொந்து போனேன். உங்கள் கலக்கத்துக்கான நியாயத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நியாயம்தான்! ஆனால், மனித மனம் இதைவிடக் கேவலமானது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

என்னுடைய வருத்தம் இந்த வசைகளைக் கண்டு உருவானது அல்ல. இது எனக்குச் சாதாரணம். இந்த வழக்கம் தொடரும் என்றால் என்னாகும் என்ற பதற்றம். அதைவிட இளமையில் நான் வாசித்தறிந்த ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியைக் கண்ட வருத்தம்….

அது எளிதில் அழியாது

ஜெ

*

அன்புள்ள ஜெயமோகன்

அவர்களுக்கு வணக்கம் . நலமா ? .

எஸ் வி ராஜதுரையின் வக்கீல் கடிதம் பார்த்தேன். இது உங்கள் இருவருக்கும் ஆன கருத்து சண்டையாக இருக்கலாம் . இதில் கருத்து கூறுவது சரியா என்று கூடத் தெரிய வில்லை .

அவருடைய புத்தகத்தையும் என் தந்தை மூலம் படித்து வளர்ந்திருகிரேன் . உங்களுடைய புத்தகத்தையும் படித்து வளர்ந்திருக்கிறேன். ஒரு மூன்றாவது மனிதனாக இந்த வக்கீல் நோட்டிசைப் பார்த்தால் கோபமும் , அவர் மொழியில் சொல்வதானால் சின்னப்புள்ளத்தனமா இருக்கு. இந்த வக்கீல் நோட்டிசை அப்படியே என் மாமாவுக்கு அனுப்பி வைத்தேன் . அவர் பல காலம் கோர்ட் கேஸ் என்று அலைந்தவர் . என் வக்கீல் நண்பனுக்கும் அனுப்பி வைத்தேன் . இருவரும் சொன்ன கருத்து என்ன வென்றால் இந்த வக்கீல் நோட்டிசே தனிமனித அத்து மீறல் என்றும் , உங்களுக்கு இந்த வக்கீல் நோட்டீஸ் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் கேஸ் போடலாம் .

ஜெ இன்னொரு கருத்து . நாங்கள் அலுவலகப் பணிக்கு email அனுப்புவது வழக்கம் . நாங்கள் trainee ஆக முதல் நிறுவனத்தில் join பண்ணிய பொது . மூன்றாவது நாளாக communication and response என்ற training session நடந்தது . அதில் நாகராஜன் என்ற HR Head training கொடுத்தார் . அதில் email ஐ வைத்து அவர்களுடைய character ஐ தெரிந்து கொள்ளலாம் . அதை அப்படியே மாற்றி உங்கள் email அனுப்பும் contents மற்றும் context மாற்றினால் உங்கள் character ஐயும் மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னார் . இன்றும் என் மனதில் email அனுப்பும் போது அது ஞாபகத்துக்கு வரும். இதை வைத்து என் character ஐ நான் மாற்றி கொண்டிருகிறேன் . ஒரு கிரிடிகல் response mail அனுப்பும் முன் type செய்து draft ஆக save பண்ணி , பின் அரை மணி நேரம் கழித்து அதை படித்து பார்த்து பின் அனுப்ப வேண்டும் என்று சொன்னார் . இதை அப்படியே நான் இந்த வக்கில் நோடிசுகும் பொருத்தி பார்க்கிறேன் .

ஜெ இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது தவறா அல்லது சரியா என்பது அவர் அவர்கள் தங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இதைப் பகிர்ந்ததற்கு நன்றி . ஏன் என்றால் எங்களைப் போல் வளரும் தலைமுறைக்கு அறம் சார்ந்த , தனி மனிதக் கோபத்தை விட , அறமே முக்கியம் என்று எங்களுக்கு உணர்த்துகிறது .

நான் எந்த எழுத்தாளரையும் ஆதர்சமான எழுத்தாளராகக் கொண்டதில்லை . இந்தக் கடிதம் எழுதக் காரணம் இதை நான் ஒரு குடும்பப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட உளவியல் தாக்குதலாக நினைகிறேன் . இதே நிலை நாளை என் தங்கைகோ , வரப்போகும் மனைவிக்கோ ஏற்படலாம் . அபோது என் மன நிலை எப்படி இருக்குமோ அதில் இருந்து தான் இதை எழுதுகிறேன் .

அன்புடன்

பன்னீர் செல்வம்

அன்புள்ள பன்னீர்செல்வம்,

ஆம், இந்த வக்கீல் நோட்டீஸ் ஒரு மிரட்டல். உன் மனைவி உட்பட அனைவரையும் சந்திக்கு இழுப்பேன் என்ற வகையிலான ஒரு மனநிலை இது.

இந்தவகையான ஒரு கீழ்மையை முதல்முறையாகச் சந்திக்கிறேன். பார்ப்போம். இதையும் சமநிலையுடன் கடந்துபோக முடிகிறதா என்று

ஜெ

அன்புள்ள ஜெ,

தங்களுக்கெதிரான எஸ்.வி ராஜதுரையின் வழக்கு விவரங்கள் எரிச்சலூட்டுபவையாகவே இருந்துவந்துள்ளன. அவரது நோடீஸ் இன்னும் எரிச்சலை உருவாகியது.

ஆனால் இன்று தளத்தில் வெளியான உங்கள் கடிதம் மிகுந்த நிறைவான ஒன்றாக இருக்கிறது.
(எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்…) உங்களை ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இந்தக் கடிதம் அந்த மதிப்பை இன்னும் உயர்த்துகிறது. தங்கள் வாசகனாக இருக்க, உங்களோடு தொடர்பில் இருப்பவனாக இருக்க மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது சில பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். உங்கள் செயல்களே மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கின்றன. எவ்வளவு பெரிய கீழ்மை உங்கள் மீது உமிழப்பட்டாலும், அதைத் தங்கள் நேர்மையால் எதிர்கொள்ளும் திறம் எனக்கு மிகவும் நம்பிக்கை தருகிறது.

“கீழோர்க்கு அஞ்சேல்” அர்த்தம் புரிந்துகொள்கிறேன்.

அன்புடன்,

சுரேஷ் பாபு

அன்புள்ள சுரேஷ்பாபு

உங்களிடம் நேரில் விரிவாகவே பேசவேண்டும் என நினைத்திருந்தேன். உங்கள் பிரச்சினைகளைப்பற்றி.

ஆம், கீழ்மையை எதிர்கொள்வது ஒரு பெரிய சவால். அதில்தான் நாம் யார் என்பது வெளிப்படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….
அடுத்த கட்டுரைமொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்